கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020
இலேயஸ் கைனென்சிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரம், செம்பனை, எண்ணெய்ப்பனை, ஆப்பிரிக்க எண்ணெய்ப்பனை எனவும் அழைக்கப்படும். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட் இதன் தாயகமாகும். உலகிலேயே அதிகளவில், அதாவது, 3-25 ஆண்டுகள் வரையில் எண்ணெய்யைத் தரும் தாவரம் இதுதான்.
நிலத்தேர்வு
நீர் வசதி இருக்க வேண்டும். நிலத்தைப் பொறுத்துத் தயாரிப்பு முறையும் வேறுபடும். காடு மற்றும் தரிசு நிலத்தைப் பண்படுத்த வேண்டும். குன்றுகள் மற்றும் சரிவான நிலத்தில் படிகளை அமைத்து மண்ணரிப்பைத் தடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 7-8 கோணச் சரிவு நிலத்தில் 3-4 மீட்டர் நீளத்தில் படிகளை அமைக்க வேண்டும். பள்ளம் மற்றும் நீர்த்தேக்க வயலில் நல்ல வடிகால் இருக்க வேண்டும்.
இடைவெளி
ஒரு எக்டரில் 143 மரங்களை வளர்க்கலாம். இதற்கு மேல் கூடினால், நீர், சத்துகள், சூரியவொளி ஆகியன போதியளவில் கிடைக்காமல் மகசூல் குறையும். 143 மரங்களை விடக் குறைந்தால், மரங்களின் மகசூல் கூடினாலும் ஒட்டுமொத்த மகசூல் குறையும். எனவே, சமப்பக்க முக்கோண முறையில் 9 மீட்டர் இடைவெளியில் கன்றுகளை நட வேண்டும். நன்கு வெய்யில் கிடைக்க, வடக்கு-தெற்கு வரிசையில் நட வேண்டும். சதுர நடவு முறையை விட, இம்முறையில் 15 கன்றுகளைக் கூடுதலாக நடலாம்.
நில நடவு வடிவ முறை
கிழக்கு மேற்காக ஒரு அடிமட்டக்கோடு M-ஐ, சரியாக 46.8 மீட்டர் நீளத்தில் குறிக்க வேண்டும். இது, 7.8×6 மீட்டர் அளவில் ஏழு வரிசைகளுக்குப் பயன்படும். இந்த மொத்த இடத்தையும் இணைத்து A1 A2 கோடுகளை வடக்கு-தெற்கில் ஏற்படுத்த வேண்டும். 9 மீட்டர் இடைவெளி உள்ள சங்கிலி மூலம் ஏனைய வரிசைகளைக் குறிக்க வேண்டும். கம்பியின் முதல் குறியை M1இல் உள்ள முதல் குச்சியில் பதித்து, ஏழாவது குறியை அடுத்த கடைசியில் உள்ள M2இன் நாலாம் குறியுடன் இணைத்துக் குச்சிகளை நட வேண்டும். பிறகு, கம்பியில் உள்ள எல்லாக் குறிகளிலும் குச்சிகளை நட வேண்டும். இப்படி, அடுத்த ஏழு வரிசைகளை ஏற்படுத்திக் குச்சிகளை நட்டு முடிக்கலாம்.
மற்றொரு முறையில் அடிமட்டக்கோடு M-ஐ வடக்கு-தெற்காக, நிலத்தின் ஒரு மூலையில் ஏற்படுத்தி, 9 மீட்டர் இடைவெளியில் குச்சிகளை நட வேண்டும். இந்தக் கோட்டிலிருந்து இடக்கோணத்தில் M1 கோட்டை, கிழக்கு மேற்காகக் குறிக்க வேண்டும். 7.8 மீட்டர் இடைவெளியில் இக்கோட்டில் குச்சிகளை இட வேண்டும். இத்தகைய கோட்டை M2 எதிர்ப் பகுதியில் ஏற்படுத்த வேண்டும். 4.5 M இடைவெளியில் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட சங்கிலி மூலம் M2, M3, M4 வரிசைகளில் கிடத்தி, குச்சிகளைச் செருக வேண்டும். ஒத்த நிறங்களை இணைத்தால் 9 மீட்டர் இடைவெளி கிடைக்கும். சங்கிலியின் முதல் நிறத்தை M1 கோட்டின் 2 ஆம் குச்சியிலும், கடைசி நிறத்தை M2 கோட்டின் இரண்டாம் குறியிலும் கிடத்தி, 4.5 மீட்டர் இடைவெளியில் குச்சிகளை இட வேண்டும். இப்படி எல்லா வரிசைகளிலும் செய்து முடித்ததும் அடுத்த பகுதியிலும் இதே முறையில் குச்சிகளை நட வேண்டும்.
குழி
குழி 60x60x60 செ.மீ. இருக்க வேண்டும். நடவுக்கு முன்பே குழிகளைத் தோண்டி ஆறவிட வேண்டும். இதனால், குழியிலுள்ள புழுக்கள், கிருமிகள் மற்றும் பூச்சிகள் சூரிய வெப்பத்தால் அழியும். கரிசல் மற்றும் களர் நிலத்தில் 1x1x1 மீட்டர் அளவில் குழிகளைத் தோண்டி, 40 செ.மீ. வரை செம்மண் கலந்த தொழுவுரத்தை இட்டால் மண்ணின் தன்மை மாறும்.
நாற்றின் வயது
10-14 மாதக் கன்றுகளை நட வேண்டும். இவ்வகையில், டெனிரா கன்று 1-1.3 மீட்டர் உயரத்திலும், பருத்தும், 1-15 இலைகளுடன் இருக்கும். முதிர்ந்த கன்றுகளை நட்டால் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பெரிதாக வளரும் இலைகளைச் சற்று நறுக்கி நிழலைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வித்திலைப் பண்புள்ள இதன் முதிர்ந்த கன்றுகள் கூட நட்டதும் துளிர்த்து வளரும்.
நடவுக்காலம்
ஆண்டு முழுதும் நடலாம். மழைக்காலத்தில் போதிய நீர், தட்பவெப்பம் கிடைப்பதால் கன்றுகள் நன்றாக வளரும். கோடையில் நட்டால், தேவையான பாசனத்துடன், கன்றுகளைச் சுற்றிச் சணப்பையை நட்டு வெப்பத்தைத் தணிக்க வேண்டும்.
நடவு முறை
நாற்றங்காலில் இருந்து எடுக்கும் கன்றுகளை உடனே நட்டுவிட வேண்டும். நாள் கணக்கில் நடாமல் வைத்திருக்கக் கூடாது. நடும்போது குழிக்கு 250 கிராம் டிஏபி அல்லது ராக்பாஸ்பேட் மற்றும் 50 கிராம் போரேட் குருணையைக் கலந்து இட வேண்டும். நாற்றுப்பையை நீளவாக்கில் வெட்டி, நாற்று மண்ணுடன் நட வேண்டும். பிறகு, தரையிலிருந்து 25 செ.மீ. ஆழம் வரை மண்ணை நிரப்ப வேண்டும். காற்றில் கன்றுகள் சாயாமலிருக்க, கொஞ்சம் ஆழமாக நட வேண்டும். கன்றுகளின் கழுத்துப் பகுதியில் மண் தேங்கி, அழுகல் ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின்செய் நேர்த்திகள்
வட்டப்பாத்தி: கன்றுகளை நட்ட பிறகு, முதலாண்டில் 1 மீட்டர், இரண்டாம் ஆண்டில் 2 மீட்டர், மூன்றாம் ஆண்டில் 3 மீட்டர் சுற்றளவில் வட்டப் பாத்திகளை அமைக்க வேண்டும். குருத்தில் மண் இருக்கக் கூடாது. பாத்திகளில் உறிஞ்சு வேர்கள் நிறைய இருப்பதால், களைகள் இருக்கக் கூடாது.
பூக்கள்: நட்டு 14-18 மாதங்களில் வெவ்வேறு சுழற்சிகளில் பூக்கத் தொடங்கும். ஒவ்வொரு மரத்திலும் வெவ்வேறு பகுதிகளில் ஆண் பூவும் பெண் பூவும் உருவாகும். ஒரு சுழற்சியில் ஆண் பூக்களும், அடுத்ததில் பெண் பூக்களும் அதிகமாகத் தோன்றும். சில மரங்களில் பெண் பூக்கள் குறைவாக உருவாவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சராசரியாக ஆண்டுக்கு 10-12 பழக்குலைகள் ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் நிலையில், ஒரு சில மரங்களில் ஏற்படும் இழப்பு இயல்பாகவே சரியாகி விடும்.
ஆண் பூக்கள் மிகுவதற்கான காரணங்கள்: போதிய நீர் கிடைக்காத நிலை மற்றும் நீண்ட இடைவெளியில் பாசனம் செய்தல். போதிய உரங்களைச் சரியான காலத்தில் இடாமலிருத்தல். தேவையின்றி மட்டைகளை வெட்டுதல். மரங்களுக்கு அருகில் ஆழமாக உழுது வேர்களைச் சேதமாக்குதல்.
பூக்களை நீக்குதல்: இளமரங்களில் தோன்றும் பூக்களை உடனே கையினால் நீக்கிவிட வேண்டும். இப்படிப் பூக்களை நீக்குவது ஆப்லேசன் எனப்படும். தொடக்கத்தில் சிறியளவில் குலைகள் உருவாகி, எண்ணெய்யும் குறைவாகக் கிடைப்பதால் பூக்கள் நீக்கம் அவசியம். போதிய வேர்களுடன் அடிமரம் பருத்து வீரியமாக வளரவும் பூக்களை நீக்குவது அவசியமாகும்.
பூக்குலை வெளியே தெரிந்ததும் அதை எளிதில் நீக்கி விடலாம். முதிர்ந்து வளர்ந்த பூக்களை உளி போன்ற ஆயுதத்தால் அகற்றலாம். இப்படி, ஒரு மாத இடைவெளியில், மரங்களின் வளர்ச்சியைப் பொறுத்து 2.5-3 ஆண்டுகள் வரை பூக்களை நீக்க வேண்டும்.
மகரந்தச் சேர்க்கை: காற்று மற்றும் எலடோபியஸ் காமருனிக்கஸ் கூன் வண்டுகளால் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்கும். காற்று மகரந்தச் சேர்க்கையால் போதிய காய்ப்பிடிப்பு ஏற்படுவதில்லை. ஆகவே, தோப்பில் கூன் வண்டுகளைப் பெருக்க வேண்டும்.
மட்டை நீக்கம்: மரத்தில் மட்டைகள் நிறைய இருந்தால் பழக்குலைகள் நன்கு வளர்ந்து மகசூல் கூடும். அறுவடையின் போது வெட்டப்படும் 1-2 மட்டைகளுடன், காய்ந்த மற்றும் நோயுற்ற மட்டைகளையும் நீக்க வேண்டும். மழைக்காலத்தில் மட்டைகளை நீக்கினால், வெட்டுப் பகுதியில் நுண்ணுயிர்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கா.அருண்குமார்,
த.சுமதி, தோட்டக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.