கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020
நம் நாட்டில் நெற்பயிர் முக்கியமான உணவுப்பயிராக விளங்குகிறது. இது பல்வேறு காலநிலைகள் மற்றும் மண் வகைகளில் பயிரிடப்படுவதால், 40% இரசாயன உரங்கள், 18% பூச்சி மற்றும் பூசணக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக, மண்வளம் மற்றும் மகசூல் குறைதல், பூச்சிகொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் ஏற்படுதல், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் போன்றவை ஏற்படுகின்றன.
நமது நாட்டில் 50% மக்கள் உண்ணும் பொருளாக நெல் இருப்பதால் நஞ்சில்லாத, தரமான நெல்லை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, செயற்கை உரங்கள் மற்றும் இரசாயனப் பூச்சிகொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவில் 44.11 மில்லியன் எக்டரிலும், தமிழ்நாட்டில் 1.80 மில்லியன் எக்டரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், அங்கக வேளாண்மையில் இப்பயிர் ஒரு சதத்துக்கும் குறைவான பரப்பில் தான் பயிராகிறது.
இரகங்கள்
அங்கக முறையில் சன்ன இரகங்களான வெள்ளைப் பொன்னி, ஏ.டி.டி 43, போன்றவற்றைப் பயிரிடலாம். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
விதையளவு
இயற்கை முறையில் விளைந்த விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு எக்டர் நடவுக்கு நீண்டகால இரகங்கள் எனில் 30 கிலோ விதையும், மத்திய கால இரகங்கள் எனில் 40 கிலோ விதையும், குறுகிய கால இரகங்கள் எனில் 60 கிலோ விதையும் தேவைப்படும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பயிரில்லம், 10 கிராம் சூடோமோனாஸ், 10 கிராம் பாஸ்போபாக்டீரியா வீதம் பயன்படுத்த வேண்டும். ஒரு சத பஞ்சகவ்யாவையும் பயன்படுத்தலாம். எக்டருக்கு ஒரு கிலோ அசோஸ்பயிரில்லம், ஒரு கிலோ பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 40 லிட்டர் நீரில் கலந்து நாற்றுகளின் வேர்களை 30 நிமிடம் நனைத்து நடலாம்.
நாற்றங்கால்
சுமார் 20 சென்ட் நாற்றங்காலுக்கு நன்கு மட்கிய தொழுவுரம் ஒரு டன், மண்புழு உரம் 200 கிலோ, கடலைப் புண்ணாக்கு 10 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ வீதம் அடியுரமாக இட வேண்டும்.
நடவு வயல்
கடைசி உழவின் போது எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய தென்னைநார்க் கழிவு அல்லது கம்போஸ்ட் உரத்தை இட வேண்டும். நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை, செஸ்பேனியா ஆகியவற்றை வளர்த்து 45 நாட்களில் மடக்கி உழுதால் எக்டருக்கு 10 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும். இதன் மூலம் பயிருக்கு 50-80 கிலோ தழைச்சத்துக் கிடைக்கும். எக்டருக்கு 5 டன் மண்புழு உரம் அல்லது கரும்பாலைக் கழிவு வீதம் இடலாம்.
இராக்பாஸ்பேட் மற்றும் எலும்புத்தூளை மணிச்சத்து உரமாக இடலாம். நெல் வைக்கோல், நெல் அரவை ஆலை அடுப்புச் சாம்பல் மற்றும் பயிர்க்கழிவை சாம்பல்சத்து உரமாக இடலாம். மேலும், மீன் மற்றும் முட்டை அமினோ அமிலம், உயிர் சக்தி வேளாண்மைத் தயாரிப்புகளையும் இடலாம்.
நீலப்பச்சைப் பாசியை எக்டருக்கு 10 கிலோ வீதம் நடவு செய்த பத்தாம் நாளில் இட்டு, காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிருக்குக் கிடைக்கச் செய்யலாம். ஒரு எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பயிரில்லம், 2 கிலோ பாஸ்போபாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து இடலாம். மூன்று சத பஞ்சகவ்யாக் கரைசலை இலைவழி உரமாகத் தெளிக்கலாம்.
களை நிர்வாகம்
கோடையுழவு செய்தல், நன்கு சேற்றைக் கலக்குதல் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தலாம். வரிசை நடவில் ரோட்டர் கருவி அல்லது கோனோ கருவி மூலம், நடவு செய்த 15ஆம் நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை களையெடுக்கலாம். எக்டருக்கு 250 கிலோ அசோலா வீதம், நடவு செய்த 3-5 நாட்களில் இடலாம். இது விரைவாக வளர்வதால், முதல் களை எடுக்கும் போது மண்ணுக்குள் விட வேண்டும். இதனால், பயிருக்குத் தழைச்சத்துக் கிடைப்பதுடன் களைகளும் குறையும்.
பயிர்ப் பாதுகாப்பு
இயற்கை முறை நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய்களை, இரசாயனப் பூச்சிகொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். கோடையுழவு செய்வதால் மண்ணிலுள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மற்றும் பூசண வித்துகள் அழிகின்றன. வரப்புகளைக் களையின்றிப் பராமரிக்க வேண்டும். நாற்றுகளைச் சரியான இடைவெளியில் நட வேண்டும்.
பூச்சிகள்
தண்டுப்புழு மற்றும் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 5% வேப்பங் கொட்டைச்சாறு கரைசலைத் தெளிக்கலாம். எக்டருக்கு 5 சி.சி. அளவில் டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கத்தை ஒருவார இடைவெளியில் மூன்று முறை இலைகளின் அடிப்பாகத்தில் கட்ட வேண்டும். எக்டருக்கு ஒரு கிலோ வீதம் பேசில்லஸ் துரிஞ்சியன்சைத் தெளிக்கலாம். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 5% வேப்பங் கொட்டைச்சாறு அல்லது 2% வேப்பெண்ணய்க் கரைசலைத் தெளிக்கலாம். காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் செய்ய வேண்டும்.
நோய்கள்
குலைநோயைக் கட்டுப்படுத்த, நோய் எதிப்புத்திறனுள்ள கோ. 47 இரகத்தைப் பயிரிடலாம். 0.2% சூடோமோனாஸ் கரைசலைத் தயாரித்து, நடவு செய்த 45 நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். இலையுறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 கிலோ ஜிப்சத்தை இடலாம். 5% வேப்பங் கொட்டைச்சாறு அல்லது 3% வேப்பெண்ணய்க் கரைசலைத் தெளிக்கலாம். காட்டாமணக்கு இலைக் கரைசலை, கதிர் இலைப் பருவத்தில் தெளிக்கலாம். இலையுறைக் கருகல் நோய்க்கு, எக்டருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடலாம். 0.2% சூடோமோனாஸ் கரைசலைத் தெளிக்கலாம்.
பாக்டீரிய இலைக்கருகல் நோய்க்கு, 5% வேப்பங் கொட்டைச்சாறு கரைசல் அல்லது 3% வேப்பெண்ணய்க் கரைசலைத் தெளிக்கலாம். 20% பசுஞ்சாணக் கரைசலை, நோய் அறிகுறி தென்படும் போதும், 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். நூற்புழுவைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம்.
மகசூல்
தொடக்கத்தில் அங்கக முறை நெல் சாகுபடியில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தொடர்ந்து சாகுபடி செய்தால் மண்வளம் மேம்பட்டு, மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இம்முறையில் சாகுபடி செலவு குறைந்து வருமானம் கூடுவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது. அங்கக முறையில் விளைந்த நெல்லுக்குக் கூடுதல் விலை கிடைக்கும்.
முனைவர் அ.சோலைமலை,
சோ.மனோகரன், வீ.சஞ்சீவ் குமார், கோ.பாஸ்கர், சு.தாவீது,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.