கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021
முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இக்கனிகளைத் தரும் மா சாகுபடி இந்தியாவில் முக்கிய இடத்தில் உள்ளது. பழங்களின் அரசனாக விளங்கும் மாம்பழம், உத்திரப்பிரதேசம், ஆந்திரம், தெலுங்கானா, பீகார், மராட்டியம், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் அதிகளவில் விளைகிறது. உலகிலேயே மா உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஏற்றுமதியாகும் பழங்களில் மாவானது, அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பணப்பயிராகவும் விளங்குகிறது. இந்தியாவில் 2,263 ஆயிரம் எக்டரில் உள்ள மாமரங்கள் மூலம் 19,687 ஆயிரம் மெட்ரிக் டன் பழங்கள் விளைகின்றன. இது மொத்தப் பழப்பயிர் உற்பத்தியில் 21.20% ஆகும்.
உற்பத்தித் திறனில் உத்திரப்பிரதேசம் எக்டருக்கு 17.1 மெட்ரிக் டன் என முதலிடத்தில் உள்ளது. ஏற்றுமதிக்கான இரகங்கள் உற்பத்தியில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 160.97 ஆயிரம் எக்டரில் உள்ள மாமரங்கள் மூலம் 1156.99 ஆயிரம் மெட்ரிக் டன் பழங்கள் விளைவதால், உற்பத்தித் திறனானது, எக்டருக்கு 7.2 மெட்ரிக் டன் என உள்ளது.
பூக்கும் மற்றும் காய்க்கும் தன்மை
பூப்பது மற்றும் காய்ப்பதில் மற்ற பழப்பயிர்களைக் காட்டிலும் மாறுபட்டது மா. தட்பவெப்ப நிலை, மாமரம் பூப்பதையும் காய்ப்பதையும் வெகுவாகப் பாதிக்கும் காரணியாக விளங்குகிறது. எனவே, மாவில் பூப்பதும் காய்ப்பதும் சவாலான நிகழ்வாக இருக்கிறது.
பொதுவாக, மா இரகங்கள் பூக்கும் மற்றும் காய்க்கும் தன்மையை வைத்துப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: பருவம் தவறாமல் காய்க்கும் இரகங்கள். ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் காய்க்கும் இரகங்கள்.
நிலையற்ற காய்ப்புள்ள இரகங்கள். குறைந்தளவில் காய்க்கும் இரகங்கள். இடைப் பருவத்தில் காய்க்கும் இரகங்கள். மாவில் காய்க்கும் பருவம் என்பது டிசம்பரில் தொடங்கி மார்ச் வரை நீளும். இப்பருவம், ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மாறும்.
பூ மஞ்சரிகள் தோன்றும் முறை
மாவானது அனகார்டியேசியே என்னும் தாவரக் குடும்பத்தில், அயல் மகரந்தச் சேர்க்கை அதிகமாக நடக்கும் பயிராகும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு முக்கிய வணிகப் பயிர் முந்திரி. மாவில் பூ மஞ்சரிகள், கடந்த பருவக் கிளைகளில் தான் தோன்றும்; புதிய இளம் தளிர்களில் தோன்றாது.
எனவே, மாவில் சரியான பருவத்தில் கவாத்து மற்றும் உரமிடல் நடைபெற வேண்டும்.
பருவம் தவறி இந்த வேலைகளைச் செய்தால் பழுப்பு நிற இளந்தளிர்கள் அதிகமாகத் தோன்றிப் பூ மஞ்சரிகள் உருவாவதைத் தடுத்து விடும். மாவில் ஜூலை, ஆகஸ்ட்டில் கவாத்து செய்து உரமிட்டு நீரைப் பாய்ச்சுவதன் மூலம் அல்லது மழை பெய்யும் நிலையில்,
புதிதாகத் தோன்றும் இளந்தளிர்கள் அடுத்த 6-7 மாதங்களில் முற்றி, கடந்த பருவத் தளிர்களாக மாறி ஜனவரி முதல் மார்ச் வரை பூ மஞ்சரிகளை உற்பத்தி செய்யும்.
மேலும், மாவின் அயல் மகரந்தச் சேர்க்கையானது வீட்டு ஈக்கள் மூலமே அதிகமாக நடைபெறுகிறது. மூன்றாம் அடுக்குக் கிளைகளை மட்டுமே லேசாகக் கவாத்து செய்ய வேண்டும்.
இதனால் மூன்றாம் அடுக்கில் இருந்து புதிய பழுப்பு நிற இளந்தளிர்கள் தோன்றி, 6-7 மாதங்களில் முற்றி, கடந்த பருவத் தளிர்களாக மாறி, பூ மஞ்சரிகளை தோற்றுவிக்கும்.
பருவமற்ற காலக் காய்ப்பின் அவசியம்
சரியான பருவக் காலங்களில் கவாத்து செய்தல், உரமிடுதல், பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தால், பருவக் காலங்களில் மிகச் சிறப்பாகப் பூ மஞ்சரிகள் தோன்றிக் காய்த்து, உற்பத்தியும் உற்பத்தித் திறனும் உயரும்.
தமிழகத்தில் ஒரே பருவத்தில் உற்பத்தி அதிகமாகி, சந்தையில் நல்ல விலை கிடைக்காமல் போவதால், தமிழகத்தில் அதிகளவில் மாவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நட்டமடையும் சூழல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, பருவமற்ற காலக் காய்ப்பு அல்லது இடைப்பருவக் காய்ப்பு என்னும் தோட்டக்கலை உத்தியைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக, பருவமற்ற காலங்களில் விளைய வைக்கலாம்.
இந்த மாங்காய்களுக்குக் கிழக்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகளுக்கு அதிகமான விலை கிடைக்கும். இதனால், மா சாகுபடியானது நிறைய வருவாயைத் தரும் தோட்டக்கலைப் பயிராக மாறும்.
பருவமற்ற காலக் காய்ப்பு உத்தி
பருவமற்ற காலக் காய்ப்பு உத்தியைச் செயல்படுத்த, முக்கிய வினையூக்கியான போக்லோபியூட்ரஜோல் அல்லது கல்தார் அல்லது பேர்லோ என்னும் மருந்தைப் பயன்படுத்தலாம்.
இந்த ஊக்கிகளை அனைத்து மா இரகங்களிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி பருவமற்ற காலக் காய்ப்பை உறுதி செய்யலாம். இந்த உத்தியைச் செயல்படுத்த 5-6 வயதுள்ள மாமரங்கள் உகந்தவை.
மேலும், பாசன வசதியுள்ள தோப்பாக இருக்க வேண்டும். ஜூலை ஆகஸ்ட்டில் மரங்களைச் சுற்றி 20-30 செ.மீ. தள்ளி, பரவலாக 8 முதல் 10 இடங்களில் 10 செ.மீ. ஆழத்தில் கடப்பாரையால் துளையிட வேண்டும்.
பிறகு, ஒவ்வொரு துளையிலும் 10 மில்லி பேகலோபியூட்ரஜோலை ஊற்றி, உடனே பாசனம் செய்ய வேண்டும்; அல்லது போதிய ஈரம்பதம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முன்னதாக, பருவக்காலக் காய்ப்பு முடிந்த மரங்களில், உடனே கவாத்து செய்து உரமிட்டு, ஜூலை ஆகஸ்ட்டில் இந்த உத்தியைக் கையாள்வதன் மூலம், பருவமற்ற காலமான அக்டோபர் நவம்பரில் அதிகக் காய்களை மகசூலாகப் பெற முடியும்.
இதற்கு, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், மா உற்பத்திக் கூட்டமைப்பு விவசாயிகள் இந்த உத்தியைக் கடைப்பிடித்து நல்ல இலாபம் பெற்று வருகிறார்கள்.
முனைவர் இரா.ஜெகதீசன்,
முனைவர் அ.சுப்பையா, முனைவர் சு.வேல்முருகன்.