கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020
தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும் சரியான காலத்தில் முடிக்கவும் முடிகிறது. மேலும், குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பிலான சாகுபடியையும் மேற்கொள்ள முடிகிறது.
நிலத் தயாரிப்புக் கருவிகள்
நிலத்தை உழுதிடக் கொத்துக்கலப்பை, சட்டிக்கலப்பையைப் பயன்படுத்தலாம். சுழல் கலப்பையால் நன்கு புழுதியடித்து லேசர் கருவி மூலம் நிலத்தைச் சமப்படுத்தலாம். இதனால், 20-30% நீரைச் சேமிக்கலாம். மகசூலும் 5-10% கூடும். ஒரு நாளைக்கு 2-3 எக்டர் நிலத்தைச் சமன்படுத்த முடியும். ஒரு எக்டர் நிலத்தைச் சமப்படுத்த 500 ரூபாய் செலவாகும். இப்படிச் சமப்படுத்திய வயலில், நீரைப் பாய்ச்சி பவர்டில்லரால் உழுது, நடவுக்கு ஏதுவாக நிலத்தைத் தயார் செய்யலாம்.
நாற்றங்கால் தயாரிப்புக் கருவிகள்
இயந்திர நடவுக்குச் சுருள் பாய் நாற்றங்கால் முறையில் அல்லது நெகிழித் தட்டுகளில் வளர்க்கப்பட்ட நாற்றுகளைத் தான் பயன்படுத்த வேண்டும். சுருள் பாய் நாற்றங்கால் அல்லது நெகிழித் தட்டுகளின் பரப்பளவு, நடும் இயந்திரத்தைப் பொறுத்தே அமையும்.
சுருள் பாய் நாற்றங்கால்
சுருள்பாய் நாற்றங்கால் என்பது எளிதில் சுருட்டி எடுத்துச் செல்லும் வகையில், நெகிழித்தாளில் வயல் மண்ணைப் பரப்பி நாற்றுகளை வளர்க்கும் முறையாகும். சாதாரண முறையில் ஒரு ஏக்கர் நடவுக்கு 8 சென்ட் நாற்றங்கால் தேவைப்படும். ஆனால், திருந்திய நெல் சாகுபடிக்கு ஒரு சென்ட் நாற்றங்காலே போதும். சுருள்பாய் நாற்றங்காலை நல்ல வடிகால் வசதியுள்ள, நீருக்கு அருகிலுள்ள இடத்தில் அமைக்க வேண்டும்.
ஒரு மீட்டர் அகலம், 5 செ.மீ. உயரம், 40 மீட்டர் நீளம் அல்லது தேவையான நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திகளில் 300 காஜ் கனமுள்ள நெகிழி விரிப்பு அல்லது பழைய உரச் சாக்குகளைப் பரப்ப வேண்டும். பிறகு, நீளம் மற்றும் அகலவாக்கில் 4 கட்டங்களாகத் தடுக்கப்பட்ட ஒரு மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ. உயரமுள்ள விதைப்புச் சட்டத்தை, அந்த விரிப்பின் மேல் சரியாக வைக்க வேண்டும்.
அடுத்து, ஒரு கிலோ வயல் மணலுடன் 1.5 கிலோ பொடித்த டிஏபி உரத்தைச் சேர்த்து, விதைப்புச் சட்டத்தில் முக்கால் பாகம் வரை நிரப்ப வேண்டும். அதில் முளைவிட்ட 45 கிராம் இரண்டாம் கொம்பு விதைகளைச் சீராகத் தூவ வேண்டும். பின்பு, மட்கிய எருக்கலவையை விதையின் மேல் பரப்பி, உள்ளங்கையால் மெதுவாக அழுத்திவிட வேண்டும். பிறகு, விதைப்புச் சட்டம் நனையும் வகையில் பூவாளியால் நீரைத் தெளித்து, விதைப்புச் சட்டத்தை வெளியே எடுத்துவிட வேண்டும். இதை வைக்கோல் அல்லது தென்னங் கீற்றால் மூடி வைக்க வேண்டும்.
பிறகு, 5 நாட்கள் வரை பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். விதைத்த 9 ஆம் நாள் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் யூரியா வீதம் கலந்த கரைசலைப் பூவாளியால் தெளித்தால், வாளிப்பான நாற்றுகளைப் பெறலாம். விதைத்த 14 ஆம் நாள் 12-16 செ.மீ. உயரமுள்ள நாற்றுகளைப் பிரித்து இயந்திரம் அல்லது கயிற்றைக் கட்டிக் கைகளால் வரிசையாக நடலாம்.
சுருள்பாய் நாற்றங்காலின் பயன்கள்
நாற்றங்காலை அமைக்க குறைந்த பரப்பே போதும். ஒரு ஏக்கர் நடவுக்கு 2-6 கிலோ விதையே தேவைப்படும். நாற்றங்காலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டியதில்லை. அதனால், நீரின் தேவை மிகக் குறைவு. நாற்றுகளை அடுத்த இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்லலாம். இயந்திர நடவுக்கு ஏற்றது என்பதால் அதிகப் பரப்பில் நடலாம்.
தட்டு நாற்றங்கால்
நெகிழித் தட்டுகளில் நேரடியாக நாற்று விடும் கருவி மூலம் நாற்று உற்பத்தி நடக்கிறது. ஒரு தட்டின் பரப்பு 25×50 செ.மீ. முதல் 30×60 செ.மீ. வரை இருக்கும். ஒரு எக்டர் நடவுக்கான நாற்றுகளை உற்பத்தி செய்ய 165-275 தட்டுகள் தேவைப்படும். ஒருநாளில் மூன்று ஆட்களைக் கொண்டு நான்கு எக்டருக்குக் தேவையான நாற்றங்காலை அமைக்கலாம். ஆட்கள் மூலம் அல்லது மின்சாரம் மூலம் இயக்கலாம்.
மண் கலவை, விதை, மண் கலவை, நீர் ஆகிய நான்கு கலன்கள் உள்ள இக்கருவியின் ஒரு முனையில் காலி நெகிழித் தட்டுகளைச் செலுத்தினால், மறு முனையில் விதையிட்ட தட்டுகள் கிடைக்கும். ஒரே சீராக நாற்றுவிட ஏற்றது. விதையிட்ட தட்டுகளை, மேட்டுப் பாத்தியில் இரண்டு வரிசையில் அடுக்க வேண்டும். ஒரு எக்டர் நடவு நாற்றங்காலை அமைக்க, 1.2×15 மீட்டர் அளவுள்ள மேட்டுப்பாத்தி தேவை.
விதையிட்ட தட்டுகளின் மீது வைக்கோல் அல்லது காய்ந்த வாழையிலையை மூடி, பூவாளியால் மூன்று நாட்களுக்கு 2-3 முறை நீரைத் தெளிக்க வேண்டும். நான்காம் நாள் விதைகளின் மேல் பரப்பிய மூடாக்கை அகற்றி விட்டு, மேட்டுப்பாத்தி நிறையும் வரையில் நீரை நிரப்பி, நாற்றங்காலைப் போலப் பராமரிக்க வேண்டும். நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து முதல் வாரம் முடிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் யூரியா வீதம் எடுத்துக் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் சிங்சல்பேட் வீதம் கலந்த கரைசலைத் தெளிக்க வேண்டும். 14-15 நாட்களில் இயந்திரம் மூலம் நடுவதற்கான நாற்றுகள் தயாராகி விடும்.
இயந்திர நடவு
எரிபொருள், வரிசை மற்றும் இயக்கும் முறையைப் பொறுத்து நடவு இயந்திரங்கள் மாறுபடும். அவையாவன: பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயங்குபவை. 4, 6, 8 வரிசையில் நடவு இயந்திரங்கள். நடந்து செல்லும் அல்லது ஓட்டி செல்லும் வகை இயந்திரங்கள். ஒன்று அல்லது இரண்டு சக்கரங்களைக் கொண்டவை.
நேரடி நெல் விதைப்புக் கருவி
மானாவாரியில் நேரடி நெல் விதைப்புக்கு டிராக்டரால் இயங்கும் விதைப்புக் கருவியைப் பயன்படுத்த வேண்டும். இதிலுள்ள விதைப் பெட்டியில் மூன்றில் இரண்டு பாகம் விதைகளை நிரப்பி சீரான வேகத்தில் விதைப்புக் கருவியில் விதைத்தால், வரிசை இடைவெளி 20 செ.மீ., பயிர் இடைவெளி 15 செ.மீ. இருக்கும். மேலும், சரியான ஆழத்தில் விதைப்பதால் நன்கு முளைத்து வரும். இந்தக் கருவி மூலம் விதைக்கும் போதே உரத்தையும் இடலாம். எனவே, பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இதை இயக்குவதற்கு 35-45 எச்.பி. டிராக்டர் தேவைப்படும். ஒரு நாளில் 7.5 ஏக்கரில் விதைக்க முடியும். இதனால், 84% ஆட்கள் சேமிப்பும், 65% செலவும் குறையும். இக்கருவி மூலம் ஒரு எக்டரில் விதைக்க ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.
சேற்றில் விதைக்கும் உருளைக் கருவி
இந்தக் கருவி அதிபரவளைக்கோள வடிவில் இருக்கும். இதனால், விதைகள் துளைகளை நோக்கித் தடையின்றிச் செல்லும். இதில் விதைகள் விழுவதற்கு ஏதுவாக 10 மி.மீ. விட்டமுள்ள 18 ஓட்டைகள் உள்ளன. முளைவிட்ட விதைகளை நிரப்பி, இந்தக் கருவியின் கைப்பிடியைக் பிடித்து நடைப்பயிற்சி வேகத்தில் சேற்றில் இழுத்துச் சென்றால், சீரான இடைவெளி மற்றும் ஆழத்தில் விதைகள் விதைக்கப்படும்.
நன்மைகள்
குறைந்த எடை மற்றும் கையாள்வது எளிது. குறைந்தளவு விதை, சீரான விதைப்பு. வரிசையில் விதைப்பதால் களைகளை அகற்றக் கருவியைப் பயன்படுத்தலாம்.
களையெடுப்பு இயந்திரங்கள்
இயந்திர நடவு வயலில் இயந்திரக் களைக்கருவியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது பெட்ரோலால் இயங்கும். இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசையில் களையெடுக்கும் கருவிகள் உள்ளன. நட்ட 15 மற்றும் 30 ஆம் நாளில், இயந்திரக் களையெடுப்பான் மூலம் களைகளை அகற்ற வேண்டும். ஒருநாளில் ஒரு எக்டரில் களைகளை அகற்றலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கண்டுபிடித்த இயந்திரக் களைக்கருவி, 30 செ.மீ. இடைவெளியில் இயந்திரம் மூலம் நடப்பட்ட வயலில் களையெடுக்க ஏற்றது. இயந்திரக் களைக்கருவியைச் சோர்வின்றி இயக்கலாம். பயிருக்கருகில் விடுபட்ட களைகளை ஆட்கள் மூலம் அகற்ற வேண்டும். இக்கருவி மூலம் களையெடுத்தால், எக்டருக்கு 2,000-2,500 ரூபாய் மிச்சமாகும்.
கையால் களையெடுக்கும் கருவி
வரிசை விதைப்பு அல்லது வரிசை நடவு வயலில் உள்ள களைகளை, கையால் இயக்கவல்ல கோனோவீடர் கருவி மூலம் அகற்றலாம். எளிதில் சுழலும் வகையில் 1-2 உருளைகளுடன் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்ல ஏதுவாக மிதப்பான் போன்ற அமைப்பும், நடந்தவாறே தள்ளிச் செல்ல ஏற்ற நீண்ட கைப்பிடியும் கொண்டது.
ஓர் உருளைக் கருவி மூலம் ஒரு வரிசையிலும், இரண்டு உருளைக் கருவி மூலம் இரண்டு வரிசையிலும் களைகளை அமுக்கி விடலாம். இவை மட்கித் தழைச்சத்து உரமாகி விடும். இதைப் பயன்படுத்துவதால் வேர்ப் பகுதியில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு அதிகளவில் தூர்கள் வெடிக்கும். இதன் எடை 5-6 கிலோ இருக்கும். ஒரு ஆள் ஓர் உருளைக் கருவி மூலம் ஒரு நாளில் 25 சென்ட் பரப்பிலும், இரண்டு உருளைக் கருவி மூலம் 40 சென்ட் பரப்பிலும் களையெடுக்கலாம்.
நீர் நிர்வாகக் கருவிகள்
நெற்பயிர் சாகுபடிக்கு 1,200 மி.மீ. நீர் தேவை. ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு 4,000-6,000 லிட்டர் நீர் செலவாகும். அதிகப் பரப்பில் சாகுபடி செய்ய, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீரை அளவிட வயல்நீர்க் குழாய் உதவுகிறது. பிலிப்பைன் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம், நீரைக் குறைத்துப் பயன்படுத்தும் வகையில், நவீனப் பாசன முறையான, வயல்நீர்க் குழாய் மூலம், நீர் மறைய நீர் கட்டும் பாசன முறையை வகுத்துள்ளது.
வயல்நீர்க் குழாயைப் பயன்படுத்தும் முறை
வயல்நீர்க் குழாயைத் தயாரிக்க, 30 செ.மீ. நீளம் மற்றும் 15 செ.மீ. விட்டமுள்ள பிளாஸ்டிக் குழாயை எடுத்துக்கொள்ள வேண்டும். குழாயின் 15 செ.மீ. வரை 0.5 செ.மீ. விட்டமுள்ள துளைகளை 2 செ.மீ. இடைவெளியில் இட வேண்டும். நடவு செய்த பத்தாம் நாளில் நில மட்டத்தின் கீழ் 15 செ.மீ. இருக்குமாறு இந்தக் குழாயைப் பொருத்தி, அதற்குள் இருக்கும் மண்ணை எடுத்துவிட வேண்டும்.
பிறகு, வயலில் 5 செ.மீ. அளவில் பாசனம் செய்ய வேண்டும். அப்போது குழாயிலுள்ள துளை வழியாக உள்ளே செல்லும் நீர், குழாயின் நீர் மட்டத்தை உயர்த்தும். குழாயின் அடியிலுள்ள நீர் மறைந்ததும் மீண்டும் பாசனம் செய்ய வேண்டும். நெற்பயிர் பூப்பதற்கு ஒருவாரம் முன்னும் பின்னும் வயலில் நீர் இருப்பது மிகவும் அவசியம். ஒரு ஏக்கருக்கு ஒரு வயல்நீர்க் குழாய் போதுமானது. களிமண் நிலம், நன்கு சமப்படுத்திய வயலில் சிறப்பாகப் பயன்படும். இதை வரப்புக்கு அருகில் அமைத்தால் பார்வையிட ஏதுவாக இருக்கும்.
நன்மைகள்
நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் நீரில் 25% வரை குறைகிறது. உற்பத்தி 15% வரை கூடுகிறது. மின்சாரம், டீசல் போன்றவற்றின் தேவையும் குறைகிறது. நிலத்தடி நீர் வீணாதல் குறைகிறது. புவி வெப்பமயமாதலும் குறைகிறது.
பயிர்ப் பாதுகாப்பு
பூச்சி அல்லது பூசணக் கொல்லிகளைத் தெளிக்க, பவர் டில்லர் உதவியுடன் இயங்கும் தெளிப்பானைப் பயன்படுத்தலாம். மருந்துக் கலவையை ஓரிடத்தில் வைத்துக்கொண்டு அங்கிருந்து 100 மீட்டர் தூரம் வரையில் குழாய் மூலம் தெளிக்கலாம். இதை இயக்க மூன்று ஆட்கள் தேவை. ஒருநாளில் நான்கு எக்டரில் மருந்தைத் தெளிக்கலாம். பூம் நாசில் மூலம் 10-15 அடி அகலத்தில் மருந்துக் கலவையை நுண்ணிய துகள்களாக, குறைந்த நேரத்தில் அதிகப் பரப்பில் தெளிக்க முடியும்.
அறுவடை
அறுவடை, கதிரடித்தல், தூற்றுதல் போன்ற வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் கூட்டு அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். டயர் வகை மற்றும் பெல்ட் வகை என, கூட்டு நெல் அறுவடை இயந்திரம் இரு வகைப்படும். நீர் தேங்கிய வயல் மற்றும் களிமண் வயலுக்குக் கூட்டு நெல் அறுவடை இயந்திரம் ஏற்றது. காய்ந்த நிலத்தில் விரைவாக அறுவடை செய்ய டயர் வகைக் கூட்டு அறுவடை இயந்திரம் ஏற்றது. நெல் தரிசில் பயறு வகைகளைப் பயிரிட்டால், பெல்ட் வகைக் கூட்டு நெல் அறுவடை இயந்திரம் மூலம் தான் நெல்லை அறுவடை செய்ய வேண்டும்.
முனைவர் இராஜா ரமேஷ்,
உதவிப் பேராசிரியர், தேசியப் பயறுவகை ஆராய்ச்சி நிலையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.