உடல் நலம் காக்கும் சிறுதானியங்கள்!

சிறுதானியங்கள் millets

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

யிர்களின் வாழ்வுக்கு உணவே பிரதானம். மக்களின் நாகரிக வாழ்வின் முதற் புள்ளியே உழவுத் தொழில் தான். வயிற்றுப் பசிக்காக வேட்டையாடிய மனித இனம், விவசாயத்தைத் தொடங்கிய பிறகு தான் வளர்ச்சிப் படிகளில் காலடி எடுத்து வைத்தது. தனது உணவுக்காக, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என, எண்ணற்ற உணவுப் பொருள்களை விளைவித்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சிறுதானியங்கள்.

மாவுச்சத்தைத் தரும் உணவு வகைகளில் தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் அடங்கும். நெல், கோதுமை, பார்லி மற்றும் மக்காச்சோளம் தானிய வகையில் சேர்க்கப்படும். சோளமும் கம்பும் சிறு தானியங்கள் எனப்படும். இங்கே நாம் விரிவாகப் பார்க்க இருக்கும் சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி மற்றும் பனிவரகு எனப்படும் ஆறு முக்கியப் பயிர்கள் உள்ளன.

கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, வரகு, குதிரைவாலி போன்ற பயிர்கள், வறண்ட நிலப்பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் மானாவாரியாக அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. நீர்வளம் இல்லாத புன்செய் நிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதால் இவற்றைப் புன்செய்ப் பயிர்கள் எனவும் அழைக்கலாம். மேலும், உரம், பூச்சி மருந்து என எதுவும் இல்லாமல் இவை சாகுபடி செய்யப்படுகின்றன.

சிறுதானியங்கள் பெரும்பாலும் பருவமழைக்கு ஏற்ப மானாவாரியில் தான் விளைகின்றன. தானியங்களைக் காட்டிலும் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், இவற்றுக்குச் சிறுதானியங்கள் என்று பெயரிட்டனர். இருப்பினும் இவற்றில் அளப்பரிய சத்துகள் இருப்பதால், சத்தான தானியங்கள் என்று அழைப்பதே சாலப் பொருந்தும்.

சிறுதானியங்கள் வறண்ட நிலங்களில் வறட்சி, வெப்பத்தைத் தாங்கி வளரும். குதிரைவாலியும் வரகும் ஓரளவில் வெள்ளம் அல்லது புயலால் தேங்கி நிற்கும் நீரையும் தாங்கி வளரும். சிறுதானியங்களை மலைவாழ் மக்களும் கிராமப்புற மக்களும் அதிகளவில் உணவாகக் கொள்கின்றனர். தானிய உணவாக, மாவுப் பொருள்களாகப் பயன்படுகின்றன. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் வளர்ப்புப் பறவைகளின் தீவனமாகவும் பயன்படுகின்றன.

சிறுதானியங்களின் சிறப்புகள்

அரிசி, கோதுமை, பார்லி போன்ற தானியங்களை விட, சிறுதானியங்கள் அதிக ஆற்றலைத் தரவல்லவை. இவற்றில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, புரதம், வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மற்ற தானியங்களில் இருப்பதை விட, இவற்றில் பைட்டிக் அமிலம் குறைவாக உள்ளது. இவற்றைச் சீரான உணவாகக் கொண்டால், உடல் பருமன், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். இவற்றில் இரண்டாம் வகை நீரிழிவைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இவற்றிலுள்ள நார்ச்சத்து புற்றுநோய் மற்றும் பித்தக் கற்கள் வராமல் தடுக்கும்.

கேழ்வரகு

ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் ஊட்டமளிக்கும் சத்து மிகுந்த மலிவான உணவாகும். கேழ்வரகு பார்ப்பதற்குக் கடுகைப் போல இருந்தாலும் அதன் நிறம் கேழ்வரகு என்று காட்டிக் கொடுத்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது ஏற்படும் எலும்பு சார்ந்த சிக்கல்களுக்குச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை முக்கியக் காரணமாகும். அந்த வகையில், நாம் உண்ணும் உணவுகளில் சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவு கேழ்வரகு தான். நூறு கிராம் கேழ்வரகில் 344 மி.கி. சுண்ணாம்புச் சத்தான கால்சியம் உள்ளது.

இத்தகைய கேழ்வரகைத் தொடர்ந்து உண்ணும் போது, உடல் இயங்கத் தேவையான கால்சியம் கிடைக்கும். நாற்பது வயதுக்கு மேல் மூட்டு சார்ந்த நோய் என்பது இயல்பாகி விட்டது. இந்நிலையில், எலும்பு வளர்ச்சிக்கும், பல் உறுதிக்கும், இரத்தச் சிவப்பணுக்கள் எலும்புக் கூழில் இருந்து உருவாகவும் கேழ்வரகு துணை புரியும். சிறு வயதிலிருந்தே இவ்வகை உணவுகளை உண்ணும் போது, மூட்டுவலி, மூட்டு வீக்கம் போன்ற எலும்பு சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். கொழுப்பைத் தடுக்க, அதிக எடையைக் குறைக்க ஏற்றது கேழ்வரகு. இதை உணர்ந்த சந்தை, மாவாக, சேமியாவாக, முறுக்காகக் கேழ்வரகை விற்பனை செய்கிறது.

கேழ்வரகு மாவிலிருந்து கூழ், களி, புட்டு, பக்கோடா, அடை, தோசை, பணியாரம், இட்லி, முறுக்கு, லட்டு போன்ற பண்டங்களைச் சமைக்கலாம். குறிப்பாக, களியில் கருப்பட்டியைப் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் உண்பர். இதிலுள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து உடல் வெப்பத்தைச் சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்ணையும் ஆற்றும்.

சிறுதானியங்களில், கேழ்வரகில் தான் கால்சியம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் பல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள் விரைவில் குணமாகும். கேழ்வரகில் கொழுப்புக் குறைவாகவும், தாதுக்கள், அமிலங்கள், நியாசின், நார்ச்சத்து, பாஸ்பரஸ், தயமின் ஆகியன அதிகமாகவும் உள்ளன. அரிசி, கோதுமையுடன் ஒப்பிடும் போது, மாவுச்சத்தும், கொழுப்பும் கேழ்வரகில் குறைவாகும்.

இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதால் நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு ஏற்ற உணவாகும். உடலிலுள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எலும்பை உறுதிப்படுத்தும்; இரத்தத்தைச் சுத்தம் செய்யும்; மலச்சிக்கலைப் போக்கும். கேழ்வரகில் உள்ள டிரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், பசி உணர்வைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

சேதமடைந்த திசுக்களைச் சரி செய்யவும், உடலின் நைட்ரஜன் நிலையைச் சமப்படுத்தவும் உதவும். கேழ்வரகில் உள்ள லெசித்தின், மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், கல்லீரல், நுரையீரலில் உள்ள கூடுதல் கொழுப்பை வெளியேற்றி, இரத்தத்தில் அதிகமாக உள்ள கொழுப்பைக்  குறைக்கும். இதிலுள்ள இரும்புச்சத்து, இரத்தச் சோகையைக் குணப்படுத்தும்.

கேழ்வரகின் மிக முக்கியப் பண்பு உடலை அமைதியாக வைப்பதாகும். இதனால் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்ற மனவழுத்தச் சிக்கல்கள் தவிர்க்கப்படும். முதுமையைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் பயன்படும். நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்.

சாமை

பாசன நிலங்கள் வறண்டு கிடக்கும் இந்தக் காலத்தில் சாமை போன்ற சிறுதானியங்கள் நமக்கெல்லாம் ஓர் அட்சய பாத்திரமாகும். இப்பயிர், பருவ மழையை மட்டுமே நம்பி விளைகிறது. நீர்த் தேவையும் குறைவு.  நிலத்தடி நீரை உறிஞ்சி அடுத்த தலைமுறைக்கு நீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுச் சூழலுக்கும், மாறிவரும் பருவநிலை மாற்றத்துக்கும் ஏற்றவை சிறுதானியப் பயிர்கள் தான். இவற்றில் சாமைக்கு முக்கிய இடமுண்டு.

சர்க்கரை நோயாளிகள் அதிகமுள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது.  இந்நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கியத் தேவை நார்ச்சத்து. இந்தச் சத்துமிக்க சாமையை உண்டால் நீரிழிவு கட்டுப்படும். இரத்தத்தில் சர்க்கரை கூடாமல் தடுக்கவும் சாமை ஏற்றது.

நெல்லரிசியைக் காட்டிலும் சாமையில் ஏழு மடங்கு நார்ச்சத்து உள்ளது. நோயாளிகள், முதியவர்கள் மற்றும் அதிக நேரம் பேருந்தில் பயணம் செய்வோர்க்கு மலச்சிக்கல் முக்கியச் சிக்கலாகும். நோய்கள் அனைத்துக்கும் மூலமாக விளங்கும் மலச்சிக்கலைத் தீர்க்க சாமை உதவும்.

மற்ற சிறுதானியங்களில் உள்ளதை விட இதில் இரும்புச்சத்து அதிகம். இது இரத்தச்சோகை வருவதைத் தடுக்கும். வயிற்றுச் சிக்கல்களுக்குச் சாமையரிசி நல்ல மருந்தாகத் திகழ்கிறது. தாதுப் பொருள்களை அதிகரிப்பதால் உடலிலுள்ள உயிரணுக்களும் பெருகுகின்றன.

தினை

குறுகிய வயதில், அதாவது, 80-90 நாட்களில் விளையும் தினையில் நிறையச் சத்துகள் உள்ளன. புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் போன்ற, உடல் இயக்கத்துக்குத் தேவையான சத்துகள் உள்ளன. மேலும், வைட்டமின்கள், தாதுப்புகள், மாவுச்சத்து அதிகளவில் உள்ளன. தினை சூடு மிக்கது. எனவே, இது உடல் வெப்பத்தை அதிகமாக்கும். பசியை உண்டாக்கும்.

இதயத்தைப் பலப்படுத்தும்; கபநோயைத் தீர்க்கும்; வாயுத் தொல்லையைப் போக்கும். குழந்தை பெற்ற தாய்மார்க்குத் தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. இத்தகைய சிறப்பான உணவைத் தவிர்த்து, நம் உணவுப் பழக்கத்துக்கும், நலத்துக்கும், உடலுக்கும் பொருத்தமற்ற, உணவுக்கும், அதன் ருசிக்கும் அடிமையாகி அதன்பின் ஓடுவது நியாயமா?

பன்னாட்டுச் சந்தையில் பொட்டலமாகக் கட்டிப்போட்ட உணவுகள், நம் கைக்கு வருமுன் அவை பயணிக்கும் தூரம் வெகு அதிகம். பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களோ மிக மிக அதிகம். இந்த உணவுகளை உண்பதும், மருந்தைப் போல விளங்கும் நம் உணவுகளை மறந்ததும் தான், நம் நாட்டில் மருத்துவ மனைகள் கூடுவதற்குக் காரணம்.

வரகு

வரகு 3-4 மாதப் பயிராகும். தானியம் கடினமான, முதிர்ந்த, விடாப்பிடியான உமியுடன் இருக்கும். இதை அறுவடை செய்து நன்கு காய வைத்த பிறகு தான் உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பூசணத்தால் ஏற்படும் நச்சு, தானியத்தில் இருக்க வாய்ப்புண்டு. அதனால் தான் காலங் காலமாக வரகைச் சாப்பிடும் பழங்குடி மக்கள், வரகை உரலில் இட்டு, நன்கு குத்தி, உமியை நீக்கிய பிறகு, மாட்டுச் சாணச் சாம்பலுடன் கலந்து மீண்டும் ஒருமுறை தீட்டி விட்டுச் சமைப்பார்கள். இதனால் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

வரகு உமி கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். இளம் வரகுத் தாள்களைக் கால்நடைகள் விரும்பி உண்ணும். அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வரகு வைக்கோலும் தீவனமாகப் பயன்படும். இந்த வைக்கோலை மட்க வைத்து உரமாகவும் இடலாம்.

வரகில் நார்ச்சத்து மிகுந்தும், பைட்டிக் அமிலம் குறைந்தும் இருக்கும். இதில், புரதம், இரும்பு, கால்சியம், சுண்ணாம்பு ஆகிய சத்துகள் உள்ளன. வைட்டமின் பி அதிகமாக இருக்கும். வரகுணவு விரைவில் செரித்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். உடல் எடையைக் குறைக்கும். வரகுணவை உண்டால் சர்க்கரை குறையும்; மூட்டுவலி குறையும்; மார்பு வலி நீங்கும். நெடுநாள் காய்ச்சலில் இருப்போரும் வரகுணவை உண்ணலாம். வரகு இனிப்பும் குளிர்ச்சியும் மிக்க உணவாகும்.

குதிரைவாலி

குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் பயிராகும். இதில், கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. மாவுச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகியனவும் உள்ளன. குதிரைவாலியில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரையைக் கட்டுப்படுத்த, மலச்சிக்கலைப் போக்க, கொழுப்பைக் குறைக்க, செரிக்கும் வேலை நடக்கும் போது, இரத்தத்தில் இருந்து மெதுவாக குளுக்கோசை வெளியிட உதவுகிறது.

குதிரைவாலித் தாள் மிகச் சிறந்த கால்நடைத் தீவனமாகும். சில நேரங்களில் கால்நடைத் தீவனத்துக்காக என்றே சாகுபடி செய்யப்படும். பச்சைத் தீவனமாக, காய வைத்த தாளாக இதைக் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.

பனிவரகு

சிறுதானியங்களில் மிகவும் குறைந்த நாட்களில், அதாவது, 65-75 நாட்களில் விளைவது பனிவரகு. தானியம் சற்றுப் பெரியதாக இருக்கும். பனி ஈரத்திலேயே விளைவதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது. மேலும், தானியம் வரகைப் போல் இருப்பதாலும், அரிசி வெள்ளையாக அல்லது பழுப்பாக இருப்பதாலும், வழக்கத்தில் இது பனிவரகு எனப்படுகிறது.

பனிவரகில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மாவுச்சத்து, தாதுகள், கொழுப்பு, கலோரிகள், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய சத்துகள் உள்ளன.

மானாவாரிக்கு ஏற்றபடி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பல்வேறு உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த விதைகளை விதைத்தால் உழவர்கள் பெரும்பயன் அடையலாம். மேலும், தங்களின் விளைச்சலில் இருந்தே அடுத்த சாகுபடிக்குத் தேவையான விதைகளையும்  சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


சிறுதானியங்கள் ANANDHI 1

முனைவர் கி.ஆனந்தி,

முனைவர் அ.நிர்மலா குமாரி, முனைவர் கு.சத்தியா,

முனைவர் மா.இராஜேஷ், முனைவர் வெ.மணிமொழிச் செல்வி,

சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading