நீர்வளம், நிலவளம் நிறைந்துள்ள விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், இம்மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விவசாயக் கண்காட்சி சீரும் சிறப்புமாக அமைந்திருந்தது.
விவசாயக் கண்காட்சி என்பது இப்பகுதி மக்களுக்குப் புதிது என்பதால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஆவின், இராஜபாளையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகிய அரசு நிறுவனங்கள் உள்பட, ஏராளமான தனியார் நிறுவனங்கள், இந்தக் கண்காட்சியில் அரங்குகளை அமைத்து இருந்தன.
உயரமான மரங்களில் எளிதாகத் தேங்காய், மாங்காய்களைப் பறிக்கும் வகையில், வேளாண் பொறியியல் துறை கொண்டு வந்து நிறுத்தியிருந்த எந்திரமும், வானத்தில் பறந்து மருந்தைத் தெளிக்கும் வகையில் தனியார் நிறுவனம் காட்சிக்கு வைத்தும், இயக்கியும் காட்டப்பட்ட கருவியும், சூரிய மின்சாரத்தில் நீரை இறைத்துக் கொண்டிருந்த சோலார் பம்ப்பும் விவசாயிகள் வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருந்தன.
மகிந்திரா, ஐசர், நியு ஹாலந்து, டாஃபே, மாசே பெர்குஷன், வி.எஸ்.டி. போன்ற நிறுவனங்களின் குட்டி டிராக்டர்களும், பெரிய டிராக்டர்களும், வண்ண வண்ணமாக நின்றிருந்ததும்; வைக்கோல் கட்டும் கருவி, தட்டை வெட்டும் கருவி, களை வெட்டும் கருவி, உளிக்கலப்பை, மருந்துத் தெளிப்பான்கள் விதைப்புக் கருவிகள் என, சிறியது முதல் பெரியது வரையிலான கருவிகள் வைக்கப்பட்டிருந்ததும்; பார்வையாளர்களைப் பிரமிக்க வைப்பதாக இருந்தன.
காய்கறி விதைகள், தீவன விதைகள், பஞ்சகவ்யா, நுண்ணுரங்கள், இயற்கை உரங்கள் நிறைந்த அரங்குகள், சித்த வைத்திய அரங்குகள், வீட்டுத் தேவைப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் என, பச்சை பூமி நடத்திய விவசாயக் கண்காட்சி, விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பயனடையும் வகையிலான கண்காட்சியாக அமைந்திருந்தது.
மேலும், தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டதும்; இராஜபாளையம் ஆரா மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாம் மூலம் இரத்தக் கொதிப்புப் பரிசோதனை, இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை போன்ற அடிப்படைச் சோதனைகள் செய்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டதும்; பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்தது.
பச்சை பூமி