திருந்திய நெல் சாகுபடி!

நெல் சாகுபடி HEADING PIC Copy 3 e1618421937228

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018

மிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று வரையிலும் நீர் மிகுதியாகச் செலவிடப் படுகிறது. நெற்பயிர் நீர்வாழ் தாவரம் அல்ல; அது புல்லினத் தாவரமாகும். களைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் நீர் நிறையப் பாய்ச்சப்படுகிறது. எனவே, இடு பொருள்களையும், நீரையும் குறைவாகப் பயன்படுத்தி நெல்லைச் சிறப்பாகப் பயிரிட முடியும். அதைத் தான் திருந்திய நெல் சாகுபடி என்கிறோம்.

தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு

1911ஆம் ஆண்டு மே மாதம் ஜி.ஏ.வைத்தியராமன் என்பவர் வெளியிட்ட பிழைக்கும் வழி என்னும் மாத இதழின் 249 ஆம் பக்கத்தில், ஒற்றை நாற்று நடவைப் பற்றியும், 347 ஆம் பக்கத்தில் பத்தி நடவைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இதுவே, திருந்திய நெல் சாகுபடிக்கு முன்னோடியாகும். இதில் சில மாற்றங்களுடன் இன்றைய திருந்திய நெல் சாகுபடி நடந்து வருகிறது. 1980ஆம் ஆண்டில் கிழக்கு மடகாஸ்கர் நாட்டைச் சார்ந்த பாதர் ஹென்றி டி லாலனி என்பவர், அந்நாட்டு விவசாயிகள் பின்பற்றும் முறைகளில் ஆய்வு செய்து இன்றைய திருந்திய நெல் சாகுபடிக்கு வழிகாட்டியுள்ளார்.

முக்கியக் கூறுகள்

சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய  ஒட்டு விதைகளை ஏக்கருக்கு 2 கிலோ பயன்படுத்துதல். விதை நேர்த்தி செய்து விதைத்தல். ஒரு ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட், அதாவது, 40 சதுர மீட்டர் சுருள்பாய் நாற்றங்கால் அமைத்தல். நடவு வயலைத் துல்லியமாகச் சமன் செய்தல். 14 நாட்கள் நாற்றுகளை நடுதல்.

மார்க்கர் கருவி மூலம் சதுர முறையில், 22.5 x 22.5 செ.மீ இடைவெளியில் நடுதல். குத்துக்கு ஒரு நாற்றை மட்டும் நடுதல். கோனோவீடர் களைக்கருவி மூலம் களைகளை வயலுக்குள் அமுக்கி விடுதல். காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்தல். இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்தை இடுதல். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பைக் கையாளுதல்.

தரமான விதைகள்

தரமான விதைகளைப் பயன்படுத்தினால், முளைப்புத்திறன்  மற்றும் பிற வகை விதைகள் கலப்பின்றித் தூய்மையாக இருக்கும். வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும். பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவாக இருக்கும். ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் போதும். இதனால், உற்பத்திச் செலவு மிகவும் குறையும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்னும் உயிர்ப் பூசணக் கொல்லியை நீரில் கலந்து இரவு முழுவதும் விதைகளை ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை வடிகட்டி, பிறகு முளைகட்ட வைக்க வேண்டும். பிறகு, அந்த விதைகளை ஒரு பொட்டல அசோஸ்பைரில்லம், ஒரு பொட்டல பாஸ்போபாக்டீரியம் உயிர் உரத்துடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

சுருள்பாய் நாற்றங்கால்

ஒரு மீட்டர் அகலம் 40 மீட்டர் நீளம், 5 செ.மீ. உயரமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். அவற்றின் மேல் 300 காஜ் கனமுள்ள பாலித்தீன் விரிப்பு அல்லது பழைய பாலித்தீன் உரச் சாக்குகளைப் பரப்ப வேண்டும். அதில், ஒரு மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ. உயரமுள்ள விதைப்புச் சட்டத்தை வைத்து நன்கு முளைவிட்ட இரண்டாம் கொம்பு விதைகளைச் சீராகத் தூவ வேண்டும். பின்பு மட்கிய எருவை விதைகளின் மேல் பரப்பி உள்ளங்கையால் மெதுவாக அழுத்திவிட வேண்டும். பின்னர் பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். இப்படி 5 நாட்கள் வரை பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும்.     விதைத்த ஒன்பதாம் நாள் 0.5 சத யூரியா கரைசலைப் பூவாளியால் தெளிக்க வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு

கோடை மழையில் நிலத்தை 2-3 தடவை உழுது சமப்படுத்தினால், மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை மிகும். இதனால் பாசன நீரின் தேவை குறையும். களை கட்டுப்படும்; மண்ணிலுள்ள பூச்சிகளின் வண்டுப் புழுக்கள் மற்றும் நோய்க் கிருமிகள் அழிக்கப்படும். கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழுவுரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட வேண்டும். கடைசி உழவின்போது 200 கிலோ ஜிப்சத்தைச் சீராக இட வேண்டும். பிறகு 10 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நெல் நுண்ணூட்டக் கலவை 5 கிலோவை, 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். மேலும், தலா 4 பொட்டல அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியத்தை 10 கிலோ தொழுவுரத்தில் கலந்து தூவ வேண்டும். 

இளவயது நாற்றுகள்

விதைத்த 14 ஆம் நாளில் 12-16 செ.மீ. உயரமுள்ள நாற்றுகளை வேர்கள் அறுபடாமல் மெதுவாகப் பிரித்து நட வேண்டும். மார்க்கர் கருவியால் சதுர மீட்டருக்கு 20 குத்துகள் இருக்குமாறு அடையாளமிட்டு 22.5 x 22.5 செ.மீ. இடைவெளியில் சதுர முறையில் நட வேண்டும். ஒரு குத்துக்கு ஒரு நாற்றை மட்டுமே நட வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

நடவு செய்த 15 ஆம் நாள் முதல் முறையாக கோனோவீடர் கருவி மூலம் வரிசைக்கு வரிசை மற்றும் பயிருக்குப் பயிர் இடைவெளியில் இடையுழவு செய்து களைகளைச் சேற்றில் அமுக்கி விட வேண்டும். இதனால் மண்ணில் காற்றோட்டம் மிகுந்து, வேர்கள் நன்கு வளர்ந்து தூர் கட்டும் திறன் கூடும்.

பாசனம்

நெல் வயலில் நீர் தேங்குவதைத் தவிர்த்து, காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும். இதனால் 30-40% நீரைச் சேமிக்கலாம். நெல் பயிரின் மிக முக்கிய நீர்த்தேவைப் பருவங்களான தூர் பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில், போதுமான பாசனம் கொடுக்கப்பட வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.

இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்தை இடுதல்

தழைச்சத்து உரத்தைத் தேவைக்கு மேல் நெற்பயிருக்கு அளித்தால், தண்டுத் துளைப்பான், பச்சைத் தத்துப்பூச்சி, புகையான், இலை மடக்குப்புழு மற்றும் குலைநோய்த் தாக்குதல் மிகும். தழைச்சத்து உரத்தை 3, 4 முறைகளாகப் பிரித்து இட்டால் மேற்கண்ட சிக்கல்களைக் குறைக்கலாம். மேலும், தழைச்சத்து உரத்தை, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 வீதம் கலந்து, பயிருக்குச் சிறுகச் சிறுகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி, தழைச்சத்து உரத்தை அளிக்க வேண்டும். இதனால் பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளும் நோய்களும்  கட்டுப்படுவதோடு, உரச்செலவும் பெருமளவில் குறையும்.

இலை வண்ண அட்டை 5 அங்குல பிளாஸ்டிக் பொருளால் ஆனது. இதில் 4 வண்ணப் பட்டைகள் எண் 2 (மஞ்சள் கலந்த பச்சை) முதல் எண் 5 (அடர் பச்சை) வரை உள்ளன. அதில் இரண்டு வகையான அளவு முறைகள் உள்ளன. அவை:

நிகழ் நேர அல்லது உண்மை நிலை அளவு முறை: நெற்பயிரின் வளர்ச்சிப் பருவத்துக்கு ஏற்ப அளவுகள் எடுக்கப்படும் நாட்களில், வண்ணப் பட்டைகளின் அளவுகளைக் அடிப்படையாகக் கொண்டு, இலை வண்ண அட்டையின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவில் தழைச்சத்து உரத்தைப் பயிருக்கு இட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட அல்லது நிலையான நேர அளவு முறை: நெற்பயிரின் வளர்ச்சிப் பருவத்துக்கு ஏற்ப, பிரித்து அளிக்க வேண்டிய தழைச்சத்து உரத்தின் அளவுகளை, முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அளவுகள் எடுக்கப்படும் நாட்களில் வண்ணப் பட்டைகளின் அளவுகளைக் அடிப்படையாகக் கொண்டு அட்டவணையில் காணப்படும் தழைச்சத்து உரத்தின் அளவை, கூட்டியோ குறைத்தோ பயிருக்கு இடவேண்டும்.

பயன்படுத்தும் முறை

நெல் நடவுப் பயிரில் நட்ட 14 நாட்கள் கழித்தும், நேரடி நெல் விதைப்புப் பயிரில் விதைத்த 21 நாட்கள் கழித்தும் முதல் அளவை எடுக்க வேண்டும். அடியுரமாக, தழைச்சத்து உரத்தை இட்டிருந்தால், நடவுப் பயிரில் நாற்று நட்ட 21-25 நாட்கள் கழித்தும், நேரடி நெல் விதைப்பு பயிரில் விதைத்த 28-30 நாட்கள் கழித்தும் முதல் அளவை எடுக்க வேண்டும். குறுவைப் பயிருக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், சம்பா, தாளடிப் பயிர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும் அளவுகளை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட நேரத்தில், அதாவது, காலையில் அல்லது மாலையில் ஒரே நபரால் அளவுகள் எடுக்கப்பட வேண்டும். அளவுகளை  எடுக்கும் போது சூரியவொளி இலையின் மேல் நேரடியாகப் படக்கூடாது. இதற்குச் சூரியனானது, அளவு எடுக்கும் நபரின் முதுகுக்குப் பின்னால் இருக்குமாறும், அந்த நபரின் நிழல் இலையின் மேல் படுமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வயலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக 10 இடங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்காத குத்துகளைத் தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் முழுவதும் விரிந்த ஏதாவது ஒரு இளம் இலையை, அட்டையின் வண்ணப் பட்டைகளின் மையப் பகுதியில் வைத்து நிறத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இரண்டு பட்டைகளுக்கு மத்தியில் இலையின் வண்ணம் ஒத்துப்போனால் அந்த இருநிறப் பட்டைகளுக்கான எண்களின் சராசரி மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி எடுக்கப்பட்ட 10 அளவுகளில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட இலைகளின் வண்ண அளவு, பரிந்துரை செய்யப்படும் ஒப்பீட்டு அளவு 4-க்குக் கீழ் (பொன்னி இரகத்துக்கு 3-க்குக் கீழ்) இருந்தால், குறுவைப் பயிருக்கு 30 கிலோ, சம்பா மற்றும் தாளடிப் பயிர்களுக்கு 26 கிலோ யூரியாவை இட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94423 20861.


நெல் சாகுபடி RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading