“அண்ணே.. இந்த ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே…’’
“பயிர்களைச் சேதப்படுத்துவதில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகைய பூச்சிகளைத் தங்களின் உணவாகக் கொண்டு அழிக்கும் வேலையை, சிலவகை நுண்ணுயிர்களும் பூச்சிகளும் செய்கின்றன. இவை ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவ்வகையில், இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மைகளைச் செய்கின்றன. இவற்றில், மாவுப்பூச்சி உண்ணிகள், பூச்சி உண்ணிகள், முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், கூட்டுப்புழு உண்ணிகள் எனப் பலவகைகள் உள்ளன.
பொரி வண்டுகள் மற்றும் இவற்றின் புழுக்கள், கிரைசோபா புழுக்கள், கிரிப்டோலிமஸ் ஆகியன, மாவுப்பூச்சிகளைச் சாப்பிட்டு அழிக்கும். சிலந்திகள், கிரைசோபா புழுக்கள், ரெட்யூவிட் வண்டுகள் ஆகியன, பூச்சிகளைச் சாப்பிட்டு அழிக்கும்.
கிரைசோபா புழுக்கள், பிரகானிட் குளவிகள், பொரி வண்டுகள் மற்றும் இவற்றின் புழுக்கள், ரெட்யூவிட் வண்டுகள், கிரிப்டோலிமாஸ் வண்டுகள் ஆகியன, பயிர்களுக்குத் தீமையைச் செய்யும் பூச்சிகளின் முட்டைகளை உண்டு அழிக்கும்.
கிரைசோபா புழுக்கள், டிரைக்கோகிரம்மா குளவியினங்கள், ரெட்யூவிட் வண்டுகள், பெத்தலிட் குளவிகள், பொரி வண்டுகள் மற்றும் இவற்றின் புழுக்கள், வைரஸ், பாக்டீரியா ஆகியன, பயிகளுக்குக் கெடுதலைச் செய்யும் பூச்சிகளின் புழுக்களை உண்டு அழிக்கும். யூலோபிட் குளவிகள், பயிர்களை அழிக்கும் கூட்டுப் புழுக்களைத் தின்று அழிக்கும்…’’
“சரிண்ணே… இதை எப்பிடிண்ணே பயன்படுத்துறது?…’’
“காய்கறிப் பயிர்கள் பூக்கும் சமயத்தில், ஜப்பானிக்கம் ஒட்டுண்ணி அல்லது டிரைக்கோகிரம்மா குளவி அல்லது கைலோனிஸ் ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு 2 சி.சி. என்னுமளவிலும், பிரகானிட் குளவிகளை ஏக்கருக்கு 10 புட்டிகள் என்னுமளவிலும், 7-10 நாள் இடைவெளியில் 4-6 முறை பயன்படுத்த வேண்டும்…
நெல்லில் இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஜப்பானிக்கம் ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு 2 சி.சி. என்னுமளவில், 10-15 நாள் இடைவெளியில் நான்கு தடவை பயன்படுத்த வேண்டும்…
கரும்பில் இடைக்கணுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, டிரைக்கோகிரம்மா குளவிகளை, ஏக்கருக்கு 1 சி.சி. என்னுமளவில், 3-4 ஆம் மாதம் முதல், 15 நாள் இடைவெளியில் எட்டு முறை பயன்படுத்த வேண்டும்… கரும்பில் நுனிக்குருத்துப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கைலோனிஸ் ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு 1 சி.சி. என்னுமளவில், 8-9 ஆம் மாதத்தில் இருந்து 15 நாள் இடைவெளியில் 4-6 முறை பயன்படுத்த வேண்டும்… இது குறைந்த செலவில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எளிய முறை. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. நஞ்சற்ற உணவுப் பொருள்களை விளைவிக்கத் துணை புரிவது…’’
“ரொம்ப நன்றிண்ணே…’’
பசுமை