விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

விதை உற்பத்தி gyjhbjk 5d151c99d5f554e199d47644e4e44111

ந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய கிராமங்களில் வசிக்கும் 80 சதத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பன, விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் ஆகும். இந்தத் தொழில்கள் மூலம் ஏறத்தாழ 52 சதவீதத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 14-15 சதமாகும்.

விவசாயத் துறையில் அதிக உற்பத்தித் திறனுக்கான வாய்ப்புகள் இருந்த போதிலும், இந்தியாவில் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. இது, இந்திய விவசாயிகளின் வறுமைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. மேலும், வேலையாள் கூலியும், வேலையாள் பற்றாக்குறையும் கூடிக் கொண்டே உள்ளன.

எனவே, அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல், விதை உற்பத்தி செய்தல், தரமான விதைகளைப் பயன்படுத்துதல், சிறிய பண்ணைகளை இயந்திரமயமாக்கல் போன்றவை; செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனையும், வருமானத்தையும் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்கும்.

இலாபமிக்க விதை உற்பத்தி

நம் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது வேளாண்மை தான் என்றாலும், தற்போது விளைநிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நீர்வளமும் குறைந்து வருகிறது. தட்பவெப்ப நிலையும் மாறி வருகிறது. இந்தச் சூழலில் வேளாண்மை ஒரு சவாலாகவே உள்ளது. இருந்தாலும், சில விவசாய முறைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து உற்பத்தியைப் பெருக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, விதை உற்பத்தி, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, அசோலா உற்பத்தி, மாடித்தோட்டம், மண்புழு உரம் தயாரிப்பு, தென்னைநார்க் கழிவை உரமாக மாற்றுதல் போன்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்கி அதிக வருமானம் ஈட்டலாம்.

தானிய விலையுடன் ஒப்பிடும் போது, விதையின் விலை அதிகமாகும். விதை உற்பத்தியும் தானிய உற்பத்தியைப் போன்றது தான். ஆயினும், விதை உற்பத்திக்கு என இருக்கும் குறிப்பிட்ட சில வேளாண் உத்திகளைக் கையாண்டு, தூய்மை மற்றும் வீரியமுள்ள விதைகளை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்று இலாபம் பெறலாம்.

எடுத்துக்காட்டாக, உணவுக்காக உற்பத்தி செய்யும் உளுந்தின் விலையை விட, விதைக்காக உற்பத்தி செய்யும் உளுந்தின் விலை அதிகமாகும். மேலும், பயிர் இரகங்களில் உற்பத்தி செய்வதை விட, வீரிய ஒட்டு இரகங்களின் விதைகளை உற்பத்தி செய்தால், இன்னும் கூடுதல் விலைக்கு விற்று அதிகளவில் இலாபம் பெறலாம்.

நல்ல மகசூலில் தரமான விதைகளின் பங்கு

இடுபொருள்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. அதிலும், அனைத்து இடுபொருள்களும் கிடைத்தாலும், விதை என்னும் அடிப்படையான இடுபொருள் தரமாகவும், உரிய காலத்தில் விதைப்புக்கும் கிடைத்தால் தான் நல்ல மகசூலை எடுக்க முடியும். நல்ல தரமான விதைகள் உரிய காலத்தில் தேவையான அளவில் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

உரிய பருவத்தில், குறிப்பிட்ட பகுதியில் விளையும் நல்ல இரகங்களின் விதைகள் கிடைப்பதில்லை. இப்போது விவசாயிகளின் மொத்தத் தேவையில் 16 சத அளவில் மட்டுமே விதைகள் கிடைக்கின்றன. மீதமுள்ள 84 சதத்தை எப்படி ஈடு செய்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தரமான விதை, விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்களின் இலாபத்தைக் கூட்டுகிறது என்பது உலகளவில் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. மொத்தப் பயிர் உற்பத்திச் செலவில் விதைக்கான செலவு குறைவாக இருந்த போதிலும், விதையின் தரம் இலாபத்தை ஈட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, நல்ல மகசூலுக்குத் தரமான விதைகள் முக்கியமாகும்.

