கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் காய்கறிகள் உற்பத்திப் பரப்பு 3% ஆகும். அதில் பெரும்பாலும் நாற்று நடவு முறையே கையாளப்படுகிறது. இந்த நாற்றுகள் வளமாக இருக்கச் சத்து மேலாண்மை மிகவும் அவசியம். நாற்றங்காலில் சத்து மேலாண்மை என்பது, நாற்றுகளை நடவு செய்வதற்கு முன், நாற்றங்காலில் போதிய ஊட்டங்களைச் சரியான அளவில், சரியான முறையில் கொடுப்பதாகும். நடவுக்குப் பிறகு நிலத்தில் சத்து மேலாண்மையில் கவனம் செலுத்துவதைப் போல, நாற்றங்காலிலும் கவனமாக இருத்தலாகும்.
பயிரின் வளர்ச்சிக்கு, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, ஜிங்க், காப்பர், போரான், மாலிப்டினம், குளோரைடு ஆகிய 16 சத்துகள் மிகவும் அவசியம். இவற்றில் ஒன்று குறைந்தாலும் பயிரின் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கும்.
இவற்றில், கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் காற்று மண்டலத்திலிருந்தும், மற்ற சத்துகள் மண்ணிலிருந்தும் கிடைக்கின்றன. தழை, மணி, சாம்பல், கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகியன அதிகமாகவும், ஏனையவை குறைவாகவும் தேவைப்படுகின்றன. எனவே, நிலத்தில் நாற்றுகள் நன்கு வளர, நாற்றங்காலில் சத்து மேலாண்மை அவசியம்.
ஊடகங்களைத் தயாரித்தல்
நாற்றங்காலில் நாற்றுகளை வளர்க்கப் பல்வேறு வகையான ஊடகங்கள் உள்ளன. இருந்தாலும் நம்மிடத்தில் அல்லது அருகில் கிடைக்கும் பொருள்கள் மூலமே தரமான நாற்றுகளை உருவாக்கலாம். ஊடகங்களில் கரிமச்சத்து நிறைந்திருக்க வேண்டும். காற்றோட்டம் நன்கு கிடைக்கும் வகையில் பொலபொலப்பாக இருக்க வேண்டும். இதனால் வேர்கள் நன்கு வளரும். அதிக நீர்ப்பிடிப்புத் தன்மை இருக்க வேண்டும். நல்ல வடிகாலும் இருக்க வேண்டும்.
அமில காரத்தன்மை நடுநிலையாக அல்லது சற்று முன் பின் இருக்கலாம். ஏனெனில், அமில காரத் தன்மையால் சத்துக்குறை ஏற்படும் போது, நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் வளர்வதில் தடையேற்படும். இந்த ஊடகத்தை, loam என்னும் தோமிலி மண் மற்றும் மண்புழு உரம் அல்லது இலைமட்கு மற்றும் புண்ணாக்கை அடிப்படையாகக் கொண்ட பொருள்களை வைத்துத் தயாரிக்க வேண்டும். ஒரு பங்கு தோமிலி மண் மற்றும் ஒரு பங்கு மட்குக் கலவையால் ஊடகத்தைத் தயாரிப்பது நல்லது. தோமிலி மண்ணில் களி மிகுந்திருந்தால், அதில் இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு மட்கு உரத்தைச் சேர்க்க வேண்டும்.
சத்து மேலாண்மை
நாற்றங்காலில் நேரடியாக உரத்தை இடக்கூடாது. ஏனெனில், நாற்றிலுள்ள சிறிய வேர்களால் சத்துகளை உறிஞ்ச இயலாது. எனவே, இலைகளில் தெளிக்க வேண்டும். பாலிபீடு அல்லது அதற்கு இணையான சத்து ஊடகத்தைத் தெளிக்கலாம். கரையும் உரமான பாலிபீடில் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டங்கள் அடங்கியுள்ளன. எனவே, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் பாலிபீடு வீதம் கலந்து, 15-20 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
பாலிபீடு ஊட்டக் கலவையில், நைட்ரஜன் 21%, பாஸ்பரஸ் 21, பொட்டாசியம் 21, இரும்புச்சத்து 1000 பி.பி.எம்., மாங்கனீசு 500 பி.பி.எம்., போரான் 200 பி.பி.எம்., ஜிங்க் 150 பி.பி.எம்., காப்பர் 110 பி.பி.எம்., மாலிப்டீனம் 70 பி.பி.எம். ஆகியன உள்ளன.
இப்படி, நாற்றங்காலில் சத்து மேலாண்மையைக் கடைப்பிடித்தால், தரமான நாற்றுகளை உருவாக்கி, நல்ல மகசூலை அடையலாம்.
முனைவர் வெ.தனுஷ்கோடி,
முனைவர் நூர்ஜஹான் அ.கா.அ.ஹனீப்,
முனைவர் ச.ஜெ.விஜயலலிதா, முனைவர் கோ.அமுதசெல்வி,
வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.