கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022
இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டின் கரும்பு உற்பத்திப் பரப்பில் பாதி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் மராட்டியம் உள்ளது. கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.
எக்டருக்கு நூறு டன்னுக்கு மேல் மகசூல் எடுக்கும் தமிழகம், உற்பத்தித் திறனில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இதன் விளைச்சல் திறன் எக்டருக்கு 111 டன்னாக உள்ளது. தமிழகத்துக்கு அடுத்த இடங்களில் கர்நாடகமும், மராட்டியமும் உள்ளன. பீகாரில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. நாட்டில், ஜவுளிக்கு அடுத்தபடியாக விவசாயம் சார்ந்த தொழில்களில் இரண்டாம் இடத்தில் சர்க்கரைத் தொழில் உள்ளது.
உலகின் சர்க்கரை உற்பத்தி ஆதாரங்களாகக் கரும்பும் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் உள்ளன. கரும்பிலிருந்து 60% சர்க்கரை கிடைக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் ஆசியா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஐரோப்பாவும் உள்ளன. ஆசியாவில் கரும்பில் இருந்தும், ஐரோப்பாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருந்தும் அதிகளவில் சர்க்கரை கிடைக்கிறது. கரும்பு நன்கு வளர, வெப்பமண்டல அல்லது மிதவெப்ப மண்டலக் காலநிலை தேவை. அதாவது, ஆண்டு ஈரப்பதம் குறைந்தது 60 செ.மீ. இருக்க வேண்டும். கரும்பு, மிகவும் திறமையான ஒளிச்சேர்க்கை கொண்ட C4 வகைத் தாவரமாகும்.
கரும்பு, சத்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் பயிராகும். அதற்குத் தொடர்ந்து சத்துகளை அளித்தால் நல்ல மகசூல் கிடைக்கும். எந்தச் சத்துப் பற்றாக்குறையாக உள்ளதோ, அது பயிரில் பலவித அறிகுறிகளை ஏற்படுத்தும். அதைச் சரியாகக் கண்டறிந்து இட்டால் நல்ல விளைச்சலைப் பெறலாம்.
தமிழ்நாட்டில் கரும்பு, செம்பொறை, வண்டல், கரிசல், களர் உவர் நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஆனால், கரும்புக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் இந்த மண் வகைகளில் இருப்பதில்லை. கரும்புக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்து ஆகியன பேரூட்டங்கள் ஆகும். இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின், போரான், மாங்கனீசு போன்றவை நுண் சத்துகள் ஆகும். இவை, போதியளவில் கரும்புக்குக் கிட்டா நிலையில், அவற்றின் குறைபாடுகள் பயிரில் தென்படும்.
தழைச்சத்துப் பற்றாக்குறை
இது, கரும்புக்குத் தேவைப்படும் முக்கியச் சத்தாகும். இளம்பயிர் வேகமாக வளர்ந்து தூர் கட்டவும், இலைகள் பச்சையாகவும் நன்றாகவும் வளர்வதற்குக் காரணமாக இருப்பது தழைச்சத்தாகும். தழைச்சத்துக் குறையுள்ள நிலத்தில் வளரும் கரும்பு, தூர்க்கட்டுமானம் இன்றியும், இலைகள் வெளுத்தும், சிறுத்தும், எண்ணிக்கையில் குறைந்தும் இருக்கும். அடியிலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். முதிரும் முன்பே காய்ந்து விடும். கரும்பு நன்கு வளராமல், மெலிந்து ஒல்லியாக இருக்கும். வேர்கள் நீண்டும் மெலிந்தும் இருக்கும்.
தீர்வு: எக்டருக்கு 600 கிலோ யூரியாவை இடலாம். ஆனால், இடுகின்ற தழைச்சத்தில் பெரும்பகுதி ஆவியாகவும், நீரிலும் அடித்துச் செல்லப்படுவதால், இதைத் தவிர்க்க, 440 கிலோ யூரியாவை 80 கிலோ வெப்பம் புண்ணாக்குத் தூளில் கலந்து ஒருநாள் வைத்திருந்து இட வேண்டும். அடுத்து, இரண்டு மற்றும் மூன்றாம் தவணையில், மண்ணில் இடுவதற்குப் பதிலாக, 90 மற்றும் 110 நாளில் தலா 64 கிலோ யூரியாவை 875 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் தெளிக்கலாம். இதனால், 231 கிலோ யூரியா மிச்சமாகும். ஒரு லிட்டர் நீருக்கு 10-20 கிராம் யூரியா வீதம் கலந்து, ஒருவார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
மணிச்சத்துப் பற்றாக்குறை
இளம் கரும்பின் வளர்ச்சிக்கு மணிச்சத்து அதிகளவில் தேவைப்படும். இது குறைந்தால், பயிருக்குத் தேவையான புரதங்கள் பெரிதும் பாதிக்கப்படும். அடியிலைகள் நீலப்பச்சை நிறத்தில் இருக்கும். இது, நுனியிலை மற்றும் ஓரங்களில் பரவியிருக்கும். இலைகள் குறுகியிருக்கும். வேர், தண்டு மற்றும் இலைகள் வளராமல் குட்டையாகவும், தண்டு மெலிந்தும் இருப்பதால் வளர் முனை வேகமாகச் சாய்ந்து விடும். துார் விடுதல் குறைவாக இருக்கும்.
தீர்வு: எக்டருக்கு 413 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும். இலைகளில் 2% டி.ஏ.பி. கரைசலைத் தெளிக்க வேண்டும். இதற்கு, ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. வீதம் எடுத்து 20 லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை நன்கு கலக்கி வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இருபது லிட்டர் கரைசலை 200 லிட்டர் நீரில் கலந்து பயிர்கள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். இப்படி, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
சாம்பல் சத்துப் பற்றாக்குறை
கரும்பு சுவாசிக்க, செல்கள் பிரிந்து வளர, சர்க்கரைப் பொருள்களை இலைகளில் உற்பத்தி செய்து தண்டுக்கு எடுத்துச் செல்ல, கரும்பில் சர்க்கரை உற்பத்தியாக, பயிருக்கு நோயெதிர்ப்பு சக்தி கிடைக்க, சாம்பல் சத்து உதவுகிறது. இது குறைந்தால், பயிரின் வளர்ச்சித் தடைபடும். தண்டுகள் மெலிவாக இருக்கும். அடியிலைகளில் ஆரஞ்சு கலந்த மஞ்சள் புள்ளிகள் தோன்றும். பிறகு, அவை வெளிர் பச்சைப் புள்ளிகளாக மாறும். பின்பு அவை பழுப்பாகிக் காய்ந்து சருகைப் போல மாறிவிடும்.
இலைகளின் நடுப்பகுதி மற்றும் நடுநரம்பின் மேற்பகுதி சிவப்பாக மாறும். அடியிலைகள் மஞ்சளாக மாறும். ஓரங்கள் காய்ந்து விடும். பொதுவாகக் கரும்பில் 14-17 வீரிய இலைகள் உற்பத்தியாகும். ஆனால், பாதிக்கப்பட்ட கரும்பில் 5-7 இலைகள் மட்டுமே உருவாகும்.
தீர்வு: ஏக்கருக்கு 30 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 5 டன் தொழுவுரத்தை இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்குப் பத்து கிராம் பொட்டாசியம் குளோரைடு வீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க வேண்டும்.
சுண்ணாம்புப் பற்றாக்குறை
இதனால், நடுப்பகுதிகளில் சிறிய, வெளிர் பச்சைப் புள்ளிகள் தோன்றும். பின்பு, அவை கருஞ்சிவப்புக் கலந்த பழுப்பு நிறமாக மாறும். பயிர் நன்கு வளராமல், மெல்லிய தண்டுடன் வலுவிழந்து இருக்கும். இதைச் சரி செய்ய, ஏக்கருக்கு 40 கிலோ ஜிப்சத்தை இட வேண்டும்.
மெக்னீசியப் பற்றாக்குறை
இதனால், இளம் இலையின் நரம்பிடைப் பகுதிகளில் மஞ்சள் புள்ளிகள் மணிகளைப் போலச் சீராகக் காணப்படும். பிறகு, அவை இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாக மாறி விடும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மெக்னீனியம் சல்பேட் வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை என, இந்த அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.
கந்தகப் பற்றாக்குறை
இதனால், கரும்பின் இளம் இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். தண்டு சிறுத்தும், மெலிந்தும் இருக்கும். இலைப்பரப்புக் குறைந்து விடும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் பொட்டாசியம் சல்பேட் வீதம் கலந்து, இரண்டு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
நுண்சத்து
உயர் விளைச்சல் இரகங்களைப் பயிரிடுவதாலும், நேரடி உரங்களைத் தவிர்த்து விட்டு, காம்ப்ளக்ஸ் உரங்களைத் தொடர்ந்து இட்டு வருவதாலும், நிலத்தில் நுண் சத்துகள் மிகவும் குறைந்து வருகின்றன. இந்தக் குறைகள் எல்லாப் பயிர்களிலும் தெரிகின்றன. இவ்வகையில், கரும்பில் இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற நுண் சத்துகளின் குறைகள், மணல் சார்ந்த மற்றும் சுண்ணாம்பு அதிகமாக உள்ள நிலங்களில் உள்ளன.
இரும்புச்சத்துப் பற்றாக்குறை
இதனால், இளம் இலைகளின் நடுநரம்பு மற்றும் துணை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி இளமஞ்சள் நிறமாகவும், பின்பு வெள்ளையாகவும் மாறும். இது பார்ப்பதற்கு, வெள்ளைக் கோடுகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து நுனி வரை இருப்பதைப் போலத் தெரியும். கணுவிடை சுருங்கி, கரும்பு குட்டையாக இருக்கும். வேரின் வளர்ச்சியும் தடைபடும். இதைச் சரி செய்ய, ஏக்கருக்கு 40 கிலோ ஃபெரஸ் சல்பேட் வீதம் எடுத்து 5 டன் தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். ஏக்கருக்கு 2 கிலோ ஃபெரஸ் சல்ஃபேட், ஒரு கிலோ யூரியா வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கரைத்து, பத்து நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.
துத்தநாகப் பற்றாக்குறை
இந்தக் குறைபாடு, மெளரி நோய் எனப்படும். பயிர்கள் வளராமலும், கணுவிடை சுருங்கியும், கரும்பு குட்டையாகவும் இருக்கும். இலைகளின் நடுநரம்பு வெளிர் பச்சையாகவும், மற்ற பகுதிகள் பட்டை போன்ற மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இலைகளின் நடுவில் பெரிய காய்ந்த கோடுகளும், நடுநரம்பின் வலப்புறம் காய்ந்த புள்ளிகளும் தோன்றும். இதைச் சரி செய்ய, ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை இலைகளில் தெளிக்க வேண்டும்.
போரான் பற்றாக்குறை
இதனால், இலைகளின் நுனியிலிருந்து சுமார் 2-3 செ.மீ. அகலத்தில் அழுகிய பழுப்புப் புள்ளிகள் காணப்படும். இலைகள் மிகவும் சிறுத்தும், வளர்ச்சிக் குன்றியும், குருத்து நீண்டு மஞ்சளாகவும் இருக்கும். வளரும் கரும்பின் நுனிப்பகுதி காய்ந்தும், அதன் பக்கவாட்டில் நிறைய குருத்துகள் தோன்றி ஒரே கொத்தாகவும் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் இலைகளின் இரண்டு பகுதிகளிலும் தோன்றும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போரிக் அமிலம் வீதம் கலந்து பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.
மாங்கனீசு பற்றாக்குறை
இந்தப் பற்றாக்குறை பகாளா பிளைட் எனப்படும். இதனால், இலையின் நரம்பிடைப் பகுதிகளில் பழுப்புத் திட்டுகள் இருக்கும். இவை நாளடைவில் கருஞ்சிவப்பாக மாறிக் கருகியிருக்கும். இதைச் சரி செய்ய, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் மாங்கனீசு சல்பேட் வீதம் கலந்த கரைசலில் விதைக் கரணைகளை ஊற வைத்து நட வேண்டும். மேலும், இந்தக் கரைசலைப் பத்து நாட்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க வேண்டும்.
தாமிரப் பற்றாக்குறை
இதனால், இளம் இலைகள் மஞ்சளாக மாறிச் சிறுத்து விடும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் காப்பர் சல்பேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மாலிப்டினப் பற்றாக்குறை
இதனால், கரும்பின் இளம் இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். தண்டு சிறுத்தும், மெலிந்தும் இருக்கும். இலைப்பரப்புக் குறைந்து விடும். குழிப்புகள் இலை நரம்புகளுடன் சேர்ந்து வளரும். இதைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் சோடியம் மாலிப்டேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
TNAU கரும்பு பூஸ்டர்
தட்பவெப்ப மாற்றம் மற்றும் மண்ணின் சத்துக் குறையால், பல்வேறு சத்து மற்றும் பயிர் வினையியல் குறைகள் தோன்றும். இவற்றைத் தவிர்க்க, TNAU கரும்பு பூஸ்டரைப் பயன்படுத்த வேண்டும். இதனால், கணு இடைவெளி கூடும். கரும்பின் வளர்ச்சியும் எடையும் அதிகமாகும். அதனால், விளைச்சல் 20% வரை மிகும். வறட்சியைத் தாங்கும் தன்மை கரும்புக்குக் கிட்டும்.
பயன்படுத்தும் முறை: ஏக்கருக்கு 4.5 கிலோ தேவைப்படும். கரும்பை நட்ட 45 நாளில் ஒரு கிலோ கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்து 60 நாளில் 1.5 கிலோ பூஸ்டரையும், 75 நாளில் 2 கிலோ பூஸ்டரையும் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தெளிப்பின் போது தேவையான அளவில் ஒட்டும் திரவத்தைச் சேர்க்க வேண்டும். TNAU கரும்பு பூஸ்டர், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வினையியல் துறையில் கிடைக்கும். தொலைபேசி எண்: 0422-6611243. மின்னஞ்சல்: physiology@tnau.ac.in
மண்ணில் சத்துகளின் அளவு இடத்துக்கு இடம் வேறுபடுவதால், மண்ணாய்வு செய்து அதன் முடிவின்படி உரமிடுவது நல்லது. அல்லது பொதுப் பரிந்துரை அளவாக எக்டருக்கு 275 : 62.5 : 112.5 கிலோ வீதம் தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும். கட்டைக் கரும்புக்கு 58 கிலோ தழைச்சத்தைக் கூடுதலாக இட வேண்டும். மேலும், தழை மற்றும் சாம்பல் சத்தை மூன்று பாகமாகப் பிரித்து, கரும்பை நட்ட 30, 60, 90 ஆகிய நாட்களில் வைத்து, மண்ணை அணைத்துப் பாசனம் தர வேண்டும்.
கரும்பில் சத்துக் குறைகளை வருமுன் காக்க, உரப் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும். சத்துக் குறைகள் தெரிந்தால் உடனே அவற்றைச் சரி செய்ய வேண்டும். பேரூட்டங்களை நேரடி உரமாக அளிப்பதே சாலச் சிறந்தது.
முனைவர் இரா.அனிதா,
உதவிப் பேராசிரியர், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்.
முனைவர் கூ.வனிதா, உதவிப் பேராசிரியர்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.