தரமான விதையின் குணங்கள்

தரமான விதை என்பது, ஒரே சீரான பருமன், அதிக முளைப்புத் திறன் மற்றும் வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும். விதையின் புறத்தூய்மையும் அகத்தூய்மையும் அதிகமாக இருக்க வேண்டும். இதில், மற்ற பயிர்களின் விதைகள், களை விதைகள், தூசி போன்றவை மிகக் குறைவாக இருக்க வேண்டும். விதைகள், பூச்சி மற்றும் பூசணங்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதிக ஈரப்பதம் இல்லாதிருத்தல் மிகவும் அவசியமாகும்.

தரமான விதைகளை விதைத்தால் அதிக முளைப்புத் திறன் கிடைக்கும். தேவையான பயிர் எண்ணிக்கை கிடைக்கும். வேற்றுப் பயிர்கள், களைகள் மற்றும் பிற இரகப் பயிர்கள் இல்லாமல் இருக்கும். பயிர்கள் வீரியமாக இருப்பதால், நோய், பூச்சி மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். அதிக மகசூல் கிடைக்கும். விவசாய இடுபொருள்களுடன் தரமான விதைகளையும் சரியாகப் பயன்படுத்தினால், தரமற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் கிடைப்பதை விட 15-20 சத மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.

தரமற்ற விதைகளை விதைத்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படுவதுடன், பயிர் எண்ணிக்கையும் குறையும். மேலும், விதைச் சுத்தமின்மை, இனச் சுத்தமின்மை ஆகியவற்றால், காலத்தில் பூத்து, காய்த்து, முதிர்ந்து அறுவடைக்கு வருவது தடைபடும். விளைபொருளும் தரத்தில் குறைவதால், நல்ல விலை கிடைக்காத நிலையும் ஏற்படும்.

விதை உற்பத்தி உத்திகள்

விதை உற்பத்தியும் உணவு தானிய உற்பத்தியைப் போன்றதே. ஆயினும், சில வேளாண் உத்திகளை விதை உற்பத்தியில் கடைப்பிடிக்க வேண்டும். அவையாவன: தகுந்த நிலத்தேர்வு, பயிர் விலகு தூரம், கலவன் அகற்றுதல், தேவையான உரமிடுதல், சரியான சமயத்தில் அறுவடை செய்தல் மற்றும் விதைச் சுத்திகரிப்பு.

நிலத்தேர்வு

விதை உற்பத்திக்கான நிலம் வளமாக, களர் உவர் தன்மை அற்றதாக இருக்க வேண்டும். மேலும், இந்த நிலத்தில் தற்போது விதைக்கப் போகும் பயிரின் வேறு இரகப் பயிர் எதையும் முந்தைய பருவத்தில் பயிரிட்டிருக்கக் கூடாது.

பயிர் விலகு தூரம்

விதைப்பயிர் நிலம், மற்ற இரகப் பயிர்கள் இருக்கும் நிலத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளியிருக்க வேண்டும். இதையே பயிர் விலகு தூரம் என்கிறோம். இப்படி, குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு, தனிமைப்படுத்தி விதை உற்பத்தியை மேற்கொண்டால் மட்டுமே விதைகளின் இனத் தூய்மைக்கு உறுதியளிக்க முடியும்.

விதைத் தேர்வு

விதை உற்பத்திக்கான இரகமானது, விதை உற்பத்திக்கான இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில், சில பயிர் இரகங்கள், குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் மட்டும் நல்ல மகசூலைக் கொடுக்கும். அத்தகைய பயிர்களை அந்த இடத்தில் மட்டும் பயிரிட வேண்டும்.

மேலும், விதை உற்பத்திக்கான இரகம், விவசாயிகளுக்கும், விற்பனைக்கும் ஏற்ற உயர் விளைச்சல் இரகமாக இருக்க வேண்டும். எந்த இரகமாக இருப்பினும் ஆதார நிலை உற்பத்திக்கு வல்லுநர் விதைகளையும், சான்று நிலை உற்பத்திக்கு ஆதார நிலை விதைகளையும் மூலதன விதைகளாக, காலக்கெடு முடிவதற்கு முன் பயன்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி

வீரியமிக்க நாற்றுகளைப் பெறவும், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களில் இருந்து பயிரைப் பாதுகாக்கவும், விதைக்கப் போகும் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விதைக்கும் முறை

விதைகளை விதைக்கும் போது பயிருக்கேற்ற இடைவெளி விட்டு, ஒரே அளவுள்ள சீரான ஆழத்தில் விதைக்க வேண்டும். இந்த ஆழமானது, விதையின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக, விதை உற்பத்திப் பயிருக்கான இடைவெளி, உணவு தானிய உற்பத்திப் பயிருக்கான இடைவெளியை விடச் சற்றுக் கூடுதலாக இருக்க வேண்டும்.

இதனால், செடிகள் நன்கு வளர்ந்து திரட்சியான விதைகளைக் கொடுக்கும். பயிருக்குள் உள்ள கலவன்களை அகற்ற ஏதுவாக இருக்கும். வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தியில், ஆண், பெண் பயிர்கள் தகுந்த விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும், விதை உற்பத்தி நிலத்தைச் சுற்றி ஆண் பயிர்களை அரண் போல் வளர்க்க வேண்டும்.

நடவு முறை

நாற்று விட்டு நடவு செய்யும் நெல், தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களின் நாற்றுகளை, குறிப்பிட்ட காலத்தில் பறித்து, முறையான வரிசை மற்றும் பயிர் இடைவெளியில் நட வேண்டும்.

நடவு விகிதம்

வீரிய ஒட்டு விதை உற்பத்திக்கு, பரிந்துரைப்படி ஆண் மற்றும் பெண் வரிசை விகிதத்தைக் கடைப்பிடித்து நட வேண்டும். எடுத்துக்காட்டாக, நெல்லில் பெண் மற்றும் ஆண் நாற்றுகளை 8:2 என்னும் வரிசை வீதம் நட வேண்டும். முதலில் ஆண் பயிர்களை, இரண்டு வரிசைகளைக் கொண்ட தொகுதிகளாக நட வேண்டும். இதன் பிறகு, எட்டு வரிசைகளைக் கொண்ட தொகுதிகளாகப் பெண் பயிர்களை நட வேண்டும். விதை உற்பத்தி நிலத்தைச் சுற்றி எல்லைப் பயிராக, நான்கு வரிசைகளில் ஆண் நாற்றுகளை, காற்றடிக்கும் திசைக்குக் குறுக்காக நட வேண்டும்.

உர நிர்வாகம்

மேம்பட்ட விதை உற்பத்திக்கு உர நிர்வாகம் மிகவும் அவசியம். இதனால் காய்கள் நன்கு பிடித்து மகசூல் பெருகும். குறிப்பாக விதைப் பயிருக்குத் தொழுவுரம் மிகவும் ஏற்றதாகும். எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்தை இட்டால், பயிர்களின் வளர்ச்சிக் கூடுதலாகி நல்ல விதைப் பிடிப்புடன் இருக்கும். இதைத் தவிர, தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை, பயிர்களுக்கு உகந்த வகையில் இட வேண்டும்.

தழைச்சத்து முழுவதையும் அடியுரமாக இடாமல், அதைப் பிரித்து, பயிரின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவங்களில் இட வேண்டும். விதை உற்பத்திப் பயிர்களுக்கான உரத்தேவை, உணவு உற்பத்திப் பயிர்களுக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.

வேர்களின் வளர்ச்சி மற்றும் விதைகளின் வளர்ச்சிக்கு, மணிச்சத்தும் சாம்பல் சத்தும் மிகமிக அவசியம். இந்தச் சத்துகள் பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் தரும். மேலும், நிலத்துக்குத் தேவையான நுண் சத்துகளையும் கண்டறிந்து இடுதல் அவசியம். உதாரணமாக, போரான் சத்துக் குறைந்த நிலத்தில் நிலக்கடலையைப் பயிரிடும் போது, போராக்சினை அடியுரமாக அல்லது இலைவழி உரமாக அளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

விதை உற்பத்தி நிலம் களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். களைகள் இருந்தால் விதை உற்பத்திக் குறைவதோடு, விதைகளின் புறத்தூய்மை பாதிக்கப்படும். ஆகவே, விதை உற்பத்தி நிலத்தில் இருக்கும் களைகள் பூக்கவோ அல்லது அவற்றில் இருந்து விதை உருவாகவோ விடக் கூடாது. பயிர்ச் சுழற்சி முறை, கைக்களை எடுத்தல் மற்றும் களைக்கொல்லி மூலம் களைகளை அகற்ற வேண்டும்.

கலவன்களை அகற்றுதல்

விதை உற்பத்தி நிலத்தில், விதைப் பயிரின் குணங்களில் இருந்து மாறுபட்ட பயிர்கள், பிற இரகப் பயிர்கள் இருந்தால், அவற்றைக் கலவன்கள் என்கிறோம். இவற்றால் விதைப் பயிரின் இனத்தூய்மை பாதிக்கப்படும். எனவே, பயிர்கள் பூப்பதற்கு முன், பூக்கும் போது, காய்க்கும் போது மற்றும் அறுவடைக்கு முன்; விதைப் பயிரை விடக் குட்டையான செடிகள்,

உயரமான செடிகள், மாறுபட்ட இலை, தண்டு, பூக்களின் நிறம் கொண்ட செடிகள், முன்னரே பூக்கும் செடிகள் மற்றும் காய்களின் தன்மையில் வேறுபட்டிருக்கும் செடிகளை நீக்க வேண்டும். இதனால், தரமான விதைகளை உற்பத்தி செய்ய இயலும்.

விதைகள் மூலம் பரவும் நோய்களைக் கொண்ட செடிகளை அகற்றும் போது, பூசண வித்துகள் மற்ற செடிகளுக்குப் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர்களின் முதிர்ச்சிப் பருவத்தில், மற்ற வளர்ச்சிப் பருவங்களில் அகற்றப்படாத கலவன்களை இனம் கண்டு அகற்றுதல் மிகவும் முக்கியம்.

பாசனம்

விதை உற்பத்திப் பயிர்களுக்கு, வளரும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் கண்டிப்பாக பாசனம் செய்ய வேண்டும். இதனால், விதை உற்பத்தி அதிகமாகும். மேலும், அளவுக்கு அதிகமான பாசனம் அல்லது ஈரப்பதப் பற்றாக்குறை ஆகிய இரண்டும், விதையின் முளைப்புத் திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆனால், பாசன இடைவெளி மற்றும் நீரின் அளவானது, மண்ணின் தன்மை மற்றும் விதைப் பயிரின் தேவையைப் பொறுத்தே அமையும்.

பயிர்ப் பாதுகாப்பு

பயிர்களைத் தாக்கும் அனைத்துப் பூச்சி மற்றும் பூசணங்களைக் கண்டறிந்து அழித்தால், விதையின் தரமும் உற்பத்தியும் அதிகமாகும். விதைப்பதற்கு முன் விதைகளை, முறையான பூசணக் கொல்லியில் நேர்த்தி செய்து விதைத்தால், விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும். நாற்றுகள் நன்கு வளரும். சரியான நேரத்தில், சரியான அளவில், பூசணம் மற்றும் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.

அறுவடை

வினையியல் முதிர்ச்சிக்குப் பிறகு விதைப் பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதற்கு முன் அறுவடை செய்தால், விதைகளைப் பிரிக்கும் போதும், சுத்தம் செய்யும் போதும் அதிகளவில் இழப்பு ஏற்படும். அதைப் போல, காலம் தாழ்த்தி அறுவடை செய்தால், விதைகள் கொட்டி விடுவதுடன், அதிகளவில் பூச்சி, பூசணங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி விதைகள் சேதமாகும்.

விதையின் ஈரப்பதத்தைக் கணக்கில் கொண்டு அறுவடைக் காலத்தை முடிவு செய்யலாம். பொதுவாக விதைகளின் ஈரப்பதம் 20 சதத்துக்குக் கீழே இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின் போது விதைகளில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உலர்த்துதல்

சூரிய ஒளி அல்லது மின் இயந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட ஈரப்பதம் வரும் வரை விதைகளை உலர்த்தினால் அவற்றின் சேமிப்புத் தரம் அதிகமாகும்.

சேமிப்பு

உற்பத்தி செய்த விதைகளை உடனே விற்க முடியாத நிலையில், அவற்றைச் சேமித்து வைக்கலாம். விதை உற்பத்தியில் எவ்வளவு கவனம் இருந்ததோ, அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமிப்பதிலும் இருக்க வேண்டும். இதற்குச் சில முறைகளைக் கையாள வேண்டும். அவையாவன:

நன்கு உலர்த்திய விதைகளை, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் பூசணக்கொல்லி வீதம் கலந்து, துணிப்பை அல்லது சாக்குப் பைகளில் சேமித்து வைத்தால், விதைகளின் வீரியமும் முளைப்புத் திறனும் நெடுநாட்கள் வரை குறையாமல் இருக்கும்.

விதைகள், காற்றிலுள்ள ஈரத்தைக் கிரகிக்கும் தன்மை மிக்கவை. எனவே, காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதி மற்றும் நதிக்கரைப் பகுதியில் விதைகளைச் சேமிக்க, ஈரக்காற்றுப் புகாத பைகளை, அதாவது, 700 அடர்வுள்ள நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும்.

விதைகளைக் கிடங்குகளில் சேமித்து வைக்கும் போது, பூச்சி, பூசணத் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக 6-7 வரிசைக்கு மேல் அடுக்கக் கூடாது. ஏனெனில், மேலேயுள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளை அழுத்துவதால், அடி மூட்டை விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.

விதை மூட்டைகளை வெற்றுத் தரையில் அல்லது சுவரின் மீது சாய்த்து அடுக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், தரை மற்றும் சுவரில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவிப் பாதிப்பை உண்டாக்கும். எனவே, விதை மூட்டைகளை மரக்கட்டைகள் மீது அடுக்கி வைக்க வேண்டும்.

இதுவரையில் கூறியுள்ள உத்திகளைக் கடைப்பிடித்து, உணவு தானிய உற்பத்தியுடன் விதை உற்பத்தியையும் இணைத்துச் செய்தால் அதிக இலாபம் பெறலாம். உதாரணமாக, நிலக்கடலை மற்றும் பயறு வகைகளில் தேவையான அளவில் சான்று விதைகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே, இப்பயிர்களில் விவசாயிகள் விதை உற்பத்தியை மேற்கொள்ளலாம்.

அரசு அல்லது தனியார் மூலம் விதை உற்பத்தி செய்து அவர்களுக்கே விற்று அதிக இலாபம் பெறலாம். சான்று விதை உற்பத்திக்கு, அந்தந்தப் பகுதியில் உள்ள விதைச்சான்று அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, தேவையான தகவல்களைப் பெறலாம்.


விதை உற்பத்தி DR.S.KAVITHA

முனைவர் ச.கவிதா,

விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை,

முனைவர் ஆ.தங்கஹேமாவதி, பயறுவகைத் துறை,

மு.ஆனந்தி, விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading