கட்டுரை வெளியான இதழ்: மே 2022
இந்திய விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்வதற்காக, விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களான கலப்பின அபிவிருத்தி மற்றும் சுகாதார மேலாண்மை ஆகியன, கால்நடை உற்பத்தியைப் பெருக்கப் பெரியளவில் உதவியாக உள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, சீனம் போன்ற பொருளாதார வளர்ச்சி மிக்க நாடுகள், கால்நடை வளர்ப்புத் தொழிலில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன. நமது விவசாயிகளும் கால்நடை வளர்ப்பு மூலம் அதிக இலாபம் ஈட்டலாம். படித்து விட்டு வேலை வாய்ப்புக் கிடைக்காமல் கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள், தங்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்பாகக் கால்நடை வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, வெண்பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு, தரமான இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருள்களை உற்பத்தி செய்து உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டலாம்.
நமது நாட்டில் நெடுங்காலமாகப் பன்றிகள் தெருக்களில் தான் சுற்றித் திரிந்து, கழிவுகள் மற்றும் சுகாதாரமற்ற பொருள்களை உண்டு வளர்ந்தன. முறையான பண்ணை முறையில் வளர்க்கப்படவில்லை. ஆனால், இப்போது இந்த நிலை மாறியுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பன்றிகள் மற்றும் வெளிநாட்டுப் பன்றிகள் வணிக நோக்கில், தொழில் நோக்கில், அறிவியல் முறையில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
வெண்பன்றி இறைச்சியின் தேவை நம் நாட்டில் அதிகரித்து வருவதால், வெண்பன்றிப் பண்ணைகள் பெருகி வருகின்றன. கோழிப்பண்ணைத் தொழிலைப் போல, வெண்பன்றி வளர்ப்பானது சீரிய தொழிலாக உருவாகி வருகிறது. தொழில் முனைவோர், பட்டதாரி இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள விவசாயிகள், வெண்பன்றி வளர்ப்பைச் செய்வதன் மூலம், வெண்பன்றி வளர்ப்பு விவசாயிகள் என்னும் நிலையில் இருந்து வெண்பன்றித் தொழில் முனைவோர் என்னும் நிலைக்கு உயர்ந்து வருகின்றனர்.
வெண்பன்றி வளர்ப்பின் நன்மைகள்
வெண்பன்றிகளை அனைத்துச் சூழல்களிலும் வளர்க்கலாம். இவை வெகு விரைவாக வளர்பவை. தினமும் 350-600 கிராம் வீதம் எடை கூடிக்கொண்டே இருக்கும். பண்ணைக் கழிவுகள், சமையற்கூடக் கழிவுகள் மற்றும் மிஞ்சிய உணவை உண்டு, சத்தான இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கவை.
வெண்பன்றிகள் ஆண்டுக்கு இருமுறை குட்டிகளை ஈனும். ஒவ்வொரு ஈற்றிலும் 6-12 குட்டிகளை ஈனும். வெண்பன்றி வளர்ப்புக்குக் குறைந்த செலவிலான கொட்டிலும், கருவிகளும் இருந்தால் போதும். வெண்பன்றிகள் 13 மாதங்களில் இனவிருத்திக்கு வந்து விடும். எனவே, வெண்பன்றி மூலம், குறுகிய காலத்திலேயே வருமானம் கிடைக்கும்.
வெண்பன்றி இறைச்சியில் புரதமும், எரிசக்தியும் அதிகமாக உள்ளன. மேலும், இறைச்சி மட்டுமின்றி தோல், எலும்பு, உரோமம், கொழுப்பு மற்றும் உள்ளுறுப்புகளில் இருந்து பல்வேறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உயிருள்ள ஒரு பன்றியின் எடையில் 60-70 சதம் இறைச்சி இருக்கும். ஆனால், ஆடு, மாடுகளில் 45-55 சதம் தான் இறைச்சி இருக்கும். வெண்பன்றிப் பண்ணையை அமைப்பதன் மூலம், விவசாயிகள் நிரந்தர வருவாயை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
முனைவர் பா.குமாரவேல்,
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.