காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

நமது நாய்கள் Kanni

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

ழங்காலம் முதல் மனித குலத்தின் உற்ற துணையாக நாய்கள் விளங்கி வருகின்றன. தமிழர்கள் தங்களின் வழிபாடு, காவல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்காக, நாய் இனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, பழங்காலச் சிலைகள், ஓவியங்கள் மற்றும் முத்திரைகள் உள்ளன. தமிழகத்தில், இராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, அலங்கு ஆகிய இனங்கள் உள்ளன.

மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில், வெளிநாட்டு நாய்களை வளர்ப்பது தான் தகுதியானது என்னும் மனநிலை உள்ளது. இதனால், நமது  நாய்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், நமது நாய்களின் சிறப்புகள் காரணமாக, இவற்றின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

இராஜபாளையம்

இவ்வினம், தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் பேர் பெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது சுத்த வெள்ளையாக இருக்கும். நுனி மூக்கும் வாயும் இளஞ்சிவப்பாக இருக்கும். 40-50 செ.மீ. உயரத்தில் 15-18 கிலோ எடையில் இருக்கும். வேட்டைக்கும் காவலுக்கும் மிகச் சிறந்த இனம். மோப்பு ஆற்றல் இதற்கு அதிகம். எனவே தான் இந்த நாய்களை ஆங்கிலேயர்கள் தங்களின் போர்ப்படையில் பயன்படுத்தியுள்ளனர்.

கன்னி

இவ்வினம், திருநெல்வேலி, கழுகுமலை, கோடங்கிப்பட்டி, கீழ ஈரால்  ஆகிய பகுதிகளில் உள்ளது. இதற்குக் காவல் காக்கும் திறன் மிகவும் அதிகம். இந்தக் கறுப்பு நாயின் அடிப்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். முகத்தில் நாமம் இட்டதைப் போல இளம்பழுப்புக் கோடுகள் இரண்டு இருக்கும். சில நாய்களில் இக்கோடுகள் வெள்ளையாக இருக்கும். வெள்ளைக்கோடுகளைக் கொண்ட நாய் பால் கன்னி எனப்படுகிறது. 45-55 செ.மீ. உயரம் மற்றும் 15-20 கிலோ எடையில் இருக்கும்.

சிப்பிப்பாறை

இவ்வினம், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில ஊர்களில் மட்டும் உள்ளது. இந்த நாய்களைக் காட்டு நாயக்கர், கொட்டி  நாயக்கர் போன்ற பழங்குடி மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல, காலங்காலமாக வளர்த்ததாகவும், ஆனால் இன்றைய நாகரிக வளர்ச்சியால், இவற்றைத் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலர் இன்னமும் வளர்ப்பதைக் காண முடிகிறது. வேட்டைக் குணம் இவ்வினத்தின் தனிச் சிறப்பாகும். இந்நாய்கள், வெளிர் சாம்பல் நிறத்தில் வெள்ளை ரோமங்கள் கலந்து அல்லது இல்லாமல் இருக்கும். வெளிர் செந்நிறத்திலும் உள்ளன.

கோம்பை

இவ்வினம், தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்நாய்களின் உடல் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்கும். நல்ல உயரத்தில் நீளக்கழுத்துடன் இருக்கும். மேலும், மெலிந்தும், ஒட்டிய அடிவயிற்றுடனும் இருக்கும். இதுவும் வேட்டைக்கு ஏற்றது. வளர்ப்போரிடம் பாசமாக இருக்கும் இந்நாய், அந்நியரை அஞ்ச வைக்கும். 45-65 செ.மீ. உயரம் மற்றும் 40-50 கிலோ எடையில் இருக்கும். இது நடந்தாலே ஓடுவதைப் போலத் தெரியும்.

அலங்கு

தஞ்சை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. வேடடைக் குணமும் முரட்டுப் போக்கும் கொண்டது. செந்நிறம் அல்லது செந்நிறத்தில் வரிகளைக் கொண்ட சிறுத்தைப்புலி போன்று இருக்கும். மூக்கு அடர் கறுப்பாகவும், கால் தசை திரட்சியாகவும் இருக்கும். காதுகள் கூர்மையாக மேல்நோக்கி இருக்கும். 30-40 செ.மீ. உயரம் மற்றும் 10-15 கிலோ எடையில் இருக்கும்.


நமது நாய்கள் JEYAKUMAR scaled e1611797789417

மரு..ஜெயக்குமார்,

முனைவர் இரா.சரவணன், மரு.ம.மலர்மதி, நா.முரளி, விலங்கின மரபியல் மற்றும்

இனப்பெருக்கத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading