கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கலப்புத் தீவன HP 8

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

டர்தீவனம் என்பது, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமைக் குருணை, அரிசிக் குருணை ஆகிய தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, சோயா, தேங்காய் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் புண்ணாக்கு வகைகள், அரிசி மற்றும் கோதுமைத் தவிடு வகைகள், உளுத்தம் பருப்பு, பச்சைப் பருப்பு, கொண்டைக்கடலைக் குருணை வகைகள், வெல்லப்பாகு, உப்பு, தாதுப்புக் கலவை ஆகியவற்றைச் சரியான அளவுகளில் கலந்து தயாரிப்பதாகும்.

அதாவது, கிடைக்கும் நல்ல மூலப் பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே கலப்புத் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். இவற்றில் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும் பொருளை மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 2-3 மாவுச்சத்துப் பொருள்களைச் சேர்ப்பது மிகவும் நல்லது. மிகவும் பழைய மற்றும் பூஞ்சைத் தாக்குதல் உள்ள பொருள்களை, கால்நடைத் தீவனக் கலவையில் சேர்க்கக் கூடாது.

தீவன மூலப்பொருள்களை நீரில் ஊற வைத்து, அவற்றில் மணல் ஏதும் இருந்தால், அதை நீக்கிய பின்பே சேர்க்க வேண்டும். ஏனெனில், தீவனத்தில் உள்ள மணல், அத்தீவனத்தின் செரிக்கும் தன்மையைப் பாதிக்கும். மேலும், கால்நடைகளுக்கு வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். தரமான தாதுப்புக் கலவையைச் சேர்க்க வேண்டும். தயாரித்த கலப்புத் தீவனத்தை 10-15 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.

அளிக்கும் முறை

இரண்டரை லிட்டர் பால் கொடுக்கும் மாட்டுக்கு ஒரு கிலோ கலப்புத் தீவனத்தை அளிக்கலாம். இதன்படி, தினமும் 10 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டுக்கு 4 கிலோ கலப்புத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இரண்டரை லிட்டர் பாலைத் தரும் மாட்டுக்கு, பாலுற்பத்திக்கு என்று அடர் தீவனத்தைக் கொடுக்கத் தேவையில்லை. உடல் பராமரிப்புக்குக் கொடுக்கப்படும் 1.5 கிலோ அடர் தீவனமே போதுமானது. 2.5 லிட்டருக்கு மேல் பாலைத் தரும் மாட்டுக்கு, கூடுதலாகக் கறக்கும் ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலுக்கு ஒவ்வொரு கிலோ அடர் தீவனம் வீதம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

கறவை மற்றும் சினையாக இருக்கும் மாட்டுக்கு, பாலுக்காகக் கொடுக்கப்படும் அடர் தீவனத்துடன், கருவிலுள்ள கன்றின் வளர்ச்சிக்காக, ஏழு மாத மாதம் முதல், 1-1.5 கிலோ தீவனத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். கறவையும் சினையும் இல்லாத வெற்றுப் பசுவுக்கு 1.5 கிலோ கலப்புத் தீவனம் போதும். அடர் தீவனத்தில், தாதுப்புக் கலவை, சாதா உப்பு இல்லாமலிருந்தால், தினமும் இந்த இரண்டையும் தலா 30 கிராம் வீதம் சேர்க்க வேண்டும்.   

கோ-2, கோ-3 போன்ற பசுந்தீவனத்தை, கறவையைப் பொறுத்து, தினமும் 15 கிலோ வரை அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம், பசும்புல்லைக் கொடுத்த பிறகு, வைக்கோல் அல்லது சோளத்தட்டையை, மாட்டின் தேவைக்கு ஏற்ப அளிக்க வேண்டும். முடிந்த வரையில், பசும்புல் மற்றும் தட்டை வகைகளை இரண்டு அங்குலம் அளவில் நறுக்கிப் போடுவது நல்லது. ஏனெனில், மாடுகள் நறுக்கிய பசும்புல் மற்றும் தட்டைகளைச் சிறிதளவில் கூட வீணாக்காமல் சாப்பிடும். மேலும், இவை நன்கு செரிக்கும்.

ஒரு கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்புக்கு 20 லிட்டர் வீதம் எடுத்து ஊற வைத்து. அதில் தெளிந்த நீரைத் தினமும் ஒரு லிட்டர் வீதம் அளித்தால், மாடுகளுக்கு வேண்டிய சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். பண்ணையில் குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக, கறவை மாடுகளுக்கு, முதலில் அடர் தீவனம், பிறகு பசுந்தீவனம், இறுதியில் வைக்கோல் அல்லது காய்ந்த புல்லைக் கொடுக்கலாம்.

தீவனக் கலவையை ஊறவைத்து அல்லது அளவாக நீரைச் சேர்த்துக் கொடுக்கலாம். தீவனத் தட்டைகளை நறுக்கிக் கொடுக்க வேண்டும். தீவனங்களைத் திடீரென்று மாற்றக் கூடாது. மாடுகளுக்கு எப்போதும் சுத்தமான நீரையே கொடுக்க வேண்டும்.  தினமும் ஒரு மாட்டுக்கு அதன் எடையில் பத்தில் ஒரு பங்கு நீர் தேவைப்படும். பாலுற்பத்திக் காலத்தில் மூன்று மடங்கு நீர் தேவைப்படும். இவ்வகையில், ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்குச் சுமார் 80 லிட்டர் குடிநீர் தேவைப்படும்.

இப்படி, விவசாயிகள் அவரவர் வீட்டிலேயே தரமான கலப்புத் தீவனத்தைத் தயாரித்து, பசும்புல் மற்றும் சோளத்தட்டை, வைக்கோலை அளித்து வந்தால், கொழுப்புச் சத்து மிகுந்த பாலை அதிகளவில் பெற்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.


கலப்புத் தீவன MEENALOSHANI

முனைவர் வெ.மீனலோசனி,

முனைவர் கு.ஜெயந்தி, மரு.அ.அருள்ஜோதி, கால்நடை மருத்துவ

அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading