கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019
உணவுப் பாதுகாப்பில் கிழங்குப் பயிர்களின் பங்கு முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகளுக்கு அடுத்த இடத்தில் கிழங்குகள் உள்ளன. இவை அதிக கலோரி சக்தியைத் தருவதுடன், தொழிற்சாலைகளின் முக்கிய மூலப்பொருளாகவும் விளங்குகின்றன. இவற்றைத் தனிப்பயிராக அல்லது கலப்புப் பயிராக மற்றும் ஊடுபயிராக இறவையிலும், மானாவாரியிலும் பயிரிடலாம்.
மேலும், பஞ்சம், இயற்கைச் சீரழிவுக்கு எதிரான காப்பீட்டுப் பயிர்களாகவும், அதிக ஒளிச்சேர்க்கைத் திறனுள்ள பயிர்களாகவும் உள்ளன. இருப்பினும், குறைவான பயிர்ப்பெருக்கம் காரணமாக, தேவையான, தரமான விதைக்கரணைகள் கிடைப்பதில்லை. மரவள்ளி 1:10, சேனைக்கிழங்கு 1:4, வெற்றிலை வள்ளி 1:6 சேப்பங்கிழங்கு 1:20 என்னுமளவில் பயிர்ப்பெருக்க அளவுகள் உள்ளன.
மரவள்ளியில் சிறுகரணை உற்பத்தி
பாரம்பரிய முறையில் 20 செ.மீ நீளத்தில் 10-12 கணுக்களுள்ள குச்சிகள் விதைக் கரணைகளாகப் பயன்படுகின்றன. ஆயினும் கரணைகள் முளைத்த பிறகு இரண்டு மொட்டுகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. மீதமுள்ள வளர் மொட்டுகள் நீக்கப்படுகின்றன. இதனால், சிறுகரணை உற்பத்தி மூலம் அனைத்து மொட்டுகளையும் செடிகளாக வளர வைத்து, விதைக்கரணை உற்பத்தி விகிதத்தைக் கூட்ட முடியும்.
இந்த உத்தியில் விதைக் கரணைகள் முளைத்ததும், வேர்கள் தமக்குத் தேவையான சத்துகளை, விதைக்கரணையில் இல்லாமல் மண்ணிலிருந்தே எடுத்துக் கொள்கின்றன. எனவே, 10-12 கணுக்களுள்ள கரணைகளுக்குப் பதிலாக, இரு கணுக்களுள்ள கரணைகளைப் பயன்படுத்த முடியும்.
சிறுகரணை உற்பத்திக்கு நோயற்ற மற்றும் முதிர்ந்த குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றிலிருந்து இரு கணுக் கரணைகளைக் கூரிய கத்தி மூலம் வெட்டியெடுக்க வேண்டும். பழைய முறையில், தண்டின் இளம் நுனிப்பகுதியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் புதிய முறையில் தண்டின் 5-6 செ.மீ. நீளமுள்ள நுனிப்பகுதி மற்றும் அதற்குக் கீழே நான்கு கணுக்களுள்ள இளம் தண்டும் பயன்படுகிறது.
இந்த இரு கணுக் கரணைகளை நாற்றங்காலில் நட வேண்டும். இதற்காக நாற்றங்காலில் 35% நிழல்வலைக் குடிலை அமைக்க வேண்டும். ஒரு எக்டர் நடவுக்குத் தேவையான சிறுகரணை உற்பத்திக்கு 145 மீட்டர் பரப்புள்ள நாற்றங்கால் தேவை. மேட்டுப் பாத்திகளைத் தயாரித்து, நுனிக்குச்சி மற்றும் நான்கு கணுக் கரணைகளை நேராகவும் இரு கணுக் கரணைகளைப் படுக்கையாகவும் 5×5 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.
விதைக் கரணைகள் விரைவில் முளைப்பதற்கு ஏதுவாக, அடிக்கடி குறைந்த இடைவெளியில் நீரைத் தெளிக்க வேண்டும். ஒரு வாரத்தில் முளைத்து விடும். பிறகு தேமல் நோய் தாக்கிய செடிகளை நீக்க வேண்டும். இந்தக் கரணைகள் நான்கு வாரங்களில் நடவுக்குத் தயாராகி விடும். இவற்றை மெதுவாகப் பிடுங்கி, 45 செ.மீ இடைவெளியில் பார்களில் நட வேண்டும்.
அறுவடையின்போது ஒரு எக்டருக்கு 60,000 மரவள்ளிக் குச்சிகளும், 75-80 டன் கிழங்கும் கிடைக்கும். இக்குச்சிகளை சிறுகரணை முறையில் மீண்டும் பயிர்ப்பெருக்கம் செய்தால், 70 எக்டருக்குத் தேவையான விதைக் கரணைகளை உற்பத்தி செய்யலாம். இம்முறை மூலம் பயிர்ப் பெருக்க விகிதம் 1:10 லிருந்து 1:60 ஆக உயர்கிறது. மேலும், ஒரு எக்டருக்குத் தேவையான விதைக் கரணைச் செலவில் ரூபாய் 5,000 வரை மிச்சமாகும்.
