பேரையம்பட்டி தொந்திராஜின் அனுபவம்
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014
தொழில்களில் முதன்மையானது உழவுத் தொழில். ஆனால், இதில் மற்றெல்லாத் தொழில்களையும் விட நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் இசைந்து வந்தால் மட்டுமே விவசாயத்தில் சாதிக்க முடியும். ஒரு பயிரில் சிறந்த மகசூலை எடுக்கக் காலநிலை சரியாக அமைய வேண்டும். உழவடைச் செலவுக்குப் போதுமான பொருளாதார வசதி இருக்க வேண்டும். வேலைகளைச் செய்வதற்குத் தேவையான ஆட்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். பாசன நீர் தட்டுப்பாடின்றிக் கிடைக்க வேண்டும்.
இத்தனை சிக்கல்களைச் சமாளித்து அதிக விளைச்சலைக் கண்டு விட்டால் மட்டும் போதாது; கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில், எதிர்பார்க்கும் விளைச்சல் இல்லாமல் போய் விடுகிறது, அல்லது அதிகமாக விளைந்து விட்டால் விலையில்லாமல் போய் விடுகிறது. எனவே, இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டுமானால், அதிகமாகச் செலவுகளைத் தராத பயிர்களை, பல்லாண்டுப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தல் அவசியம்.
நோய்களும் பூச்சித் தொல்லைகளும் அதிகமில்லாத பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். இந்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் வந்தால் தான் அவர்கள் ஏழ்மை நிலையிலிருந்து மீள முடியும்; பொருளாதாரச் செழிப்புடன் வாழ முடியும்.
அப்படியொரு விழிப்புணர்வைப் பெற்று, தனது தோட்டத்தில் பப்பாளியைச் சாகுபடி செய்திருக்கிறார், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எழுமலைக்கு அருகிலுள்ள பேரையம்பட்டியைச் சேர்ந்த விவசாயி வா.தொந்திராஜ். இந்த விவரம் அறிந்து அவரது தோட்டத்துக்குச் சென்ற நம்மிடம், தனது பப்பாளி சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த விவரமாவது:
‘‘எங்க வாழ்க்கை ஆதாரமே விவசாயம் தான். எங்க தாத்தா, எங்க அப்பா, இப்போ நானுன்னு, காலங்காலமா விவசாயத்தைத் தான் செய்து வர்றோம். என் அனுபவத்துல எத்தனையோ பயிர்களைச் சாகுபடி செஞ்சிட்டேன். நெல்லு, கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து, மொச்சை, பாசிப்பயறுன்னு நெறையா சாகுபடி செஞ்சு பாத்தாச்சு. நல்லா வெளையும். ஆனா பாத்தீங்கன்னா, வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கும். ஒரு பயிர சாகுபடி செஞ்சு முடிச்சிட்டு அடுத்த பயிர சாகுபடி செய்யணும்ன்னா கடன் வாங்கித் தான் ஆகணும். எனக்கும் ஐம்பது வயசாகிருச்சு. இப்பிடித் தான் நடந்துக்கிட்டிருக்கு.
இதுல இருந்து மீள்றதுக்கு என்ன வழின்னு யோசனை செஞ்சேன். அந்த நேரத்துல சேடபட்டியில இருக்குற தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அவங்களச் சந்திக்கிற வாய்ப்புக் கெடச்சுச்சு. அப்போ அவங்க தான் சொன்னாங்க, பப்பாளியைச் சாகுபடி செஞ்சீங்கன்னா நல்ல மகசூலும் அதுக்கு ஏத்த மாதிரி வெலையும் கெடைக்கிறதுக்கு வாய்ப்பிருக்குன்னு. அது மட்டுமில்லாம, பப்பாளி சாகுபடிக்குத் தேவையான தொழில் நுட்ப உதவிகளை எல்லாம் சொல்லித் தர்றோம்ன்னு சொன்னாங்க.
அதோட, தோட்டக்கலைப் பயிர்கள சாகுபடி செய்யுற விவசாயிகளுக்குத் தேசியத் தோட்டக்கலை இயக்கம் வழங்கக் கூடிய மானிய உதவியும் கிடைக்கும்ன்னு சொன்னாங்க. அவங்க குடுத்த நம்பிக்கையை வச்சு பப்பாளியைச் சாகுபடி செய்றதுன்னு முடிவெடுத்தேன். அதன்படி, 800 கன்னுகள நட்டுருக்கேன்; நல்லாவும் வளர்ந்திருக்கு.
மதுரை மாவட்டம், திருவாதவூர்-பூவந்தி வழியில இருக்கும் பூஞ்சுத்தி தோட்டக்கலைப் பண்ணையில விவசாயிகளுக்குத் தேவையான பப்பாளிக் கன்னுகள உற்பத்தி செய்து தர்றதா சொன்னாங்க. அங்க போயி கன்னுகள பத்தி விவரம் கேட்டேன். உங்களுக்கு எத்தனை கன்னுக வேணுமோ அதுக்கான பணத்தை முன்கூட்டியே கட்டிட்டுப் போனீங்கன்னா நாங்க கன்னுகள உற்பத்தி செஞ்சு குடுப்போமுன்னு சொன்னாங்க. அதன்படி, ஒரு கன்னு 16 ரூபான்னு 800 ரெட் லேடி பப்பாளிக் கன்னுகளுக்குப் பணத்தைக் கட்டிட்டு வந்தேன்.
பப்பாளி சாகுபடிக்காக ஒரு 80 சென்ட் நெலத்தை நல்லா நாலு தடவை உழுதேன். அதுல வரிசைக்கு வரிசை, கன்னுக்குக் கன்னு 6 அடி இடைவெளியில ஒண்ணரை அடி ஆழம், நீளம், அகலமுள்ள குழிகள எடுத்தேன். ஒரு வாரம் குழிகள நல்லா ஆறப் போட்டேன். அப்புறம் அந்தக் குழிகள்ல அடியுரமா தொழுவுரத்தைப் போட்டேன். இதுமட்டும் போதாதுன்னு குழிக்கு 150 கிராம் கணக்குல சூப்பர் பாஸ்பேட்டையும் 50 கிராம் பொட்டாஷையும் போட்டேன்.
இப்பிடியாக, பப்பாளி சாகுபடிக்கான நெலத்தைத் தயார் பண்ணிட்டு, மறுபடியும் பூஞ்சுத்தித் தோட்டக்கலைப் பண்ணைக்குப் போயி 28 நாள் வயதுள்ள கன்னுகள எடுத்துட்டு வந்து நடவு செஞ்சேன். நடவுத் தண்ணிக்கு அடுத்து ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் உயிர்த் தண்ணியை விட்டேன். அப்புறம் எங்க நெலத்து மண்வாகுக்கு ஏத்த மாதிரி வாரம் ஒருமுறை தண்ணியைக் கட்டிக்கிட்டு இருக்கேன். கன்னுகள நட்டு ஒரு மாசம் கழிச்சு ஒவ்வொரு கன்னுக்கும் 200 கிராம் பாக்டம்பாஸ் உரத்தைக் குடுத்தேன். இவ்வளவு தான் நான் குடுத்த உரம்.
இதுலேயே செழிப்பா வளர்ந்த கன்னுக 6 மாசத்துல மரங்களாகிக் காய்ப்புக்கு வந்திருச்சு. ரெண்டு வருசம் வரைக்கும் இந்தப் பப்பாளி மரங்க நமக்கு நல்ல மகசூலைக் குடுக்கும். வளர்ச்சிக் காலம் ஆறு மாசம் போக, ஒண்ணரை வருசத்துக்குப் பலனைக் குடுக்கும். இந்த ஒண்ணரை வருசம்ங்கிறது சுமார் 550 நாள். பத்து நாளைக்கு ஒருமுறை பறிப்புன்னு வச்சாலும் இந்த 550 நாள்ல 55 முறை காய்களைப் பறிக்கலாம்.
ஒரு பறிப்புக்குச் சுமாரா ஒண்ணரை டன் வரைக்கும் காய்கள் கிடைக்கும். இப்போ ஒரு கிலோ பப்பாளிக்காயை 5 ரூபான்னு உசிலம்பட்டி சந்தையில குடுக்குறேன். அப்பிடின்னா 1500 கிலோவுக்கு எத்தனை ரூபான்னு கணக்குப் பாருங்க. அதையே ஐம்பத்தி அஞ்சால பெருக்கிக்கோங்க.
இன்னும் குறச்சுக்கூட கணக்குப் போடுங்க. 50 பறிப்பு, ஒரு பறிப்புக்கு 1000 கிலோன்னு வச்சுக்கிட்டாலும் 50 ஆயிரம் கிலோ காய்கள் மகசூலா கிடைக்கும். இதைக் கிலோ 5 ரூபாயால பெருக்குனா ரெண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா நமக்கு வருமானம். இதுல, குழி எடுத்தது, கன்னு வாங்குனது, ஒரம் போட்டது, காய்களைப் பறிச்சு சந்தைக்குக் கொண்டு போற செலவுன்னு ஒரு இலட்ச ரூபா போனாலும் ஒண்ணரை இலட்ச ரூபா நமக்கு நிகர இலாபமா நிக்குதில்ல? அப்பிடின்னா 80 சென்ட் நெலத்துல இருந்து வருசத்துக்கு 75 ஆயிரம் ரூபா கெடைக்குதில்ல? இதுக்கு மேல என்ன வேணும்?’’ என்று நம்மிடம் ஆர்வமாகக் கேட்டார் தொந்திராஜ்.
அவருடைய ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டிய நாம், அவர் மென்மேலும் இத்தகைய மாறுபட்ட பயிர்களைப் பயிரிட்டு வளம் பெற வேண்டுமென்று வாழ்த்தி விடை பெற்றோம்.
பசுமை