மாடித் தோட்டம் போடலாம் வாங்க..!

மாடி HP 7 e1612560637703

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

மது உணவில் 50 சதம் காய்கறிகளின் பங்காகும். இவற்றில், நமக்குத் தேவையான, ஏ, பி, சி, டி, இ, கே ஆகிய வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, கந்தகம், மக்னீஷியம். மாங்னீஷ், சோடியம், குளோரைடு, அயோடின், துத்தநாகம், தாமிரம் ஆகிய தாதுப்புகள் நிறைந்துள்ளன.

பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில், விரைவு உணவுகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உணவுகளில் நமக்குத் தேவையான முக்கிய சத்துகள் இருப்பதில்லை.

மேலும், காய்கறிகள் விலை உயர்வு, காய்கறிகளின் அவசியத்தை அறியாமை மற்றும் காய்கறிப் பயிர்களை வளர்க்கப் போதிய இடம் இல்லாததால், காய்கறிகளை உண்ணும் அளவு குறைவாகவே உள்ளது.  

இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, தினமும் ஒவ்வொருவரும் 125 கிராம் கீரை, 100 கிராம் கிழங்கு, 75 கிராம் இதரக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டத்தை அமைத்தால், இந்த இலக்கை அடையலாம்.

பயன்கள்

தேவையான காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். தேவையான நேரத்தில் பறிப்பதால், சத்துகள் வீணாகாத வகையில் உண்ணலாம். குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துப் பயன்பாடு இல்லை என்பதால், உடலுக்குத் தீங்கு நேர்வதில்லை.

வீடு அழகாக இருக்கும். மாடியைத் தோட்டமாக மாற்றுவதால் வீடு குளிர்ச்சியாக இருக்கும். இதனால், மின்சாரப் பயன்பாடும் குறையும். வீட்டில் இருக்கும் பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பயனுள்ள பொழுதுபோக்காக அமையும்.

மாடித்தோட்ட வகைகள்

மாடித் தோட்டத்தைத் திறந்தவெளித் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில் தோட்டமாக அமைக்கலாம். நிழல்வலைக் குடிலில் செடிகளை வளர்ப்பது, திறந்த வெளியில் வளர்ப்பதை விட எளிதாக இருக்கும்.

ஏனெனில், இதில் சூரியவொளி, காற்று, குளிர், மழை மற்றும் ஏனைய சுற்றுப்புறக் காரணிகள் நேரடியாகத் தாக்கும் வாய்ப்புக் குறைவாக இருக்கும். மேலும், பூச்சி மற்றும் நோய்களின் தாக்கமும் குறைவாக இருப்பதால், செடிகள் செழிப்பாக வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கும். ஆனால், செலவு கொஞ்சம் அதிகமாகும்.

பல்லாண்டுத் தோட்டம்

மாடித் தோட்டத்தைப் பல்லாண்டுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். குறுகிய கால மாடித் தோட்டத்தால், உழைப்பு, பணம், கட்டமைப்பு அனைத்தும் முழுப் பயனைத் தராமல் வீணாகி விடும்.

திறந்தவெளி

ஐந்தாறு பேர்கள் உள்ள குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய, 600 சதுரடி இடம் தேவை. இதற்குக் குறைவான இடத்திலும் அமைக்கலாம். ஏனெனில், மாடித் தோட்டத்தை அமைக்க, மாடியின் பரப்பு ஒரு காரணமாக அமைவதில்லை.

மாடியின் பரப்புக்கு ஏற்ப, தோட்டத்தை அமைக்கலாம். குறைந்த பரப்புள்ள மாடியில், முக்கியக் காய்கறிகள் மற்றும் விலை கூடுதலான காய்கறிகளை மட்டும் உற்பத்தி செய்யலாம். மற்றவற்றைச் சந்தையில் வாங்கிக் கொள்ளலாம்.

தொட்டிகள் மற்றும் பாத்திகள்

காய்கறிப் பயிர்களைப் பல்வேறு அளவுள்ள தொட்டிகளில் வளர்க்கலாம். ஆனால், 45, 60, 72 செ.மீ. விட்டம் மற்றும் 20-30 செ.மீ. ஆழமுள்ள தொட்டிகள் மிகவும் உகந்தவை. தொட்டிகளின் அடியில் வடிகால் துளைகள் இருக்க வேண்டும்.

கீரைப் பாத்தியை, 1-1.5 அடியில் உயரத்தில் 6×3 அல்லது 9×3 அடி நீள, அகலத்தில் அமைக்கலாம். உயரம் இந்தளவில் இருந்தால் தான் கீரையின் வேர்கள் நன்கு வளரும். இதை, செங்கல், சிமெண்ட்டால் கட்டியும், அடியில் நெகிழித்தாளை விரித்தும் நிலையாகப் பயன்படுத்தலாம்.

நாற்றங்கால்

நாற்றுகளைக் குழித்தட்டுகளில் வளர்த்துக் கொள்ளலாம். இந்தத் தட்டுகள் 0.2, 0.4, 0.6, 0.8 மற்றும் 1.0 மி.மீ. கனத்தில், 1.0 மற்றும் 1.5 செ.மீ. குழிகளுடன் கிடைக்கும். காய்கறிப் பயிர்களுக்கு 0.8 மி.மீ. கனத்தில் 98 குழிகளுள்ள தட்டுகள் மிகவும் உகந்தவை. மண்ணுக்குப் பதிலாக, மட்கிய தென்னைநார்க் கழிவு மற்றும் மண்புழு உரத்தில் நாற்றுகளை வளர்க்கலாம்.

வளர் ஊடகம்

காய்கறிப் பயிர்களை வளர்ப்பதற்கு, மணல் கலந்த வண்டல் மண் மற்றும் மட்கிய தொழுவுரத்தைச் சமமாகக் கலந்து வளர் ஊடகமாகப் பயன்படுத்தலாம். இது, களிமண் வகையைச் சார்ந்ததாக இருந்தால், மண், மணல், மட்கிய தொழுவுரத்தைச் சமமாகக் கலந்து பயன்படுத்தலாம்.

கருவிகள்

முக்கியமான விவசாயக் கருவிகளை வைத்திருக்க வேண்டும். அதாவது, வளர்ச்சி ஊடகத்தை இடம் விட்டு இடம் மாற்ற, களைகளை அகற்ற, வளர் ஊடகத்தைக் கொத்தி விட, சிறிய மண்வெட்டி, களைக்கொத்து, பூவாளி, சிறு கூடைகள் மற்றும் சிறிய கைத்தெளிப்பான் அவசியம் இருக்க வேண்டும்.

நிழல் வலை

காய்கறிப் பயிர்கள் வெய்யிலில் வளரும் என்றாலும், கடும் வெய்யிலில் செடிகள் வாடவோ கருகவோ வாய்ப்புள்ளது. எனவே, 50% நிழலைத் தரும் நிழல் வலையைப் பயன்படுத்தினால், பூச்சிகள், நோய்கள் மற்றும் சுற்றுப்புறக் காரணிகள் தாக்காமல் பயிரைக் காக்காலாம்.

தொட்டிகளை அமைக்கும் முறை

கீரைகளைப் பாத்திகளில் வளர்த்துக் கொள்ளலாம். கொடிவகைக் காய்கறிப் பயிர்களை மாடியின் கைப்பிடிச் சுவருக்கு அருகில் வளர்த்தால், பந்தல் செலவைக் குறைக்கலாம். கொஞ்சம் பெரிதாக வளரும் கறிவேப்பிலை, வாழை, பப்பாளி மரங்களை மாடியின் ஓரத்தில் வளர்க்கலாம்.

