கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019
தோட்டக்கலையில் வளர்ந்துள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் உந்து சக்தியாகத் தோட்டக்கலை விளங்குகிறது. ஊட்டப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் மிகுந்து வருகிறது. மாற்றுப்பயிர் சாகுபடி வாய்ப்பையும், நிலங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இத்தகைய சிறப்புகளுடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும், தேசியத் தோட்டக்கலை இயக்கத்தைப் பற்றி விளக்குகிறார், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் ந.சுப்பையன்.
“தமிழகத்தில் வெப்ப மண்டலம், மிதவெப்ப மண்டலம், குளிர் மண்டலம் போன்ற மாறுபட்ட சூழ்நிலைகள் இருந்தாலும், மா, பலா, வாழை, எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, நெல்லி போன்ற பழமரப் பயிர்களும், தக்காளி, கத்தரி, வெங்காயம், உருளை, பீட்ரூட், கொத்தவரை, முட்டைக்கோசு போன்ற காய்கறிகளும், மிளகாய், பூண்டு, மிளகு, கொத்தமல்லி, மஞ்சள் போன்ற நறுமணப் பயிர்களும், முந்திரி, காப்பி, தேயிலை போன்ற மலைப் பயிர்களும், மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, நிலச்சம்பங்கி போன்ற மலர்ப் பயிர்களும், சென்னா, கண்வலிக்கிழங்கு போன்ற மருத்துவப் பயிர்களும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கே செயல்படும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம், தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறன் ஆகியவற்றில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 13.39 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டக்கலைப் பயிர்கள் மூலம், 172 இலட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய அளவில் தமிழகத்தில் தோட்டக்கலைப் பொருள்கள் உற்பத்தி 5.88% ஆகும்.
ஆண்டு முழுவதும் திராட்சை உற்பத்தியும், பருவமற்ற காலத்திலும் மாம்பழ உற்பத்தியும் தமிழகத்தின் தனித்தன்மையாகும். பழப்பயிர்களில் பப்பாளி, சப்போட்டா, மாதுளை உற்பத்தித் திறனிலும், காய்கறிப் பயிர்களில் மரவள்ளி, பீன்ஸ், முட்டைகோஸ் உற்பத்தித் திறனிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சுமார் 4.09 இலட்சம் மெட்ரிக் டன் உதிரிப் பூக்களை உற்பத்தி செய்து தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. நாட்டின் மொத்த உதிரிப் பூக்கள் உற்பத்தியில் 19% பங்களிப்பைத் தமிழகம் தருகிறது. உற்பத்தியை இரு மடங்காக்கி வருமானத்தை மூன்று மடங்காக்குதல், உயர் தொழில் நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற நோக்கங்களுடன் பல்வேறு தோட்டக்கலைத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் தேசியத் தோட்டக்கலை இயக்கம் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் உற்பத்தி முதல் அறுவடைக்குப் பின்சார் மேலாண்மை மற்றும் சந்தை உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குதல் ஆகியவை அடங்கிய ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்குதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்ட இனங்கள் விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் கூட்ட, வீரிய ஒட்டுரகச் சாகுபடியைப் பெருக்குதல், அடர் நடவுக்கெனத் தரமான நாற்றுகளை, உயர் தொழில் நுட்ப நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்தல், பாதுகாப்பான சூழலில் சாகுபடி செய்தல், பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல், தேனீ வளர்ப்பு மூலம் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பின்சார் மேலாண்மைக் கட்டமைப்பை மேம்படுத்தல் ஆகியன முக்கியமானவை.
தமிழகத்தில் இந்த இயக்கம் தொடர்ந்து செயல்படுவதால், இதுவரை 1.48 இலட்சம் எக்டரில் தோட்டக்கலைப் பயிர்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 20,000 எக்டர் பழைய தோட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 6,000 எக்டர் பரப்பில் பசுமைக் குடில்கள், நிழல்வலைக் குடில்கள், நிலப்போர்வை போன்ற பாதுகாப்பான சூழலில் சாகுபடி நடைபெறுகிறது. மேலும், அறுவடைக்குப் பின்சார் மேலாண்மைக் கட்டமைப்பு வசதிகளாக, 519 சிப்பம் கட்டும் அறைகள், 15,000 மெட்ரிக் டன் கொண்ட குளிர்ப் பதனக் கிடங்கு, குறைந்த செலவிலான 650 வெங்காயச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விளைச்சலை உயர்த்த 75,000 தேனீப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் நடப்பாண்டில் ரூ.163.33 கோடியில் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் தனி நபர்கள், விவசாயக் குழுக்கள், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவன உறுப்பினர்கள் பயன்பெற முடியும். காய்கறி மற்றும் மலர்ப் பயிர்கள் சாகுபடிக்கு இரண்டு எக்டர் வரையும், இதரப் பயிர்களுக்கு நான்கு எக்டர் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல்வேறு இனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாற்றங்கால் அமைத்தல்: மா, கொய்யா, எலுமிச்சை, முந்திரி போன்ற நாற்றங்கால்களை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. உயர் தொழில் நுட்ப நாற்றங்காலை அமைக்க 40 சத மானியமாக ரூ.10 இலட்சமும், சிறிய நாற்றங்காலை அமைக்க 50 சத மானியமாக 7.50 இலட்சமும் வழங்கப்படும்.
பரப்பு விரிவாக்கம்: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் பரப்பு விரிவாக்கம் முக்கியமானது. காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கு 40 சத மானியமாக எக்டருக்கு ரூ.20,000 மதிப்பிலான தரமான தக்காளி, கத்தரி போன்ற நாற்றுகள், குழித்தட்டு நாற்றங்காலில் வளர்த்து வழங்கப்படுகின்றன. ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது. சுமார் 7.83 கோடி குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து வழங்கப்படுகின்றன.
மா, கொய்யா, முந்திரி போன்ற பல்லாண்டுப் பயிர்கள் பரப்பை விரிவாக்க, எக்டருக்கு 40 சதம் வீதம் 4 எக்டர் வரையில் மானியம் வழங்கப்படுகிறது. சாதாரண நடவு மற்றும் அடர் நடவு முறையில் நடுவதற்குச் செடிகள் வழங்கப்படுகின்றன. வாழை போன்றவற்றைச் சாதாரண மற்றும் திசு வாழைக் கன்றுகள் மூலம் சாகுபடி செய்ய, எக்டருக்கு 40 சதம் வீதம் 4 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மிளகாய், கொத்தமல்லி போன்ற நறுமணப் பயிர்களைப் பயிரிட, குழித்தட்டு நாற்றுகளும், வீரிய விதைகளும் எக்டருக்கு 40 சதம் வீதம் 4 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது. மலர்ப் பயிர்களில் மல்லிகை, கனகாம்பரம் போன்ற உதிரி மலர்கள் சாகுபடிக்கும், நிலச்சம்பங்கி போன்ற கிழங்கு வகை மலர்ப் பயிர்களுக்கும், ரோஜா போன்ற கொய்மலர்கள் சாகுபடிக்கும் 2 எக்டர் வரையுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு 40 சதம் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 39,000 ஏக்கரில் தோட்டக்கலைப் பயிர்களை விரிவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல்: வயதானதால் விளைச்சல் குறைந்த மா, முந்திரி தோட்டங்களை, நோயுற்ற செடிகளை அகற்றுதல், கிளை மேலாண்மை, கவாத்து, இடைவெளி நடவு ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கலாம். வயதான மரங்களில் உயர் இரகங்களை மேல் ஒட்டுக்கட்டிக் காய்ப்புத்திறனைக் கூட்டலாம். இதனால் விளைச்சலும் வருமானமும் கூடும். 50 சத மானியத்தில் எக்டருக்கு ரூ.20,000 மதிப்பில் ஒரு விவசாயிக்கு 2 எக்டருக்கான இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் இத்திட்டம் 2,200 ஏக்கரில் செயல்படுகிறது.
குடை மிளகாய், வெள்ளரி, தக்காளி, ரோஜா, ஜெர்பெரா போன்ற உயர் மதிப்புள்ள பயிர்கள், பசுமைக் குடில்கள், நிழல்வலைக் குடில்களில் பயிரிடப்படுகின்றன. பாதுகாப்பான சூழலில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நடப்பாண்டில் மூன்று இலட்சம் பசுமைக் குடில்கள், 3.5 இலட்சம் நிழல்வலைக் குடில்களை அமைக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில், ஒரு விவசாயிக்கு 50 சதம் மானியம் வழங்கப்படுகிறது. பறவைத் தடுப்பு வலைகள், நிலப் போர்வை அமைத்தல் போன்றவற்றுக்கு 50 சதம் வீதம், ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அறுவடைக்கு பின்சார் மேலாண்மை: அறுவடைக்குப் பின்சார் மேலாண்மை, தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் மிகவும் அவசியமாகும். விளைபொருள்களைச் சுத்தம் செய்து, தரம் பிரித்தால் அதிக விலைக்கு விற்கலாம். இத்திட்டத்தில் சிப்பம் கட்டும் அறையை அமைக்க, 50 சத மானியமாக 2 இலட்சமும், விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, தரம் பிரித்து, உலர வைத்துத் தானியங்கி முறையில் சிப்பம் கட்டும் கூடத்தை அமைக்க, 35 சத மானியமாக 17.50 இலட்சமும் வழங்கப்படும்.
விளைபொருள்கள் சேமிப்பில் குளிர்ப் பதனக் கிடங்கு அவசியமாகிறது. அதனால், ஒரு மெட்ரிக் டன்னுக்கு 35 சத மானியமாக ரூ.3,500 வீதம், ஒரு பயனாளிக்கு 5,000 மெட்ரிக் டன் வரை இருப்பு வைக்கும் கிடங்கை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இவ்வகையில், 260 சிப்பம் கட்டும் அறைகள், 3 குளிர் அறைகள், 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர்ப் பதனக் கிடங்குகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அறுவடை செய்த வெங்காயத்தை 8-10 மாதம் வரையில் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்க முடியும். இதற்காக, குறைந்த செலவில் வெங்காயச் சேமிப்புக் கிடங்கை அமைக்க, 50 சத மானியமாக ரூ.87,500 வழங்கப்படுகிறது.
தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் எந்திரங்களைப் பயன்படுத்தினால், வேலையாள்கள் கூலி குறைவதுடன், சாகுபடிப் பணிகளையும் விரைந்து முடிக்கலாம். இத்திட்டத்தில், மினி ட்ராக்டரை வாங்க, 25 சத மானியமாக ரூ.75,000, எட்டுக் குதிரைத் திறனுள்ள பவர் டில்லரை வாங்க ரூ.40,000, எட்டுக் குதிரைத் திறனுக்கு மேலான பவர் டில்லரை வாங்க ரூ.60,000 மானியமாக வழங்கப்படும்.
பயிற்சி
அடர் நடவு, பசுமைக்குடில் சாகுபடி, சொட்டுநீர்ப் பாசனம் போன்றவற்றில் 9,470 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில், கொய்மலர்கள் மகத்துவ மையமும், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் காய்கறிப் பயிர்கள் மகத்துவ மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே உயர் தொழில் நுட்பங்கள் செயல் விளக்கமாகச் செய்து காட்டப்படுவதுடன், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், தரமான நடவுச் செடிகள் மற்றும் குழித்தட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்துக்காக 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 73 இலட்சம் நடவுச் செடிகள், 7.83 கோடி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பேருதவியாக இருக்கும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது www.tnhorticulture.gov.in என்னும் வலைத்தளத்திலும் விவரங்களைப் பெறலாம். உழவன் செயலியிலும் முன்பதிவு செய்து பயனடையலாம்’’ என்றார்.
மு.உமாபதி