கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020
தைம் என்னும் மூலிகைச்செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். பனியில்லாத மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவான வெப்பமுள்ள மித கோடைக்காலம் பயிரிட உகந்தது.
கடல் மட்டத்திலிருந்து 900-2500 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர்ந்த பகுதிகளில் நன்கு வளரும். இத்தாவரம் நிலத்தை உறை போல் மூடி மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கிறது.
தைமில் உள்ள சத்துகள்
நூறு கிராம் தைம் இலையில் புரதம் 9.7 கிராம், மாவுச்சத்து 64 கிராம், கொழுப்பு 7.1 கிராம், பாஸ்பரஸ் 0.2 கிராம், பொட்டாசியம் 0.8 கிராம், எண்ணெய் 0.7%, தைம் எண்ணெய்யில் உள்ள தைமால் என்னும் முக்கியப் பொருள் 23.6% உள்ளன.
மருத்துவக் குணங்கள்
தைம் இலைப் பொடியைச் சர்க்கரைப் பாகில் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட இருமல் குணமாகும். தைம் இலை வடிநீரைக் பருகினால் செரிமானச் சிக்கல் சரியாகும். தைம், பல் ஈறு நோய், வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் பூசண நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும், வியர்வையைப் பெருக்கி, சளி, ஜலதோஷம் விரைவில் குணமாக வழிவகை செய்யும். தலைவலி, இருமல் மற்றும் குரல்வளை ஒவ்வாமை குணமாக உதவும்.
நச்சு முறி மருந்தாகவும், சத்து மருந்தாகவும், வயிற்று உப்புசத்தை அகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. தைம் இலையில் உள்ள தைமால் என்னும் எண்ணெய், வைரஸ், பாக்டீரியா, பூசணங்கள் போன்ற நோய்க் கிருமிகளை எதிர்க்கும் திறனைக் கூட்டும். தைம் தேன் மிகச் சிறந்த மருத்துவக் குணம் உடையது.
பொதுப் பயன்கள்
தைம் இலை சூப், சாஸ், ஊறுகாய்த் தயாரிப்பில் வாசனைப் பொருளாகப் பயன்படுகிறது. தைம் எண்ணெய் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
தைம் தேநீர்
தேவையான பொருள்கள்: பால் 1 லிட்டர், தேயிலைத்தூள் 50 கிராம், தைம் இலை 50 கிராம், சர்க்கரை 250 கிராம்.
செய்முறை: முதலில், பாலைக் கொதிக்க வைத்து அதனுடன் தேயிலைத்தூள் மற்றும் சர்க்கரையைக் கலந்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு, தைம் இலைகளைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்தத் தைம் தேனீர், தலைவலி, சளி, இருமல் போன்றவற்றைப் நீக்கிப் புத்துணர்வை அளிக்கும்.
தைம் எண்ணெய்
தண்டு மற்றும் இலைகளை நீராவி முறையில் வடித்து எண்ணெய் எடுக்கலாம். தொடர்ந்து 150 நிமிடங்கள் நீராவிக்கு வடித்தலில் உட்படுத்தினால் அதிகளவில் எண்ணெய் கிடைக்கும். இந்த இலைகளில் 0.7% எண்ணெய் உள்ளது. ஒரு எக்டர் சாகுபடியில் இருந்து 60 கிலோ எண்ணெய் கிடைக்கும்.
முனைவர் தே.கெய்சர் லூர்துசாமி,
முனைவர் ப.பாலசுப்பிரமணியன், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,
உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.