கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021
தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு எக்டர் நிலத்தில் பத்து டன் விளைச்சலைப் பெற்றால் மட்டுமே நம்மால், உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியும்.
பத்து டன் மகசூல் என்பது விவசாயிகளால் அடையக் கூடிய இலக்குத் தான். இந்த இலக்கை எட்டும் போது நம் நாடானது, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவது மட்டுமின்றி, நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் இலாபமிக்கதாக இருக்கும். அந்த இலக்கை அடைய இதோ சில யோசனைகள்.
பருவத்தில் பயிர் செய்தல்
தமிழகத்தில் ஆண்டு முழுவதும் நெல்லைப் பயிரிட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற வகையில் சரியான பருவத்தில் பயிரிடுவது முக்கியம். பட்டம் தப்பினால் நட்டம் என்பார்கள். எனவே, பருவத்தில் பயிர் செய்வது மிகவும் அவசியம். தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு என எட்டுப் பருவங்கள் உள்ளன.
நவரை (டிசம்பர்-ஜனவரி), சொர்ணவாரி (ஏப்ரல்-மே), முன்கார் (ஏப்ரல்-மே), கார் (மே-ஜூன்), குறுவை (ஜூன்-ஜூலை), சம்பா (ஆகஸ்ட்), பின் சம்பா அல்லது தாளடி (செப்டம்பர்-அக்டோபர்), பிசானம் (செப்டம்பர்-அக்டோபர்). இந்தப் பருவங்களில் சரியாகப் பயிரிட்டால், பயிரின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாமல் அதிக விளைச்சலையும் பெறலாம்.
சரியான இரகத்தேர்வு
தமிழகத்தில் இன்றளவில் 300 க்கும் மேற்பட்ட இரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த இரகங்களை அவற்றின் வயதின் அடிப்படையில், 120 நாட்களுக்குள் விளையும் குறுகிய கால இரகங்கள், 120-135 நாட்கள் வயதுள்ள மத்திய கால இரகங்கள், 135 நாட்களுக்கு மேல் வயதுள்ள நீண்டகால இரகங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
இவற்றில், நீண்டகால இரகங்களைச் சம்பாப் பருவத்தில் மட்டுமே பயிரிட வேண்டும். மத்திய கால இரகங்களைச் சம்பா, பின் சம்பா அல்லது தாளடி, பிசானம் ஆகிய பருவங்களில் பயிரிடலாம். மற்ற பருவங்களில், குறுகிய கால இரகங்களைப் பயிரிடலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உரிய இரகங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட வேண்டும்.
தரமான விதைகள்
சான்று பெற்ற தரமான விதைகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த நெல்லை, விதைக்காகப் பயன்படுத்த நினைத்தால், நன்கு தரம் பிரித்துப் பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ உப்பைப் பத்து லிட்டர் நீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும். அந்தக் கரைசலில் விதைக்கான நெல்லைப் போட வேண்டும். பிறகு, கரைசலில் மிதக்கும் பதர் அல்லது சாவி நெல்லை நீக்கி விட்டு, நீரில் மூழ்கிய நெல் மணிகளை விதைக்காகப் பயன்படுத்தினால் நன்கு முளைக்கும்.
பசுந்தாள் உரங்கள்
நல்ல வளமான மண்ணால் தான் தரமான பயிரை உருவாக்க முடியும். மண் வளமாக இருக்க வேண்டுமெனில், இயற்கை உரங்களை இயன்ற வரையில் பயன்படுத்த வேண்டும். பசுந்தாள் உரங்களான தக்கைப்பூண்டு, சணப்பை, மணிலா அகத்திப் போன்றவற்றின் விதைகளை, எக்டருக்கு 40 கிலோ விதைத்து 45 நாட்களுக்குப் பிறகு, பூக்கும் நிலையில் மடக்கி உழுதால் மண்வளம் அதிகரிக்கும்.
ஒவ்வொரு முறையும் நெல்லைப் பயிரிடும் போது பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்தினால் மண்வளம் கூடுவதுடன், செயற்கை உரங்களின் பயன்பாடு குறையும்; பூச்சி, நோய்த் தாக்குதல் மட்டுப்பட்டு விளைச்சலும் வருவாயும் கூடும் என்பது திண்ணம்.
தரமான நாற்றுகள்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போலத் தரமான நாற்றுகளால் மட்டுமே நல்ல விளைச்சலைத் தரும் நெற்பயிர்களை உருவாக்க முடியும். எனவே, நாற்றங்கால் தயாரிப்பை முக்கியமாகக் கருதி, எக்டருக்கு 20 சென்ட் நிலத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். பாய் நாற்றங்காலைத் தயாரிப்பதாக இருந்தால், சுமார் இரண்டரை சென்ட் பரப்பில் அமைக்க வேண்டும். விதைக்கு விதை ஒட்டாமல் சீராக விதைக்கும் போது, நாற்றுகள் போட்டியில்லாமல் வளர்ந்து உருண்டு திரண்டு வளரும்.
இளம் நாற்றுகளை மேலாக நடுதல்
நாற்று நடுவது என்பது ஒரு கலை. 15 நாட்களுக்கும் குறைவான வயதுள்ள நாற்றுகளை, ஒரு குத்துக்கு 1-2 வீதம் நடுவது நல்ல விளைச்சலைத் தரும். மேலும், நாற்றுகளை நடும் போது நாற்றுகள் சாய்ந்து விடாத அளவில் சேற்றில் மேலாக நட வேண்டும். அதிக ஆழத்தில் அழுத்தி நடும் போது, அவற்றில் கிளைப்புகள் உருவாவது குறையும்.
அதிக எண்ணிக்கையில் நாற்றுகளைக் குத்துக் குத்தாக நடும் போது, நாற்றுகளுக்கு இடையே போட்டி உருவாகிக் கிளைப்புகள் வருவது பாதிக்கப்படும். எனவே, இளம் நாற்றுகளை ஒன்று அல்லது இரண்டு என, மேலாக நடுவது நல்ல பலனைத் தரும்.
ஒருங்கிணைந்த களை நிர்வாகம்
சமதளமான வயலில் நெல்லை நடுவது களைகளைக் கட்டுப்படுத்தும். லேசர் மட்டப்பலகை அல்லது டிராக்டரால் இயங்கும் மட்டப் பலகையைக் கொண்டு வயலைச் சமப்படுத்த வேண்டும். மேடும் பள்ளமுமாக வயல் இருந்தால், மேடான பகுதிகளில் களைகள் ஆதிக்கம் செலுத்தும்; பள்ளமான பகுதிகளில் நாற்றுகள் அழுகிப் போகும்.
நடவு செய்த மூன்றாம் நாள், களைகள் முளைப்பதற்கு முன்பு, பூட்டாகுளோர் அல்லது பிரிட்டில்லாக் குளோர் களைக்கொல்லியை மணலில் கலந்து விதைக்க வேண்டும். இல்லையெனில், இளம் களைகளைக் கட்டுப்படுத்த, பிஸ்பைரிபேக் சோடியம் என்னும் களைக்கொல்லியை, நட்ட 15 ஆம் நாளில் களைகளின் மீது தெளிக்கலாம். நெற்பயிரில், நட்ட 45 நாட்களில் களைகளின்றிப் பராமரித்தல் நல்ல மகசூலைத் தரும்.
சத்து மேலாண்மை
விதைப்பதற்கு முன், விதைகளை 1.2 கிலோ அசோபாசைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். முடிந்த வரையில், இயற்கை உரங்களான மட்கிய எரு, பசுந்தாள் உரங்களை நடவுக்கு முன் பயன்படுத்த வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்தை நான்கு முறை, அதாவது, நடவுக்கு முன், தூர் கட்டும் பருவம், புடைப்பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும். இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி, தேவையின் போது மட்டும் தழைச்சத்தை இடுவதால், தழைச்சத்தின் அளவு குறைவதுடன், பூச்சி, நோய்களின் தாக்கமும் குறையும்.
நீர் நிர்வாகம்
நெல்லானது நீர்த் தேங்கிய இடங்களில் வளரும் தன்மையுடைய பயிர் தான் எனினும், நீரினுள் வளரும் பயிரல்ல. நெற்பயிரைப் பொறுத்த வரையில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். எனவே, அதற்குத் தகுந்தபடி நீரை, சுமார் 2.5 செ.மீ. உயரத்துக்குப் பாய்ச்ச வேண்டும். அந்த நீர் மறைந்த பிறகு மீண்டும் நீரைப் பாய்ச்சுவது நல்ல பலனைத் தரும். எக்காரணத்தைக் கொண்டும் பூக்கும் பருவத்துக்கு முன்பு, தொடர்ந்து நீரைத் தேக்கி வைத்திருக்கக் கூடாது.
பூச்சி, நோய் நிர்வாகம்
நெற்பயிரைப் பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம். பொதுவாகப் பூச்சி, நோய்களின் அறிகுறிகள் தென்படாத நேரங்களில், மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு மேல் மருந்துகளைத் தெளிப்பதும், தேவையின்றிப் பல மருந்துகளைத் தெளிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
இதுவரையில் கூறியுள்ள பத்து யோசனைகளை விவசாயிகள் பயன்படுத்தினால், ஒரு எக்டர் நிலத்தில் பத்து டன் விளைச்சலைப் பெறுவது எளிதில் சாத்தியமாகும். அதுமட்டுமின்றி, தேவையில்லாமல் செலவிடுவதும் குறைவதால், நெல் விவசாயிகள் அதிக இலாபமும் பெற முடியும்.
முனைவர் ந.தவப்பிரகாஷ்,
முனைவர் கு.கவிதா, முனைவர் ரா.பிரேமாவதி, முனைவர் க.ரெ.சுதா,
வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்-629901, கன்னியாகுமரி மாவட்டம்.