கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021
செல்லப் பிராணியாம் நாய் என்றாலே எல்லோருக்கும் அலாதிப் பிரியம் தான். ஆனால், உற்ற நண்பனாக விளங்கும் நாயை வாங்கி வளர்ப்பதில் நிறையப் பேருக்குச் சிரமமும் பயமும் இன்னமும் உள்ளன. ஏனெனில், அதைப் பராமரிக்க நேரம் வேண்டும், இடம் வேண்டும், பணமும் வேண்டும். ஆனால், வீட்டில் ஒரு நாய் இருந்தால், குழந்தையைப் போல எல்லோராலும் கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், வீட்டில், குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ப்பதற்கு ஏற்ற நாயினங்களையும் அவற்றைப் பராமரிக்கும் முறைகளையும் இப்போது பார்க்கலாம்.
சுட்டித்தனம் மிகுந்த குட்டிக் குழந்தைகளை நமக்கு மிகவும் பிடிக்கும். அதைப் போலச் சிறிய நாயினங்களும் நம்முடன் பொழுதைக் கழிப்பதோடு, நாம் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். சிறு நாய்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றவை. ஏனெனில், இந்த நாய்களுக்கு எளிதில் பயிற்சி தரலாம். பராமரிக்க அதிக இடம் தேவையில்லை. எனவே, இந்தியாவில் பல்வேறு நாயினங்கள் இருந்தாலும், சிறுவகை நாய்களைப் பெரும்பாலோர் விரும்பி வளர்த்து வருகின்றனர்.
சிறிய நாயினங்கள்
பீகில், ஸ்பிட்ஸ், பஃக், டேஸவுண்டு, லாசாப்சோ, சிட்சு, யார்க்சையர் டெரியா, இங்கிலீஷ் புல்டாக், ஷிகுவாஷிகுவா, காக்கர் ஸ்பேனியல், பிரஞ்ச் புல்டாக், பூடில், ஐரிஸ் சட்டர், பொமரேனியன்.
பீகில்: சுறுசுறுப்பாக, அன்பாகப் பழகக்கூடிய நாயினம். வேட்டைக்கும் பயன்படும். மோப்பக் குணம் அதிகமுள்ள நாயினங்களில் ஒன்று. எலிகளை உடனே பிடித்து விடும். இதைப் பழக்கப்படுத்தச் சிரமம் இருப்பினும், பழகி விட்டால் குழந்தைகளுடன் நன்கு பொழுதைக் கழிக்கும். ஆய்வகங்களில் பல்வேறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தச் சிறந்த நாயினம். எடை 10-12 கிலோ இருக்கும். இது 12-15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
ஸ்பிட்ஸ்: காவலுக்குச் சிறந்தது, எளிதில் பயிற்சியளிக்கலாம். வெள்ளை உரோமம் கொண்டது. இது மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் பல்வேறு வேலைகளுக்கு உட்படுத்தலாம். எந்நேரமும் கத்திக்கொண்டே இருக்கும். இது, நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப வாழும். எடை 6-15 கிலோ இருக்கும். 10-14 ஆண்டுகள் வாழும்.
பஃக் ஹட்ச்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொஞ்சி விளையாடும் செல்லப் பிராணி. இதன் எடை 6-8 கிலோ இருக்கும். 6-10 ஆண்டுகள் வாழும். இது அதிகக் கோபமாகவும் இருக்காது, மிக அமைதியாகவும் இருக்காது. எளிதாகப் பராமரிக்கலாம். பயிற்சியளிப்பது சற்றுக் கடினமாகத் தான் இருக்கும். மனிதர்களைப் போல இருப்பதால், சுவாசம் மற்றும் பார்வைக் கோளாறு உண்டாகும்.
டேஸவுண்டு: குட்டையாகவும் நீளமாகவும் இருக்கும். இதற்கு விளையாட்டுக் குணம் அதிகம். குதித்து விளையாடும், புதர்களைச் சுத்தம் செய்யும். இதன் எடை 7-14 கிலோ இருக்கும். 12-16 ஆண்டுகள் வாழும். அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்க்க ஏற்றது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் நன்கு பழகும். காவலுக்கும் சிறந்தது.
லாசாப்சோ: திபெத் பகுதியில் அதிகமாகக் காணப்படும் சிற்றுடல் நாயினம். உடல் உரோமம் நீளமாக இருக்கும். எனவே, கடுங் குளிரையும் தாங்கி வளரும். வெய்யில் காலத்தில் பராமரிப்பது கொஞ்சம் சிரமம். உரோமப் பராமரிப்பு அவசியமாகும். இதன் எடை 6-8 கிலோ இருக்கும். 12-15 ஆண்டுகள் வாழும். சில நாய்கள் 20 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழும்.
சிட்சு: இது, வளர்ப்போருக்கு அருமையான துணையாகும். முகத்தில் நிறைந்துள்ள ரோமமும், அழகான மீசையும், பெரிய கண்களும் அனைவரையும் கவரும். அதிகக் குளிரையும் தாங்கி வளரும். உரோமப் பராமரிப்பு அவசியம். காவலுக்கும் ஏற்ற நாயினம். சத்தமிட்டுக் கத்துவதால் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும். சிறந்த மோப்பச் சக்தியும், கேட்கும் திறனும் மிக்கது. இது 4-8 கிலோ எடையுடன் இருக்கும், 10-16 ஆண்டுகள் உயிர் வாழும்.
யார்க்சையர் டெரியா: உடல் உரோமம் நீளமாக, பளபளப்பாக இருக்கும். சுறுசுறுப்பு மிக்கது. காவலுக்கும் கெட்டி தான். கரையான் மற்றும் எலிகளை வேட்டையாடும். அதனால், பண்ணை மற்றும் வீட்டுப் பராமரிப்புக்கு ஏற்றது. இதன் எடை 2-5 கிலோ இருக்கும். 13-16 ஆண்டுகள் உயிர் வாழும்.
இங்கிலீஷ் புல்டாக்: நடுத்தர உடல் அமைப்பைக் கொண்டது. தசை பெருத்துக் காணப்படும். உயரம் நிதானமாக இருக்கும். சுறுசுறுப்புடன் நன்கு பழகும். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். குரைப்பது குறைவாக இருக்கும். மிகவும் அமைதியாக இருக்கும். சில சமயங்களில் சோம்பேறியாகவும் இருக்கும். இதன் எடை 18-25 கிலோ இருக்கும். 8-10 ஆண்டுகள் உயிர் வாழும்.
ஷிகுவாசிகுவா: இது, உலகத்திலேயே மிகச் சிறிய நாயினமாகும். பிறக்கும் போது 28 கிராம் மட்டுமே இருக்கும். இந்தியாவில் பெரும்பாலும் இந்த நாயினம் காணப்படுவதில்லை. பணக்காரர்களும், நாய்களை இனப்பெருக்கம் செய்வோரும் வைத்துள்ளனர். இந்நாய் கைக்கு அடக்கமாக இருக்கும். அன்பாகப் பழகும். இதன் எடை 1.5-3 கிலோ இருக்கும். ஆனால், 12-18 ஆண்டுகள் உயிர் வாழும்.
காக்கர் ஸ்பேனியல்: இதில், இங்லீஷ் காக்கர் ஸ்பேனியல், அமெரிக்க காக்கர் ஸ்பேனியல் என இருவகை உண்டு. பழங் காலத்தில் வேட்டை நாயாகவும் இருந்துள்ளது. புத்திசாலித்தனமான நாயினம். எளிதாகப் பழக்கப்படுத்தலாம். இதன் எடை 12-16 கிலோ இருக்கும். 12-13 ஆண்டுகள் உயிர் வாழும்.
பிரஞ்ச் புல்டாக்: தலை உருண்டையாக இருக்கும். காது மடல்கள் வௌவாலைப் போல இருக்கும். வீட்டு வளர்ப்பில் அரிதாகவே உள்ளது. நாய் வளர்ப்புத் தொழில் புரிவோர் வைத்துள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்க்க ஏற்றது. எளிதில் பழகும், சுறுசுறுப்பாக இருக்கும். இதன் எடை 9-13 கிலோ இருக்கும். 12-14 ஆண்டுகள் வாழும்.
பூடில்: உலகிலேயே மிகச்சிறிய இரண்டாம் இரக நாய். இதில், பொதுவான வகை, மினியேச்சர் வகை, பொம்மை வகை என்றுள்ளன. சுறுசுறுப்புள்ள இந்நாய் பறவை வேட்டைக்குப் பயன்பட்டது. பொம்மை வகையைத் தவிர மற்ற வகைகள் இந்தியாவில் உள்ளன. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் நன்கு பழகும். இது 5-9 கிலோ இருக்கும். 12-14.5 ஆண்டுகள் உயிர் வாழும்.
ஐரிஸ் சட்டர்: சுறுசுறுப்பான இது, சிவப்பு நாய் என்றும் அழைக்கப்படும். அடிக்கடி குரைக்காது. தனிமையில் இருக்கும். விளையாட்டுக் குணம் அதிகம். அழகிய உடல்வாகும் அறிவுத் திறனும் மிக்கது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் நன்கு பழகும். இதன் எடை 24-29 கிலோ இருக்கும். 12-15 ஆண்டுகள் உயிர் வாழும்.
பொமரேனியன்: சுறுசுறுப்பு மிக்கது. கண்கள் பளிச்சென இருக்கும். விக்டோரியா மகாராணி வைத்திருந்த நாயினம். இதன் உரோமம் அழகாக இருக்கும். அதனாலேயே அனைவராலும் விரும்பப்படுவது. முகம் நீண்டும், வால் சுருண்டும் இருக்கும். வளர்ப்போரிடம் நன்கு பழகும். வீட்டுக்கு நல்ல காவலாளி. இதன் எடை 1.3-3.7 கிலோ இருக்கும். 12-16 ஆண்டுகள் உயிர் வாழும்.
மரு.மா.வெங்கடேசன்,
மரு.ம.சரவணன், முனைவர் நா.பிரேமலதா, கால்நடை மருத்துவத்துறை,
கால்நடை மருத்துவ கல்லூரி, ஒரத்தநாடு-614625.