மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

மானாவாரி HP dd0c91e8dbcf5ba55abdf26e99c9ceae

ந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில் விளையும் பெருமளவு சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி போன்றவை மானாவாரி மூலமே கிடைக்கின்றன.

நம் நாட்டிலுள்ள அனைத்துப் பாசன ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினால் கூட, மொத்த சாகுபடிப் பரப்பில் பாதிக்குத் தான் பாசன வசதி கிடைக்கும். மீதியுள்ள நிலங்களில் மானாவாரியாகத் தான் சாகுபடி செய்ய முடியும். எனவே, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு மற்றும் உடைத் தேவையைச் சரி செய்வதற்கான இரண்டாம் பசுமைப் புரட்சியை, ஒருங்கிணைந்த மானாவாரி உத்திகளைக் கண்டறிவது மற்றும் கடைப்பிடிப்பதால் மட்டும் தான் கொண்டு வர முடியும்.

புன்செய் நில வேளாண்மை என்பது மானாவாரிச் சூழலில் செய்வதாகும். மழைப்பொழிவின் அடிப்படையில் மானாவாரி வேளாண்மையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: புன்செய்ப் பண்ணையம், அதாவது, ஓராண்டில் 750 மி.மீ.க்கும் குறைவாக மழை பெய்யும் பகுதியில் பயிர்களை வளர்த்தல். வறண்ட நிலப் பண்ணையம், அதாவது, ஆண்டுக்கு 750 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்யும் பகுதியில் பயிர்களை வளர்த்தல். மானாவாரிப் பண்ணையம், அதாவது, ஆண்டுக்கு 1,150 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்யும் பகுதியில் பயிர்களை வளர்த்தல்.

புன்செய் மண் ஈர இயக்குநிலை

மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரின் ஒரு பகுதி வடிந்து ஓடி விடும். எஞ்சிய நீர் மண்ணுக்குள் செல்லும். இந்நீரானது உட்கசிவின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அடையும். மழைக்குப் பிறகு நீர் ஆவியாதல், நீராவிப் போக்குப் போன்றவற்றின் மூலம் மேல்மண் காயத் தொடங்கும்.

புன்செய் வேளாண்மையில் தோல்வி என்பது மிகவும் சாதாரணமாக உள்ளது. இதன் காரணங்கள்: சமச்சீரற்ற மழைப்பொழிவு, பயிருக்குத் தேவைப்படும் போது குறைவாகவும், தேவையில்லாத போது அதிகமாகவும் மழை பெய்வது, தாமதமாகப் பெய்வது அல்லது சாகுபடிக்கு முன்பே பருவமழை பெய்து விடுவது.

தாமதமான மழையின் காரணமாக, விதைப்பும் தாமதமாகவே நடப்பதால், மகசூல் மிகவும் குறைவாக இருக்கும். முன்பே பெய்து விடுவதால், பயிர்கள் பூக்கும், காய்க்கும் காலங்களில் வறட்சி உண்டாகி மகசூல் குறைந்து விடும்.

பயிர்ப் பருவ காலத்தில் ஏற்படும் நீண்டகால வறட்சி: இந்திய பருவ மழையில் நீண்ட கால மழை இடைவெளி என்பது எப்போதும் இருப்பதாகும். இவ்வகை நீண்ட வறண்ட நிலை, பயிர்ப் பருவக் காலத்தில் நிலவும் போது, பயிரின் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கப்படும்.

ஈரப்பதத்தைக் குறைவாகத் தக்க வைக்கும் திறன்: செம்மண், மணற்சாரி மண் ஆகியன ஈரப்பதத்தைக் குறைவாகத் தக்க வைக்கும் தன்மை மிக்கவை. இவற்றில் வளரும் பயிர்கள், நீண்டகால வறட்சியில் பெரிதும் பாதிக்கப்படும்.

வளம் குன்றிய மண்: பெரும்பாலும் மானாவாரி நிலங்கள் வறண்டும், வளம் குன்றியும் இருக்கும். போதியளவில் மண்ணில் ஈரப்பதம் இல்லாமல் போவதால், மண்வளத்தை மேம்படுத்த, இரசாயன உரங்களைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். எனவே, மழை பெய்யும் காலத்துக்கு ஏற்ப, பயிரையும் திட்டமிட்டு வளர்த்தால் அதிக மகசூலைப் பெறலாம்.

வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்புச் செய்தி, நிகழவிருக்கும் மழை, வெப்பநிலை, காற்று போன்ற காரணிகளுக்கு ஏற்ப, விதைத்தல், உரமிடல், மருந்தடிப்பு, பாசனம் செய்தல் போன்ற வேலைகளைத் திட்டமிடப் பயன்படும்.

வறட்சியைத் தாங்கி வளரும் இரகத்தேர்வு

குறிப்பிட்ட பருவம், பகுதி, மண் வகைக்கு ஏற்ப, பயிரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பயிர் வறட்சியைத் தாங்கும் குறுகிய காலப் பயிராக, இரகமாக இருக்க வேண்டும். இதனால் மண்ணிலுள்ள ஈரப்பதம் குறையுமுன் பயிர்கள் முழுமையாக வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்கும். நாம் பயிரிடும் இரகங்கள் ஆழமான வேரைக் கொண்டிருக்க வேண்டும். இதனால் மண்ணில் நன்கு ஊடுருவிச் செல்லும் வேர்கள், வறட்சியைத் தாங்கி வளரும்.

குறுகிய காலப் பயிர் இரகங்கள்

கோ.25, கோ.26 சோளம், கோ.7 கம்பு, கே.9, கே.10, கே.11, எம்.சி.யு.10, எஸ்.வி.பி.ஆர்.2, கே.சி.3 பருத்தி, கோ.2, ஜே.எல்.24, டி.எம்.வி.7 நிலக்கடலை, கே.1, கே.2, கோ.1, கோ.2, கோ.3, கோ.4, மாடர்ன் இரகச் சூரியகாந்தி, கோ.5 உளுந்து, கோ.3, கோ.4 தட்டைப்பயறு, கோ.3, கோ.42 பாசிப்பயறு, கே.1, கே.2, பி.எம்.கே.1 மிளகாய்.

விதையைக் கடினப்படுத்துதல்

விதைப்பதற்கு முன் தகுந்த கரைசலில் விதைகளை ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி, இயல்பான ஈரப்பத நிலைக்குக் கொண்டு வந்து விதைப்பது, விதையைக் கடினப்படுத்தல் எனப்படும். இதனால், விதைகளின் முளைப்புத் திறன், பயிர்கள் வறட்சியைத் தாங்கி வீரியமாக விரைவாக வளரும் திறன், அதிக மகசூல் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

கோடையுழவு

கோடை மற்றும் தென்மேற்குப் பருவமழை பெய்யும் காலத்தில், மழைநீரை நிலத்தில் சேமிப்பதற்குக் கோடையுழவு செய்தல் அவசியம். இதனால், அடிமண் இறுக்கம் நீங்கி, நீர்க் கொள்திறன் கூடி, 20 சதம் வரை அதிக மகசூல் கிடைக்கும். மேலும், பருவத்தில் விதைப்பதற்கு வசதியாக இருக்கும். மானாவாரிப் பயிர் அறுவடை முடிந்ததும், மார்ச் மாதத்தில் கோடையுழவைச் செய்யலாம்.

பருவமழைக்கு முன் விதைத்தல்

மழை பெய்து, விதைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் கிடைக்கும் வரை காத்திருந்து விதைப்பதால் மண்ணிலுள்ள ஈரம் அதிகளவில் ஆவியாகி வீணாகும். மேலும், பருவமழை குறுகிய காலத்தில் நின்று விட்டாலும் பயிர் சரிவர வளராது. இத்தகைய நிலைகளைத் தவிர்க்க, பருவமழைக்கு ஒரு வாரம் முன்னதாக விதைத்து விட்டால், மழைநீர் முழுவதும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

விதைப்புக் கருவி

இக்கருவியைப் பயன்படுத்தினால் விதைகளைத் தகுந்த ஆழத்தில் விதைக்க முடியும். உரத்தையும் விதைக்குக் கீழே வைக்க முடியும். பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும். பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். அதனால், குறிப்பிட்ட மகசூலை அடைய முடியும்.

நில அமைப்பு

மண் மற்றும் மழைநீர்ப் பாதுகாப்பு முறைகளான சமதள சாகுபடி, சரிவுக்குக் குறுக்கே உழுதல், ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்தல், பகுதிப்பாத்தி அமைத்தல், பயிர்-சால் சாகுபடி முறை போன்றவற்றில் எது நம் நிலத்துக்கு ஏற்றது என்பதை அறிந்து, அதைத் தகுந்த கருவிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

பகுதிப் பாத்தி

மானாவாரி நிலங்களில் பகுதிப்பாத்தி அமைத்தல் என்பது, சிறந்த ஈரம் காக்கும் முறையாகும். இதற்கு, நிலத்தை 8×5 மீட்டர் அளவுள்ள பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். இதனால், இந்தப் பாத்திகள் சிறு அணைகளாக இருந்து, பெய்யும் மழைநீரை நிலத்தில் தேக்கி வைக்கும். உழும் போதே இப்பாத்திகளை அமைத்து விடலாம்.

