கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021
மீன்வளம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2019-20 இல் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் 107.9 இலட்சம் டன்னாகும்.
இதில், தமிழ்நாடு 7.75 இலட்சம் டன் மீன்களைப் பிடித்து முதலிடத்திலும், குஜராத் 7.49 இலட்சம் டன் மீன்களைப் பிடித்து இரண்டாம் இடத்திலும், கேரளம் 5.44 இலட்சம் டன் மீன்களைப் பிடித்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மீன் இறங்கு தளங்கள், தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகும். இங்கே கொண்டு வரப்படும் மீன்கள் உள்நாட்டு மக்களின் உடனடித் தேவைக்கும், மீன் பதன ஆலைகளில் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தூத்துக்குடியில் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகமும் தருவைக்குளமும், முக்கிய மீன் இறங்கு தளங்களாக உள்ளன. இங்கே மிகச்சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை கொண்டு வரப்பட்டு, மொத்த மற்றும் சில்லறை வணிகர்களுக்கு ஏலம் மூலம் விற்கப்படுகின்றன.
இந்த ஆய்வு, மீன்பிடி இறங்கு தளத்துக்குக் கொண்டு வரப்பட்ட மீன்களின் துரிதத் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, மீன் தரப் பகுப்பாய்வுக் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மீன் தரப் பகுப்பாய்வுக் கருவியானது ஸ்காட்லாந்தில், அபர்டீன் என்னும் இடத்தில் அமைந்துள்ள டோரி ஆராய்ச்சி நிலையத்தில் 1975 ஆம் ஆண்டு ஜேசன், ரிச்சர்டு ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவி, மீன்களின் மின்கடத்தாப் பண்புகளின் அடிப்படையில் செயல்படுகிறது.
மீன்களின் மின்கடத்தாப் பண்புகள் அவற்றின் துரிதத் தன்மை குறையும் நிலையில் அதிகமாகும். மீன் தரப் பகுப்பாய்வுக் கருவி 0.1 முதல் 18.5 வரை புள்ளி மதிப்புகளைத் தரும். இதில், 0.1 புள்ளி, மீன் கெட்டுப் போனதையும், 18.5 புள்ளி மீனின் துரிதத் தன்மையையும் குறிக்கும்.
இக்கருவியின் அடிப்பகுதியில் செறிவூட்டப்பட்ட இரண்டு ஜோடி மின் முனைகள் இருக்கும். இந்த மின் முனைகள் மீனின் சதைப் பகுதியில் முழுமையாகப் படும் வகையில் நிலையில் வைக்கப்படும். அப்போது மாற்று மின்னோட்டம் மீனின் சதைப்பகுதி வழியாக வெளி ஜோடி மின் முனைகளுக்குச் செலுத்தப்படும். அதன் விளைவால் உருவாகும் மின் அழுத்தத்தை உள் ஜோடி மின் முனைகள் உணர்ந்து, டோரி புள்ளி மதிப்பை வழங்கும். இந்த மதிப்புகளின் அடிப்படையில் மீன்களின் துரிதத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
திரேஸ்புரம் மீன் இறங்குதளம் காலை 8 மணிக்குச் செயல்படத் தொடங்கும். இங்கே மீனவர்கள் தினமும் மீன்களைக் கொண்டு வருவர். சிலர், 2-3 நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்களைப் பிடித்துக் கொண்டு வருவர். இவர்கள் பெரும்பாலும் செவிள் வலை மற்றும் தூண்டில் மூலம் மீன்களைப் பிடித்து உடனடியாகப் பனிக்கட்டியில் 1:1 விகிதத்தில் வைத்து இறங்கு தளத்துக்குக் கொண்டு வருவர். இந்த மீன்களின் துரிதத் தன்மையை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 23 வகையான மீன்கள் திரேஸ்புரம் மீன் இறங்கு தளத்தில் சோதனை செய்யப்பட்டன. அவையாவன: செப்பிளி, ஊளி, லோமியா, பாறை, பேத்தை, மடவை, கனவா, வௌமீன், திருக்கை, வஞ்சரம், பாலா, வாளை, மஞ்சள் துடுப்புச்சூரை, பாறகொலா, கிளிமீன், கட்டா, விலாங்கு மீன், முண்டக் கன்னிப்பாறை, மயில் மீன், சாளை, மஞ்சகீளி மற்றும் சூடை ஆகும்.
சோதனை செய்யப்பட்ட அனைத்து மீன்களும் டோரி புள்ளி மதிப்புகளின் அடிப்படையில் மூன்று தரமாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன: 1. அதிக துரிதத் தன்மை உடையவை (13-18 புள்ளிகள்). 2. ஏற்றுக் கொள்ளக் கூடிய மிதமான தரமுடையவை (7-12 புள்ளிகள்). 3. கெட்டுப் போனவை (0.1-7 புள்ளிகள்). சோதனை செய்யப்பட்ட மொத்த மீன்களில் 39 சதவீத மீன்கள் முதல் தரத்திலும், 50 சதவீத மீன்கள் இரண்டாம் தரத்திலும், 11 சதவீத மீன்கள் மூன்றாம் தரத்திலும் இருந்தன.
துரிதத் தன்மையை ஒவ்வொரு மீன் வகையிலும் பார்த்த போது, முதல் தரத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமாக, ஊளி, லோமியாமடவை, வௌமீன், வாளை, பாறகொலா, சாளை மற்றும் சூடை மீன்கள் இருந்தன. அதே நேரம் செப்பிளி, கனவா, திருக்கை, பாலா, மஞ்சள் துடுப்புச்சூரை, கட்டா மற்றும் விலாங்கு மீன்கள் 25-50 சதவீத அளவில் இருந்தன. அதற்கும் குறைவான சதவீதத்தில், பாறை, பேத்தை, வஞ்சரம், கிளிமீன், முண்டக்கன்னிப்பாறை, மயில் மீன் மற்றும் மஞ்சகீளி மீன்கள் இருந்தன.
இரண்டாவது தரத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக, பேத்தை, மஞ்சள் துடுப்புச்சூரை, கட்டா, விளங்கு மீன், முண்டக்கன்னிப்பாறை, மயில் மீன் மற்றும் மஞ்சகீளி மீன்கள் இருந்தன. 50-70 சதவீதத்தில், செப்பிளி, பாறை, களவா, வௌமீன், திருக்கை, பாறகொலா மற்றும் விலாங்கு மீன்கள் இருந்தன. 25-50 சதவீதத்தில், ஊளி, லோமியா, மடவை மற்றும் கிளி மீன்கள் இருந்தன. 25 சதவீதத்துக்கும் குறைவாக, வஞ்சரம், வாளை, சாலை, மற்றும் சூடை மீன்கள் இருந்தன.
மூன்றாவது தரத்தில், 75 சதவீதத்துக்கும் அதிகமாக, வஞ்சரம் மற்றும் கிளி மீன்கள் இருந்தன. மற்ற அனைத்தும் 0-20 சதவீதத்தில் இருந்தன. குறிப்பாக இங்கே அதிக விலைக்கு விற்கப்படும் வஞ்சரம் மீன் முதல் தரத்தில் இல்லை.
மொத்தத்தில், திரேஸ்புரம் இறங்கு தளத்துக்கு வரும் மீன்களில் 90% மீன்கள் தரமான மீன்களாக உணவுக்கு ஏற்ற வகையில் பிடித்துக் கொண்டு வரப்படுகின்றன என்பதை இந்த ஆய்வு உறுதி அளிக்கிறது. மீன்களின் துரிதத் தன்மையானது, அவற்றைப் பிடிக்கும் முறை, கையாளும் விதம் மற்றும் வைக்கப்படும் நிலையைப் பொறுத்து அமைகிறது.
எனவே, மீன்களைக் கையாளும் முறையைச் சரியாகக் கடைப்பிடித்தால் அனைத்து மீன்களும் அதிக துரிதத் தன்மையுடன் இருக்கும். மீனவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, இரண்டாம் தரத்தில் வரும் மீன்களையும் முதல் தரத்தில் கொண்டு வர முயல வேண்டும். இதன் மூலம் மீன்களைக் கூடுதல் விலைக்கு விற்று, மீனவர்கள் தங்களின் வருவாயை அதிகமாக்கலாம்.
மேலும், இது போன்ற கருவிகளை, அரசோ, மீனவர் சங்கங்களோ மீன் இறங்கு தளத்தில் மீனவர்களுக்கு வழங்கி, மீன்களின் தரத்தை மக்களுக்கு உறுதி செய்து காட்டலாம்.
ச.சுந்தர்,
இரா.ஜெயஷகிலா, ர.ச.ஸ்ரீபாலாஜி, சு.கௌதம்,
வி.பாலமணி கண்டன், கார்த்தி, ப.இராகேஷ், மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி.