கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
துல்லிய பண்ணையம் என்பது நவீனத் தொழில் நுட்பங்கள் மற்றும் உரிய நேரத்தில் பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைச் சரியான முறையில் கொடுத்து அதிக மகசூல் பெறுவதாகும்.
முக்கியச் செய்முறைகள்
சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல். நிழல்வலை நாற்றங்கால் அமைத்தல். இடுபொருள்களை வாங்குதல். சந்தை நிலவரப்படி உரிய நேரத்தில் சாகுபடி செய்தல்.
முக்கியத் தொழில் நுட்பங்கள்
உளிக்கலப்பை உழவு: உளிக்கலப்பை கொண்டு உழுவதால் 45-60 செ.மீ. ஆழம் வரையில் மண்ணில் நல்ல காற்றோட்டமும் வடிகால் வசதியும் ஏற்பட்டு, வேர்கள் நன்கு படர்ந்து வளரும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு உழவு செய்யலாம்.
நிழல்வலை நாற்றங்காலும், குழித்தட்டு நாற்றுகளும்: சமுதாய நாற்றங்கால்களில் 50% நிழல்வலைக் கூடத்தை அமைத்தும், அதன் பக்கவாட்டில் பூச்சிகள் புகாவண்ணம் துணித்திரைகளை அமைத்தும், அதற்குள் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பாலித்தீன் குழித்தட்டுகளில் மட்கிய நார்க்கழிவு மற்றும் சூடோமோனாஸ் புளுரசன்சை 1000 கிலோ : 1 கிலோ வீதம் கலந்து, ஒவ்வொரு குழியிலும் நிரப்பி குழிக்கு ஒரு விதையை விதைக்க வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் கரையும் உரப்பாசனம்: சொட்டுநீர்ப் பாசனமானது, நீரைச் சிக்கனமாக, அதாவது 40 சதம் வரையில் குறைத்து அளிப்பதுடன், 60-80 சதம் மண்ணை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. கரையும் உரப்பாசனம் மூலம் உரங்களைச் செடிகளின் வளர்ச்சிப் பருவத்துக்கு ஏற்ப, தேவையான அளவை, தேவையான நேரத்தில் அளிப்பதால் செடிகள் வளமாகவும், வலிமையாகவும் வளரும்.
பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு: வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பரிந்துரைப்படி, பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
துல்லியப் பண்ணையத்துக்கு ஏற்ற பயிர்கள்
கத்தரி, தக்காளி, வெண்டை, சீமை வெள்ளரி, புடலை, பீர்க்கு, முள்ளங்கி, குடைமிளகாய், செடிமுருங்கை, வாழை, கரும்பு, சூரியகாந்தி மற்றும் பீன்ஸ்.
துல்லியப் பண்ணையத்தின் நன்மைகள்
மகசூல் இரட்டிப்பாகும். விளைபொருள்கள் தரமாக இருக்கும். சந்தையில் நல்ல விலை கிடைக்கும். இடுபொருள்களின் செலவு குறையும். 30-40 சதம் நீர் மிச்சமாகும். வேலையாட்களின் தேவை குறையும். விவசாயிகளின் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சமுதாய வலிமை மேம்படும். மேலும் விவரங்களுக்கு: 9786379600.
முனைவர் பு.அழகுக்கண்ணன்,
இராஜா ஜோஸ்லின், இராஜ்கலா, திருமலைவாசன், அசோக் குமார், சோபனா,
வேளாண்மை அறிவியல் நிலையம், சோழமாதேவி, அரியலூர்-612902.