கருவி மூலம் இதை அமைத்தால் 50 சதச் செலவைக் குறைக்கலாம். முன்பருவ விதைப்பை மேற்கொள்ளும் இடங்களில், விதைப்புக்குப் பிறகு இந்தப் பாத்திகளை அமைத்தால், மழைநீர் முழுமையாகப் பயிர்களுக்குப் பயன்படும்.

ஆழச்சால், அகலப்பாத்தி

மானாவாரியில் மண் ஈரத்தைக் காக்க, ஆழச்சால், அகலப்பாத்தி அமைப்பது நல்ல பலனைத் தரும். 1.5 மீட்டர் இடைவெளியில் சரிவுக்குக் குறுக்கே 30 செ.மீ. ஆழத்தில் சால்களை அமைத்தால், மழைநீரானது இந்தச் சால்களில் தேங்கி நின்று நிலத்தடி ஈரத்தைக் காக்கும். நிலச்சரிவு 0-2 சதம் உள்ள நிலங்களில் இம்முறைகளைப் பின்பற்றலாம்.

பயிர்த் திட்டம்

மானாவாரியில் பருவமழையை மட்டும் நம்பி, நீண்டகால அல்லது மத்திய காலப் பயிரைப் பயிரிட்டு, அதற்கேற்ற மழை பெய்யாவிடில் அந்தாண்டில் வருமானம் கிடைக்காமல் போய் விடும். ஆனால், மாறுபட்ட வயது, வளர்ச்சி, வேர் அமைப்புள்ள இரண்டு பயிர்களை சாகுபடி செய்யும் போது, பருவமழை சீக்கிரம் முடிந்து விட்டாலோ, மழை தாமதமாகப் பெய்தாலோ, ஒரு பயிரிலிருந்து மகசூலைப் பெறலாம். பருவமழை சரியாகப் பெய்து விட்டால், இரண்டு பயிர்களும் மகசூலைக் கொடுத்து விடும்.

பருத்தியுடன் உளுந்து, பாசிப்பயறு; சோளத்துடன் தட்டைப்பயறு என ஊடுபயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், மண்ணீரம், சூரியவொளி போன்ற பருவநிலைக் காரணிகளைச் சீராகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறலாம்.

தாவர அரண்

வெட்டிவேர், கொழுக்கட்டைப் புல், சூபாபுல், வேலிமசால், எலுமிச்சைப் புல் போன்றவை தாவர அரண்களாகப் பயன்படுகின்றன. தாவரத் தடுப்புகள் ஓடும் நீரின் வேகத்தைக் குறைக்கும். இதனால், நீரானது மண்ணுக்குள் அதிகமாக இறங்கும். அடர்த்தியாக, ஆழமாக வளரும் வெட்டிவேரின் வேர்கள், தடுப்புச் சுவரைப் போல இருந்து மண்ணரிப்பைத் தடுக்கும்.

மண்வளம் காக்கும் உத்திகள்

ஊட்டமேற்றிய தொழுவுரம்: இதிலுள்ள அங்கக அமிலமானது மணிச்சத்து உரத்தைக் கரைத்துப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் தயாராய் வைத்திருக்கும். இது, மண்ணில் பிடித்து வைக்க விடாது. எனவே, முளைத்து வரும் பயிர்களின் வேர்கள், மணிச்சத்தை எடுத்துக் கொண்டு திடமாக அதிகப் பரப்பில் வளரும். இதனால், நிலத்திலுள்ள நீர் மற்றும் சத்துகளைப் பயிர்கள் எடுத்துக் கொண்டு நன்கு வளர்ந்து சிறந்த மகசூலைக் கொடுக்கும்.

அங்கக உரங்களான மட்கிய தொழுவுரம், கம்போஸ்ட், பயிர்க் கழிவுகள் ஆகியவற்றை நிலத்தில் இட்டால், அவை மண்ணில் நன்கு கலந்து விடும். இதனால் மண்ணின் அடர்த்தியில் நல்ல மாறுதல் ஏற்படும். சத்துகளின் அளவு, ஈரத்தன்மை மற்றும் நல்ல காற்றோட்டம் கூடுவதால் அதிக மகசூலுக்கு வழி பிறக்கும்.

சாம்பல் சத்து

கரிசல் நில நிரந்தரப் பரிசோதனைப் பாத்திகளில் தொடர்ந்து ஒரே பயிரைப் பயிரிட்டதில், சாம்பல் சத்தின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதைச் சரிசெய்ய எக்டருக்கு 20 கிலோ பொட்டாசை இட்டு, எம்.சி.யு.100 பருத்தியைப் பயிரிட்டதில் ஆண்டுக்கு 415 கிலோ கூடுதல் மகசூல் கிடைத்தது. இம்முறையில் 80 ரூபாயைச் செலவு செய்தால், கூடுதல் வருமானமாக எக்டருக்கு 400 ரூபாய் வரை கிடைக்கும்.

இலைவழி உரமளித்தல்

இந்தச் சூழலில் 2 சத டிஏபி உரக்கரைசலைச் செடிகளில் தெளிக்க, சுமார் 250 ரூபாயைச் செலவிட்டால், கூடுதலாகக் கிடைக்கும் 225 கிலோ பருத்தி மூலம் ரூ.1,800 வரை இலாபமும் பெறலாம்.

ஈரப்பதம்

மண்ணின் ஈரப்பதம் என்பது, புன்செய் வேளாண்மையில் மிக முக்கியக் காரணியாகும். இது, மண்ணின் மேற்பரப்பிலிருந்து ஆவியாதல் மூலமும், தாவரங்களிலிருந்து நீராவிப் போக்கின் மூலமும் வெளியேறுகிறது. பயிரின் உற்பத்தித் திறனைப் பாதிக்காத அளவில், நீராவிப் போக்கைக் குறைக்க முடியும். ஆவியாக மாறுவதால் ஏற்படும் நீரிழப்பைக் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் குறைக்கலாம்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்: மானாவாரி மக்காச்சோளப் பயிருக்கு, எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம், 15 டன் மட்கிய தென்னைநார்க் கழிவு, 17.5 டன் ஆட்டு எரு வீதம் தனித்தனியே இட்டு ஆய்வு செய்ததில், தென்னைநார்க் கழிவை இட்ட நிலத்தில் இருந்து, மற்ற அங்ககப் பொருள்களை இட்ட நிலங்களில் இருந்து கிடைத்ததை விட 50% அதிக மகசூல் கிடைத்தது.

களையெடுப்பு: மானாவாரிப் பயிரில் சரியான நேரத்தில் களைகளை அகற்றா விட்டால், களைகளின் தன்மை மற்றும் அடர்த்திக்கு ஏற்ப மகசூல் குறையும். எனவே, நிலத்தில் தகுந்த ஈரம் இருக்கும் போது களைக்கொல்லி மூலம் களைகளைக் கட்டுப்படுத்தி, இருக்கும் ஈரத்தையும் சத்தையும் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யலாம். சோளம், மக்காச்சோளம், கம்பு ஆகியவற்றில் களைகளைத் தவிர்க்க, ஏக்கருக்கு 500 கிராம் அட்ராப் வீதம் எடுத்து, விதைத்த மூன்றாம் நாள் தெளிக்கலாம்.

பயறு வகைகள், பருத்தி, சூரியகாந்தி ஆகிய பயிர்களில் களைகளைத் தவிர்க்க, ஏக்கருக்கு 1,400 மி.லி. டொம்ப் வீதம் தெளிக்கலாம். நீண்ட கைப்பிடியுள்ள களைக்கருவி, கூரிய பல்லுள்ள ஜூனியர் கலப்பை மூலமும், களைகளை நீக்கலாம்.

நிலப்போர்வை: மழைநீரில் 60-75 சதம், நீராவியாக மாறி விடுகிறது. இதை நிலப்போர்வை மூலம் குறைக்கலாம். எல்லாவகை நிலப் போர்வைகளும் நீர் ஆவியாவதைக் குறைத்து ஈரத்தை நிலத்தில் தக்க வைக்கும். மண் பாதுகாப்பு, மண் வெப்பக் குறைப்பு, உப்புத் தன்மைக் குறைப்பு, களைக் கட்டுப்பாடு, மண்வளத்தைக் கூட்டுதல் போன்ற நன்மைகள் நிலப்போர்வை மூலம் கிடைக்கும். நிலச்சரிவு 0-2 சதம் உள்ள இடங்களில் நிலப் போர்வையை அமைக்கலாம்.

நிலப்போர்வை வகைகள்: மண் போர்வை அல்லது புழுதி மூடாக்கு: மேற்பரப்பு மண்ணை உழுவதன் மூலம் தளர்த்தி இளகலாக மாற்றும் போது, அம்மண் நிலப்போர்வையாகச் செயல்பட்டு நீர் ஆவியாவதைத் தடுக்கும். வளரும் பயிர்களுக்கு இடையுழவு மண் போர்வையாக அமையும்.

தாள் போர்வை: வைக்கோல் மூலம் அமைக்கப்படும் மூடாக்கு, வைக்கோல் அல்லது தாள் மூடாக்கு எனப்படுகிறது.

செங்குத்து மூடாக்கு: மழைநீரைக் கிரகித்து மண்ணில் தேக்கி வைக்க இவ்வகை மூடாக்கு உதவுகிறது. இதில், சரிவுக்குக் குறுக்கே 90 செ.மீ. இடைவெளியில் 15 செ.மீ. ஆழத்தில் கால்வாய்களை அமைத்து, அவற்றில் தானியத் தாள்கள் மற்றும் தாவரக் கழிவுகளைப் பரப்பி வைக்க வேண்டும்.

நீராவிப் போக்கைக் குறைத்தல்

தாவரங்களால் கிரகிக்கப்படும் நீரில் 99 சதம் நீராவிப் போக்கின் மூலம் வெளியேறுகிறது. இதைக் கட்டுப்படுத்தினால், நீர்ச் சமநிலை ஏற்படும். இதற்கு நீராவிப்போக்குத் தடுப்பான்கள் உதவும்.

நீராவிப்போக்குத் தடுப்பான்கள்: இவை, இலைத்துளைகளை மூடச் செய்வது, மெல்லிய படலம் அமைப்பது, பிரதிபலிப்பது, வளர்ச்சித் தடுப்பான்கள் அல்லது வளர்ச்சிக் குறைப்பான்கள் என நான்கு வகைப்படும்.

இலைத்துளைகளை மூடச் செய்தல்: வினைல் மெர்குரிக் அசிடேட் என்னும் பூசணக்கொல்லி, அட்ரசின் என்னும் களைக்கொல்லி ஆகியன, குறைந்த அடர்த்தியில் இலைத்துளைகளை மூடச்செய்து, நீராவிப்போக்குத் தடுப்பான்களாகச் செயல்படும்.

மெல்லிய படலம் அமைக்கும் முறை: இம்முறையில், பிளாஸ்டிக் மற்றும் மெழுகுப் பொருள்கள் மூலம் இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய படலத்தை அமைத்து நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. மொபில்ப், ஹெக்சகோனல் சிலிக்கான் போன்றவை மென்படலப் பொருள்களாகும்.

இந்த வேதிப் பொருள்கள் ஒளிச்சேர்க்கையையும் குறைப்பதால், இவற்றின் மூலம் கிடைக்கும் பயன் குறைவாகவே உள்ளது. ஐந்து சதவீத கயோலின் கரைசலைத் தெளித்து வெண் படலத்தை ஏற்படுத்தி, இலைகளின் பிரதிபலிப்பைக் கூட்டினால் நீராவிப்போக்கைக் குறைக்கலாம்.

வளர்ச்சித் தடுப்பான்கள்: சைக்கோசெல் என்னும் வேதிப்பொருள் தண்டின் வளர்ச்சியைக் குறைக்கும். அதே சமயம் வேர்ப்பகுதியை அதிகப்படுத்தும். இதனால் தாவரங்கள் வறட்சியைத் தாங்கி நிற்கும். மேலும், இப்பொருள் இலைத் துளைகளை மூட வைக்கும்.

தாவரக் காற்றுத் தடுப்பு: தாவரக் காற்றுத் தடுப்பு என்பது, அடிக்கும் காற்றுக்கு எதிர்த் திசையில் வரிசையாக மரங்களை வளர்த்துக் காற்றைத் தடுப்பதாகும். இதன் பயன் நடு வரிசையில் உள்ள மரங்களின் உயரத்தைப் பொறுத்து இருக்கும். காற்று வீசும் திசையில் 5-10 மடங்கு அளவிலும், எதிர்த் திசையில் முப்பது மடங்கு அளவிலும் காற்றின் உலர்த்தும் தன்மையைத் தாவரத் தடுப்புகள் தடுக்கும்.

காற்றின் வேகத்தைக் குறைப்பதால், ஆவியாதல் மூலம் ஏற்படும் நீரிழப்பும் குறையும். தாவரக் காற்றுத் தடுப்பு, வறட்சிக் காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், காற்றினால் ஏற்படும் மண்ணரிப்பையும் குறைக்கும்.

பண்ணைக் குட்டை: மழைநீர் செல்லும் பாதைக்குக் குறுக்கே பள்ளத்தைத் தோண்டி நீரைச் சேமிப்பதைப் பண்ணைக் குட்டை என்கிறோம். இதில் சேமிக்கப்படும் நீர், வெய்யில் காலத்தில், கம்பு, பருத்தி, சூரியகாந்தி போன்ற பயிர்களுக்குப் பாசனமாக அமைந்து, அதிக மகசூலை எடுப்பதற்கு உதவும். நிலத்தின் தாழ்வான பகுதியில் பண்ணைக் குட்டையை அமைக்கலாம்.

முக்கியப் பருவங்களில் பாசனம் செய்தல்: பயிர்கள் பூக்கும் போது, காய்க்கும் போது, வறட்சி ஏற்பட்டால் அது மகசூலைப் பாதிக்கும். அதைப்போல, குறித்த காலத்துக்கு முன்பே பருவமழை முடிந்து விட்டாலும், பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இத்தகைய இக்கட்டான நேரங்களில் பண்ணைக் குட்டை நீரைப் பாசனம் செய்யலாம்.

மேலும் சில வறட்சி நிர்வாக உத்திகள்

இரண்டு சதவீத கயோலின் கரைசலைத் தெளித்து நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்தலாம். இரண்டு சதவீத டிஏபி மற்றும் ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசலைப் பூக்கும் போதும், தானியங்கள் உருவாகும் போதும் தெளிக்கலாம். 500 பிபிஎம் சைக்கோசெல்லை இலைகளில் தெளிக்கலாம். கரும்புத்தோகை, சோளத் தோகைகளை மூடாக்காக இடலாம். பருத்தியில் நைட்ரஜன் உரத்தைப் பிரித்து, விதைத்த 45, 60 நாட்களில் இடலாம்.

உயிர் உரங்களை இடலாம். விதைகளைக் கடினப்படுத்தி விதைக்கலாம். 4.5 லிட்டர் நீருக்கு 4 மில்லி பிளானோபிக்ஸ் வீதம் கலந்து தெளிக்கலாம். பருத்திச் செடியின் 15-20 கணுப்பகுதிக்கு மேலுள்ள நுனியைக் கிள்ளி விடலாம். 0.5 சதவீத துத்தநாக சல்பேட் + 3 சதவீத இரும்பு சல்பேட் + ஒரு சத யூரியா கரைசல் ஆகியவற்றை வறட்சிக் காலத்தில் தெளிக்கலாம்.

மானாவாரி சாகுபடிக்கான முன்னேற்பாடுகள்

நிலத்தைக் கோடையுழவு செய்து தயாராக வைக்க வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரத்தைத் தயாரித்து வைக்க வேண்டும். பண்ணைக் குட்டை இருந்தால் அதைத் தூர்வாரி வைக்க வேண்டும். தூர்வாரிய மண்ணை நிலத்தில் இடலாம். இது நிலத்திலிருந்து அரித்து வரப்பட்ட வண்டல் மண் என்பதால் சத்துகள் நிறைந்திருக்கும்.

பருவமழை தொடங்கும் காலத்துக்கு ஏற்ப, விதைகளைத் தேர்ந்தெடுத்துக் கடினப்படுத்தி வைக்க வேண்டும். விதைகளை வரிசையாக விதைப்பதற்கு ஏற்ற விதைப்பான்களை வைத்திருக்க வேண்டும். வெட்டிவேர் அல்லது கொழுக்கட்டைப் புல்லை, நிலத்தின் சரிவுக்குக் குறுக்கே நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

களைகளைக் கட்டுப்படுத்தத் தேவையான களைக்கொல்லி மற்றும் நீண்ட கைப்பிடியுள்ள களையெடுப்பானை வாங்கி வைக்க வேண்டும். நிலப்போர்வை அமைக்கத் தேவையான பண்ணைக் கழிவைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் க.வேங்கடலட்சுமி,

முனைவர் அ.வேலாயுதம், வேளாண்மைக் கல்லூரி,

ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading