மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

மண்வள 1107565

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

னித வாழ்க்கையின் ஆதாரம் வேளாண்மை தான். இதுவே உலகின் முதன்மைத் தொழில். அதனால் தான் மகாகவி பாரதி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என, உழவை முதலில் வைத்துப் பாடினான். 1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றோம். ஆனாலும், அண்மைக் காலங்களில் வேளாண்மை உற்பத்தியில் ஒரு தேக்கநிலை நிலவி வருகிறது. மண்வளம் குன்றி, நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

மண் தோன்றிய காலம் முதல் துகள்களின் மூலக்கூறு ஒருங்கிணைப்பால் ஒன்றன் பின் ஒன்றாக, பரிணாம வளர்ச்சியில் பல உயிர்கள் இந்த மண்ணில் தோன்றியுள்ளன. இவ்வகையில், ஒரு செல் நுண்ணுயிர் முதல் நூற்புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் வரை, அனைவரும் மண்ணின் பிள்ளைகளே.

மண் உயிரோட்டம் நிறைந்தது. துகள்களின் சேர்க்கையாலும் அமைப்பாலும், கரிமப் பொருள்களின் மிகுதியாலும், கனிமங்கள் மற்றும் அயனிகள் இருப்பாலும் மண், பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. நுண்ணுயிரிகளையும், மற்ற மண்வாழ் உயிரினங்களையும், மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளையும் பாதுகாத்தல் அவசியம். இதனால் நமக்கும் எதிர்கால சந்ததியர்க்கும், மற்ற உயிர்களுக்கும் நல்ல அன்னையாய் மண் அன்னை விளங்குவாள்.

மண்ணின் பெருமைகளை இலக்கியங்கள் வியந்து கூறும். வளர்ந்து வரும்  தொழில் நுட்பங்கள், அவற்றைச் சார்ந்த மக்களின் நாகரிக வளர்ச்சியைப் போன்றவையே. விளை நிலங்களில் தொழிற்சாலைகள் நச்சுக் கழிவுகளைப் பாய்ச்சுகின்றன. பயிருக்கு இடப்படும் இரசாயனங்கள், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வருகின்றன.

உலக சுகாதார மையக் கணக்கின்படி, ஆண்டுதோறும் பூச்சிக்கொல்லி மருந்துகள், இரசாயன உரங்கள், பூசணக் கொல்லிகள் ஆகியவற்றின் நச்சால், 20 ஆயிரம் பேர்கள் இறக்கின்றனர். ஏனெனில், மருந்துகளின் நச்சுத்தன்மை நிலத்தில் நீடித்து இருப்பதால், அவை உணவுச் சங்கிலி மூலம் மக்களை அடைந்து பல்வேறு தீமைகளை விளைவிக்கின்றன.

நமது முன்னோர்கள், மண்ணில் வாழும் உயிர்களும் உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார்கள். ஆடு, மாடுகளைக் கொண்டு நிலத்தில் கிடை போட்ட போது மண்ணில் உயிர்கள் சேர்ந்து வளர்ந்தன. சிலர், கால்நடை எருவை நிலத்தில் பரப்பி உழுதார்கள். சிலர் தழையுரம் தரும் செடிகளை வளர்த்து மடக்கி உழுதார்கள்.

சிலர் காடுகளில் வளர்ந்து கிடக்கும் தழைகளை வெட்டிச் சேற்றில் போட்டு மிதித்தார்கள். சிலர் கதிரை மட்டும் அறுத்து விட்டு, வைக்கோலை நிலத்தில் மடிய விட்டார்கள். இவை அனைத்தும் மண்ணில் வாழும் உயிர்களுக்கு உணவாகின.

மண்ணுக்கு மேல் இருப்பதைவிட மண்ணுக்குள் அதிகளவில் உயிரினங்கள் வளர்கின்றன என்பதை அறிந்து தான் இப்போது மண்ணுக்குள் உள்ள நுண்ணுயிரிகள் மற்றுமுள்ள உயிரினங்களைப் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன. மண்ணுக்குள் இருக்கும் உயிரினங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள், பூசணங்கள், பூச்சிகள், எலிகள், கரையான்கள் போன்ற உயிரினங்கள் சேர்ந்து வாழ்கின்றன. ஒரே இனம் மட்டுமின்றி, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் இணைந்து வளர்வதும் உண்டு.

மண் வளமானால், மக்களின் ஆற்றல், வளர்ச்சி, நலத்துக்குத் தேவையான பயிர்களைச் சிறப்பாக விளைய வைக்கலாம். மண்ணின் அவசியம் மற்றும் அதன் பெருமையைக் கடந்து, மண்ணில் வாழும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளைக் காணலாம்.

மண்வளர் உயிரினங்கள் மண்ணில் சிதையும் கரிமப் பொருள்களைச் சிதைத்து, மண்ணுக்கு உரமாகவும், மற்ற உயிரினங்களுக்கு உணவாகவும் தருகின்றன. மண்ணிலுள்ள சிறிய உயிரினங்கள் முதல் பாலூட்டிகள் வரை; மண்ணின் கட்டமைப்பு, நீர்ப்பிடிப்புத் தன்மை, வடிகால், மண்ணின் காற்றோட்டம் ஆகியன சிறப்பாக இருக்க உதவுகின்றன.

மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள், நூற்புழுக்கள், நத்தைகள், பூச்சிகள், இலார்வாக்கள், மண்புழுக்கள், சிலந்தி வகைகள், வண்டுகள் ஆகியன மண்வள மேம்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருசில நுண்ணுயிரிகள் மற்றும் பூச்சிகள், பயிர்களுக்கு நன்மையும் தீமையும் செய்யும் வகையில் உள்ளன.

மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரினங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சதுரடி மண்ணில் 1,000,000,000 உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றை, இவற்றின் அளவைப் பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

அவையாவன: 1. புரோடிஸ்ட் பாக்டீரியா, ஆக்டினோமைசிட்டஸ், பூஞ்சான், ஆல்கா, வைரஸ். 2. நுண்ணோக்கியில் காணத்தக்க, <100 மைக்ரான் நீளமுள்ள விலங்கினங்கள், புரோட்டோசோக்கள், நூற்புழுக்கள் ஆகியன. 3. மைக்ரோபானாவை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும் மீசோபான். இது நுண்ணுயிரிகளை உண்ணும். மேக்ரோபானாக்கள் என்னும் புழுக்கள், அட்டைப் பூச்சிகள், பூரான்கள், நத்தைகள். 5. மெஹாபினா என்னும் மண்புழுக்கள்.

விளைச்சலைப் பெருக்க, இராசயன உரங்களை மனம் போல இடுவதால், மண்ணும் நிலத்தடி நீரும் மாசடைகின்றன. இதனால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் அழிவதுடன், மண்வளமும் பாதிக்கப்படுகிறது. எனவே, மண்வளத்தை மேம்படுத்த, இயற்கைக் கட்டமைப்பில் இருந்து வரும் உயிரினங்களுக்கு இடையில், இணக்கமான நிலையை உருவாக்கித் தருதல், சுழற்சி முறையில் மண்வாழ் உயிரிகளின் இயக்கத்தை அதிகமாக்கல் ஆகியன அவசியமாகும்.

எனவே, மண்வளத்தை மேம்படுத்த, தொழுவுரம், தழையுரம் உள்ளிட்ட இயற்கை உரங்கள், பயிர்க் கழிவுகள், மண்புழு உரம், ஊட்டமேற்றிய தொழுவுரம், உயிர் உரங்கள் ஆகியன மண்வள மேலாண்மையில்  பயன்படுகின்றன.


மண்வள POORNIAMMAL 2

முனைவர் இரா.பூர்ணியம்மாள்,

சோ.பிரபு, த.ஜானகி, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி-625604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading