இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

இறால் HP 2

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

யிரியல் பாதுகாப்பு என்பது, சிறப்பான இலாபத்தை நோக்கி; நாற்றங்கால், குஞ்சுப் பொரிப்பகம், வளர்ப்பு முறை என; இறால் வளர்ப்பின் அனைத்து நிலைகளிலும், நோயற்ற சூழலை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும்.

இதன் நோக்கம்; ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள், இறால் வளர்ப்பில் நுழைவதற்கு முன்பு அல்லது நுழைந்த பிறகு, அவற்றின் தாக்கத்தைக் குறைத்து, இறால் வளர்ப்பைப் பாதுகாப்பது.

நாற்றங்கால் குளங்கள் மற்றும் இறால் வளர்ப்புப் பண்ணைகளில், நவீன உத்திகள் மற்றும் சிகிச்சைகளுடன், உயிரியல் பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதாவது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நோயைப் பரப்பும் காரணிகளை அடையாளம் காண வேண்டும்.

பல குளங்களில் வேலை செய்யும் கூலியாட்கள், பல்வேறு பொருள்கள் மற்றும் வளர்ப்பு இறால்களைக் கையாள்வதால், இவர்கள் மூலம் நோய்த் தொற்றுகள் எளிதில் பரவும்.

ஆகவே, ஒரு குளத்திலிருந்து அடுத்த குளத்துக்குச் செல்வதற்கு முன், கிருமிநாசினியால், கை, கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து, நண்டுகள், கொறித்துண்ணிகள் மற்றும் பறவைகள், நீரின் தரத்தைக் கெடுப்பதால் நோய்க்கிருமிகள் வளரும். ஆகவே, இவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு குளத்தில் பயன்படுத்தும் இறால் வளர்ப்புக் பொருள்களை, மற்ற குளங்களில் பயன்படுத்தக் கூடாது. வேறு வழியில்லாத நிலையில், தூய்மையான நீரில், கிருமிநாசினியால் சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். இறால் பண்ணை, ஒரு நுழைவாயில் மற்றும் உயிரியல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

உரிமையாளர், தொழில் நுட்ப வல்லுநர் போன்றவர்களைத் தவிர, மற்றவர்களை, இறால் வளர்ப்புப் பகுதியில் அனுமதிக்கக் கூடாது. சுற்றுப்புறத்தையும் கிருமிநாசினி மூலம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் பண்ணைக்குள் விட வேண்டும். மாதிரித் தொட்டிகள், தீவனத் தட்டுகள், வீச்சு வலைகள் போன்றவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

துப்புரவு: துப்புரவு சுகாதாரத்தில்; நாற்றங்கால் மற்றும் இறால் வளர்ப்புக் குளங்கள், தொட்டிகள் மற்றும் வளர்ப்புப் பொருள்களைச் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் அடங்கும். கிருமி நாசினிகளான குளோரின், ஃபார்மலின் மற்றும் பிற இரசாயனக் கலவைகள் அனைத்தும் நச்சுத்தன்மை மிக்கவை.

எனவே, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பொருள்களை, சுத்தமான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

செங்குத்து நோய்ப் பரவல்: நலமான, நோய்த்தொற்று இல்லாத, இனப்பெருக்க முதிர்வுள்ள சினை மீன்களைப் பயன்படுத்தினால், செங்குத்து நோய்ப் பரவல் என்னும், தாய் மீனிலிருந்து குஞ்சு மீன் வரை பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

முட்டைகளின் நீரைக் கடினப்படுத்தும் போது அயோடின் மூலம் கிருமி நீக்கம் செய்தால், முட்டைகள் மற்றும் இறால் குஞ்சுகளில் நோய்கள் பரவும் வேகத்தைக் குறைக்கலாம்.

போக்குவரத்து: மக்கள் மற்றும் பொருள்கள் போக்குவரத்துக் கட்டுக்குள் இருந்தால், ஒரு பண்ணையில் இருந்து இன்னொரு பண்ணைக்கு நோய் பரவுவதைக் குறைக்கலாம்.

நீர் சிகிச்சைகள்: உள்ளே வரும் அல்லது மறுசுழற்சி செய்யும் நீரை, முறையாகச் சுத்திகரித்தால், நோய்க்கிருமிகள் உள்ளே வராமல் தடுக்கலாம். இயந்திர வடிகட்டுதல், புற ஊதாக் கதிர்கள் மற்றும் ஓசோன் மூலம் நீரைச் சுத்திகரிக்கலாம்.

கழிவுநீர்ச் சுத்திகரிப்பு: இறால் அல்லது மீன் வளர்ப்புப் பண்ணை மற்றும் மீன்பதன ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரித்தால், நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆலை நீரைச் சுத்தம் செய்யாமல் குளங்களில் விட்டால், நோய்க் கிருமிகள் பரவும்.

சுத்தமான தீவனம்: சுத்தமான மற்றும் புதிய தீவனத்தைப் பயன்படுத்த வேண்டும். கையாளுதலும் சேமிப்பும் முறையாக இருந்தால், தீவனம் மூலம் பரவும் நோய்க் கிருமிகளைக் குறைக்கலாம்.

இறப்புகளை அகற்றுதல்: இறந்த உயிர்களை எரித்தல், புதைத்தல் மற்றும் மட்கச் செய்தல் மூலம் நோய்ப் பரவலைக் குறைக்கலாம். இறந்த மீன்களைக் குளத்திலிருந்து உடனே அகற்றினால் நோய்ப் பரவலைத் தடுக்கலாம்.

சரிபார்ப்புப் பட்டியல்

முறையாகச் செயல்படுத்தப்படும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும். கிருமி நீக்கம், சுகாதாரம் மற்றும் தடுப்பூசியுடன், உயிரியல் பாதுகாப்பையும் இணைத்தால், நோய்த் தொற்றுப் பன்மடங்கு குறையும்.

நோய்க் கிருமிகள் பரவும் விதமறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைவிடம், அமைப்பு மற்றும் இறால் இருப்பு வைத்தல் முக்கியம் என்பதைப் போல, இறால் பண்ணை வடிவமைப்பில் உயிரியல் பாதுகாப்பும் முக்கியம்.

பண்ணையில், தீவனம், கருவிகள், இறால் அடர்த்தி மற்றும் போக்குவரத்து வசதி சரியாக இருக்க வேண்டும். அவசிய நிலையில், கிருமி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே பண்ணைக்குள் விட வேண்டும். பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மீன் மற்றும் இறால் இனப்பெருக்கக் குளங்கள் மற்றும் குஞ்சுப் பொரிப்பகங்களைக் காப்பதற்கு, உயிரியல் பாதுகாப்பு முறைகளையே பயன்படுத்த வேண்டும்.

தூய்மைப்படுத்தலில் கவனம், முறையான துப்புரவுக் கட்டமைப்பு மற்றும் கிருமிநாசினி நடவடிக்கைகள், மீன் மற்றும் இறால் பண்ணைகளில் கட்டாயம் இருக்க வேண்டும். நோய் மற்றும் நோய்க்கிருமித் தடுப்பை முறையாகப் பின்பற்ற வேண்டும். வைரஸ் மற்றும் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்தும் கிருமி நாசினிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிக்கலான கட்டுப்பாட்டுப் புள்ளிகள்

தீங்குப் பகுப்பாய்வு மற்றும் சிக்கலான கட்டுப்பாட்டுப் புள்ளிகளின் உத்திகள்; நோய்க் கிருமிகளால் நிகழும் ஆபத்துகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவும். மேலும், உற்பத்திச் சங்கிலியைப் பகுப்பாய்வு செய்து, அனைத்து வேலைகளும் பயனுள்ள முறையில் நடப்பதை உறுதி செய்யும்.

தீங்குப் பகுப்பாய்வு: இறால் இருப்பு முதல் அறுவடை வரையான செயல்களின் ஒவ்வொரு நிலையிலும், இயற்பியல், வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆபத்துகளை அடையாளம் காண வேண்டும்.

சிக்கலான கட்டுப்பாட்டுப் புள்ளிகள்: இப்புள்ளிகளின் நடவடிக்கை மூலம், ஆபத்தைக் குறைக்கலாம். அல்லது தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். பண்ணையில் உள்ள உயிரியல் பாதுகாப்பு முறைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் புள்ளிகள் உள்ளன.

சிக்கலான வரம்புகள்: இவற்றின் மூலம் ஆபத்தான வரம்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

கண்காணிப்பு: முறையான கண்காணிப்பு, தூய்மை அளவீடு மற்றும் கிருமி நீக்கம் மூலம், ஒவ்வொரு நிலையிலும் உள்ள சிக்கலான வரம்புகளை எளிதாகக் கண்காணிக்கலாம். எங்கள் ஆய்வின் மூலம் காணப்பட்ட நான்கு  சிக்கலான வரம்புகள்: 1. மூலநீர்-தரம். 2. நீர்ப் பரிமாற்றம்-முறையான கிருமி நீக்கம். 3. பொருள்கள்-தீவன ஊட்டிகள், மாதிரி பொருள்கள். 4. நகரும் பொருள்கள், பணியாளர்கள் மற்றும் நோய்க் கடத்திகள் மூலம் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டைக் கண்காணிக்க வேண்டும்.

திருத்தம்: ஒவ்வொரு நிலையிலும் சிக்கலான வரம்புகள் திருத்தம் செய்யப்படா விட்டால், அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதிவு செய்தல்: உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சரியான முறையில் தொடர்ந்து செயல்படுவதை, தொடக்கம் முதலே பதிவு செய்துவர வேண்டும். பொருள்களின் பயன்பாடு, சிக்கலான வரம்புகள், தூய்மை அட்டவணை, திருத்த நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். சரியான, முழுமையான பதிவுக் கையேடு, தரக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சரிபார்ப்பு: உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இருப்பதை, ஆய்வுகள் மற்றும் நடைமுறைகள் மூலம் சரிபார்க்க வேண்டும். எ.கா: பாக்டீரிய ஆய்வுகள், அளவுத் திருத்த ஆய்வுகள் மற்றும் வீரியம் சரிபார்ப்பு ஆய்வுகள். தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை, வெளியாட்கள் அல்லது அமைப்பால் நிகழ்த்தி, பண்ணையின் தரத்தை மதிப்பிட வேண்டும்.


PETCHIMUTHU

மு.பேச்சிமுத்து,

ஜெ.ஜாக்குலின் பெரைரா, ஜா.ரூஜன், டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி,

தலைஞாயிறு, நாகை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading