கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
இந்தியாவில் காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை ரோஜா பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, கார்நாடகம், ஆந்திரம், மராட்டியம், மேற்கு வங்கம், இராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர்ப் பகுதியில் விளையும் பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பசுமைக்குடில், நிழல்வலைக் குடிலில் பயிரிட்டால் அதிக இலாபம் கிடைக்கும்.
குளிருள்ள பகுதிகளில் பசுமைக் குடில்களில் கொய்மலருக்காகவும் ரோஜா பயிரிடப்படுகிறது. பன்னீர் ரோஜா, ஆந்திர ரோஜாக்கள், வணிக நோக்கில் பயிரிடப்படுகின்றன. பண்டைத் தமிழர்கள் வழிபாட்டு மலராக ரோஜாவை மடாலயங்களில் வளர்த்துள்ளனர். ரோஜா மலர்கள், மலர்ச் செண்டுகள், மலர்ச் சரங்கள், மாலைகள் தொடுக்கப் பயன்படுகின்றன. பன்னீர் அத்தர், குல்கந்து, பான்கூழ், குல்-ரோகான் என்னும் நறுமணப் பொருள்களைத் தயாரிக்கவும், மருத்துவத்திலும் பயன்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ரோஜா இதழ்களைச் சர்க்கரையில் பதப்படுத்தி, ரோஜா வினிகர், ரோஜா ஒயின், ஜாம், ஜெல்லி ஆகியன தயாரிக்கப்படுகின்றன. ரோஜாச் செடிகள் அழகு வேலி, மலர் வரப்பு, அழகுக்கொடி, சிறுசெடி எனப் பல வடிவங்களில் வளர்க்கப்படுகின்றன.
இரகங்கள்
தமிழ்நாட்டில் எட்வர்ட் ரோஜா, ஆந்திரச் சிவப்பு வகைகளை வணிக நோக்கில் பயிரிடலாம். மேலும், இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் பூக்கும் வகைகளையும் பயிரிடலாம்.
மண் மற்றும் தட்பவெப்பம்
வடிகால் வசதியுள்ள செம்மண், குறுமண்ணில் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 6-7.5 இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமவெளியில் பயிரிடலாம். ரோஜாச் செடிகளுக்குச் சூரிய ஒளி நிறையத் தேவை. இரவு வெப்பநிலை சுமார் 15 டிகிரி செல்ஸியஸ் வரை இருந்தால் தரமான பூக்கள் கிடைக்கும். நிழலில் வளர்த்தால் சாம்பல் நோய் தாக்கும்.
பயிர்ப் பெருக்கம்
ரோஜா பதியன்கள், தண்டுக் குச்சிகள், மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் முறையில் அதிகளவில் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நிலத் தயாரிப்பும் நடவும்
பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்பே, 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை 2க்கு1 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிட வேண்டும். நடுவதற்கு முன் குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழுவுரம், 100-200 கிராம் மண்புழு உரம் மற்றும் 1.3% லிண்டேன் மருந்து 20 கிராம் இட வேண்டும். லிண்டேன் மருந்தை இட்டால், கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். மழைக்காலத்தில் குழிகளின் மத்தியில் செடிகளை நட வேண்டும்.
உரமிடுதல்
கவாத்து செய்த பின்பு ஜூன் ஜூலையில் உரமிட வேண்டும். செடிக்கு 10 கிலோ தொழுவுரம், தழை, மணி, சாம்பல் சத்துகள் 6:12:12 என்னுமளவில் இட வேண்டும். அதாவது, 13 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் பொட்டாஷை ஒரு செடிக்கு இட வேண்டும். இலைவழி ஊட்டமாக இரண்டு பங்கு யூரியா, ஒரு பங்கு டி.ஏ.பி, ஒரு பங்கு பொட்டாசியம் நைட்ரேட், ஒரு பங்கு பொட்டாசியம் சல்பேட் கொண்ட கலவை உரத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்தால் செடி நன்கு வளர்ந்து மகசூல் கூடும்.
பாசனம்
மண்ணின் தன்மை, காலநிலையைப் பொறுத்துப் பாசனம் அமையும். மணல்சார் நிலத்துக்கு அதிகளவில் நீர் தேவைப்படும். செடிகள் நன்கு வளரும் வரையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும், குளிர் காலத்தில் வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் தேவைப்படும். கோடையில் 5 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் தேவைப்படும்.
நீர்வழி உரமிடல்
துல்லியப் பண்ணை முறையில் சொட்டு நீர்ப்பாசனத்தை முதலில் அமைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அளிக்க வேண்டும். ஒரு முறைக்கு, வளர்ந்த செடிகளுக்கு 8 லிட்டர் நீர் தேவை. ஒவ்வொரு முறையும் 2 மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம் அளிக்க வேண்டும்.
ஊட்ட மேலாண்மை
ஏக்கருக்குத் தழை மணி சாம்பல் சத்து முறையே 71.2 : 71.2 : 142.4 கிலோ வீதம் இட வேண்டும். மேலும் 75% மணிச்சத்தை, அதாவது 53 கிலோவை அடியுரமாக இட வேண்டும்.
கவாத்து
ரோஜா சாகுபடியில் கவாத்து மிகவும் முக்கியமாகும். அக்டோபர், நவம்பரில் கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து வளரும் அனைத்தையும் அகற்றிவிட வேண்டும். முந்தைய ஆண்டில் விரைவாக வளர்ந்திருக்கும் தண்டுகளைப் பாதியளவில் வெட்டிவிட வேண்டும். காய்ந்த, நோயுற்ற, பூச்சிகள் தாக்கிய கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளை அகற்ற வேண்டும். வெட்டிய தண்டுப் பகுதிகளைப் பாதுகாக்க, போர்டோ பசை அல்லது பைட்டலான் பசையுடன், கார்பரில் 50% நனையும் தூளைக் கலந்து தடவிவிட வேண்டும்.
களை
மேல்மண்ணை மட்டும் கிளறிக் களைகளை அகற்ற வேண்டும். இதனால், மண் இறுக்கம் தளர்ந்து காற்றோட்டம் கிடைக்கும்; வேர் நன்றாக மண்ணில் ஊன்றி வளர்வதால் செடிகள் செழிப்பாக இருக்கும். களையெடுக்கும் போது செடியின் அடிப்பாகம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயிர் வளர்ச்சி ஊக்கி
ஜிப்ராலிக் அமிலம் 250 பி.பி.எம். என்னுமளவில் தெளித்தால் கிளைகளின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால், செடிகள் விரைவில் பூப்பதுடன், நீண்ட நாட்களுக்கு மலர்களைக் கொடுக்கும். இதனால் மகசூல் கூடும். மேலும், 3% சைக்கோசிலைத் தெளித்தால், மலர்களின் எண்ணிக்கை கூடும்.
அறுவடை
நட்ட முதல் ஆண்டிலேயே பூக்கத் தொடங்கினாலும், இரண்டாம் ஆண்டில் இருந்து தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். கவாத்து செய்த 45 நாட்களில் பூக்கத் தொடங்கும். நன்கு மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்க வேண்டும்.
மகசூல்
எக்டருக்கு 6-7.5 டன் மலர்கள் கிடைக்கும். அதாவது, ஓராண்டில் ஒரு எக்டரிலிருந்து 10 இலட்சம் மலர்கள் வரை கிடைக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்
சிவப்புச் செதில் பூச்சி: இப்பூச்சி செடிகளில் சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த, பூச்சிகள் தாக்கிய கிளைகளை அகற்றி எரித்துவிட வேண்டும். செதில் பூச்சிகள் கூட்டமாக இருக்கும் தண்டுப் பகுதியை, டீசல் அல்லது ம.எண்ணெய்யில் முக்கிய பஞ்சினால் துடைத்துவிட வேண்டும். கவாத்து செய்யும்போது மற்றும் மார்ச், ஏப்ரலில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி மாலத்தியான் 50 இ.சி. மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது செடி ஒன்றுக்கு கார்போபியூரான் 3% குருணையை வேர்ப்பகுதியில் இட்டு, மண்ணால் மூடி நீரைப் பாய்ச்ச வேண்டும்.
மாவுப்பூச்சி: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மானோகுரோட்டோபாஸ் அல்லது மீதைல் பாரத்தியான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மொட்டுப்புழு: இதைக் கட்டுப்படுத்த, பூக்கும் பருவத்தில் 15 நாட்கள் இடைவெளியில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மானோகுரோட்டோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அசுவினி, இலைப்பேன்: அசுவினிகள் இளந்தளிர்கள் மற்றும் மொட்டுகளில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செடியும் மலர் மொட்டுகளும் வாடி விடும். இலைப்பேன்கள், இலைகள் மற்றும் மொட்டுகளில் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி, சாம்பல் கலந்த வெண்தேமல் ஏற்பட்டு, நாளடைவில் காய்ந்து உதிர்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மீதைல் டெமட்டான் 25 இ.சி. அல்லது பாசலோன் 35 இ.சி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 3% வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம். அல்லது செடி ஒன்றுக்கு 3% கார்போபியூரான் குருணையை 5 கிராம் மண்ணில் இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும்.
நோய்கள்
கரும்புள்ளி நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்: இந்நோய் இலைகளின் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெண்படலம் போலக் காணப்படும். இதனால் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். மலர் மொட்டுகள் வளராமல் நின்று விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு நனையும் கந்தகம் 2 கிராம் அல்லது கார்பென்டாசிம் ஒரு கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
தோட்டக்கலை உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.