கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது, மேலக்கால் என்ற கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி முருகேசன், வாழைக் கழிவுகளில் இருந்து வீட்டில் பயன்படும் பொருள்களைத் தயாரித்து வருகிறார். தயாரிப்பது மட்டுமின்றி, அவரே வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்து அசத்துகிறார்.
அதாவது, மகசூல் முடிந்து வீணாகும் வாழைகளைத் தீயிட்டு எரிப்பார்கள். அப்படி வீணாகும் வாழைகளைக் கொண்டு பயனுள்ள வகையில் என்ன செய்யலாம் என்பது தான் முருகேசனின் சிந்தனை. இதைப்பற்றி வேளாண் துறை அதிகாரிகளை அணுகிக் கேட்டபோது, அவர்கள், கரும்புச் சக்கையில் இருந்து இதைச் செய்யலாம்; வைக்கோலில் இருந்து அதைச் செய்யலாம் என்றளவில் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
அப்போது தான் முருகேசனுக்குத் தோன்றியது, பிளாஸ்டிக்கில் இருந்து கூடை, பை, நாற்காலி போன்ற பொருள்களை எல்லாம் தயாரிக்கும் போது, அவற்றை, வாழை நாரைக் கொண்டு தயாரிக்க முடியாதா என்று. அதன் விளைவாக ஏற்பட்ட சிந்தனையின் விளைவு, அவரைச் சாதனையாளராக மாற்றியுள்ளது. இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது:
“முதலில் தேங்காய் நார், பருத்தியைக் கொண்டு தான் கயிறு திரிக்க முயன்றேன். பிறகு வாழைநார் நீளமாக இருப்பதால், அதைக் கொண்டு முயற்சித்தேன். விளைவு, வலுவான, நீளமான கயிறு கிடைத்தது. அதைக் கொண்டு கூடை தயாரிக்க எண்ணி, அதற்கான இயந்திரத்தைத் தேடி அலைந்தேன்.
பிறகு நானே, சைக்கிள் ஒன்றை இயந்திரமாக மாற்றினேன். அதைக் கொண்டு உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்வதற்கு, பல நிறுவனங்களில் ஏறி இறங்கினேன். கடைசியாக ஒரு நிறுவனம், எனது பொருள்களை அங்கீகரித்தது. முதலில் 500, ஆயிரம் என்னும் அளவில் தான் எனது உற்பத்தியும் விற்பனையும் இருந்தன.
பிளாஸ்டிக் பொருள்கள் கீழே விழுந்தால் உடையும். ஆனால், எனது வாழை நார்த் தயாரிப்புகள் உடைவதில்லை. இதுதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம். இப்போது, மாதத்துக்குச் சுமார் 5 ஆயிரம் நாற்காலி, இருக்கை, விரிப்பான், பை போன்ற, வீட்டுக்குப் பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்கிறேன். முதலில் போதிய இடவசதி, பண வசதி இல்லை. பிறகு, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் ஆணையத்தை அணுகிப் போராடி, 5 இலட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றேன். அதைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தினேன். ஆரம்பத்தில், 50 பெண்களுக்கு வேலை கொடுத்தேன். இன்றைக்கு 500 பேர் வேலை செய்கிறார்கள்.
வேலைக்கு வரும் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு வசதியைச் செய்துள்ளேன். காப்பீடு வசதியும் உண்டு. பெண்கள் மட்டுமின்றி, சோழவந்தான் பகுதியில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளும் என்னால் பயன் பெறுகிறார்கள். இந்த நிலையில், பிரதமர் மோடி, மனதின் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சி மூலம் என்னைப் பாராட்டியது ஊக்கமாக இருக்கிறது.
இப்போது ஆந்திரா, அசாம், பாட்னா, மத்தியப் பிரதேசம் போன்ற வெளிமாநில உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் உதவினால், எங்களது பகுதியிலேயே ஒரு பெரிய நிறுவனத்தைத் தொடங்கி, ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பேன். அதற்கு அரசுகள் உதவ வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு” என்றார், முருகேசன்.
அவருக்கு, பச்சை பூமியின் வாழ்த்துகளைக் கூறி விடை பெற்றோம்.
மகேஷ்வர சீதாபதி