கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020
தானியங்களின் இராணி, அதிசயப் பயிர் எனப்படும் மக்காச்சோளம், உலகளவில் 150 நாடுகளில் விளைகிறது. இளம் பருவத்தில் அறுவடை செய்யப்படும் இது, பச்சையாகச் சாப்பிடவும், காய்கறியாகவும் பயன்படுகிறது. அதனால் இது, சிறு மக்காச்சோளம் அல்லது இளம் மக்காச்சோளம் அல்லது குழந்தைச்சோளம் எனப்படுகிறது. இந்தக் கதிர் 10-12 செ.மீ. நீளமும், பட்டு (silk) 1-3 செ.மீட்டரும் இருக்கும். இந்தப் பட்டு, பாலைப் போல வெண்மையாக இருக்கும் போது கதிர்களை அறுவடை செய்ய வேண்டும். உலகளவில், சிறு மக்காச்சோள உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தாய்லாந்து முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் இதன் சாகுபடி மிகுந்து வரும் நிலையில், உற்பத்தித் திறன் ஏக்கருக்கு மூன்று டன் வீதம் உள்ளது.
சிறப்புகள்
சிறு மக்காச்சோளத்தில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை சீரடைய உதவுகிறது. நார்ச்சத்து மிகுந்தும், சர்க்கரையும் கிளைசிமிக்கும் குறைந்தும் இருப்பதால், இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நூறு கிராம் சிறு மக்காச்சோளத்தில் 89.1 கிராம் ஈரப்பதம், 1.9 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 8.2 மி.கி. மாவுச்சத்து, 28 மி.கி. கால்சியம், 86 மி.கி. பாஸ்பரஸ், 11 மி.கி. அஸ்கார்பிக் அமிலம் உள்ளன. இதில், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு ஆகிய நுண் சத்துகள்; ஏ, பி, சி ஆகிய உயிர்ச் சத்துகள்; நார்ச்சத்து மற்றும் புரதம் மிகுந்துள்ளதால் செரிக்கும் ஆற்றல் கூடுகிறது.
தோற்றமும் பரவலும்
சிறு மக்காச்சோளம், 1970களில் தாய்லாந்தில் முதலில் பயிடப்பட்டது. பிறகு, இலங்கை, தைவான், சீனா, ஜிம்பாபே, தென்னாப்பிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவியது. இந்தியாவில் 1990 முதல் உத்திரப் பிரதேசம், அரியானா, மராட்டியம், மேகாலயா, ஆந்திரம், தமிழ்நாடு போன்றவற்றில் விளைகிறது.
சாகுபடி முறை
தமிழ்நாட்டில் ஜூன் ஜூலையில் வரும் ஆடிப்பட்டத்திலும், செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டத்திலும், ஜனவரி பிப்ரவரியில் வரும் தைப்பட்டத்திலும் பயிரிடலாம். ஆடிப்பட்டத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஏப்ரல் 2 ஆம் வாரம் தொடங்கி, மே 2 ஆம் வாரத்துக்குள் விதைத்தால் மகசூல் அதிகமாகும். மார்கழிப் பட்டத்தில் விதைத்தால், பனியின் காரணமாக பயிர் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கப்படும்.
காலநிலை
பயிர்கள் சீராக வளர்ந்து அதிக மகசூலைத் தர, 22-28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவை. இது, 35 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடினாலும், 15 டிகிரி செல்சியசை விடக் குறைந்தாலும் பயிரின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். பயிர்கள் வளரும் காலத்தில் 3-4 முறை மழை பெய்தால் உற்பத்தித் திறன் கூடும்.
மண்வாகு
மண்ணின் கார அமிலத் தன்மை 6-7 உள்ள, வடிகால் வசதிமிக்க, மணல் கலந்த களிமண் நிலம் ஏற்றதாகும். அதிக அமிலத் தன்மையுள்ள நிலத்திலும் வளரும். ஆனால், அதிக ஈரப்பதமுள்ள நிலங்களில் பயிரிட முடியாது.
நிலம் தயாரித்தல்
நன்கு உழுது பண்படுத்திய நிலத்தில், கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு ஐந்து டன் தொழுவுரத்தை இட வேண்டும். பிறகு, 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.
இரகங்கள்
குறைந்த நாட்களில் விளைந்து கூடுதல் மகசூலைத் தரவல்ல இரகங்கள்: கோ.பி.சி.1, ஜி.5414, கோல்டன் பேபி, பிரகாஷ், எச்.எம்.4, எச்.ஐ.எம்.129 மற்றும் வி.எல்.42.
விதையளவு
தரமான விதைகளை விதைக்க வேண்டும். இவ்வகையில் ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். குழிக்கு 1-2 விதைகளை, 2-3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைத்து 7-10 நாட்கள் கழித்து, குழிக்கு ஒரு பயிர் மட்டும் இருக்கும் வகையில், மற்ற பயிர்களை அகற்ற வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் மீண்டும் விதைகளை ஊன்ற வேண்டும்.
விதை நேர்த்தி
விதைப்புக்கு முன், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்தால் விதையழுகல் மற்றும் இலைக்கருகல் வராமல் தடுக்கலாம். ஒரு ஏக்கர் விதைக்கு ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம் வீதம் கலந்து விதைநேர்த்தி விதைத்தால், பயிருக்குத் தேவையான தழைச்சத்தைக் குறைத்து இடலாம்.
உர நிர்வாகம்
ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இட்டு, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவில் விதைநேர்த்தி செய்து விதைத்தால், செயற்கை உரங்களின் தேவை குறையும். சிறு மக்காச்சோளம் 65-75 நாட்களில் அறுவடைக்கு வந்தாலும், இது தானியப் பயிராக இருப்பதால் தழைச்சத்து அதிகமாகத் தேவைப்படும். மண்ணாய்வின்படி உரமிட வேண்டும். இதைச் செய்யாத நிலையில், ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்தை இட வேண்டும். இதை இரண்டாகப் பிரித்து, விதைக்கும் முன் அடியுரமாக மற்றும் விதைத்து 25 நாளில் மேலுரமாக இட வேண்டும்.
மணிச்சத்து ஏக்கருக்கு 24 கிலோ தேவை. இதை விதைப்பதற்கு முன் அடியுரமாக இட வேண்டும். சாம்பல் சத்து 16 கிலோ தேவை. இதில் பாதியை விதைக்கும் முன் அடியுரமாகவும், மீதியை விதைத்த 25 ஆம் நாள் மேலுரமாகவும் இட வேண்டும். மேலும், நுண்சத்துக் குறையைத் தவிர்க்க, 10 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ இரும்பு சல்பேட்டை இட வேண்டும்.
பாசனம்
விதைகள் சீராக முளைக்க, விதைத்ததும் மற்றும் மூன்றாம் நாளிலும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, 7-10 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்யலாம். மணற்பாங்கான நிலத்தில் வாரம் ஒருமுறையும், களிமண் நிலத்தில் பத்து நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் தேவைப்படும். பெய்யும் மழையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, சிறு மக்காச்சோள சாகுபடிக்கு, மணல் சார்ந்த நிலமெனில் 8-10 பாசனமும், களிமண் நிலமெனில் 6-8 பாசனமும் தேவைப்படும். குறிப்பாக, இளம் பருவம், கணுக்கால் உயர வளர்ச்சிப் பருவம் மற்றும் ஆண் பூக்கள் உருவாகும் போது பாசனம் அவசியமாகும்.
களை நிர்வாகம்
விதைத்த மூன்றாம் நாள், ஏக்கருக்கு 400-500 கிராம் அட்ரசின் களைக்கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து, முதலில் முளைக்கும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், களைக்கொல்லியைத் தவிர்ப்பது நல்லது. அடுத்து, 25 மற்றும் 45 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, பயிருக்கு 2-3 மருந்துக் குருணை வீதம் மண்ணில் இட வேண்டும். படைப்புழுவைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 300 கிராம் கார்பரில் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஐந்து சத வேப்பெண்ணெய்க் கரைசலையும் தெளிக்கலாம்.
ஆண் பூக்களை அகற்றல்
விதைத்த 45-50 நாளில் ஆண் பூக்கள் வளரத் தொடங்கும். இவை, வெளியில் வரத் தொடங்கியதும் அகற்றி விட வேண்டும். இல்லையெனில், மகரந்தச் சேர்க்கை நடந்து கதிர்கள் முற்றி விடும். முற்றிய கதிர்கள் நல்ல விலைக்குப் போகாது.
அறுவடை
55-60 நாட்களில் முதல் அறுவடைக்குக் கதிர்கள் தயாராகும். குறிப்பாக, பட்டின் அளவு 2-3 செ.மீ. வந்ததும் அறுவடை செய்ய வேண்டும். ஒரு பயிரில் இருந்து 3-4 கதிர்களை அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு கதிரின் அளவு 10-12 செ.மீ. இருக்க வேண்டும்.
மகசூல்
இரகத்தைப் பொறுத்து மகசூல் இருக்கும். சராசரியாக கதிர் மகசூல் ஏக்கருக்கு 3,000 கிலோ கிடைக்கும். தீவன மகசூல் ஏக்கருக்கு 15 டன் கிடைக்கும்.
வருவாய்
நகர்ப்புறத்தில் ஒரு கிலோ சிறு மக்காச்சோள விலை 40 ரூபாயாகும். ஒரு டன் பசுந்தீவன விலை 1,500 ரூபாயாகும். ஒரு ஏக்கரிலிருந்து 1,40,000 ரூபாய் வருவாயாகக் கிடைக்கும். ஒரு ஏக்கர் சிறு மக்காச்சோள சாகுபடிக்கு 40,000 ரூபாய் செலவாகும். ஆக, ஒரு ஏக்கரில் இருந்து நிகர இலாபமாக ரூ.1,00,000 வரை கிடைக்கும். எனவே, விவசாயிகள் இதைப் பயிரிட்டால், 75 நாட்களில் இலட்சம் ரூபாயை இலாபமாகப் பெறலாம்.
இருப்பினும் இதற்கு நகர்ப்புறத்தில் மட்டுமே வரவேற்பு இருப்பதால், பெருமளவில் இதைப் பயிரிடும் போது, ஏற்றுமதியைக் கூட்டினால் மட்டுமே அதிக வருவாயைப் பெற இயலும்.
முனைவர் ந.தவப்பிரகாஷ்,
முனைவர் கோ.தமிழ் அமுதம், முனைவர் இரா.கார்த்திகேயன், முனைவர் இரா.தமிழ்மொழி,
முனைவர் சி.இரா.சின்னமுத்து, பயிர் மேலாண்மை இயக்குநரகம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.