கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019
இந்தியாவில் 40 வகை செம்மறி இனங்கள் உள்ளன. மேய்ச்சல் முறையில் வளரும் இவற்றைப் பலவகை ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
ஒட்டுண்ணிகளின் வகைகள்
இவற்றை, அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் எனப் பிரிக்கலாம். அக ஒட்டுண்ணிகள் மூன்று வகைப்படும். 1. கல்லீரல் புழு, இரைப்பைப் புழு, மூச்சுக்குழல் புழு, நுரையீரல் புழு ஆகியன அடங்கிய தட்டைப் புழுக்கள். 2. குடல் நாடாப்புழு, கல்லீரல் கட்டி ஆகியன அடங்கிய நாடாப்புழுக்கள். 3. இரைப்பை மற்றும் சிறுகுடல் உருளைப்புழு, பெருங்குடல் உருளைப்புழு, வயிற்றறை உறை உருளைப்புழு, நுரையீரல் உருளைப்புழு, தோல் கட்டி உருளைப்புழு ஆகியன அடங்கிய உருளைப் புழுக்கள்.
அக ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்
குடற் புழுக்களால் பாதிக்கப்பட்ட ஆடுகள் கழியும். உடல் மெலிந்து வயிறு பெருக்கும். இரத்தப் புரதக் குறைவால் தாடை வீங்கும். கல்லீரல் மற்றும் இரைப்பைப் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதால் இரத்தச்சோகை ஏற்படும். உரோமம் சிலிர்க்கும். கல்லீரல் கட்டியால் இறைச்சியின் தரம் குறையும்.
ஓரணு ஒட்டுண்ணிகள்: இவற்றில், இரத்த ஓரணு ஒட்டுண்ணிகள், குடல் ஓரணு ஒட்டுண்ணிகள், திசு ஓரணு ஒட்டுண்ணிகள் என உள்ளன. புரோட்டோசோவா என்னும் இரத்த ஓரணு ஒட்டுண்ணியால், ஆடுகளில் கடும் காய்ச்சல், இரத்தச்சோகை, நிணநீர்க் கட்டிகள் வீக்கம், கண்ணிமைச் சவ்வுகள் வெளிரி மஞ்சளாதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பேபேசியோசிஸ் நோயால் பாதிக்கப்படும் ஆட்டின் சிறுநீர் காபி நிறத்தில் இருக்கும்.
குடல் ஓரணு ஒட்டுண்ணியால், ஆடுகளில் இரத்தம் கலந்த கழிச்சல் இருக்கும். குடல் முடிச்சுகள் அல்லது கட்டிகளால் ஏற்படும் செரிமானச் சிக்கலால், சரியாக உண்ணாமல் உடல் மெலியும். தாக்கம் தீவிரமானால் ஆடுகள் இறந்து விடும்.
திசு ஓரணு ஒட்டுண்ணியால், கருச்சிதைவு ஏற்படும். சில நேரங்களில் காய்ச்சல், கழிச்சல், நரம்பு மண்டலப் பாதிப்பால் வலிப்பு மற்றும் மூளை சார்ந்த சிக்கல் ஏற்படும்.
புற ஒட்டுண்ணிகள்
ஈக்களால், புழுநோய், மூக்குப்புழு நோய் ஏற்படும். கியூலிகாய்டஸ் கொசுவால் நீலநாக்கு நோய் பரவும். பேனால் தோலரிப்பு, உரோமம் கொட்டுதல் மற்றும் குறைவாக உண்பதால் உடல் மெலியும். உண்ணியால் இரத்தச்சோகை, வலிப்பு மற்றும் இரத்த ஓரணு ஒட்டுண்ணி நோய்ப் பரவல் ஏற்படும். சொறிப்பூச்சியால் தோலரிப்பு மற்றும் படர்தாமரை உண்டாகும்.
அக ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துதல்
கால்நடை மருத்துவர் மூலம், ஆடுகளில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தட்டைப் புழுக்களுக்கு ஆக்சிகுளோசனைடு, ட்ரைகிளாபென்டசால், குலோசன்டால், நிக்லோசமைடு போன்ற மருந்துகளைக் கொடுக்கலாம். நாடாப்புழுக்களுக்கு நிக்லோசமைடு, பிரேசிகோன்டல் போன்ற மருந்துகளைக் கொடுக்கலாம். உருளைப் புழுக்களுக்கு லிவமிசோல், டெட்ராமிசோல், அல்பென்டசால், பென்பென்டசால், பைரன்டல் பாமேட், ஐவர்மெக்டின் போன்ற மருந்துகள் உள்ளன.
புற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துதல்
ஆடுகளை மருந்துக் கலவையில் குளிப்பாட்ட வேண்டும். இதற்கு, டெல்டாமெத்ரின் அல்லது சைபெர்மெத்ரின் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் எடுத்துக் கலக்க வேண்டும். 15-20 நாட்கள் கழித்து மீண்டும் குளிப்பாட்ட வேண்டும். தொழுவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 4 மில்லி வீதம் இந்த மருந்தைத் தெளிக்கலாம். புற ஒட்டுண்ணிகளால் தான் பெரும்பாலான இரத்த ஓரணு ஒட்டுண்ணி நோய்கள் வருகின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தடுக்கும் முறைகள்
அதிகாலை மற்றும் மாலையில் நிலவும் ஈரப்பதத்தில், இளம் குடற் புழுக்கள், புல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதால், அந்த நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. பெரிய ஆடுகள் மற்றும் குட்டிகளைத் தனித்தனியாக மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடற்புழு நீக்கமும், ஆறு மாதத்துக்கு ஒருமுறை மருந்துக் குளியலும் செய்ய வேண்டும்.
மரு.ம.க.விஜயசாரதி,
ந.இராணி, அ.மீனாட்சி சுந்தரம், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம்.