விவசாயி சு.தங்கவேலுவின் நிலக்கடலை சாகுபடி அனுபவம்
கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021
தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் எண்ணெய் வித்துப் பயிர் நிலக்கடலை. மானாவாரி நிலத்திலும், பாசன நிலத்திலும் விளையக் கூடியது. முறையாகப் பயிர் செய்தால் நல்ல மகசூலை எடுக்கலாம்.
அண்மையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்த போது, புது எட்டம நாயக்கன் பட்டியைச் சேர்ந்த சு.தங்கவேலு அவர்களை, அவரது தோட்டத்தில் சந்தித்து, நிலக்கடலை சாகுபடி அனுபவம் குறித்துக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
“நானு ரெண்டு ஏக்கரா நெலத்துல நிலக்கடலையைப் பயிர் செஞ்சிருக்கேன். விதைப்புக்கு முன்னால தொழுவுரத்த போட்டு, நாலஞ்சு முறை நல்லா புழுதி பறக்க உழுதேன். அப்புறம், ஏக்கருக்கு ஒரு மூட்டை வீதம் ரெண்டு மூட்டை காம்ப்ளக்ஸ் உரத்தையும் அடியுரமா போட்டேன்.
பிறகு, பாத்திகளைக் கட்டி, அரையடிக்கு ஒரு விதை விழுகுற மாதிரி, ஆளுகள வச்சு, கொத்துவானம் மூலம் விதைகளை வெதச்சேன்.
வெதச்சதும் முளைப்புத் தண்ணி குடுத்தேன். அப்புறம் இன்னொரு முறை தண்ணியைப் பாய்ச்சி, சரியான பருவத்துல களையெடுத்தேன். பிறகு, மறுபடியும் பாசனம் செஞ்சு, ரெண்டாவது ஒருமுறை களையெடுத்தேன்.
எந்தப் பயிரா இருந்தாலும், களையில்லாம இருந்தாத்தான் நாம குடுக்குற ஒரம் முழுசும் பயிருக்குக் கிடைக்கும். அப்பத்தான் நல்ல மகசூலும் கிடைக்கும்.
அடுத்து, ரெண்டு மூட்டை பாக்டம்பாஸ், ஒரு மூட்டை பொட்டாசைக் கலந்து மேலுரமா குடுத்தேன். செடிக நல்லா இருக்கு. நிலக்கடலைச் செடிகளை, சிவப்புக் கம்பளிப் பூச்சி, சுருள் பூச்சிக தாக்கும். அப்புறம் இலைகள்ல ஓட்டை ஓட்டையா விழுகும்.
இதை இலைப்புள்ளி நோயின்னு சொல்லுவாக. இதுகள எல்லாம் சரியான நேரத்துல கட்டுப்படுத்தணும். இல்லேன்னா மகசூல் பாதிப்பு அதிகமா இருக்கும்.
ஒரு ஏக்கரா விதைப்புக்கு 35 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதையின் விலை 100-110 ரூவா. நல்லா வெளஞ்சா ஏக்கருக்கு 37 கிலோ எடையுள்ள 15 மூட்டை கடலை கெடைக்கும். இந்த 37 கிலோங்கிறது காஞ்ச கடலை.
ஒரு மூட்டை ரெண்டாயிரம் ரூவா. இந்தக் கணக்குல முப்பது ஆயிரம் ரூவா மொத்த வருமானமா கிடைக்கும். ஒரு ஏக்கரா சாகுபடிச் செலவு இருபதாயிரம் ரூவா ஆகிரும். இந்தச் செலவு போக, பத்தாயிரம் ரூவா நம்ம கையில நிக்கும். ஒரு நூறு நாள்ல அறுவடை செய்யலாம்.
நிலத்துல விழுகுற நிலக்கடலை இலைகள் மண்ணுக்கு ஒரமாகும். இந்தக் கடலைச் செடிக, ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் நல்ல தீவனமாகும். அதனால, கடலையைப் பிரிச்சு எடுத்ததும், இந்தச் செடிகளை நல்லா காய வச்சு, பக்குவமா சேமிச்சு வச்சு, நாங்க வளர்க்குற ஆடு மாடுகளுக்குக் குடுப்போம்.
நமக்கும் பயன் தருது, மண்ணுக்கும் ஒரமாகுது, ஆடு மாடுகளுக்கும் தீவனம் குடுக்குது. அதனால, நிலக்கடலை சாகுபடியை நாங்க தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வாறோம்’’ என்றார்.
பசுமை