சேனையில் சிறுகரணை உற்பத்தி
சேனைக்கிழங்கில் பாரம்பரிய முறையில் 750 கிராம் முதல் 1 கிலோ எடை வரையிலான விதைக்கரணைகள் பயன்படுத்தப்படுவதால், பயிர்ப் பெருக்க விகிதம் குறைகிறது. விதைக்கரணை விலை அதிகரிக்கிறது. அதிகச் சுமையால் விதைக் கிழங்குகளை எடுத்துச் செல்ல அதிகச் செலவாகிறது. உயர் விளைச்சல் இரகங்களில் விதைக்கரணைகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, சிறுகரணை உற்பத்தி, இச்சிக்கல்களுக்குத் தீர்வாக அமைகிறது. இந்த முறையில் 100 கிராம் எடையுள்ள சிறு கரணைகள் நடப்படுகின்றன. சேனைக் கிழங்கின் மொட்டு, கிழங்கின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் சிறுகரணை உற்பத்தியில், ஒவ்வொரு கரணையிலும் நடுமொட்டின் ஒரு பகுதி இருக்க வேண்டும். இந்தச் சிறுகரணைகளை நடவுக்கு முன் சாணக் குழம்பில் நனைத்து ஒன்றிரண்டு நாட்கள் உலர வைக்க வேண்டும். பிறகு இவற்றை வழக்கமான 90×90 செ.மீ. இடைவெளிக்கு பதிலாக 60×45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.
நடவு முடிந்து 2-3 வாரங்களில் கரணைகள் முளைத்து விடும். விதைக் கரணை சிறியதாக இருப்பதால், 50% முளைப்பு வந்ததும், அவற்றின் வேர்கள் நிலத்திலிருந்து சத்துகளைப் பெற அடியுரத்தை இட வேண்டும். சிறுகரணை விதைப்பின் மூலம் 600 கிராம் முதல் 1.5 கிலோ எடை வரையிலான கிழங்குகளை மகசூலாகப் பெற முடியும். இதிலிருந்து மேலும் சிறுகரணை உற்பத்தி அல்லது முழுக் கிழங்கு அல்லது விதைக்கரணையை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் பயிர்ப் பெருக்கம் 1:4லிருந்து 1:15 ஆக உயர்கிறது. மேலும், ஒரு எக்டருக்குத் தேவையான விதைக் கரணைகள் 3,700 கிலோவிலிருந்து 1,250 கிலோவாகக் குறைகிறது.
வெற்றிலை வள்ளியில் சிறுகரணை உற்பத்தி
வெற்றிலை வள்ளிக் கிழங்கில் வழக்கமாக 250 கிராம் எடையுள்ள விதைக் கரணைகள் நடப்படும். இதனால் அதன் பயிர்ப் பெருக்கம் 1:6 என மிகவும் குறைவாக உள்ளது. மேலும் தேவையான விதைக் கரணைகளை உற்பத்தி செய்வதற்கு அதிகக் காலமும் ஆகும். விதைக் கரணையின் அளவை 30 கிராமாகக் குறைப்பதன் மூலம் பயிர்ப்பெருக்க அளவை 1:24 ஆகக் கூட்ட முடியும். முளைமொட்டுகள் கிழங்கின் தோல் முழுதும் பரவியிருப்பதால், கிழங்கின் எந்தச் சிறு பகுதியும் முளைக்கும்.
எனவே, 30 கிராம் அளவுள்ள சிறு துண்டுகளைத் தோலுடன் வெட்டி, வெட்டுப்பகுதி மேல்நோக்கியும், தோல்பகுதி மண்ணுடனும் இருக்கும்படி, நாற்றங்காலில் 5 செ,மீ. இடைவெளியில் நட வேண்டும். நாற்றங்காலில் 35% நிழல்வலைக் குடிலை அமைக்க வேண்டும். இந்தச் சிறு கரணைகள் 15 நாட்களில் முளைத்து விடும். இவை 3-4 இலைப் பருவத்தை அடைந்ததும் 60×45 செ.மீ. இடைவெளியில் நடலாம்.
அடியுரமாக 50% தழை மற்றும் சாம்பல் சத்தையும், 100% மணிச்சத்தையும் இட வேண்டும். மகசூலாகக் கிடைக்கும் கிழங்குகள் 300 கிராம் முதல் 2 கிலோ வரை இருக்கும். இதனால் இதன் பயிர்ப்பெருக்கம் 1:6 லிருந்து 1:20 ஆக அதிகரிப்பதோடு, ஒரு எக்டருக்குத் தேவையான விதைக் கரணைகள் 2,500 கிலோவிலிருந்து 800 கிலோவாகக் குறையும்.
சேப்பங்கிழங்கில் சிறுகரணை உற்பத்தி
சிறுகரணை உற்பத்திக்கு, தேர்வு செய்யப்பட்ட தாய்க்கிழங்குகளை முதலில் வட்டத் துண்டுகளாக வெட்டி, பின்பு அவற்றைக் கிடைமட்டமாக 10 கிராம் எடையுள்ள துண்டுகளாக வெட்ட வேண்டும். இந்தத் துண்டுகளை 45×30 செ.மீ. இடைவெளியில் நேரடியாக நிலத்தில் நட வேண்டும். இந்தத் தொழில்நுட்பம் மூலம் சேப்பங்கிழங்கின் பயிர்ப் பெருக்கம் 1:20 லிருந்து 1:120 ஆக உயர்கிறது. மேலும், எக்டருக்குத் தேவையான விதைக் கரணைகள் 800 கிலோவிலிருந்து 400 கிலோவாகக் குறைகிறது.
முனைவர் பி.ஆர்.கமல் குமரன்,
முனைவர் மா.ஆனந்த், முனைவர் எஸ்.பிரனீதா, முனைவர் எஸ்.நந்தக்குமார்,
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு-636602, சேலம் மாவட்டம்.