கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்!

Vellai Kazhichal

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019

கோழிகள் மற்ற கால்நடைகளை விட மிக விரைவாக வளர்ந்து பயன் தருவனவாகும். புரதமும் சுவையும் மிகுந்த முட்டை மற்றும் இறைச்சியைத் தரும் கோழிகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் முக்கியமானது வெள்ளைக் கழிச்சல் என்னும் இரானிக்கெட் நோயாகும். ஆய்வாளர்களுக்கும் வல்லுநர்களுக்கும் பெரும் சவாலாக உள்ள இந்நோய், வைரஸ் கிருமியால் வருவதாகும். இந்த நோய் தாக்கினால் 50-100% கோழிகள் இறந்து விடும். இதன் தாக்கத்திலிருந்து மீளும் கோழிகளில் உற்பத்தித் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, கோழிகளை வளர்ப்போர் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவர்.

பாதிப்புகள்

அனைத்து வயதுள்ள கோழிகளையும் வெள்ளைக் கழிச்சல் தாக்கும். மேலும், வாத்து, வான்கோழி, கினிக்கோழி, புறா போன்ற கோழி வகைகளையும் தாக்கும். நோயுற்ற கோழிகளைக் கையாள்வோர் மற்றும் வெள்ளைக் கழிச்சல் நோய் குறித்த ஆய்வகத்தில் பணி செய்வோர்க்கு, கண்களில் எரிச்சல், சிவந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை இந்நோய் ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

கோழிகளின் வயதைப் பொறுத்து மாறுபடும். கோழிகள் சோர்ந்து இருக்கும். நாற்றத்துடன் வெள்ளையாகக் கழியும். குஞ்சுகளில் அறிகுறி தோன்றியதும் பண்ணையில் உள்ள கோழிகள் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கும். சளி, மூச்சுவிடத் திணறுதல், மூச்சடைப்பதால் சப்தம் வருதல், வாய்வழியே மூச்சு விடுதல், தலை தொங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சுவாசச் சிக்கல் ஏற்பட்டதும் கோழிகள் இறக்கத் தொடங்கும். இறப்பின் அளவு நாளுக்கு நாள் கூடும்.

பாதுகாப்பு முறைகள்

இந்நோய் வந்தபின் கோழிகளைக் காக்கும் சிகிச்சை ஏதுமில்லை. நோயுற்ற கோழிகளில் இரண்டாம் நிலை நுண்ணுயிர்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க நோயெதிர்ப்பு மருந்துகளைக் கொடுக்கலாம். சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால், நோயின் தீவிரம் குறைவாக இருக்கும். நோயுற்ற கோழிகளைத் தனியாக வைக்க வேண்டும். எச்சம், கூளம் போன்றவற்றை அகற்றிவிட்டுப் பண்ணையைக் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். இறந்த கோழிகளைப் பண்ணைக்கு வெளியே வெகுதொலைவில் அழிக்க வேண்டும்.

தடுப்பூசி

எனவே, வருமுன் காக்கும் விதமாகத் தடுப்பூசியைப் போடுவதே சரியான தீர்வாகும். இறைச்சிக் கோழிகளுக்கு, முதல் வாரம், அதாவது 5-7 நாட்களிலும், நான்காம் வாரத்திலும் கண்-மூக்கின் வழியாக, லசோட்டா மருந்தை விட வேண்டும். நாட்டுக் கோழிகளுக்கு, முதல் வாரம், அதாவது 5-7 நாட்களிலும், நான்கு, ஏழு மற்றும் நாற்பதாம் வாரத்திலும், கண்-மூக்கின் வழியாக, லசோட்டா மருந்தை விட வேண்டும். 16-17 ஆம் வாரத்தில் ஆர்.டி.வி.கே. மருந்தை இறக்கையில் செலுத்த வேண்டும்.

முட்டைக் கோழிகளுக்கு, முதல் வாரம், அதாவது 5-7 நாட்களிலும், நான்கு, ஏழு மற்றும் நாற்பதாம் வாரத்திலும், கண்-மூக்கின் வழியாக லசோட்டா மருந்தை விட வேண்டும். 16-17 ஆம் வாரத்தில், ஆர்.டி.வி.கே. மருந்தை இறக்கையில் செலுத்த வேண்டும்.

தடுப்பூசியை அளிக்கும் முறை

நோயுற்ற கோழிகளுக்குத் தடுப்பூசியைப் போடக் கூடாது. பண்ணையில் உள்ள அனைத்துக் கோழிகளுக்கும் காலை அல்லது மாலையில் போட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. போடும் வரையில் தடுப்பு மருந்து குளிர்ந்த பெட்டியில் தான் இருக்க வேண்டும். பண்ணைக்குக் கொண்டு வரும் புதிய கோழிகளை, குறைந்தது 10 நாட்களுக்குத் தனியாக வைத்துப் பராமாரிக்க வேண்டும். கொட்டகைக்குள் பருந்து, கொக்கு போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


வெள்ளைக் கழிச்சல் V.SASIKALA e1634981419613

முனைவர் வெ.சசிகலா,

மரு.கொ.ப.சரவணன், கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading