கட்டுரை வெளியான இதழ்: மே 2020
மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளையே பெரும்பாலும் தாக்கும். இக்கிருமி இயல்பாகவே மண்ணில் பரவியிருக்கும். மேலும், செம்மறியாட்டின் குடலிலும் சிறிதளவில் இருக்கும்.
மழைக் காலமான ஜூலை-அக்டோபரில் இந்நோய் அதிகமாக இருந்தாலும், வெய்யில் காலமான மார்ச்-ஜூன் மற்றும் குளிர் காலமான நவம்பர் டிசம்பரிலும் இளம் செம்மறியாடுகளைத் தாக்கும். சில சமயம் வெள்ளாடுகள் அல்லது கன்றுகளையும் இந்நோய் தாக்கும். 3-12 மாதச் செம்மறியாடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படும்.
நோய்க் காரணம்
மாவு அல்லது புரதம் நிறைந்த உணவை வயிறு நிறைய உண்பது. அதாவது, தானியங்கள், பசுந்தீவனம், பால் மற்றும் தீவனப்பயிர்கள் போன்றவற்றை அதிகளவில் உண்பது. அடுத்து, மழை பெய்ததும் வேகமாக வளரும் இளம் பசும்புல்லில் மாவுச்சத்து மிகுந்தும் நார்ச்சத்துக் குறைந்தும் இருக்கும். இதை மேயும் ஆடுகளின் குடலிலுள்ள நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நச்சுப்பொருளை உற்பத்தி செய்வதால் ஆடுகள் பாதிக்கப்படும்.
அடுத்து, தாய்ப்பாலை நிறையக் குடிக்கும் குட்டிகள், இக்கிருமியின் நச்சுப்பொருளால் பாதிக்கப்படலாம். இளம் ஆடுகளில் இந்நோய்க் கிருமியின் நச்சுப்பொருளைச் சிதைக்கும் நொதிகள் இருப்பதில்லை. எனவே, இளம் குட்டிகளே பெருமளவில் பாதிக்கப்படும்.
பாதிப்புகள்
அதிகளவில் மாவு அல்லது புரதம் நிறைந்த தீவனங்களை உண்பது முக்கியக் காரணம். மேலும், குடலில் சுரக்கும் சிலவகை நொதிகள் மூலம் இந்நச்சுப் பொருள்களின் வீரியம் ஆயிரம் மடங்காகி இரத்தத்தில் கலந்து விடும். எனவே, நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படுவதால், ஆடுகள் உடனடி இறந்து விடும். முக்கியமாக மூளையே பாதிப்பதால் நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
செம்மறிக் குட்டிகளில் இந்நோயின் தாக்கத்தை, அதிதீவிர நிலை, தீவிர நோய் நிலை எனப் பிரிக்கலாம். முதல் நிலையில் பெரும்பாலும் 2 மணி நேரத்தில் குட்டிகள் இறந்து விடும். சில சமயங்களில் 12 மணி நேரம் கூட ஆகலாம். எந்த அறிகுறியும் தெரியாமல் திடீரெனக் குட்டிகளை இறக்கச் செய்வது இந்நோயின் தன்மையாகும். தீவிர நோய் நிலையில் வலிப்புடன் வாயில் நுரையை விட்டபடியே குட்டிகள் இறந்து விடும். சில ஆடுகளில், பச்சை நிறத்துடன் கூடிய கழிச்சல் மற்றும் தீவிரத் தசைப்பிடிப்பு இருக்கும். கழுத்து வளைந்திருக்கும். வயிற்றைக் காலால் உதைக்கும். பிறகு தள்ளாடி நடந்து உணர்விழந்து கீழே விழுந்து இறந்து விடும்.
வயதான செம்மறியாடுகளில் நரம்பு மண்டல அறிகுறிகள் மட்டுமே தெரியும். அதாவது, வாயில் எச்சில் வழிதல், தசை வலிப்பு அல்லது தசை நடுக்கம், பற்களை நறநறவெனக் கடித்தல், வயிற்று உப்பசம் போன்றவை இருக்கும். மேலும், தள்ளாடி நடக்கும் அல்லது மண்டியிட்டுக் கொண்டிருக்கும்.
வெள்ளாடுகளில் பெரும்பாலும் கழிச்சல் இருக்கும். மேலும், காய்ச்சல், தீவிர வயிற்றுவலி, இரத்த பேதி போன்றவையும் இருக்கும். நான்கு மணி நேரத்தில் அல்லது நான்கு நாட்களில் ஆடுகள் இறந்து விடும். இந்நோய் நாள்பட்டதாய் இருந்தால், தீவனம் உண்ணாமை, கழிச்சல், இரத்த பேதி, இரத்தச்சோகை, உடல் மெலிதல் ஆகியன இருக்கும்.
நோயைக் கண்டறிதல்
நோய் அறிகுறிகள் மூலம் அறியலாம். இறப்புச் சோதனையில் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றம், அதாவது, சிறுநீரகம் கூழைப் போல இருக்கும். இறந்த ஆட்டின் குடலிலுள்ள பொருள்களில் இருந்து தடவுகையைத் தயாரித்து நுண்ணோக்கி மூலம் கிருமிகளைக் காணலாம். எலிசா போன்ற ஊநீர் ஆய்வு மூலம் இக்கிருமியின் தாக்கத்தை அறியலாம்.
ஆய்வக மாதிரி எடுத்தல்
இறந்த ஆட்டின் குடலிலுள்ள உணவுப் பொருள்களைச் சுத்தமான கண்ணாடிக் குழாயில் எடுத்து, அத்துடன் 10 மில்லிக்கு ஒரு சொட்டு குளோரோபார்ம் வீதம் கலந்து கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த வேதிப்பொருள், ஆட்டின் குடல் மற்றும் உள்ளிருக்கும் பொருள்களைப் பாதுகாத்து, நோய்க் கிருமியைக் கண்டறிய உதவும்.
சிகிச்சை
செம்மறியாடுகள் திடீரென இறந்து விடுவதால் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை. ஆனால், வெள்ளாடுகளில் சில சமயங்களில் இந்நோய் உடனடி இறப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே, சல்பாடிமிடின் போன்ற மருந்துகளை ஊசி மூலம் அளித்து நோயைக் கட்டுப்படுத்தலாம். எதிர் உயிரியுடன் எதிர் நச்சுப்பொருள் மற்றும் சத்துகளைக் கலந்து ஊசி மூலம் அளிக்கலாம்.
நோயைத் தவிர்த்தல்
அதிகளவில் தானியம் மற்றும் தீவனத்தைக் கொடுக்கக் கூடாது. அடர் தீவனத்தைப் படிப்படியாகக் கூட்ட வேண்டும். ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பே தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும்.
முனைவர் செ.ஜெய்சங்கர்,
மரு.அ.ஷீபா, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை.