கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019
பழங்காலம் முதல் பயன்பட்டு வருவது எள். அதிகளவில் எண்ணெய்ச் சத்துள்ள இது, எண்ணெய்வித்துப் பயிர்களின் அரசன் எனப்படுகிறது. சமையலுக்குப் பயன்படும் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணெய், தற்போது மருத்துவம், அழகுப் பொருள்கள் தயாரிப்புப் போன்றவற்றிலும் முக்கியப் பொருளாக உள்ளது. எள் புண்ணாக்கு, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது.
எள்ளில், டி.எம்.வி.7 இரகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 2009 இல் வெளியிடப்பட்டது. இது வேரழுகல் நோயைத் தாங்கி வளர்ந்து நிறைய மகசூலைத் தரும். இதன் வயது 85-90 நாட்கள். ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், மாசிப் பட்டத்துக்கு ஏற்றது. தமிழகம் முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஏக்கருக்கு 300 கிலோ, இறவையில் 328 கிலோ மகசூலைத் தரும். இந்த இரகத்தைச் சாகுபடி செய்து நல்ல மகசூலை எடுத்த எம்.ஜெயலட்சுமி கூறியதாவது:
“நான் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், திருமங்கலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எனது நிலத்தில் நெல் மற்றும் எள்ளைப் பல ஆண்டுகளாகச் சாகுபடி செய்து வருகிறேன். இதுநாள் வரையில் நாட்டு இரக எள்ளைத் தான் சாகுபடி செய்து வந்தேன். இதில் ஏக்கருக்கு 260 கிலோ எள் வரையில் கிடைக்கும். இந்நிலையில், நான் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்துக்குச் சென்றிருந்த போது, புதிய எள் இரகங்களையும், விதைநேர்த்தி, உரமிடுதல் போன்ற சாகுபடி உத்திகளையும் எடுத்துக் கூறினார்கள். மேலும், டி.எம்.வி.7 எள் விதையை, முதல்நிலை செயல் விளக்கத்திடல் திட்டத்திலிருந்து கொடுத்தார்கள்.
இந்த விதையைக் கடந்த மாசிப் பட்டத்தில் இறவையில் பயிரிட்டேன். உயிர் உரமான அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா மூலம் விதைநேர்த்தி செய்து விதைத்தேன். முறைப்படி, தழை, மணி, சாம்பல் சத்துகளையும் இட்டேன். அதனுடன் ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம், மாங்கனீசு சல்பேட் நுண்ணுரத்தையும் இட்டேன். மேலும், பயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றினேன்.
இப்படிச் செய்ததில் ஒரு செடிக்குச் சராசரியாக 215 காய்களும், ஒரு காயில் 58 விதைகளும் இருந்தன. ஏக்கருக்கு 390 கிலோ எள் கிடைத்தது. இந்த எள்ளை கிலோ 106 ரூபாய் வீதம் விற்றதில், 41,340 ரூபாய் வருமானமாகக் கிடைத்தது. டி.எம்.வி.7 எள், நான் வழக்கமாகப் பயிரிடும் நாட்டு எள்ளைவிட 33 சதவீத அளவுக்குக் கூடுதல் மகசூலைக் கொடுத்தது. அதாவது, புதிய இரகம், புதிய உத்திகளை நான் பயன்படுத்தியதால் எனக்கு 13,780 ரூபாய் கூடுதல் வருமானமாகக் கிடைத்தது.
என்னை போலவே இந்த இரகத்தின் மூலம் எங்கள் பகுதியில் மேலும் ஒன்பது விவசாயிகள் பயனடைந்துள்ளனர். எனது எள் சாகுபடியை நிலத்துக்கு வந்து நேரில் பார்த்த எங்கள் ஊரைச் சேர்ந்த மற்ற விவசாயிகளும், இந்த எள்ளைப் பயிரிடப் போவதாகவும், இந்த விதையைத் தரும்படியும் என்னிடம் கேட்டுள்ளனர்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
எனவே, தமிழகத்தில் எள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் அனைவரும், டி.எம்.வி 7 எள் இரகத்தை, ஆடி, புரட்டாசி மற்றும் மாசிப் பட்டத்தில் பயிரிட்டு அதிக மகசூலை எடுத்துப் பயனடையும்படி கேட்டுக் கொள்கிறோம்.
முனைவர் வெ.தனுஷ்கோடி,
முனைவர் கோ.அமுதசெல்வி, முனைவர் நூர்ஜஹான், அ.கா.அ.ஹனீப்,
வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி-639115.