ஒவ்வொரு பயிரையும் 20-30 செடிகளுள்ள கூட்டமாக அல்லது தனித்தனியாக அல்லது தொட்டியில் வளர்க்கலாம். நடந்து செல்லவும், வேலைகளைச் செய்யவும் ஏதுவாக இடம் விட்டுத் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

தோட்டத்தை உருவாக்குதல்

வளர்ப்புத் தொட்டியைச் சுத்தமாகக் கழுவிய பிறகு, அதன் அடிப்பகுதியில் வடிகால் துளைகளை இட வேண்டும். பிறகு, மண், மட்கிய தொழுவுரம் மற்றும் மணலைச் சமமாகக் கலந்து இட வேண்டும்.

நீரை ஊற்ற ஏதுவாக, தொட்டியின் மேல்பகுதியில் ஒரு அங்குலம் வரையில் காலியாக இருக்க வேண்டும். நாற்று உற்பத்திக்கு, மணல் மற்றும் தொழுவுரத்தைச் சமமாகக் கலந்து குழித்தட்டில் நிரப்பி விதைகளை ஊன்றி நீரூற்ற வேண்டும்.

விதைகளை, அவற்றின் அளவைப் போல் 2.5 மடங்கு ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைகள் முளைத்து வளரும் வரையில் குழித்தட்டில் வைக்கோல் அல்லது சருகால் மூட வேண்டும். விதையிட்ட ஒரு மாதத்தில் நாற்றுகள் தயாராகி விடும்.

வளர்ப்பு முறைகள்

காய்கறிச் செடிகள் பெரும்பாலும் நேரடியாக விதை மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கத்தரி, மிளகாய், தக்காளி, குடமிளகாய், முட்டைக்கோசு, பூக்கோசு, வெங்காயம் போன்றவை நாற்றுகளாக நடப்படுகின்றன.

இந்த நாற்றுகளை தொட்டி அல்லது குழித்தட்டில் வளர்க்கலாம். வாளிப்பான நாற்றுகளை நட வேண்டும். ஒரு தொட்டியில் பீர்க்கன், புடல், பாகல், வெள்ளரி, பூசணி, அவரை போன்ற கொடிவகை விதைகளை, வகைக்கு ஒன்றாகவும்; கொத்தவரை, தட்டைப்பயறு, வெண்டை, பிரன்ச் பீன்ஸ் போன்ற விதைகளைத் தொட்டிக்கு 4-5 ஆகவும் நடலாம்.

ஒரே தொட்டியில் ஒரே நேரத்தில் ஏராளமான செடிகளையும்; தண்டுக்கீரை, பாலக்கீரை, ஸ்பினாச், வெந்தயக்கீரை, கொத்தமல்லிக் கீரையை வளர்த்தும் 3-4 முறை அறுவடை செய்யலாம்.

தொட்டிகளில் வளரும் செடிகளுக்கு, மண்ணிலுள்ள ஈரப்பதம், வெப்பம், பயிர் வகை, பயிர் நிலை, தொட்டியின் அளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நீரூற்ற வேண்டும். கோடையில் தினமும் இருமுறை நீர் தேவைப்படும். தேவைக்கு மேல் நீரைத் தரக்கூடாது. ஒரு அங்குல மண் காய்ந்திருந்தால் நீரைத் தரலாம்.

உரமிடுதல்

கலப்பு உரங்களை மேலுரமாக இட்டால், செடிகளின் வளர்ச்சியும் மகசூலும் கூடும். டிஏபி, யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்டைக் கொஞ்சம் போல இடலாம். நடவு முடிந்து 2-3 வாரத்துக்குப் பிறகு, பத்து நாளுக்கு ஒருமுறை, தொட்டி ஒன்றுக்கு 5-10 கிராம் வீதம் யூரியாவை இட வேண்டும்.

அதிகமாக உரத்தை இட்டால் செடிகளுக்குத் தீமையே விளையும். உரமிட்டதும் பாசனம் அவசியம். மண்புழு உரம், மட்கிய தென்னைநார்க் கழிவு மற்றும் இலை மட்கை இட வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

வேர்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், கைக்களை எடுப்பதே சிறந்தது. தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றில், வேர்களைப் பாதிக்காத வகையில் களைகளை அகற்ற வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

செடிகளின் வளர்ச்சிப் பருவத்தில், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான, அசுவினி மற்றும் தத்துப் பூச்சிகள் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் ஒட்டும் திரவமாக, காதிசோப் அல்லது எமல்சிபையரைக் கலந்து தெளிக்க வேண்டும்.

அல்லது 3 சத வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்கலாம். அதாவது, 250 கிராம் வேப்ப விதைகளைத் தூளாக்கி, 2.5 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் மேலும் 2.5 லிட்டர் நீர் மற்றும் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் ஒட்டும் திரவத்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களைப் பழ ஈக்கள் மற்றும் காய்த் துளைப்பான்கள் பெருமளவில் சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, வேம்பு மருந்துகளைத் தெளிக்கலாம். மழைக்கால நாற்றங்காலில், வைரஸ் நோய்கள், வேரழுகல் மற்றும் வாடல் நோய் ஆகியன தாக்கும்.

3 ஜி கரைசல்

பச்சை மிளகாய் 50 கிராம், இஞ்சி 100 கிராம், பூண்டு 100 கிராம் வீதம் எடுத்து அரைத்து மூன்று லிட்டர் நீரில் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து வடிகட்டினால் 3 ஜி கரைசல் தயாராகி விடும்.

இதை, ஒரு லிட்டர் நீருக்கு 50 மில்லி வீதம் கலந்து, காலை அல்லது மாலையில் இலைகள் நன்கு நனையும்படி தெளித்தால், அனைத்துப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.

பூசண நோய்களைத் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து, நிலம் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். வைரஸ் நோய்கள் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழித்து விட வேண்டும்.

அறுவடை

காய்கறிகளைச் சரியான பருவத்தில் அறுவடை செய்தால், நல்ல தோற்றத்தில் சத்துகள் நிறைந்தும், சுவை மிகுந்தும் இருக்கும். கீரை வகைகள் இளமையாக இருக்கும் போதே அறுவடை செய்ய வேண்டும்.

நார்த்தன்மை அடைவதற்குள் கிழங்குகளை அறுவடை செய்ய வேண்டும். சத்துகள் மிகுந்த லீக், வெந்தயம், சோயா போன்றவை சந்தையில் கிடைப்பதில்லை. இவற்றை வளர்த்துப் பயனடையலாம்.

கவனிக்க வேண்டியவை

2மொட்டை மாடியின் தரை, நீரை உறிஞ்சாத வகையில் இருக்க வேண்டும். வளர் ஊடக எடை குறைவாக இருக்க வேண்டும். மாடியில் அதிக எடையை ஏற்றாத வகையில் தொட்டிகள் மற்றும் பாத்திகளை அமைக்க வேண்டும். அவற்றின் அடியில் நீர் வெளியேறும் வகையில் துளைகள் இருக்க வேண்டும். மாடியில் நீர் தேங்கக் கூடாது.

குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்களால் மாடித் தோட்டத்தை அமைக்க வேண்டும். கோடையில் நிழல்வலை மூடாக்கு அவசியம் தேவை. இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை முடிந்த வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தொழுவுரம், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கை உரமாக இடலாம். இயற்கை முறையில் பயிர்களைப் பாதுகாக்கலாம்.

அவரவர் வீட்டு மாடியில் தோட்டத்தை அமைத்து, சத்தான மற்றும் செழிப்பான காய்கறிகளை உற்பத்தி செய்தால், நலமாகவும் வளமாகவும் பல்லாண்டுகள் வாழலாம். 


மாடி DR.V.SIVAKUMAR

முனைவர் வெ.சிவக்குமார்,

முனைவர் சு.பிரணீதா, முனைவர் மு.அழகர், முனைவர் சி.சுதாலட்சுமி,

முனைவர் ப.மீனா, முனைவர் இ.இராஜேஸ்வரி, 

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார்-642101. 

முனைவர் இரா.பாலகும்பகன், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்-625604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading