அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயறு வகைகளில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு அளவில் கூடுதலாகப் புரதம் உள்ளது. மேலும், பயறு வகைகளை உண்பதால், தானிய வகைகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய அமினோ அமிலக் குறைகளைச் சரி செய்யலாம். ஆனால், பயறு வகைகளை சாகுபடி செய்யும் பரப்பானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே உள்ளது. எனவே, உற்பத்தியும் குறைகிறது.
பயறு வகைகளில் துவரை தென்னிந்தியாவில் விளையும் முக்கியமான பயறு வகையாகும். இதில் 22 சதவீதம் புரதம் உள்ளது. இந்தியாவில் உள்ள சைவ உணவாளர்களுக்குத் தேவையான புரதம், துவரையில் இருந்து தான் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் சுமார் 42 ஆயிரம் ஏக்கரில் துவரை பயிரிடப்படுகிறது. இதன் மூலம் சுமார் 41 ஆயிரம் டன் துவரை விளைகிறது. இதன் சராசரி மகசூல் எக்டருக்கு 1,047 கிலோவாகும். தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசி மற்றும் தைப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது. இந்தப் பருவங்களில் பயிரிட ஏற்ற குறுகிய கால இரகம் கோ.(ஆர்ஜி)7 ஆகும்.
இந்த இரகம் பி.பி. 9825 இல் இருந்து தனிவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. 120 முதல் 130 நாட்கள் வயதுள்ள இந்த இரகம், கோவை, சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில், மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட உகந்தது.
சிறப்புகள்
கோ.5, ஏ.பி.கே. 1 ஆகிய இரகங்களை விட 25 சதம் அதிக மகசூலைத் தரும். இதில், 23.5 சதம் புரதம் உள்ளது. விதைகள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த இரகத்தை மலட்டுத் தேமல் மற்றும் காய் ஈக்கள் தாக்குவது குறைவாக இருக்கும்.
சாகுபடி முறை
இந்த இரகத்தை ஆடி, புரட்டாசி மற்றும் தைப்பட்டத்தில் விதைக்கலாம். ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். விதைக்கும் நிலத்தை 3-4 முறை புழுதி புரள நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய தென்னைநார்க் கழிவை இட்டு, முகடு மற்றும் வரப்புகளை அமைக்க வேண்டும். நிலம் வளமாக இருந்தால் 60×30 செ.மீ. இடைவெளியிலும், வளம் குறைந்த நிலமாக இருந்தால் 45×30 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து 24 மணி நேரம் கழித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தயாரிப்பான சி.பி.ஆர்.9 வகை ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பி.ஜி.பி.ஆர். நுண்ணுரம் ஆகியவற்றைத் தலா ஒரு பொட்டலம் வீதம் எடுத்துக் கலந்து வைத்துள்ள அரிசிக்கஞ்சிக் கலவையில் நேர்த்தி செய்ய வேண்டும். இது, ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை நேர்த்தி செய்யும் அளவாகும்.
உரமிடுதல்: மானாவாரி நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 5 டன் இயற்கை உரத்துடன், யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 63 கிலோ, பொட்டாஷ் 8 கிலோ, 23 கிலோ ஜிப்சம் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். பாசன நிலமாக இருந்தால் இயற்கை உரத்துடன், யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 16 கிலோ, ஜிப்சம் 43 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
பாசனம்: இறவை சாகுபடியில் விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, மூன்று நாட்கள் கழித்து உயிர்நீர் விட வேண்டும். அடுத்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, பாசனம் செய்ய வேண்டும்.
களை நிர்வாகம்: நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. ஆட்கள் மூலம் களைகளை அகற்றலாம். அல்லது ஏக்கருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்திலின் 30 இ.சி. களைக்கொல்லி வீதம் எடுத்து, விதைத்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். அப்போது நிலத்தில் தகுந்த ஈரப்பதம் இருக்க வேண்டும். களைக்கொல்லி மருந்தைத் தவிர்ப்பதே நல்லது.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: பச்சைக்காய்ப் புழு: காய்களில் வட்டத் துளைகள் இருக்கும். பல்வேறு வளர் நிலைகளில் உள்ள காய்ப் புழுக்களும் மொட்டு, பூ, காய், விதை ஆகியவற்றைத் துளைத்து உண்ணும். அப்போது புழுக்களின் தலை காய்க்கு உள்ளும், உடல் வெளியிலும் இருக்கும். பத்து சதவீதக் காய்கள் பாதிக்கப்பட்டால், அது பொருளாதாரச் சேத நிலையாகும்.
புள்ளிக்காய்ப் புழு: இலை, பூ, மொட்டுகளைப் பிணைத்துச் சேதப்படுத்தும். காய்கள் துளையுடன் இருக்கும். பச்சை கலந்த வெண்புழுக்கள், இரண்டு கரும் புள்ளிகளுடன் இருக்கும். ஒரு செடிக்கு மூன்று புழுக்கள் இருந்தால் அது பொருளாதாரச் சேத நிலையாகும்.
கட்டுப்படுத்துதல்: செடிகளில் 50 சதவீதப் பூ மொக்குகள் இருக்கும் போது, ஏக்கருக்கு 60 மி.லி. குளோர் அன்ட் ரோனிலிப்ரோல் 18.5 எஸ்.சி. மருந்து வீதம் தெளிக்க வேண்டும். பூக்கும் போது, ஏக்கருக்கு 50 மி.லி. புளுமென்டியமைட் 48 எஸ்.சி. மருந்து வீதம் தெளிக்க வேண்டும்.
காய்கள் காய்க்கும் போது, ஏக்கருக்கு 400 மி.லி. டைமெத்தயேட் 30 இ.சி. மருந்து வீதம் தெளிக்க வேண்டும். எக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்கலாம். எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகளை வைக்கலாம். புழு, பூ வண்டுகளைக் கைகளால் சேகரித்து அழிக்க வேண்டும்.
நோய்கள்: மலட்டுத் தேமல் நோய்: மஞ்சள் வளையம் தோன்றும். அடர் பச்சை, வெளிர் பச்சை, இளமஞ்சள் நிறங்கள் மாறி மாறிக் காணப்படும். இலைகள் கடினமாக இருக்கும். செடியின் தலைப்பாகம் புதரைப் போல மாறும். செடிகள் மலட்டுத் தன்மையை அடையும்.
தீர்வு: இதைக் கட்டுப்படுத்த, நோயுற்ற செடிகளை நீக்க வேண்டும். நோய் அறிகுறி தெரிந்ததும் ஏக்கருக்கு 200 மி.லி. பினோசோகுயின் 10 இ.சி. மருந்து வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
வாடல் மற்றும் வேரழுகல் நோய்: இலைகள் மஞ்சளாக வாடித் தொங்கும். நோயுற்ற செடிகளை எளிதில் பிடுங்கி விடலாம். வேர்ப்பட்டைகள் உரிந்து இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்
எண்பது சதவீதக் காய்கள் முற்றியதும் செடிகளை அறுவடை செய்து, ஓரிரு நாட்கள் அடுக்கி வைத்தும், பிறகு காய வைத்துத் தட்டியும் விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். இறவையில் எக்டருக்கு 1,160 கிலோ துவரை கிடைக்கும். மானாவாரியில் 915 கிலோ துவரை கிடைக்கும்.
சேமிப்பு
இந்த விதைகளை 10 சதவீத ஈரப்பதம் வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமல் இருக்க, 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ வேப்ப எண்ணெய் அல்லது ஊக்குவிக்கப்பட்ட களிமண் வீதம் கலந்து சேமிக்க வேண்டும். இங்கே கூறியுள்ள உத்திகளைக் கொண்டு கோ.(ஆர்.ஜி.)7 இரகத்தைப் பயிரிட்டால், குறைந்த காலத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.
முனைவர் ஆ.தங்கஹேமாவதி,
முனைவர் ச.கவிதா, முனைவர் சே.லஷ்மி, பயறுவகைத் துறை,
பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை- 641 003.