கட்டுரை வெளியான இதழ்: 2020 செப்டம்பர்
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல், கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் காணப்படுகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம்.
வாழ்க்கை
முதிர்ந்த பெண் ஈக்கள், மஞ்சள் நிறத்தில் நீள்வட்ட முட்டைகளை, சுழல் வடிவ அமைப்பில், ஓலைகளின் அடியில் இடும். மெழுகுப் பூச்சுடன் இருக்கும் இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் நகரும் தன்மை கொண்ட குஞ்சுகள் ஓலையின் அடியில் இருந்து கொண்டு, அதன் சாற்றை உறிஞ்சி வளரும். 20-30 நாட்களில் நன்கு வளர்ந்த ஈக்களாக மாறி, கூட்டங் கூட்டமாக ஓலைகளின் அடியில் இருக்கும். காற்றின் போக்கில் அடுத்தடுத்த தோப்புகளில் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தாக்குதல் அறிகுறிகள்
குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுவதுடன், தேனைப் போன்ற திரவக் கழிவை வெளியேற்றும். அது விழும் ஓலைகளில் கேப்னோடியம் என்னும் கரும் பூசணம் படரும். இந்த வெள்ளை ஈக்கள், தென்னையைத் தவிர, பாக்கு, வாழை, சப்போட்டா மரங்களையும் தாக்கும்.
கட்டுப்படுத்துதல்
ஏக்கருக்குப் பத்து மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை வைத்து, வளர்ந்த ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். அதாவது, 5 அடி நீளம் 1.5 அடி அகலமுள்ள மஞ்சள் நிற நெகிழித் தாள்களில் ஆமணக்கு எண்ணெய்யைத் தடவி, 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைக்க வேண்டும். ஏக்கருக்கு இரண்டு மஞ்சள் விளக்குப் பொறிகளை அமைத்து, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எரிய விட்டு இந்த ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
ஈக்கள் தாக்கிய ஓலைகளில் தெளிப்பான் மூலம் நீரை வேகமாகப் பீய்ச்சி அடித்து, ஈக்களையும் கரும் பூசணத்தையும் அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் பெருகும் போது, பொறி வண்டுகள் மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகள் போன்றவை தாமாகவே உருவாகி இந்த ஈக்களை அழிப்பதால் சேதம் குறையும். வெள்ளை ஈக்களின் குஞ்சுகளை உண்ணும் கிரைசோபெர்லா இரை விழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் வைக்கலாம்.
இந்த முட்டைகள், திருச்சி மாவட்டத்தில் உள்ள, மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து பெறப்பட்டு, அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. தென்னந்தோப்புகளில் தட்டைப்பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராகவும், மஞ்சள் நிறத்தில் பூக்கும் சாமந்தி, சூரியகாந்தியை வரப்புப் பயிராகவும் வளர்த்து, நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கலாம்.
இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும் என்பதால், இவற்றை முற்றிலும் தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கான சூழலை மேம்படுத்த வேண்டும்.
முனைவர் சி.பத்மப்பிரியா,
வேளாண்மை அலுவலர், திரவ உயிர் உர உற்பத்தி மையம்,
பழனி, திண்டுக்கல் மாவட்டம்.