விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவசாய SENTHIL BALAJI 24 INSIDE HEADING PIC 22 PAGE scaled

விவரிக்கிறார் வி.செந்தில் பாலாஜி

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

ராமேஸ்வரப்பட்டி; அரசு நிர்வாக ஆவணங்களைத் தவிர பிறவற்றில் பதியப்படாத பெயர்; அந்த ஊர் மக்களைத் தவிர மற்றவர்களால் பெரியளவில் பேசப்படாத பெயர்; ஆனால், இன்றைக்கு அதிகளவில் ஊடகங்களில் அடையாளமாகி வரும் பெயர். ஆரவாரமில்லாத மக்களால் அமைதியாக இருக்கும் சில ஊர்கள், அந்த ஊர்களில் பிறக்கும் தனித்தன்மை வாய்ந்த மனிதர்களால் புகழைப் பெறுவதுண்டு. அத்தகைய ஊர்களில் ஒன்றுதான் இராமேஸ்வரப்பட்டி; கரூருக்கு அருகிலுள்ள சின்னக் கிராமம். காரணம், வி.செந்தில் பாலாஜி.

யார் இந்தச் செந்தில் பாலாஜி?

21.10.1975 இல் திரு.வேலுச்சாமி, திருமதி பழனியம்மாள் தம்பதியரின் புதல்வராகப் பிறந்து, இன்றைய அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்படும் சுறுசுறுப்பான இளவயது அரசியல்வாதி. தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று என்பார், உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவர். அதாவது, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்க வேண்டும்; அப்படி இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்கிறார்.

வள்ளுவர் கூறும் இந்தப் புகழை எட்டும் இலக்கில், மக்கள் கடமையாற்றும் அரசியல் களத்தில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இணையற்ற உழைப்பைச் செலுத்தி; மக்களின் நன்மதிப்பு நல்லாதரவுடன், அறுகு போல் வேரூன்றி, ஆயிரமாயிரம் பறவைகள் பசியாறும், இளைப்பாறும் ஆலமரமாக வளர்ந்து வருபவர் செந்தில் பாலாஜி.

கை கொடுத்த கரூர்

பிறந்தது இராமேஸ்வரப்பட்டி என்றாலும், வெளியுலகம் தெரிந்த பிறகு செந்தில் பாலாஜி வளர்ந்த ஊர், செந்தில் பாலாஜிக்கு வளர்ச்சியைக் கொடுத்த ஊர் கரூர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலுக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு, கரூரும், அதைச் சுற்றியிருக்கும் அனைத்து ஊர்களும் அத்துபடியாக இருந்தன. அதனால் தான், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என, முன்னாள் முதல்வரும்; அ.தி.மு.க.வின் பொதுச் செயலருமாக இருந்த ஜெயலலிதா கேட்டபோது, தயக்கமின்றித் தலையசைத்தார் செந்தில் பாலாஜி.

ஒரு நிகழ்ச்சியாகட்டும், விழாவாகட்டும்; எதைச் செய்தாலும், அதை எப்பாடு பட்டாவது எல்லோரும் போற்றும் வகையில் செய்ய வேண்டும் என்பது, செந்தில் பாலாஜியின் கூடப்பிறந்த பழக்கம். பள்ளியில் படித்த போதும், கல்லூரியில் படித்த போதும் தொடர்ந்த இந்தப் பழக்கம், இவர் அரசியலில் அடியெடுத்து வைத்த காலந்தொட்டு இன்று வரையும் தொடர்கிறது.

போராட்டக் குணம்

இப்படித்தான், கரூர் மாவட்ட இயற்கை நீராதாரமாக விளங்கும் ஆற்று மணலை, அரசியல் பின்புலம் கொண்ட கும்பல் வாரிவாரி எடுத்துச் சென்றது. ஏற்கெனவே, சாயக் கழிவுகளால் கெட்டுப் போன ஆறு, மணல் அள்ளப்படுவதாலும் பாழாய்ப் போவதைக் கண்டு பொறுக்காத செந்தில் பாலாஜி, பெரும் போராட்டம் ஒன்றை அறிவித்தார். பெரிய சக்தியை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் துணிச்சல் வேண்டும். அது செந்தில் பாலாஜியிடம் நிறையவே இருந்தது. கட்சிக்காரர்கள் பெருமளவில் திரள, மணலை அள்ளிக் கொண்டிருந்த பேய் எந்திரத்தின் முன்னால் அச்சமின்றிப் படுத்துப் போராடினார். அந்த எந்திரம் ஒரு நொடி நேரம் இசகுபிசகாக இயங்கியிருந்தாலும், செந்தில் பாலாஜி இன்றைக்கு இருந்திருக்க முடியாது.

ஜெயலலிதாவின் அறிமுகம்

இந்தத் துணிச்சல் தான், செந்தில் பாலாஜி என்னும் மனிதரை ஜெயலலிதாவிடம் கொண்டு போய் நிறுத்தியது. மணலை அள்ளுவதற்கு எதிரான செந்தில் பாலாஜியின் போராட்டத்தைப் பத்திரிகைகளில் படித்த ஜெயலலிதா, உடனே இவரை போயஸ் தோட்டத்துக்கு வரச் சொல்லி உத்தரவிட்டார். இதனால், பதற்றத்துடன் சென்னைக்கு வண்டியேறி, போயஸ் தோட்டத்துக்குச் சென்றவர், எல்லோரையும் போல வணக்கம் போட்டபடி, ஜெயலலிதா முன் நின்றார்.

“தம்பி நீங்கதான் செந்தில் பாலாஜியா? உங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கரூர் நல்ல மாவட்டம். எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு ஆதரவான மாவட்டம். அங்கே மாற்றுக் கட்சியினரை அனுசரித்துத் தான், நம் கட்சியினர் அரசியல் செய்கின்றனர். ஆனாலும், நீங்கள் துணிச்சலாகப் போராட்டக் களத்தில் நிற்கிறீர்கள். நியாயத்துக்காக; சமூக நலனுக்காக எவ்வளவு பெரிய சக்தியையும் எதிர்த்து நிற்கும் உங்கள் உறுதி எனக்குப் பிடித்திருக்கிறது.

இத்தகைய உறுதிமிக்க இளைஞரைத் தான், நான் வெகு காலமாகக் கரூரில் தேடிக் கொண்டிருந்தேன். இனி, கரூர் உங்கள் கையில். பெரியளவில் அங்கே கட்சியை வளர்க்க வேண்டும். பழையவர்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். எல்லோரையும் அனுசரித்து, கட்சியை அங்கே சிறப்பாக வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு’’ எனக் கூறியனுப்பினார்.

விவசாய SENTHIL BALAJI 29 26 PAGE scaled

அரசியலில் பதவிகள்

அதன்பின், கட்சியின் மாவட்ட மாணவரணி இணைச் செயலர், செயலர், ஜெ.பேரவைச் செயலர் எனத் தொடங்கிய கட்சிப் பொறுப்பு, மாவட்டச் செயலர் என நீண்டது. அத்துடன் 2006 இல் கரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாகச் சட்டமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றார். இவர் ஆற்றிய கட்சிப் பணிக்குப் பரிசாக, 2011 இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சர் பதவியும் வந்து சேர்ந்தது. அதாவது, செந்தில் பாலாஜி என்னும் இளைஞரிடம், முக்கியத் துறைகளில் ஒன்றான போக்குவரத்துத் துறை ஒப்படைக்கப்பட்டது.

பதவியேற்றுக் கொண்ட பிறகு, மரியாதைக்காக, வாழ்த்துப் பெறுவதற்காக, ஜெயலலிதாவைச் சந்தித்த செந்தில் பாலாஜி, தயங்கியபடியே, “அம்மா, முக்கியமான துறையை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல என்னால் செயல்பட முடியுமா எனத் தெரியவில்லை’’ எனச் சொல்ல, “கட்சியின் மாவட்டப் பொறுப்பை நிர்வகிக்கத் தெரிந்த உங்களால், போக்குவரத்துத் துறையைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும். கொஞ்சம் சவாலாகத் தெரிந்தாலும் அதையெல்லாம் சமாளித்துச் சாதனை செய்யுங்கள்’’ என்று வாழ்த்தியனுப்பினார்.

அமைச்சர் பொறுப்பில் சாதனை

தன்மீது கட்சியின் தலைவி வைத்திருக்கும் பெரிய நம்பிக்கையைக் காக்கும் எண்ணத்தில், அக்கறையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் செந்தில் பாலாஜி. நஷ்டத்தில் இயங்கி வந்த போக்குவரத்துத் துறையைக் காப்பாற்ற, அரசிடமிருந்து தனி நிதியுதவியைப் பெற்று, அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பழைய பேருந்துகளை நிறுத்தி விட்டு, புதுப்புதுத் தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரு பக்கம், பயணிகளுக்கான பேருந்து வசதியைப் பெருக்குவது; இன்னொரு பக்கம் இழப்பில் இயங்கி வரும் துறையை மேம்படுத்துவது என முடிவெடுத்துச் செயல்பட்டார்.

பேருந்துகளில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதும் அடிக்கடி கட்டணத்தை உயர்த்தி, மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்காமல் துறையை நிர்வகித்தார். இதனால், போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் மத்தியில், செந்தில் பாலாஜி மீது திருப்தியற்ற நிலையே இருந்தது. ஆனாலும், இதனால் ஆட்சிக்கும் கட்சிக்கும் மக்களிடம் இருந்து கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

பண்டிகைக் காலங்களில் சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அப்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, பயணிகள் சிரமமின்றிப் பயணிக்க ஏதுவாக, பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்காணிக்கும் பொறுப்பை, முதன்முதலில் ஏற்படுத்தியவர் செந்தில் பாலாஜி. மேலும், அந்தச் சமயங்களில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளைப் பிடித்துத் தண்டம் வசூலிப்பது; அனுமதியை நீக்குவது என அதிரடியாகச் செயல்பட்டு, பயணிகளின் தோழனாக விளங்கியதில், செந்தில் பாலாஜிக்கு எப்போதும் முதலிடம் இருக்கும்.

நற்பெயர் தந்த குடிநீர்

இவற்றையெல்லாம் கடந்து, அ.தி.மு.க. அரசை மக்கள் பாராட்டும் வகையில் அமைந்தது, போக்குவரத்துத் துறை மூலம் கொண்டுவரப்பட்ட அம்மா குடிநீர்த் திட்டம். தனியார் குடிநீர் நிறுவனங்கள், ஒரு லிட்டர் நீரை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்க, அதைவிடக் கூடுதல் தரத்தோடு, ஒரு லிட்டர் நீரைப் பத்து ரூபாய்க்குக் கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றவர் செந்தில் பாலாஜி. தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் அம்மா குடிநீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஏழைகளும், தரமான குடிநீரைப் பருகும் அருமையான திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்த வைத்தவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி.

இந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் செந்தில் பாலாஜி சொன்ன போது, அவருக்கு ஏக மகிழ்ச்சி. ஆனாலும், அவரிடம் கொஞ்சம் தயக்கம் இருந்தது. போக்குவரத்துத் துறை அதன் பணிகளைச் செய்யாமல், குடிநீர் விற்பனையில் ஈடுபடுவதாக விமர்சனம் கிளம்புமோ என அச்சப்பட்டார் ஜெயலலிதா. அத்துடன், இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியுமா என்னும் ஐயமும் அவருக்குள் இருந்தது. குடிநீரின் சுத்தத் தன்மை குறித்த ஐயப்பாடும் ஜெயலலிதாவுக்கு இருந்தது.

இதற்கெல்லாம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, “சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா குடிநீர் உற்பத்தி ஆலையை அமைத்து விட்டால், தமிழகத்தில் இருக்கும் அனைத்துப் பேருந்து நிலையங்களுக்கும் தேவையான குடிநீரைக் கொடுக்க முடியும்’’ என ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார். அதன்படி அம்மா குடிநீர்த் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றார். இப்படி, ஒவ்வொரு திட்டத்தையும் சிரத்தையுடன் சிறப்பாகச் செய்து முடித்ததால், போயஸ் தோட்டத்தின் செல்லப் பிள்ளையானார் செந்தில் பாலாஜி. சில நேரங்களில் செந்தில் பாலாஜியிடம், தனது சொந்த வேலைகளையும் கொடுத்து முடிக்கச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

அரசியலில் சறுக்கல்

இப்படி, ஜெயலலிதாவின் அன்பையும் ஆசியையும் பெற்று வளர்ந்த செந்தில் பாலாஜிக்கு, அரசியலில் சில சறுக்கல்களும் உண்டு. போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர், அரசியலில் திடீர் அமைதி நிலைக்குச் சென்றார். இருந்தாலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், கரூருக்குப் பதிலாக அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா.

விவசாய SENTHIL BALAJI 27 scaled

அதையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, அந்தத் தொகுதியிலும் வெற்றிக் கனியைப் பறித்தார். தேர்தல் காலத்தில் பணம் நிறையப் புழங்கியதாகக் காரணம் காட்டி, தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம், பிறகு அங்குத் தனியாகத் தேர்தலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் பின்னால் சென்றார் செந்தில் பாலாஜி. அங்குப் போனதால், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை இழந்தது தான் மிச்சம் என்னும் நிலையில், அங்கும் பிரம்மாண்டத்தைக் காட்ட நிறையச் செலவு செய்தார். ஆனால், போகப்போக அது பயனில்லாத அரசியல் பயணம் என்பதை உணர்ந்தார் செந்தில் பாலாஜி.

தி.மு.க.வில் இணைதல்

இந்நிலையில், தமிழக அரசியலின் எதிர்காலம் தி.மு.க. தான்; அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் தான், தமிழக மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது; மக்கள் விரும்பும் தலைவராக ஸ்டாலின் தான் இருக்கிறார் எனத் தீர்க்கமாக முடிவெடுத்து, அக்கட்சியில் ஐக்கியமாகி, தன்னுடைய அயரா உழைப்பால் கட்சியில் சரசரவென வளர்ந்து வருகிறார். கட்சித் தலைமையே வியக்கும் வகையில், கரூரில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முப்பதாயிரம் பேரை, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் இணைய வைத்தார்.

இதெல்லாம் நடக்க நடக்க, தி.மு.க.விலும் தவிர்க்க முடியாத மனிதராகியுள்ள செந்தில் பாலாஜி, அக்கட்சியின் கரூர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, “இந்தத் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தான்’’ என, முன்கூட்டியே ஸ்டாலின் அறிவித்தார்.

அரவக்குறிச்சி வேட்பாளர்

அதன்படியே மே 19 ஆம் தேதி நடக்கவுள்ள அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள செந்தில் பாலாஜி, தன்னுடைய வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். மக்களைச் சந்தித்து நிறைய வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். எல்லாமே சாத்தியமாகும் வாக்குறுதிகள்.

இப்படி, அரசியல் வாழ்க்கையில், கரூர் மாவட்டத்திலேயே உச்சத்திலிருக்கும் செந்தில் பாலாஜிக்கு, அரசியலைக் கடந்தும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது, அவரின் பூர்விக வாழ்க்கை; விவசாய வாழ்க்கை. அதைப்பற்றி அவரிடம் கேட்டோம்.

விவசாய வாழ்க்கை

“அப்பா அம்மா, தம்பி குடும்பம், நான், என் மனைவி மேகலா, எங்கள் குழந்தை நந்தினி எல்லாரும் ஒரே குடும்பமாக, கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களின் பூர்விக நிலம் நான்கு ஏக்கர் தான். அப்பாவும் அம்மாவும் அயராது உழைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்த்தது ஆறு ஏக்கர். ஆக மொத்தம் பத்து ஏக்கர் நிலம் இருந்தது. இதில், கரும்பு, நெல் போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தோம். அத்துடன் ஆடு மாடுகளை வளர்த்து வந்தோம்.

கால ஓட்டத்தில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் நொய்யலாற்றில் விடப்பட்டது. இதனால், அந்த ஆற்றுநீர் மட்டுமின்றி, அந்த ஆற்றைச் சுற்றியிருக்கும் விவசாய நிலங்களும், கிணற்று நீரும் கெட்டு விட்டன. இதனால், நிலங்கள் பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. மொத்தத்தில் நொய்யலாற்றை ஒட்டி நிலங்களை வைத்துள்ள விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. இதில் நாங்களும் அடக்கம். இந்நிலையில், எங்கள் நிலத்தில் இப்போது மாடுகளுக்குத் தேவையான தீவனப்புல்லை வளர்த்து வருகிறோம்.

விவசாயத்தில் எனக்கு மிகவும் ஈடுபாடுண்டு. நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, எங்கள் நிலத்தில் கிணறு தோண்டப்பட்டது. அந்தக் கிணற்று வேலையை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். வீட்டில் சாணி அள்ளுவது, ஆடு மாடுகளுக்குத் தீவனம் போடுவது, தண்ணீர் வைப்பது போன்ற வேலைகளைச் செய்வேன். மாடுகள் சில நேரங்களில் பாய்வதைப் போலத் தலையை அசைத்து அன்பைக் காட்டும். நாக்கால் நம் கைகளை நக்கும். இதெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்கள் நம்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடுகள்.

விவசாய SENTHIL BALAJI 1 25 PAGE scaled

அதைப்போல மாட்டைத் தடவிக் கொடுத்தால் அது சுகமாக ஏற்றுக்கொள்ளும். தடவிக் கொடுத்த கையை எடுத்து விட்டால், அது தலையை ஆட்டி ஆட்டி மீண்டும் தடவிவிடச் சொல்லும். அம்மாவிடம் பால் குடித்த மகிழ்ச்சியில் கன்றுகள் குதித்துக் குதித்து விளையாடும். இதைப் பார்க்கப் பார்க்க நமக்கும் சந்தோசமாக இருக்கும். இதெல்லாம் இயல்பிலேயே விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் கொண்டாடி மகிழும் நேரங்கள். இத்தகைய அனுபவங்கள் எனக்கும் நிறைய உண்டு.

பள்ளி விடுமுறை நாட்களில் அப்பா அம்மாவுடன் தோட்டத்துக்குச் செல்வேன். அப்பாவுடன் சேர்ந்து உழுவேன். அதற்குப் பின்னாலேயே அம்மாவுடன் சேர்ந்து விதைகளை வரிசையாகச் சால் போடுவேன். களையெடுப்பேன்; நீர் பாய்ச்சுவேன். அதன் பிறகு, நன்கு விவரம் தெரியும் வயதில் இரவு நேரத்தில் நீர் பாய்ச்சுவதற்காகச் செல்வேன். அந்தக் காலத்தில் இரவில் தான் மும்முனை மின்சாரம் கிடைக்கும். மின்சாரம் மிகவும் தட்டுப்பாடாக இருந்த காலம். மும்முனை மின்சாரத்தில் தான் மோட்டாரை இயக்க முடியும். இதற்காக நள்ளிரவிலும் பயமே இல்லாமல் தோட்டத்துக்குச் சென்று வேலை செய்வேன். தோட்டத்தில் விளையும் தக்காளி, முருங்கை, கத்தரிக்காய் போன்றவற்றை, கரூர் சந்தைக்குக் கொண்டு போய் விற்றுவிட்டு வருவேன்.

ஆனால், நான் முழுநேர அரசியலுக்கு வந்த பிறகு, எந்தத் தோட்டத்தில் ஆசை ஆசையாக விளையாடினேனோ, வேலை செய்தேனோ, அந்தத் தோட்டத்தில் ஆறு ஏக்கர் நிலத்தை, எனது அரசியல் செலவுக்காக விற்க வேண்டியதாகி விட்டது. 2005 இல் அரசியல் நிகழ்ச்சி ஒன்றுக்காகவும், விளையாட்டுப் போட்டி ஒன்றுக்காகவும் கொஞ்ச நிலத்தை விற்று விட்டோம். பிறகு அம்மா வழியில் வந்த நிலத்தையும் 2006-2011 காலத்தில் எதிர்க் கட்சியாக இருந்தபோது விற்று விட்டோம்.

முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன் வீட்டு வேலை, விவசாய வேலை என எதையும் மனம் கோணாமல் செய்வேன். நொய்யல் ஆற்றுநீரைக் கடைமடை வரைக்கும் கொண்டு சேர்க்க வசதியாக, மடை திறத்தல், வாய்க்காலைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து செய்திருக்கிறேன். ஆனால், அப்போதிருந்த நிலை இப்போது இல்லை. நிலத்தடி நீர் 1,500 அடிக்குக் கீழே இறங்கி விட்டது. பத்தடி ஆழத்தில் கிடந்த கிணற்று நீர், இன்று எட்டிப் பார்த்தால் தலையே சுற்றும் அளவில் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது.

இன்றைய விவசாய நிலையும் ஆலோசனையும்

உழுதோம் விதைத்தோம் அறுத்தோம் என்னும் நிலையில் இன்றைய விவசாயம் இல்லை. தனது இயல்பு நிலையில் இருந்து இயற்கை மாறி வருகிறது. இவற்றைச் சமாளிப்பதற்கான உத்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, விவசாயத்தில் நீர் மேலாண்மை மிக மிக முக்கியம். நம்மிடம் இருக்கும் நீரில் விளையும் பயிரை வளர்க்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் போன்ற பாசன முறைகளைக் கையாள வேண்டும்.

குறைந்த நீரில் அல்லது ஒரு நிலையில் நீரே தேவைப்படாத பயிர்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக, மரங்களை வளர்த்தால் விவசாயிகளின் வறுமை நிலை மாற வாய்ப்பிருக்கிறது. நாவல், புளி, கொடுக்காய்ப்புளி, நெல்லி, முருங்கை, மா, பலா போன்ற மரங்களை வளர்த்து நிலத்தை நிழலாக்கி விட்டால், அதற்குள் ஆடு, மாடு, கோழி, முயல், காடை எனப் பலதரப்பட்ட விலங்கினங்களை வளர்த்து, அவற்றின் மூலம் அன்றாடம் வருமானம் பார்க்க முடியும்.

மழைநீரில் வளரும் இந்த மரங்களால் சுற்றுச்சூழல் காக்கப்படும்; நிலத்தடி நீர் சேமிக்கப்படும்; மழைவளம் கூடும்; மண்வளம் பெருகும்; ஒட்டு மொத்தத்தில் மனித மனம் மகிழும். நாளைய நமது பிள்ளைகளுக்கு நாம் விட்டுப் போகும் ஈடு இணையற்ற சொத்து நீர். அதை நாம் இந்த நிமிடத்தில் இருந்தே சேமிக்க வேண்டும். இதற்கு, நீர் குறைந்த வேளாண்மை அல்லது நிலத்தடி நீருக்குப் பாதிப்பில்லா வேளாண்மையைக் கையிலெடுக்க வேண்டும்.

நிலைத்த வேளாண்மை; நீடித்த வேளாண்மை; மாசற்ற வேளாண்மை; அது மரப்பயிர் வேளாண்மை என்பதை விவசாயிகள் அனைவரும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இன்று நான் அரசியலில் தீவிரமாக இருந்தாலும் சோறு போடும் விவசாயத்தை மறக்க மாட்டேன். விவசாயத்துடன் இணைந்தது தான் என் அரசியல் வாழ்க்கை’’ என்று, தனது விவசாய அனுபவம், விவசாயத்தின் இன்றைய நிலை, இதற்கான தீர்வுகளை; மகிழ்ச்சியுடன், ஆற்றாமையுடன், பொறுப்புடன் பேசிய செந்தில் பாலாஜி, “இப்படியே வாக்குச் சேகரிக்கத் தான் செல்கிறேன். எனது தேர்தல் பிரச்சாரத்தையும் கொஞ்சம் பார்த்து விட்டுச் செல்லுங்கள்’’ என்று கூற, மறுக்க முடியாமல் சரியென அவருடன் புறப்பட்டோம்.

பிரச்சாரத்தில் ஒருநாள்

அரவக்குறிச்சித் தொகுதி. தமிழகத்திலேயே மிகவும் வறட்சியான பகுதி இதுதான் போலும். குடிநீர்ப் பஞ்சம் கொடிகட்டிப் பறக்கிறது. பிரச்சாரத்தின் போது பெண்கள் கொடுத்த குடிநீரைக் குடித்துப் பார்த்த போது உப்பாக இருந்தது. சாலை வசதியும் சரியாக இல்லை. பெரும்பாலான ஊர்களுக்கு மண் சாலைகளே இருந்தன. அதனால், நாம் பார்த்த வரையில், குடிநீர் வசதியும், சாலை வசதியும் தான், அரவக்குறிச்சித் தொகுதி மக்களின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன.

விவசாய SENTHIL BALAJI 2 24 PAGE scaled

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக, செந்தில் பாலாஜி முழு மூச்சாக உழைத்தார். பணிகள் அனைத்தையும் இவரே முன்னின்று செய்தார். அதற்குக் கைம்மாறாக, செந்தில் பாலாஜியுடன் இருந்து அவருக்கான தேர்தல் பணிகளை மும்முரமாகச் செய்து வருகிறார் ஜோதிமணி.

ஒவ்வொரு இடத்திலும் செந்தில் பாலாஜியை ஆதரித்து வாக்குச் சேகரித்துப் பேசும் ஜோதிமணி, “கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு, தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழக அரசு எவ்வளவோ தொல்லைகளைக் கொடுத்தது. கூட்டங்களை நடத்த அனுமதி தரவில்லை. ஆட்களை வைத்து மிரட்டினார்கள். கடைசியாக மாவட்ட ஆட்சியரே மிரட்டிய போது அதைத் திறமையுடன் எதிர்கொண்டவர் எனது தம்பி செந்தில் பாலாஜி.

எனவே, எனக்கு வாக்களித்ததைப் போல அமோகமாக வாக்களித்து அவரையும் வெற்றிப் பெறச் செய்தால், ஒரே எண்ணம், நோக்கம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மூலம், இந்தத் தொகுதி வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும்’’ என்றார்.

செந்தில் பாலாஜியின் பிரச்சார உத்தி

அவரைத் தொடர்ந்து பேசும் செந்தில் பாலாஜி, “350 ரூபாய்க்கு விற்ற கேஸ் சிலிண்டர் இன்று 950 ரூபாய்க்கு விற்கிறது. 13 ரூபாய்க்கு விற்ற ரேஷன் சர்க்கரை 25 ரூபாய்க்கு விற்கிறது. கேபிள் டி.வி.கட்டணம் 270 ரூபாய். இப்படி ஏழை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு விலை ஏறியதற்குக் காரணம், எடப்பாடி அரசு, மோடி அரசு.

விவசாயக்கடன் தள்ளுபடி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்வோம். ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 வீதம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்குவோம். ஐந்து பவுன் வரையுள்ள நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம். கேபிள் டி.வி., கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம். ஒரு கோடி இளைஞர்களுக்கும், 50 இலட்சம் மகளிர்க்கும் வேலை கொடுப்போம். மாணவர்கள் எழுதும் நீட் தேர்வையும் கல்விக் கடனையும் ரத்து செய்வோம். இஸ்லாமியர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்போம். தென்னிந்திய நதிகளை இணைப்போம்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அரசு வேலைகளில் 33 சதம் மகளிர்க்கு ஒதுக்கப்படும். மேலும், மகளிர்க்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்’’ என்றவர்,

இலவச வீட்டுமனை

“இந்த அரவக்குறிச்சித் தொகுதியில், வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் குடும்பங்களுக்கு, தளபதி வீட்டுவசதித் திட்டத்தில் உருவாக்கப்படும் உதயசூரியன் நகரில் மூன்று சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும். மேலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி, மந்தைக்கு வந்து தலையிலும் இடுப்பிலும் குடங்களைச் சுமந்து கஷ்டப்படாத வகையில், காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாகக் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்’’ என்று கூறியபோது, வாக்காளர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

மேலும், தான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், கரூர் தொகுதிக்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், அரவக்குறிச்சித் தொகுதிக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

இப்படி, அந்த நாள் பிரச்சாரம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது, “25 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைகள் வழங்கும் திட்டம் சாத்தியமா?’’ என்று கேட்டோம். உடனே சட்டென, “ஏன் சாத்தியமில்லை?’’ என்று நம்மிடம் திருப்பிக் கேட்ட அவர், “நாங்கள் ஏதோ ஓரிடத்தில் மொத்தமாக 25 ஆயிரம் வீட்டுமனைகளை அமைக்கப் போவதில்லை. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் வீடில்லாத ஏழைக் குடும்பங்களுக்கு அந்தப் பஞ்சாயத்திலேயே வீட்டுமனைகளைக் கொடுக்கப் போகிறோம். ஏனென்றால் அந்தப் பகுதி மக்களின் சொந்த பந்தம், வாழ்வாதாரம் எல்லாமே அங்கே தான் உள்ளன.

அப்படிப் பார்க்கும்போது ஒரு பஞ்சாயத்தில் நூறு பேருக்கு வீட்டுமனைகள் இல்லையென்றால் அவர்களுக்கு வீட்டுமனைகளை வழங்க நான்கு ஏக்கர் நிலம் போதுமானது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட். இதில் ஒருவருக்கு மூன்று சென்ட் வீதம் 75 சென்ட் நிலம் போக. மீதமுள்ள 25 சென்ட் நிலம், சாலை மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும். அதனால், அரவக்குறிச்சியில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, இத்திட்டத்தை நூறு விழுக்காடு முடித்துக் காட்டுவேன்’’ என்று அடித்துக் கூறினார்.

விவசாய SENTHIL BALAJI 6 23 PAGE scaled

இதைத் தொடர்ந்து அவரிடம், “அரவக்குறிச்சித் தொகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும், விவசாயத்தை மேம்படுத்தவுமான திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?’’ எனக் கேட்டோம்.

வீடுதோறும் குடிநீர் இணைப்பு, நதி நீரேற்றுச் சிறப்புத் திட்டம்

அப்போது அவர், “இந்தத் தொகுதியில் காவிரி, அமராவதி, நொய்யல், நங்காஞ்சி, குடகனாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. காவிரிநீர் இந்த மாவட்டத்தைத் தாண்டித்தான் தஞ்சைக்குச் செல்கிறது. ஆனால் இங்கு நீரில்லை. அதனால், இங்கே கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும். அரவக்குறிச்சித் தொகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. நிலத்தடி நீர் 1500, 1800 அடிக்குக் கீழே சென்று விட்டது. இங்குள்ள மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருப்பதால், இங்கிருக்கும் தரிசு நிலங்களை விவசாயப் பூமியாக மாற்ற, நதி நீரேற்று விவசாயச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர் உயரும்; விவசாயமும் செழிக்கும்.

மழைநீர்ச் சேமிப்பு

அரவக்குறிச்சித் தொகுதியிலுள்ள ஏரிகள், குளங்களைத் தூர்வாரி, மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாதம்பாளையம் ஏரியைத் தூர்வாரி, அதில் அமராவதி அணையில் தடுப்பணையைக் கட்டி எடுக்கப்படும் நீர் நிரப்பப்படும். இது இரண்டு தலைமுறை மக்களின் கோரிக்கை. முன்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஏரி, இப்போது மத்திய அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பணை

கரூர் புகலூர்ப் பகுதி காவிரியாற்றில் தடுப்பணை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில் மாநில அரசின் கவனக் குறைவால் அந்தத் திட்டம் அப்படியே முடங்கியுள்ளது. அதைச் செயல்படுத்தியிருந்தால், கரூர், நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்ட விவசாயிகள் பயனடைந்திருப்பார்கள். இதை நான் சட்டமன்றத்தில் இரண்டு முறை வலியுறுத்திப் பேசியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

முருங்கை, வெற்றிலை ஆராய்ச்சி மையங்கள்

கரூர் புகலூர்ப் பகுதியில் வெற்றிலை சாகுபடி அதிகம். இங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. அது நிறைவேற்றப்படும். அரவக்குறிச்சியில் அதிகமாக விளைவது முருங்கை. இதைச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்க ஏதுவாக, குளிர்ப்பதனக் கிடங்குகளையும் முருங்கை ஆராய்ச்சி நிலையத்தையும் அமைப்பேன். அரசு நெல்லைக் கொள்முதல் செய்வதைப் போல, முருங்கைக் காய்களையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

செம்மறியாடு ஆராய்ச்சி மையம்

அதைப்போல, செம்மறியாடுகள் வளர்ப்பும் இங்குள்ள மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது. அதற்காக, மத்திய அரசின் உதவியுடன் செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கப் பாடுபடுவேன். புதர்மண்டிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றைத் தூர்வாரி, தடுப்பணைகளைக் கட்டி மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுப்பேன். குடகனாற்றில் வெஞ்சமாங்குடலூர்ப் பகுதியில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை உள்ளது. அங்கு விவசாயம் செழிக்க, மேலும் தடுப்பணைகள் கட்டப்படும்’’ என நம்பிக்கையுடன் பட்டியலிட்டார்.

அவரின் ஆணித்தரமான நம்பிக்கை வெல்லவும், அதற்கு முன்னோட்டமாக, மக்களின் பேராதரவுடன் அவர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெல்லவும், பச்சை பூமி சார்பில் வாழ்த்தி விடை பெற்றோம்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading