தித்திக்கும் தேனின் மருத்துவக் குணங்கள்!

மருத்துவ HP fb29cabc2bf6fa8f0c6b92f0ea428995

னிதர்களுக்குப் பயன்படும் பூச்சியினங்களில் முக்கியமானது தேனீ. இது, நூற்றுக்கணக்கான மலர்களைத் தேடிச் சென்று அவற்றிலிருந்து மதுரத்தைச் சேகரிக்கிறது. பிறகு, அதைத் தேனாக மாற்றி தேனறைகளில் தனக்காகவும் தமது சந்ததிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது. மகத்தான மருத்துவக் குணங்கள் நிறைந்த தேனை நமது முன்னோர்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தி வந்தனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

மன அழுத்தம் குறையும்

தினமும் 15 மி.லி. தேனை உண்டு வந்தால், மன அழுத்தமும் சோர்வும் குறையும். தேனையும் மாதுளைப் பழச்சாற்றையும் தலா 15 மி.லி. வீதம் எடுத்து, தினமும் இருவேளை உணவுக்கு உண்டு வந்தால், உடல் புத்துணர்வுடன் இருக்கும். தினமும் 15 மி.லி தேனை உண்டால் நல்ல தூக்கம் வரும்.

கண் பார்வை

தொடர்ந்து 10 மி.லி. தேனையும், 10 மி.லி. கேரட் சாற்றையும் கலந்து உண்டு வந்தால் கண் பார்வை மேம்படும். 5 கிராம் இலவங்கப்பட்டைத் தூளையும், 5 மி.லி. தேனையும் நீரில் கலந்து, வாயைக் கழுவி வந்தால், வாய் துர்நாற்றம் குறையும். தேனைக் கொண்டு ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்து வந்தால் பல்வலி குறையும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் இதைப் பயன்படுத்தக் கூடாது.

தொண்டைப் புண்

ஐந்து மி.லி. தேன், பத்து மி.லி. எலுமிச்சைச் சாறு, ஒரு சிட்டிகைக் கருமிளகுத் தூள் ஆகிய இந்த மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, அறிகுறிகள் மறையும் வரை, சில மணி நேரத்துக்கு ஒருமுறை, விழுங்கினால் தொண்டைப் புண் மறையும்; தொண்டையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். 10 மி.லி. தேனுடன் சம அளவில் இஞ்சிச்சாற்றைக் கலந்து தினமும் இருமுறை பருகினால், இருமலும் சளியும் குறையும்.

மூச்சுக்குழாய் ஆஸ்துமா

கருமிளகு 2.5 கிராம், தேன் 5 மி.லி., இஞ்சிச்சாறு 5 மி.லி. ஆகிய இந்த மூன்றையும் கலந்து, தினமும் மூன்று முறை பருகி வந்தால், ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்கலாம். 5 மி.லி. தேனில், 10 மி.லி. தாய்ப்பாலைக் கலந்து மூக்குத் துளையில் விட்டால் விக்கல் நிற்கும். இது, இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறையாகும்.

வயிற்றுப் புண்

பத்து மி.லி. நீரில் 5 மி.லி. தேனைக் கலந்து, தினமும் இருவேளை உணவுக்கு முன் உண்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். திப்பிலி, மற்றும் பொரியைத் தலா 2.5 கிராம் வீதம் எடுத்து, 15 மி.லி. தேனில் சேர்த்து அரைத்துப் பருகினால் வாந்தி நின்று விடும்.

நீரிழப்பு

நீரில் தேனைச் சேர்த்துக் குடித்து வந்தால், உடலில் ஏற்படும் நீரிழப்புச் சரியாகும். தினமும் மூன்று முறை சாப்பிடும் முன்பு 5 மி.லி. தேன் வீதம் பருகி வந்தால், வயிற்றுப்போக்கு நின்று விடும். 15 மி.லி தேனை, 120 மி.லி. கோரைக்கிழங்குத் தூளில் சேர்த்துப் பருகினால், கடும் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

படுக்கையில் நனைதல்

தினமும் உறங்குவதற்கு முன் 5 மி.லி. பழைய தேனை அருந்தினால் படுக்கையில் நனைதல் நிற்கும். 20 மி.லி நெல்லிச்சாறு மற்றும் 6 கிராம் நெல்லிக் கூழுடன் 5 மி.லி. தேனைக் கலந்து, தினமும் இருமுறை உண்டு வந்தால், அடிக்கடி சிறுநீர்க் கழிதல் குணமாகும்.

நீரிழிவு நோய்

ஒரு சிட்டிகை பருத்தி விதைத் தூளுடன் 5 மில்லி தேன் கலந்து பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். வாத நோயின் தொடக்கத்தில், 240 மில்லி தேனை 960 மில்லி நீரில் கலந்து, அது 960 மில்லியாக வரும் வரை கொதிக்க வைத்து, தினமும் இருமுறை 30 மில்லி வீதம் அருந்தி வந்தால் வாதநோய் குணமாகும். இது இலங்கையில் உள்ள ஸ்ரீ ஆயுர்வேத போதனா வைத்திய சாலை மருத்துவ முறையாகும். இது, யுனானி மருத்துவத்தில் மாவுல் அசால் எனப்படுகிறது.

உடல் பருமன்

தேனில் ஓராண்டு வரை ஊற வைத்த பூண்டை, தினமும் காலை உணவுக்கு முன் ஒரு பல் வீதம் சாப்பிட்டு வரலாம். காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 10 மில்லி தேன், 5 மில்லி எலுமிச்சைச் சாறு கலந்து பருகி வந்தால், இரத்தம் சுத்தமாகி, கொழுப்பின் அளவு குறையும். 30 மில்லி தேன் மற்றும் தேங்காய் வினிகரை 100 மில்லி நீரில் கலந்து, தினமும் இருமுறை பருகினால் கீல்வாதம் மற்றும் மூட்டுவலி குறையும்.

வெட்டுக்காயம், தீக்காயம்

புதிய தேனை நேரடியாகத் தடவினால், வெட்டுக் காயம் மற்றும் தீக்காயம் மறைந்து போகும். புதிய தேனைக் காயத்தின் மீது தடவி வந்தால், சொறி சிரங்கு குணமாகும். தேனில் செஞ்சந்தன மரச் சாம்பலைச் சேர்த்துப் பூசினால், காயம் மற்றும் தோல் ஒவ்வாமை குணமாகும்.

கருவுறுதல்

ஒரு டம்ளர் ஆட்டுப்பாலில் 5 மில்லி தேனைச் சேர்த்துப் பருகினால், கருவுறுதல் மென்மையடையும். காலை உணவுக்கு முன் 15 மில்லி தேனைக் குடித்து வந்தால், குமட்டல் நின்று விடும். 120 மில்லி ஆடாதொடைச் சாறுடன் 15 மில்லி தேனைக் கலந்து பருகி வந்தால், மஞ்சள் காமாலை மற்றும் இரத்தக் கோளாறுகள் குணமாகும். புதிய இலைகள் மற்றும் பூக்களைத் தலா 60 கிராம் எடுத்து, நன்றாக இடித்து, 100 மில்லி நீரைச் சேர்க்க வேண்டும்.

உடல் எரிச்சல் மற்றும் தாகம்

தோல் நீக்காத அரிசியைக் கழுவிய நீர் 100 மில்லி, தேன் 15 மில்லி, சர்க்கரை 5 கிராம், சந்தனத்தூள் 10 கிராம் ஆகியவற்றை நன்கு கலந்து, தினமும் இருமுறை உணவுக்குப் பிறகு பருகி வந்தால், உடல் எரிச்சல் உணர்வும் தாகமும் குறையும்.

அழகு செய்யும் தேன்

தேனும் தேன் மெழுகும் அழகுத் துறையில் பெருமளவில் பயன்படுகிறது. சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை 5 மில்லி தேனில் கலந்து முகத்தில் தடவிக் கழுவி வந்தால் முகம் அழகாகும். 5 கிராம் பாதாம் தூளை 5 மில்லி தேனில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் சுத்தமாகும்.

முகத்தின் மென்மையை மேம்படுத்த, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு தேக்கரண்டி கிளிசரின், கால் கிண்ணம் கடலை மாவு ஆகியவற்றை நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

முகத்தின் அழகை மேம்படுத்த, 1-2 தேக்கரண்டி தேனை, மூன்றில் ஒரு கப் நன்றாக அரைத்த ஓட்சில் கலந்து, அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரைச் சேர்த்து கலக்க வேண்டும். இதை, நன்றாகச் சுத்தம் செய்த முகத்தில் சமமாகப் பூச வேண்டும், 15 நிமிடம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஊற விட்டு, மெல்லிய துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தை துடைத்த பிறகு, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முகம் ஈரப்பதமாக இருக்க, இரண்டு தேக்கரண்டி தேனுடன் இரண்டு தேக்கரண்டி பாலைச் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரிலும், பிறகு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவ வேண்டும்.

முகப்பரு குணமாக, பருக்களில் தேனைத் தடவி வர வேண்டும். வெடித்த உதடுகளின் மீது தேனை தடவி வந்தால் வெடிப்புகள் மறையும். 5 மில்லி தேனை நான்கு கிண்ண இளம் வெந்நீரில் கலந்து முடியைக் கழுவி வந்தால், முடி பளப்பளப்பாகும். 10 மில்லி ஆலிவ் எண்ணெய்யை, 5 மில்லி தேனில் கலந்து முடியில் பூசி, 15 நிமிடம் கழித்து முடியை அலசி வந்தாலும் முடி மினுமினுக்கும்.

தேன் இயற்கையாகக் கிடைக்கும் விலை மதிப்பற்ற பொருள். மருத்துவக் குணமிக்கது. இதை மருந்தாகவும், சத்துப் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட தேனைப் பயன்படுத்தி வந்தால், எந்தவொரு பக்க விளைவும் இல்லாமல் நலமாகவும், தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பாகவும் வாழலாம்.


மருத்துவ ARUL KUMAR

கோ.அருள்குமார்,

வீ.செ.அனுஷா, பெ.அ.சரவணன், பா.ச.சண்முகம், பூச்சியியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading