புளிய மரம் வளர்ப்பு!

புளிய மரம் Tamarind

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

றட்சியைத் தாங்கிப் பலன் கொடுக்கும் பழ மரங்களில் முக்கியமானது புளிய மரம். இது ஒரு பசுமை மரமாகும். இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. வணிக நோக்கில் பயிராகும் ஐம்பது வாசனைப் பயிர்களில் புளிய மரம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு மூன்று இலட்சம் டன் புளி உற்பத்தியாகிறது. இதில் 10-12% மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது உலகளவில் ஆறாம் இடமாகும்.

இந்திய சமையலில் மணமும், சுவையும் தரவல்ல முக்கியக் கூட்டுப் பொருளாகப் புளி விளங்குகிறது. இதைத் தவிர, மருந்து மற்றும் உடைத் தயாரிப்பு ஆலைகளில் ஒரு மூலப் பொருளாகவும், இரசாயனப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. டாமரிண்டஸ் இண்டிகஸ் என்னும் தாவரப் பெயரைக் கொண்ட புளி, சிசால்பினேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த பயிராகும்.

இதன் பிறப்பிடம் கிழக்கு ஆப்பிரிக்காவாக இருந்தாலும், இந்தியா, வங்காளம், மியான்மர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இயற்கை வளத்துடன் நன்கு வளர்ந்து பயன் தருகிறது.

இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், மேற்கு வங்கம், ஒரிஷா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.

பயன்கள்

நம் நாட்டிலிருந்து, புளியம் பழமாக, நார், கொட்டை நீக்கிய புளியாக, புளியஞ்சாற்றுப் பசையாக; அரபு நாடுகள், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, வங்காளம் ஆகிய நாடுகளுக்குப் புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வளரியல்பு

வலிமையான தண்டைக் கொண்ட புளிய மரம் நன்கு படர்ந்து 6-10 மீட்டர் உயரம் வளரும். தமிழ்நாட்டில் ஏப்ரல்-ஜூலை காலத்தில் பூக்கும். சிவப்பு எறும்புகள் இதன் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. பூக்கள் பூப்பதற்கு முன் புதிய இலைகள் தோன்றும். பூக்கள் இலட்சக்கணக்கில் பூத்தாலும் 1-2% பூக்களே காய்களாகிப் பழங்களாகும்.

காய்கள் தட்டையாகவும், குட்டையாகவும் மற்றும் நீளமாகவும் இருக்கும். பழுத்ததும் பழங்கள் கெட்டியாகவும், மேல் ஓடுகள் உடையும் தன்மைக்கும் மாறி விடும். நல்ல விலை கிடைக்க வேண்டுமானால், பழுப்பு நிறத்திலும், புளிப்புச் சுவையிலும் புளி இருக்க வேண்டும். 

தட்பவெப்பம்

வெப்பப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட புளி, பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும் வளரும். மிதவெப்பச் சூழலில், வறட்சிப் பகுதிகளில் நன்றாக வளரும். ஆனால், மிகக் குறைந்த வெப்பம், பனி, குளிர்ந்த காற்று புளிய மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

காற்றுவெளியில் அதிகளவாக வெப்பம் 36-47.50 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தளவாக 17.50 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்க வேண்டும். காய்கள் குளிர்ந்த சூழலில் பழுக்கும். ஆண்டுக்கு 750-900 மி.மீ. மழையுள்ள பகுதிகளில் புளிய மரம் நன்றாக வளரும்.  கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரையில் புளியைப் பயிரிடலாம்.

மண்வளம்

புளிய மரம் எல்லாவித மண்ணிலும் வளரும். வடிகால் வசதி அவசியம். நீர்த் தேங்கி நிற்கக் கூடாது. களர் உவர் மற்றும் கரிசல் நிலத்திலும் புளிய மரம் வளரும் என்றாலும், மணல் கலந்த செம்மண் மிகவும் ஏற்றதாகும். இந்த மண் புளியின் வளர்ச்சிக்கும் விளைச்சலுக்கும் உகந்தது. ஏனெனில், இந்நிலத்தில் வேர்கள் ஆழமாகச் செல்லும்.

இரகங்கள்

பி.கே.எம்.1: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்டது. பழங்கள் 17 செ.மீ. நீளத்தில் தட்டையாக இருக்கும். மரங்கள் அதிகமாகப் படராமல் குட்டையாக இருக்கும். நட்ட 18 மாதங்களில் பூக்கும். மூன்று ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். ஒன்பதாம் ஆண்டில் ஒரு மரம் 400 கிலோ பழங்களைக் கொடுக்கும்.

பழங்களில் 3-7 விதைகள் இருக்கும். 100 கிலோ பழத்தில் 37 கிலோ புளியும், 20 கிலோ ஓடும், 32 கிலோ விதையும், 10 கிலோ நாரும் இருக்கும். டார்டார்டிக் அமிலம் 71%, அஸ்கார்பிக் அமிலம் 3.75% இருக்கும். இது நாட்டு இரகத்தில் இருப்பதை விட அதிகமாகும். சாதாரண நாட்டு இரக மரங்கள் 5-8 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பூக்கும். 

உரிகம்: தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் உரிகம் கிராமத்தில் 150 வயதுள்ள 60 அடி உயர மரம், தொடர்ந்து அதிக விளைச்சலைக் கொடுத்து வந்தது. அந்த மரத்திலிருந்து ஒட்டுகளை எடுத்து உருவாக்கப்பட்டது தான் உரிகம் உயர் விளைச்சல் இரகம். வளர்ந்த மரங்கள் குடையைப் போலத் தெரியும். பழங்கள் 150-200 கிராம் எடையில், நீளமாக, ருசியான சதைப்பற்றுடன் இருக்கும். 10-12 விதைகள் இருக்கும். தமிழ்நாடு வனத்துறை ஆராய்ச்சிப் பண்ணைகளில் இந்த மரங்கள் உள்ளன. 

இனப்பெருக்கம்

புளிய மரம் பெரும்பாலும் விதை மற்றும் ஒட்டுக் கன்றுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. பலதரப்பட்ட தட்ப வெப்ப நிலையிலும், மண்ணிலும் வளர்வதால் மரத்தின் மரபியல் பண்புகள் மாறுபடுகின்றன. கன்றுகளை விதைகள் மூலம் உற்பத்தி செய்தால், ஓராண்டுக் கழித்து நடலாம். ஆனால், இவை 8-10 ஆண்டில் தான் காய்ப்புக்கு வரும். ஒட்டுக் கன்றுகள் 2-3 ஆண்டில் காய்ப்புக்கு வந்து நல்ல பலனை அளிக்கும்.

குச்சிகள் மூலம் இனப்பெருக்கம்

முதிர்ந்த குச்சிகளை ஜூன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மண் கலவையில் நட்டு வேர்ப்பிடிக்க வைக்கலாம். ஐ.பி.ஏ. 1000 பி.பி.எம். கலவையில் குச்சிகளின் அடிப்பாகத்தை 5-10 நிமிடங்கள் நனைத்து நட்டால் 25-36% குச்சிகளில் வேர்கள் உருவாகும்.

மொட்டுக் கட்டுதல் முறை

இந்த முறையிலும் புளிய நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். பாட்ச் மொட்டுக் கட்டுதல் முறையில் உருவாக்கிய 9 மாத நாற்றுகள் 90% வேர்ப் பிடித்து வளரும்.

பதியம்

மே மாதத்தில் பதியம் போட வேண்டும். பதியமிடும் பகுதியை ஐ.பி.ஏ. 1000 பி.பி.எம் கலவையில் நனைத்து நட்டால் 75% வரை வேர்ப் பிடிக்கும்.

ஒட்டு முறை

தாய்மரக் கிளையையும் அடிக்கன்றையும் இணைத்துக் கட்டும் இம்முறையில் 81% வரை வெற்றி கிடைக்கும். 15 செ.மீ. கனமும் 10-12 செ.மீ. உயரமும் உள்ள ஆறு மாத நாற்றுகளை அடிக்கன்றாகப் பயன்படுத்த வேண்டும்.  குறுகிய இடைவெளியில் நட்ட தாய்ச் செடிகள் வளர்ந்த பிறகு, போதிய பக்கக் கிளைகளை உருவாக்க, நுண்ணொட்டு இனப்பெருக்க முறை பயன்படுகிறது. மே மாதம் சேகரிக்கப்படும் குருத்துகள் அதிகளவில் செடிகளாக மாறுகின்றன. 

இடைவெளி

ஒரு மீட்டர் நீள, அகல, ஆழக் குழிகளை, 10×10 மீட்டர் இடைவெளியில், ஜூன் மாதத்தில் எடுக்க வேண்டும். இம்முறையில் எக்டருக்கு 100 செடிகள் தேவைப்படும். ஒட்டுச் செடிகள் குட்டையாகவும் குறைவாகவும் படர்வதால் 8×8 மீட்டர் இடைவெளியே போதும். இம்முறையில் எக்டருக்கு 156 செடிகள் தேவைப்படும். ஜூன் ஜூலை அல்லது அக்டோபர் நவம்பர் புளி நடவுக்கு ஏற்ற பருவமாகும்.

நடவு

குழிகளை ஒரு மாதம் வரை ஆற விட வேண்டும். பிறகு, தொழுவுரம், செம்மண், மணல் மற்றும் மேல் மண்ணைச் சேர்த்து நிரப்பி, குழிக்கு நடுவில் ஒட்டுச் செடிகளை நட வேண்டும். ஒட்டுப்பாகம் தரைக்கு மேலே இருக்க வேண்டும்.

பாசனம்

புளி வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிர் என்றாலும், ஒட்டுச் செடிகளை நட்ட பிறகு சில மாதங்களுக்குப் பாசனம் மிகவும் அவசியம். மழை ஈரம் இருந்தால் பாசனம் தேவையில்லை. இந்த ஈரத்தில் செடிகள் நன்கு வேரூன்றி விடும். எனினும், சொட்டுநீர்ப் பாசனம் புளிய மரத்தின் வளர்ச்சியையும் மகசூலையும் கூட்டும்.

ஊடுபயிர்

எள், கொள்ளு, வேர்க்கடலை, மொச்சை, செடி முருங்கை போன்றவற்றை, ஐந்து ஆண்டுகள் வரை ஊடுபயிராக இட்டு இலாபம் பெறலாம்.

உரமிடுதல்

விவசாயிகள் இப்போது புளியை வணிக நோக்கில் பயிரிட்டு வருகின்றனர். அத்தகைய தோட்டங்களில் நட்ட ஆறு மாதம் கழித்து, செடிக்கு 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு 50 கிராம் மண்புழு உரம். 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் மற்றும் கியூமிக் அமிலத்துகளை இடுவது நல்லது. இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இன்னும் விரைவாக வளர, ஒரு கிலோ புண்ணாக்குக்கு 40 லிட்டர் நீர் வீதம் கலந்து செடிக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றலாம்.

காய்க்கும் மரங்களுக்கு வேப்பம் புண்ணாக்கை இட்டால் மகசூல் பெருகும். அதிகரிக்கும். மழைகாலத்தில் புங்கன் தழை, குரோடலேரியா விதைகளை விதைத்து மண்ணில் மட்க வைத்தால், செடிக்குத் தேவையான தழைச்சத்தும் சாம்பல் சத்தும் கிடைத்து விடும்.

பயிர்ப் பாதுகாப்பு

சாம்பல் நோய்: இலைகளில் சாம்பலைப் போலப் படர்ந்திருக்கும். இதனால் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, 0.1% கராத்தேன் மருந்தைத் தெளிக்கலாம். பூச்சித் தாக்குதல் புளிய மரங்களில் மிகவும் குறைவு.

அறுவடை

நாற்றுக் கன்றுகள் 8-10 ஆண்டில் காய்ப்புக்கு வரும். ஒட்டுக்கன்றுகள் 3-4 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். 7-10 ஆண்டுகளில் மகசூல் மேம்பட்டு விடும். பூக்கள் காய்களாகி, பழங்களாகி அறுவடைக்கு வர 10-11 மாதங்கள் ஆகும். காய்கள் முற்றிப் பழமாகும் போது, பச்சையாக இருக்கும் தோல், பழுப்புநிற ஓடாக மாறிப் பழத்திலிருந்து பிரிந்திருக்கும்.

விரலால் அழுத்தினால் ஓடு உடையும். இதுவே அறுவடைக்கு ஏற்ற நேரம். இரண்டாம் அறுவடையின் போது, பழங்களைக் குச்சியால் அடித்து எடுக்கலாம். இந்தப் பழங்களை வெய்யிலில் சிறிது காய வைத்து ஓடுகளை உடைத்து எடுக்க வேண்டும். இந்தியாவில் பிப்ரவரி-ஏப்ரலில் புளி அறுவடைக்கு வரும். 

மகசூல்

பத்தாண்டு மரம் ஆண்டுக்கு 200-300 கிலோ பழங்களைக் கொடுக்கும். சராசரியாக எக்டருக்கு 12-16 டன் புளி கிடைக்கும்.

பதப்படுத்துதல்

அறுவடை செய்த பழங்களில் உள்ள ஓடுகளையும் விதைகளையும் நீக்கி, புளியைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். புளியம் பழத்தில் நார், தோல் 11%, விதைகள் 34%, புளி 55% இருக்கும். பிரித்தெடுத்த புளியை உருண்டைகளாக்கி, சாக்குகளில், நெகிழிப் பைகளில் வைத்துப் பாதுகாக்கலாம். பனை அல்லது தென்னை ஓலைப் பாய்களிலும் பாதுகாப்பாக வைக்கலாம். சில இடங்களில் 10% உப்பைக் கலந்து வைக்கிறார்கள். புளி  6-8 மாதங்கள் கெடாமல் இருக்கும்.

முக்கியக் குறிப்புகள்

ஒட்டுச் செடிகளை நட்ட இரண்டு ஆண்டுகள் வரை ஒட்டுக்குக் கீழே வளரும் பக்கக் கிளைகளை அகற்ற வேண்டும். புளியந் தோப்பில் ஆழமாக உழக்கூடாது. களைகளை நீக்கி இளம் கன்றுகளை வளர விட வேண்டும். நான்கடி உயரத்துக்கு மேல் பக்கக் கிளைகளை வளரவிட வேண்டும். சீரான மகசூலுக்குக் கவாத்து அவசியம். அறுவடை முடிந்ததும் ஏப்ரல் மே-யில், ஐந்தாவது கிளையிலிருந்து வரும் வாதுகளை நீக்க வேண்டும். இதனால், தரமான பழங்கள் மற்றும் நல்ல மகசூல் கிடைக்கும்.


புளிய மரம் DR.C.RAJA MANICKAM e1614637148865

முனைவர் சி.இராஜமாணிக்கம்,

முனைவர் ஆ.பியூலா, முனைவர் வெ.சுவாமிநாதன், 

வேளாண்மைக் கல்லூரி, மதுரை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading