நாமக்கல் நகரில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், மார்ச் 18, 19, 20, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பச்சை பூமி மாத இதழ் சார்பில், விவசாயம் மற்றும் கோழிப்பண்ணைக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில், பாரம்பரிய விவசாயம் முதல் நவீன விவசாயம் வரையிலான அரங்குகள் இடம் பெற்று இருந்தன. உழவு, விதைப்பில் தொடங்கி அறுவடை வரைக்கும் பயன்படும், விதைகள், உரங்கள், மருந்துகள், நவீன இயந்திரங்கள், விவசாயக் கருவிகள் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு உதவும் ஏராளமான சிறப்பு அரங்குகள் இடம் பெற்று இருந்தன.
நாமக்கல் பகுதியில் கோழிப் பண்ணைகள் நிறைந்திருப்பதால், இப்பண்ணை சார்ந்த அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக, குஞ்சு பொரிப்பான், கோழி வளர்ப்புக் கருவிகள், கோழிகளுக்கான சத்து மருந்துகள், நோய் மருந்துகள் நிறைந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.
தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பால்வளத் துறை, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், கனரா வங்கி சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. வீட்டுத் தேவைப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ அரங்குகளும் இடம் பெற்று இருந்தன.
இப்படி, விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருவோர் மட்டுமின்றி, சிறுவர் முதல் பெரியவர்கள் வரையான அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பச்சை பூமியின் கண்காட்சி அமைந்திருந்தது. எனவே, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் என, பலதரப்பட்ட மக்கள் இந்தக் கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
மேலும், விவசாயிகள் பயனடையும் வகையில், கண்காட்சியில் தினம் ஒரு பயிற்சி வீதம் மூன்று பயிற்சிகள் நடத்தப்பட்டன. 18 ஆம் தேதி வெள்ளிக் கிழமை, குறைந்த செலவில் நிறைந்த மகசூலை எடுப்பதற்கான உத்திகள் என்னும் தலைப்பில், நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.நிதீஸ் அவர்கள் நடத்திய பயிற்சி இடம் பெற்றது.
19 ஆம் தேதி சனிக்கிழமை, கோழிப் பண்ணையை மேம்படுத்த உதவும் அறிவியல் சார்ந்த ஆலோசனைகள் என்னும் தலைப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் பி.மோகன் அவர்கள் நடத்திய பயிற்சி இடம் பெற்றது.
20 ஆம் தேதி சனிக்கிழமை, விவசாயப் பொருள்களுக்கான சிறந்த சந்தை வாய்ப்புகள் என்னும் தலைப்பில், நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் என்.குமாரசாமி அவர்கள் நடத்திய பயிற்சி இடம் பெற்றது. இந்த மூன்று நாள் பயிற்சிகளிலும் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
மேலும், நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி சார்பில் அரங்கை அமைத்து, அக்கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், விவசாய உத்திகளைப் பல்வேறு செயல் விளக்கங்களாக விவசாயிகளுக்குச் செய்து காட்டினர். அதைப்போல, ஊரகத் தோட்டக்கலை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த, துறையூர் இமயம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கண்காட்சிக்கு வந்திருந்து, இயற்கை வேளாண்மை சார்ந்த செயல் விளக்கங்களை விவசாயிகளுக்குச் செய்து காட்டினர்.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, கண்காட்சியில் தன்னார்வத்துடன் பங்கேற்றுப் பணியாற்றிய வல்லுநர்கள் மற்றும் மாணவர்களைப் போற்றும் வகையில், பச்சை பூமி, பாராட்டுச் சான்றிதழை வழங்கி அவர்களைச் சிறப்பித்தது.
மேலும், பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில், கண்காட்சியின் மூன்று நாட்களிலும், கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கிராமிய மணம் கமழும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புறக் கலைகளை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தல் நோக்கில் இயங்கி வரும், திண்டுக்கல் களம் கலைப்பட்டறை மற்றும் நாட்டுப்புறம் தொலைக்காட்சி சார்பில், இந்த மண் மணம் வீசும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
2021 அக்டோபர் 1, 2, 3 ஆகிய நாட்களில் ஒட்டன்சத்திரம் அபி மஹாலில் நடைபெற்ற, டிசம்பர் 2, 3, 4 ஆகிய நாட்களில் இராஜபாளையம் ஆனந்தா கார்டனில் நடைபெற்ற கண்காட்சிகளைப் போலவே, நாமக்கல் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பச்சை பூமியின் இந்தக் கண்காட்சியும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
பச்சை பூமி
கண்காட்சி காணொளிகள்: