25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

தண்டுக்கீரை

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

மது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் கீரைகள், நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இந்தியாவில் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டும். இவற்றில் கீரை வகைகளும் அடங்கும். மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்று தண்டுக்கீரை. இது, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

தண்டுக்கீரை, அமராந்தேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இலை மற்றும் தண்டில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. நூறு கிராம் தண்டுக்கீரையில் 38.5 மி.கி., கால்சியம் 350-400 மி.கி., உயிர்ச் சத்துகள் ஏ, சி ஆகியன நிறைந்துள்ளன. பல்வேறு சூழல்கள் மற்றும் பலவித மண் வகைகளில் குறுகிய காலத்தில் வளர்வது தண்டுக்கீரை. இங்கே தண்டுக்கீரை சாகுபடியைப் பற்றிப் பார்க்கலாம்.

இரகங்கள்

கோ.1: இது அமராந்தஸ் டுபியஸ் என்னும் சிற்றினத்தைச் சார்ந்தது. அடர் பச்சை நிறத்தில் பெரிய இலையுடன் இருக்கும். விதைத்த 30-35 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 7-8 டன் மகசூல் கிடைக்கும். இது, முளைக்கீரையாகவும், தண்டுக்கீரையாகவும் பயன்படுகிறது.

கோ.2: இது அமராந்தஸ் டிரைகலர் என்னும் சிற்றினத்தைச் சார்ந்தது. கீரை அடர் பச்சை நிறத்தில் இருக்கும். 20-25 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 10-11 டன் மகசூல் கிடைக்கும். இது, முளைக்கீரையாகவும் தண்டுக்கீரையாகவும் பயிரிடப்படுகிறது.

கோ.3: இது அமராந்தஸ் டிரைகலர் என்னும் சிற்றினத்தைச் சார்ந்தது. கீரை பச்சையாக இருக்கும். விதைத்த 20-25 நாட்களில் அறுவடை செய்யலாம். வேருடன் எடுக்காமல், மூன்று மாதம் வரையில், கீரையைத் தண்டுடன் சேர்த்துக் அறுவடை செய்யக்கூடிய இரகமாகும். எக்டருக்கு 10-12 டன் மகசூல் கிடைக்கும். இது, கிள்ளுக்கீரையாகவும், தண்டுக்கீரையாகவும் பயிரிடப்படுகிறது.

கோ.4: இது அமராந்தஸ் ஹப்போகாண்ட்ரியாகஸ் என்னும் சிற்றினத்தைச் சார்ந்தது. இதன் இலையும் விதையும் உணவாகப் பயன்படுகின்றன. செடி குட்டையாக இருக்கும். விதைத்த 20-25 நாட்களில் கீரைக்காக அறுவடை செய்யலாம். விதைத்த 80-90 நாட்கள் வரை வளர்த்தால் விதைகள் கிடைக்கும். எக்டருக்கு 7-8 டன் கீரையும், 2-2.5 டன் விதையும் மகசூலாகக் கிடைக்கும். இது, விதைக்கீரையாகவும்; தண்டுக்கீரையாகவும் பயன்படுகிறது.

கோ.5: இது அமராந்தஸ் பிலிட்டம் என்னும் சிற்றினத்தைச் சார்ந்தது. கீரை பச்சையாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். முளைக்கீரையாகவும் தண்டுக்கீரையாகவும் இது பயன்படுகிறது.

வட இந்தியாவில் படி சௌலி, சோட்டி சௌலி, பூசா கிரண், பூசா கிர்டி, பூசா லால் சௌலி போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மண்

வடிகால் வசதியுள்ள வளமான நிலமாக இருக்க வேண்டும். பெருமணல் மற்றும் களிமண் நிலம் தண்டுக்கீரை சாகுபடிக்கு ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். களர் உவர் மண், சுண்ணாம்பு போன்றவை கீரை விதையின் முளைப்புத்திறன், வளர்ச்சி மற்றும் மகசூலைப் பெருமளவில் பாதிக்கும்.

தட்பவெப்பம்

கீரை வகைகள் நல்ல சூரியவொளியில் வளரக் கூடியவை. 25-30 செல்சியஸ் வரையில் தாங்கி நன்கு வளரும். தானியக்கீரை வகைகளை, வெப்பப் பகுதி மற்றும் குளிர்ச்சியான பகுதியில் பயிரிடலாம். இதை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.

விதையளவு

எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு பங்கு விதைக்குப் பத்துப் பங்கு ஆற்று மணல் வீதம் கலந்து விதைக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

கல்லோ கட்டியோ இல்லாமல் நிலம் இருக்க வேண்டும். 2×1.5 மீட்டர் அளவில் படுக்கைகளைத் தயாரித்து விதைக்க வேண்டும். விதைகள் முளைத்த பிறகு நெருக்கமாக இருக்கும் நாற்றுகளை அகற்றி, 12-15 செ.மீ. இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.

பாசனம்

விதைப்பதற்கு முன்னும் விளைத்த பின்னும் நிதானமாக நீரைப் பாய்ச்ச வேண்டும். அடுத்து, வாரம் ஒருமுறை பாசனம் தேவைப்படும்.

உரமிடுதல்

எக்டருக்கு 25 டன் தொழுவுரம், 2 கிலோ அசோஸ்பயிரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும். 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இலைத் தின்னிப் புழு: கீரை வகைகளில் இலைத் தின்னிப் புழுக்கள் அதிகமாகத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 75 கிராம் வீதம் நவலூரான் 10 இ.சி. மருந்தைத் தெளிக்க வேண்டும். முடிந்த வரையில் மருந்தைத் தவிர்ப்பது நல்லது.

இலைப்புள்ளி நோய்: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். சல்பர் கலந்த மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.

அறுவடை

அரைக்கீரை: விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ. உயரத்தில் கிள்ளி எடுக்கலாம். பிறகு 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு 30 டன் கீரை கிடைக்கும்.

முளைக்கீரை: விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்க வேண்டும். சிறிய செடிகளை அடுத்த 10 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 10 டன் கீரை கிடைக்கும்.

தண்டுக்கீரை: விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது தண்டுடன் அறுக்கலாம். எக்டருக்கு 16 டன் மகசூல் கிடைக்கும்.

விதைக்கீரை: விதைத்த 25 நாட்களில் எக்டருக்கு 8 டன் கீரையும், 90-100 நாட்களில் 2-4 டன் விதைகளும் கிடைக்கும்.


KAYALVIZHI

முனைவர் கா.கயல்விழி,

வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. முனைவர் அ.இரமேஷ்குமார்,

இணைப் பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலை., திருவாருர்.

முனைவர் அ.சங்கரி, இணைப் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., கோவை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading