கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கோமாரி heading pic 1

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019

கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. கோமாரி நோயால் வாயிலும் கால்களிலும் புண்கள் ஏற்படுவதால், இந்நோய் கால் நோய், வாய் நோய் எனப்படுகிறது. இந்நோய்க்கு, கால்கட்டு வாய்க்கட்டு நோய், கால்சப்பை வாய்ச்சப்பை நோய், காணை நோய், மாரியாய், குன்னு, கால்காணை வாய்க்காணை எனப் பல பெயர்கள் உண்டு. 1897ஆம் ஆண்டு பிரைட்ரிக் லோபர் என்னும் விஞ்ஞானி, கோமாரி நோய் நச்சுயிரியால் ஏற்படுவதைக் கண்டுபிடித்தார்.

கால்நோய் வாய்நோய், பிக்கார்னோ என்னும் நச்சுயிரியால் ஏற்படுகிறது. இதுதான் நச்சுயிரிகளிலேயே மிகமிகச் சிறியது. இந்த நச்சுயிரிகளில் A, O, C. Asia1, SAT1, SAT2, SAT3 என 7 பெரும் பிரிவுகள், 60க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. மேலும், ஒவ்வொரு உட்பிரிவிலும் அதன் வீரியத்தன்மை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதனால், எவ்வகை நச்சுயிரி நோயை உண்டாக்குகிறது என்பதைக் காண்பது சிரமமாக இருப்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதும் சிரமமாக உள்ளது. எலீசா சோதனை மூலம் இந்த நச்சுயிரியை அடையாளம் காணலாம். தற்போது தமிழ்நாட்டில் 0 பிரிவு நச்சுயிரியால் நோய் ஏற்பட்டுள்ளது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

நோய் பரவும் முறை

கால்சப்பை வாய்ச்சப்பை நோய், இதனால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூலம் நேரடியாகவே மற்ற கால்நடைகளுக்குப் பரவுகிறது. காற்று, நீர், தீவனம், மனிதர்கள், பால், சாணம், சிறுநீர், உமிழ்நீர் போன்றவற்றின் மூலமும் பரவுகிறது. குளிர்கால இரவில் ஈரப்பதம் மிகுந்திருப்பதால் இந்நோய் வெகுவாக 300 கி.மீ. தூரம் வரை பரவுகிறது. ஒருமுறை பாதிக்கப்பட்ட மாடு இந்த நோயைப் பரப்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், செம்மறியாடுகள் நோய்த் தாங்கிகளாக இருப்பதாலும், பன்றிகள் அதிகளவில் நச்சுயிரிகளை உற்பத்தி செய்வதாலும் கோமாரி பரவுகிறது. மழை மற்றும் குளிர் காலத்தில் தான் கால்நடைகளைக் காணை நோய் கூடுதலாகத் தாக்குகிறது.

நோய் அறிகுறிகள்

கால்காணை வாய்க்காணை நோயின் அடைக்காலம் 2-10 நாட்கள். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் முதலில் 104-106 டிகிரி பாரன்ஹீட் அளவில் ஏற்படும் காய்ச்சல் இரண்டு நாட்கள் நீடிக்கும். மூன்றாம் நாள் வாயில் கொப்புளங்கள் ஏற்பட்டதும் காய்ச்சல் குறைந்து விடும். வாயில் கொப்புளங்கள் உண்டாகி, உண்ண முடியாமல் மாடு சோர்வுடன் இருப்பதால், பாலுற்பத்திக் குறைந்து விடும். அதிகப் புண்ணாகும் நாக்கின் மேற்பகுதி வழித்து எடுக்கப்பட்டது போல் இருக்கும். வாயிலிருந்து நுரையுடன் வழவழப்பான எச்சில் வடிந்து கொண்டிருக்கும். வலியால் வாயைத் திறந்து மூடும்; வாயைக் கடித்தபடி கொட்டாவி விடுவதைப் போலச் செய்யும். சில சமயம் கத்துவதுடன் நாக்கை வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

சில நேரம் மடியிலும், காம்புகளிலும் கொப்புளங்கள் ஏற்படுவதால் பாலைக் கறக்க விடாது. கால் குளம்புகளுக்கு இடையிலும் கொப்புளங்கள் ஏற்படுவதால் நடக்க முடியாமல் நொண்டும். இதற்குச் சிகிச்சையளிக்கா விட்டால், மேகட்ஸ் என்னும் வெள்ளைப் புழுக்கள் உருவாகி, இரத்தம் கசியும். இதனால் ஏற்படும் வலியால் ஏற்பட்டு கால்களை அடிக்கடி உதறும். குளம்பின் மேல் பகுதியிலும் புண்கள் ஏற்படும். நோய் தீவிரமானால் கொம்புகளின் அடியிலும் கொப்புளங்கள் ஏற்பட்டு உடைந்து புண்ணாகி விடும். சில சமயம் மூக்குத் துளைகளும் புண்ணாகிப் புழுக்கள் உண்டாகி இரத்தம் கசியும். இந்த புழுக்கள் தேனடையைப் போலத் தெரியும். மடியில் ஏற்பட்ட கொப்புளங்கள் புண்ணாகி, மடிநோய், காம்புகளில் அடைப்பு, மடியில் ஆப்சஸ் கட்டி ஏற்படவும் வாய்ப்புண்டு.

கோமாரியால் ஏற்படும் விளைவுகள்

கோமாரி தாக்கிய கறவை மாட்டில் பாலைக் குடிக்கும் கன்றுக்குட்டி, இரண்டு மணி நேரத்தில் இதயம் பாதிக்கப்பட்டு இறந்து விடும். ஆனால், கோமாரி தாக்கிய மாட்டில் கறந்த பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கன்றுக்குக் கொடுக்கலாம். சினை மாடாக இருந்தால் குறைப்பிரசவம் ஏற்படும். மேலும், மலட்டுத் தன்மையும் ஏற்படும். 10 லிட்டர் பாலைக் கறந்த மாடு 2-3 லிட்டர் பாலை மட்டுமே கறக்கும். மாடு வலுவிழந்து பொலிவிழந்து காணப்படும். உடல் முடிகள் எண்ணெய்ப்பசை குறைந்து, பறட்டையாய்ச் சுருண்டும் காய்ந்தும் இருக்கும்.

கோமாரியால் பாதித்த மாடுகளை வெய்யிலில் கட்டினால் மூச்சிரைப்புடன், வாயிலிருந்து நுரையைத் தள்ளிக் கொண்டிருக்கும். இரயில் இன்ஜினைப் போல் முன்னும் பின்னும் மார்பு அசைந்து கொண்டிருக்கும். உண்ண முடியாமல் இரத்தச்சோகை ஏற்பட்டு, உடல் எடையும், உற்பத்தித் திறனும் குறைந்து விடும்.

எருதுகளில் சில சமயம் குளம்புகள் கழன்று விழுந்து விடும். இதனால், அவற்றால் எந்த வேலையையும் செய்ய முடியாது. மேலும், மூட்டுவலி, நரம்புத் தளர்ச்சியால், வலிவையும் பொலிவையும் இழந்து விடும். எனவே, வேலைத்திறன் குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் இரத்தச் சோகையால் எடை குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படும். உண்ண முடியாமல் போதல், பட்டினி கிடத்தல், மற்ற நோய்க் காரணங்கள் போன்றவற்றால் மாடுகள் இறந்து விடும். நமது நாட்டின மாடுகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகம். எனவே, இவை கோமாரியால் பாதிக்கப்பட்டாலும் இறந்து போவதில்லை.

மடிவீக்க நோயால் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கோமாரியால் நம் நாட்டின் அந்நியச் செலாவணியில் 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதைப்போல உள்நாட்டு உற்பத்தித் திறனில் 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கால்நடைகள் இறப்பது, பாலுற்பத்திக் குறைதல், மலட்டுத் தன்மை மற்றும் இனப்பெருக்கத்தில் காலதாமதம் போன்றவற்றால், 3,000 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்படுகின்றன.

தடுப்பு முறைகள்

நோயுற்ற மாட்டை முதலில் தனியாகப் பிரித்து வைத்துச் சிகிச்சையளிக்க வேண்டும். கறவை மாட்டில் கன்றைப் பால் குடிக்க விடக்கூடாது. நோய்க் கிளர்ச்சிப் பகுதியில் மாடுகளை, தீவனங்களை, பாலை வாங்கக் கூடாது. மேலும், இடம் பெயர்வதையும் தடுக்க வேண்டும். நல்ல மாடுகளை முதலில் கவனித்து விட்டு, அடுத்து நோயுற்ற மாடுகளைக் கவனிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளைப் பராமரிப்போரின் துணிகள், கறவைப் பாத்திரங்கள் ஆகியவற்றை 4% சோடியம் கார்பனேட் கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும்.

கொட்டகையை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுண்ணாம்புத் தூளைக் கொட்டிலைச் சுற்றித் தூவிவிட வேண்டும். தொழுவத்தில் 2% சோடியம் ஹைட்ராக்ஸைடு அல்லது 4% சோடியம் கார்பனேட்டைத் தெளிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளுக்குக் கொடுத்த வைக்கோல் மற்றும் மீதமுள்ள தீவனத்தை நல்ல மாடுகளுக்குக் கொடுக்கக் கூடாது. எருக்குழியிலும் போடக் கூடாது. அவற்றைத் தனியிடத்தில் வைத்து எரித்து விட வேண்டும்.

மாட்டுச் சந்தைகளை, கால்நடைக் கண்காட்சிகளைத் தடை செய்ய வேண்டும். மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது. நோயுற்ற மாடுகளை, ஏரி, குளம், கால்வாய் போன்ற பொது இடங்களில் நீர் காட்டுதல், குளிப்பாட்டுதல் கூடாது. புதிதாக வாங்கிய மாடுகளை உடனே பண்ணையில் சேர்க்கக் கூடாது. ஒரு மாதம் வரையில் தனியாகவே வைத்திருந்து, தடுப்பூசியைப் போட்ட பின்பு பண்ணையில் சேர்க்க வேண்டும். நோயுள்ள பகுதியில் மற்ற கால்நடைகள், வண்டிகள் மற்றும் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது. கோமாரி தாக்கிய மாடுகளை அழித்து விடுவதே சிறந்தது. ஆனால், நம் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சமூகப் பண்பாட்டுக் காரணங்களால் இம்முறையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. எனவே, தடுப்பூசியைப் போடுவது தான் சிறந்த வழி.

தடுப்பூசி போடும் காலம்

கன்று பிறந்து 8 வாரத்தில் முதல் தடுப்பூசி, 12 வாரத்தில் ஊக்குவிப்புத் தடுப்பூசி, 16 வாரத்தில் மூன்றாம் தடுப்பூசியைப் போட வேண்டும். இந்தத் தடுப்பூசியின் நோயெதிர்ப்புத் திறன் நான்கு மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தடுப்பூசியைப் போட வேண்டும். செம்மறியாடுகள் கோமாரி நோய்த் தாங்கிகளாக இருப்பதாலும், பன்றிகள் அதிகளவில் இந்நோயின் நச்சுயிரிகளை உற்பத்தி செய்வதாலும், இந்நோய் பரவ வாய்ப்புள்ளதால், இவற்றுக்கும் தடுப்பூசியைப் போட வேண்டும்.

அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், சினை மாடுகளுக்குத் தடுப்பூசியைப் போடக்கூடாது என்னும் மூட நம்பிக்கையில் மக்கள் இருப்பது வேதனையாக உள்ளது. பெண்கள் கருவுற்ற இரண்டாவது மாதத்தில் இருந்து குழந்தை பெறும் வரையில் தொடர்ந்து தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, சினை மாடுகளுக்கு 8 மாதம் வரையில் தடுப்பூசியை அவசியம் போட வேண்டும். இதனால் கன்றுகளுக்கும் நோயெதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

சில மாடுகள் முரட்டுத்தனமாக நடந்து, மரத்திலோ சுவரிலோ மோதிக் கொள்வதால் தான் குறைப்பிரசவம் ஏற்படுகிறதே தவிர, தடுப்பூசியைப் போட்டதால் அல்ல. தடுப்பூசியைப் போடவில்லை என்றால், குறைப்பிரசவம், மலட்டுத் தன்மை, கருத்தரிப்புத் தாமதம் போன்றவை உண்டாகிப் பொருளாதார இழப்பு ஏற்படும். மழை மற்றும் குளிர் காலத்தில், அதாவது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை கோமாரி நோய் ஏற்படுவதால், இதற்கு ஓரிரு மாதங்கள் முன்பே கால்நடைகளுக்குத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். நோயுள்ள பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிலுள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் தடுப்பூசியைப் போட வேண்டும்.

கோமாரி maxresdefault

சிகிச்சை முறை

நோயுற்ற மாடுகளைத் தனியாகப் பிரித்துச் சிகிச்சையளிக்க வேண்டும். வாய், உதடு, நாக்கு மற்றும் ஈறுகளில் உள்ள புண்களை ஒரு சத பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலால் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின்பு போரிக் பொடியையும், கிளிசரினையும் கலந்து அந்தப் புண்களில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 தடவை செய்ய வேண்டும். காலிலுள்ள புண்களையும் ஒரு சத பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் அல்லது இரண்டு சத காப்பர் சல்பேட் கரைசலால் சுத்தம் செய்த பின்பு, போரிக் பொடியை வேப்பெண்ணெய்யில் கலந்து புண்களில் தடவ வேண்டும்.

காலிலும் மூக்கிலுமுள்ள புண்களில் சில சமயம் புழுக்கள் உருவாகி இரத்தம் கசியும். இதற்குப் பெரும்பாலான மக்கள் பினாயிலை ஊற்றுவார்கள். சிலர் மண்ணெண்ணெய்யை ஊற்றுவார்கள். சிலர் நல்லெண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றுவார்கள். இதனால் எந்தப் புழுவும் சாகாது என்பதுடன், மேலும் இரத்தம் அதிகமாகத் தான் கசியும். எனவே, இவையெல்லாம் தவறான முறைகளாகும்.

டர்பென்டைன் மருந்தில் பஞ்சை நனைத்துப் புண்களில் வைத்தால் 3 மணி நேரத்தில் புழுக்கள் அனைத்தும் இறந்து இரத்தம் கசிவதும் நின்று விடும். பின்பு இறந்த புழுக்களை வெளியில் எடுத்து விட்டு போரிக் பொடியை வேப்பெண்ணெய்யில் கலந்து தடவ வேண்டும். அல்லது அந்துருண்டை அல்லது கட்டிக் கற்பூரத்தைப் பொடியாக்கி வைத்தாலும் புழுக்கள் இறந்து விடும். பின்பு புண்ணைச் சுத்தம் செய்து, லோரெக்சேன் அல்லது  ஹைமெக்ஸ் களிம்பை, புண்கள் ஆறும் வரையில் தினமும் 3 முறை தடவ வேண்டும்.

மடியில் உள்ள புண்களுக்கு போரிக் களிம்பு அல்லது போரிக் பொடியுடன் மஞ்சளைக் கலந்து வெண்ணெய்யில் குழைத்துத் தடவலாம். சில இடங்களில் பன்றி நெய்யைக் கால் மற்றும் வாய்ப்புண்களில் தடவுவார்கள். சிலர் மொந்தன் வாழைப்பழத்தை விளக்கெண்ணெய்யில் தோய்த்து உண்ணக் கொடுப்பார்கள். இது சிகிச்சை முறையல்ல என்றாலும், இதனால் நோயின் பாதிப்பு ஓரளவு குறையும்.

காணையால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு அரிசிக்கஞ்சி, கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழுடன் குளுக்கோஸ் பொடியையும் கலந்து ஒரு நாளைக்கு 3-4 முறை கொடுக்கலாம். நோய் பாதிப்பால் இரத்தச் சோகை ஏற்படுவதால், டெக்ஸ்ட்ரோஸ் போன்ற திரவ மருந்துகளை நரம்பு ஊசி மூலம் கொடுக்க வேண்டும். மேலும், வலி நிவாரணியாக அனால்ஜின் மற்றும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை, ஊசி மூலமாகவும், மாத்திரைகளாகவும் கொடுக்க வேண்டும். STE NOT என்னும் ஆயுர்வேத மாத்திரைகளைக் காலையில் இரண்டும் மாலையில் இரண்டுமாக ஒருவாரம் கொடுக்க வேண்டும். இதைப் போலவே TRT Bolus என்னும் மாத்திரகளையும் ஒருவாரம் கொடுக்க வேண்டும்.

மூலிகை மருத்துவச் சிசிச்சை

50 கிராம் சீரகம், 30 கிராம் வெந்தயம், 10 கிராம் மஞ்சள் பொடி ஆகியவற்றை அரைக்க வேண்டும். இத்துடன் ஒரு தேங்காயைத் துருவி 20 கிராம் பனை வெல்லத்தையும் சேர்த்துக் கலந்து காலை, மாலையில் 5-6 நாட்களுக்கு வாய்வழியே கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு.

கால் புண்ணை ஆற்ற, முதலில், உப்பு மஞ்சள் கலந்த நீரில் கால்களைக் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பிறகு, குப்பைமேனி 100 கிராம், பூண்டு 10 பல், மஞ்சள் 100 கிராம் ஆகியவற்றை இடித்து, 250 மில்லி இலுப்பை எண்ணெய்யைச் சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்து, ஒரு நாளைக்கு 2-3 தடவை இந்தப் புண்ணில் தடவ வேண்டும்.

கால்நடைகளைக் கோமாரி நோயிலிருந்து காப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே. இதை முறையாகச் செய்தால் கால்நடைப் பண்ணைப் பொருளாதாரம் உயரும்.


கோமாரி Dr.Jegath Narayanan e1612953778555

மரு..ஆர்.ஜெகத் நாராயணன்,

முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, சேலம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading