கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015
உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்படிப் பார்க்கும் போது, 42% அளவுக்குப் பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. இந்தப் பசுந்தீவனங்கள் தான் பால் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறைந்த விளைநிலத்தில் தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம், பசுந்தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம். இதற்குக் கால்நடைகளை வளர்க்கும் சிறிய விவசாயிகள், மகசூலை அதிகமாகக் கொடுக்கக் கூடிய பசுந்தீவன வகைகளைப் பயிரிட வேண்டும். தேசிய அளவில் வெளியிடப்பட்ட கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ.5 என்னும் இரகம் குறைந்த பரப்பில் அதிக மகசூலைத் தரும். இதைப் பயிரிடுவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்கலாம்.
கோ.5 இரகத்தின் சிறப்புகள்
இது அதிகத் தூர்களுடன் வளரக் கூடிய பல்லாண்டுப் பயிராகும். தண்டுகள் மிகவும் மென்மையாகவும் இனிப்பாகவும் சாறு நிறைந்தும் குறைந்த நார்ச்சத்தைக் கொண்டும் இருக்கும். ஒரு தூரில் 25, 30 போத்துகள் வெடித்தாலும் சாயாமல் இருக்கும். இலைகள் அகலமாகவும் மென்மையாகவும் இருக்கும். இலைத்தண்டுகள் அதிகமாக இருக்கும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் வராது.
பசுந்தீவனத்தின் அவசியம்
பசுந்தீவனத்தில் பால் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் ஏ உள்ளது. இது, கால்நடைகளின் கண் பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்களை மேம்படுத்தும். மேலும், கரு உற்பத்திக்கும் உருவான கரு கலைந்து விடாமல் நன்கு வளர்வதற்கும் பசும்புல் உதவும்.
சாகுபடி முறை
ஆண்டு முழுவதும் எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். இரும்புக் கலப்பையால் நிலத்தை நன்கு உழ வேண்டும். பிறகு, 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, 50 செ.மீ. இடைவெளியில் இருபருக் கரணைகளைச் செங்குத்தாக நட வேண்டும். எக்டருக்கு 33,333 கரணைகள் தேவைப்படும். கரணைகளை நட்ட மூன்றாவது நாளில் உயிர் நீரையும் பிறகு, மண்வாகுக்குத் தகுந்தபடியும் நீரைப் பாய்ச்ச வேண்டும்.
நட்டு 20 நாளில் கைக்களை எடுக்க வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்றபடி உரங்களை இட வேண்டும். மண்ணைப் பரிசோதனை செய்யாத நிலையில், எக்டருக்கு அடியுரமாக 25 டன் தொழுவுரம், 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும்.
கரணைகளை நட்ட 30 நாளில் 75 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். நடவு செய்து 75 நாளில் முதல் அறுவடையைத் தொடங்கலாம். பிறகு, 45 நாளில் அடுத்து அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம். ஓர் எக்டரில் ஓராண்டில் செய்யப்படும் ஏழு அறுவடைகள் மூலம், 370-400 டன் புல்லை மகசூலாக எடுக்கலாம்.
எனவே, கறவை மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், குறைந்த பரப்பிலாவது கோ.5 புல்லை சாகுபடி செய்து கால்நடைகளுக்குக் கொடுப்பதன் மூலம், நல்ல முறையில் பாலை உற்பத்தி செய்யலாம். நகரங்களுக்கு அருகில் இருக்கும் விவசாயிகள் இந்தப் புல்லைச் சாகுபடி செய்து விற்பனை செய்யலாம். தண்டுக் கரணைகளையும் விற்று வருவாயை ஈட்டலாம்.
முனைவர் பெ.முருகன்,
பா.குமாரவேல், வேளாண் அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.