கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
உலகின் முக்கிய வணிகப் பயிரான கரும்பு, சுமார் 121 நாடுகளில் ஏறத்தாழ 20 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில், அதாவது, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஐம்பது மில்லியனுக்கு மேற்பட்ட உழவர்களின் வாழ்வாதாரமாக கரும்பு சாகுபடி உள்ளது. மேலும், அந்தளவிலான தொழிலாளர்கள் கரும்பு சார்ந்த வேலைகளைச் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் வேளாண்மை மற்றும் தேசிய மொத்த வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கரும்பு வழங்கி வருகிறது. இங்கு ஐம்பது இலட்சம் எக்டருக்கு மேல் கரும்பு பயிரிடப்படுகிறது. நம் நாட்டில் கரும்பு உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் சுமார் ஐந்து இலட்சம் உழவர்கள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எக்டருக்குச் சராசரியாக நூறு டன்னுக்கு மேல் உற்பத்தி இருந்தாலும், விதை மற்றும் வேலையாட்களின் அதிகச் செலவினால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் உலகளவில் சர்க்கரையின் தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
எனவே, மகசூலைப் பெருக்க வேண்டிய நிலையில், கரும்புகள் ஒரே சீராக இருக்கவும், பருமனான கரும்புகளை அதிகளவில் பெறுவதற்கும், நீடித்த, நிலையான கரும்பு சாகுபடி உத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. இம்முறையில் கரும்பு நாற்றுகளை நடவு செய்த 30 ஆம் நாள் தாய்க்குருத்தை 25 மி.மீ. அதாவது, ஒரு அங்குலம் விட்டு வெட்டிவிட வேண்டும்.
தாய்க்குருத்தை வெட்டும் கருவி
இதற்கு உழவர் பெருமக்கள் கத்தரிக்கோல், கத்தி மற்றும் அரிவாளைப் பயன்படுத்தி வருகின்றனர். குனிந்து கொண்டு இக்கருவிகளைப் பயன்படுத்தும் போது முதுகுவலி வருவதுடன், கருவிகளின் கூர்முனையால் கைகளுக்கும், கரும்புத் தோகையின் கூர்முனையால் கண்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், நேரமும் செலவும் அதிகமாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தித் துறை, கரும்பின் தாய்க்குருத்தை வெட்டும் கருவியை உருவாக்கி உள்ளது. இக்கருவியில், முக்கியக் குழாய், கத்தரிக்கோல், இயக்கக் கம்பி, கைப்பிடி ஆகிய பாகங்கள் உள்ளன.
இக்கருவியின் எடை ஒரு கிலோவுக்கும் குறைவாக இருப்பதால், பெண்களும் கூட மிக எளிதாகக் கையாள முடியும். தாய்க்குருத்தை வெட்டி விடுவதால், விளைகின்ற கரும்புகள் ஒரே சீராகவும், பருமனாகவும் இருக்கும். இந்தக் கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் 800 க்கும் மேற்பட்ட கரும்புகளின் தாய்க் குருத்துகளை வெட்டலாம். நேரமும் செலவும் பாதிக்கு மேல் மிச்சமாகும்.
இந்தக் கருவிக்கான இருபதாண்டுக் காப்புரிமையை (2013-2033), இந்திய அறிவுசார் சொத்து அலுவலகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.
ஒரு பரு கரணைகளை வெட்டும் கருவி
கரும்பு சாகுபடியில், நடவு, களையெடுப்பு, மண் அணைப்பு, மருந்தடிப்பு, அறுவடை போன்ற வேலைகள் முக்கியமானவை. இவற்றில் நடவுக்குத் தேவையான கரணைகளைக் கூர்மையான கத்தியால் வெட்டும் போது, பெருமளவில் கணுக்கள் சேதமாகும். நேரமும் செலவும் அதிகமாகும். இந்நிலையில், ஒரே சீரான மற்றும் பருமனான கரும்புகளைப் பெறுவதற்கு, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழிற்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு, குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தித் துறை, நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடிக்கு ஏற்ற ஒரு பரு கரும்புக் கரணைகளை வெட்டும், நான்கு குதிரைத் திறனுள்ள இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
இதில் முக்கியச் சட்டம், எந்திரம், விசைப் பரிமாற்றத் தண்டு மற்றும் கச்சைகள், இரண்டு வட்டு ரம்பங்கள், வெட்டும் கரும்புகளை வைக்கும் பகுதி, கரணைகள் வெளிவரும் பகுதி, கரணைகளை எண்ணும் கருவி, அதிர்வைக் குறைக்கும் பகுதி, பாதுகாப்பு மூடி, இடம் விட்டு இடம் நகர்த்துவதற்கான சக்கரங்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
கரணைகளை வெட்டும் இரண்டு ரம்பங்கள் 200 மி.மீ. விட்டமும், 1 மி.மீ. தடிமனும் கொண்டவை. இவை எந்திரத்தின் எதிரில் சுழல் தண்டின் மீது இணையாக, தேவையான இடைவெளியில் இருக்கும். 30-35 மற்றும் 40 மி.மீ. அளவில் கரணைகளை வெட்ட ஏதுவாக, இரண்டு வட்டுகளுக்கு இடையில், வழவழப்பான எஃகு உருளைத் தடி இருக்கும். சுற்றுத்தண்டு மற்றும் ரம்பங்களால் விபத்து ஏற்படாமல் இருக்க, கவசம் உண்டு.
இந்தக் கவசம் அக்கிரலிக்கினால் ஆனதால், எளிதாகக் கரணைகளைப் பார்த்து வெட்டலாம். சுழல் தண்டு கவசத்துக்கு மேலே, வெட்டும் கரணைகளை வைக்கும் பகுதி இருக்கும். வேலையாட்கள் உடல் வலி இல்லாமல் குறைந்த நேரத்தில் கரணைகளை வெட்ட முடியும்.
கரணைகள் வெளிவரும் பகுதி மெல்லிய எஃகுத் தகட்டால் ஆனது. கரணைகள் சேதமாவதைக் குறைக்க, இதற்குள் தெர்மாகோல் இருக்கும். கணக்கீட்டுக் கருவி மூலம், நேரத்தையும் கரணைகளையும் கணக்கிடலாம். இது 12-ஏ பேட்டரியால் இயக்கப்படும். இடம் விட்டு இடம் நகர்த்த நான்கு சக்கரங்கள் உதவும்.
இக்கருவி ஒரு நிமிடத்தில் 2,200 முறை சுற்றும். பிசிறும் சேதமும் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் 1,700 ஒரு பரு கரணைகளை வெட்டலாம். முளைப்புத்திறன் 95% இருக்கும். கரணைகளை வெட்டும் நேரமும் செலவும் பாதியாகக் குறையும். இந்தக் கருவியின் விலை 34 ஆயிரம் ரூபாயாகும்.
முனைவர் ப.காமராஜ்,
உதவிப் பேராசிரியர், பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தித்துறை,
வேளாண் பொறியியல் கல்லூரி, குமுளூர்.