கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018
பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதில் நாட்டு மாடுகளின் பங்கு மகத்தானது. குறைந்த தீவனத்தைச் சாப்பிட்டு உழவுக்கு உதவுவதோடு, பாலையும் கொடுக்கும். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூடத் தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது.
காங்கேயம், உம்பளாச்சேரி, புலிக்குளம், மணப்பாறை, பர்கூர் என, தமிழ்நாட்டுக்கு என, பாரம்பரிய மாடுகள் இருப்பதைப் போல, ஆந்திரத்தில் புங்கனூர், ஓங்கோல் ஆகிய இடங்களில் உள்ள மாடுகளைச் சொல்லலாம். அதிலும் புங்கனூர் குட்டை மாடுகள் குறைந்து வருகின்றன. உலகிலேயே மிகவும் குள்ளமான மாட்டினம் இதுதான். இந்த மாடுகள், தமிழக ஆந்திர மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் பரவலாக உள்ளன.
இந்தியாவில் 32 வகை மாடுகள் உள்ளன. இவற்றில் நான்கு இனங்கள் குட்டை வகைகளாகும். கேரளத்தில் உள்ள வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகளைப் போலவே, புங்கனூர் மாடுகளும் குள்ளமானவை. இந்த மாட்டின் உயரம் 70-90 சென்டி மீட்டர். எடை 110-120 கிலோ இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 5 கிலோ தீவனம் போதும்.
வெள்ளை, பழுப்பு, கறுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களில் இருக்கும். பாலில் கொழுப்பு குறைவு. புரோட்டீன் நிறைய உள்ளது. தினமும் இரண்டு, மூன்று வேளை தேனீர், காபி, பால் குடிப்பவர்களுக்கு இந்த மாட்டின் பால் மிகவும் சிறந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த மாடுகள் பரவலாக இருந்தன. நாட்டு மாடுகளின் சிறப்பு நிறையப் பேருக்குத் தெரியாததால் இந்த மாடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.
புங்கனூர்க் காளைகளை உழவுக்கும் பயன்படுத்தலாம். இப்போது விவசாயம் எந்திரமயமாகி வருவதால் இந்தக் காளைமாடுகள் குறைந்து விட்டன. பாலுக்காக வளர்க்கப்படும் இந்தப் பசுக்களுக்குப் பச்சைப்புல், சோளத்தட்டை, வைக்கோல், தவிடு கலந்த நீரை மட்டுமே கொடுத்தாலும் நன்றாகப் பால் கறக்கும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று லிட்டர் பால் கிடைக்கும். மேலும், சினைப்பிடிப்பில் பிரச்சனை இல்லை. முட்டும் பழக்கம் இல்லாத புங்கனூர் மாடுகளை, மாற்றுத் திறனாளிகள், பெண்கள், முதியோர் என யாரும் வளர்க்கலாம். இதன் சாணத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்திச் செலவைக் குறைக்கலாம்.
சித்தூர் மாவட்டம், பலமனேர் கால்நடைப் பண்ணையில் புங்கனூர்க் காளைகள், பசுக்கள் உள்ளன. அதற்கான செயற்கைக் கருவூட்டல் ஊசியும் அங்குக் கிடைக்கும். ஆனால், நாட்டு மாடுகள் குறைந்தளவே பால் கறக்கும் என்னும் எண்ணத்தில் அவற்றை யாரும் விரும்பி வளர்ப்பதில்லை. கலப்பினப் பசுக்கள் நிறையப் பாலைக் கொடுத்தாலும், அவை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும். எனவே, மருத்துவச் செலவும் நிறைய ஆகும்.
இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட மாட்டினங்களும், நாப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டினங்களும் உள்ளன. அந்தந்தப் பகுதியில் நிலவும் கால நிலைக்கு ஏற்ப, கால்நடைகளின் குணங்களும் இருக்கும். தமிழ்நாட்டு இனங்களான காங்கேயம், புலிகுளம், உம்பளாச்சேரி, பர்கூர் மாடுகளுக்கான கருவூட்டல் ஊசிகளும் அந்தந்தப் பகுதி அரசு கால்நடை மருத்துவ மனைகளில் கிடைக்கின்றன.
ஒவ்வொரு பகுதிக்கும் பொருந்தும் இனங்களை வளர்த்தால், நோய்கள், மலட்டுத்தன்மை, கன்று ஈனுதலில் சிக்கல் போன்றவை உண்டாக வாய்ப்பில்லை. இவ்வகையில் நமது மாடுகள் அழிந்து போகாமல் இருக்க, வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு என வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமது மரபுவழி விவசாயமான இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கலாம்.
முனைவர் ஜி.கலைச்செல்வி,
முனைவர் க. விஜயராணி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை-07.