கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020
கொடுக்காப்புளியின் தாவரவியல் பெயர் பிதகுளோபியம் டல்சி ஆகும். இது பேபேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். இதன் தாயகம் மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோவாகும்.
வளரியல்பு
இம்மரம் நடுத்தர இலைகளுடன் 15-25 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் அகன்ற காம்புடன் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். பூக்கள் வெள்ளையாக, சற்று மணமிக்கதாக, 1.0-1.5 மி.மீ. விட்டத்தில் இருக்கும். அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் காய்க்கும். பிஞ்சுப் பருவத்தில் பச்சை, பழுப்பு நிறத்திலும் முதிர்ந்த நிலையில், சிவப்பு, பச்சை மற்றும் அடர் சிவப்பிலும் காய்கள் இருக்கும். பழங்கள் 10-15 செ.மீ. நீளம், 1.5-2 செ.மீ. அகலத்தில் இருக்கும்.
பயன்கள்
இதில் நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால், தொண்டைச்சளி, நுரையீரல் சளிக்கு இப்பழம் சிறந்த மருந்தாகும். இதில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் தொடர்பான சிக்கல்கள் தீரும். கொடுக்காப்புளிப் பழத்தில் அதிகளவில் உள்ள பொட்டாசியம், இரத்தழுத்தம் மற்றும் மாரடைப்பைத் தடுக்கும். இதன் இலைகள் மற்றும் விதைகளில், 15% புரதச்சத்து உள்ளதால் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. இது வறட்சியைத் தாங்கி வளர்வதால், களர், உவர் நிலம், நீர் தேங்கும் நிலம் மற்றும் மானாவாரி சாகுபடிக்கு மிகவும் உகந்தது.
இரகங்கள்
பிகேஎம் 1: இந்த இரகம் விருதுநகர் மாவட்டம் சூலக்கரை என்னும் உள்ளூர் இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது. அடர் நடவுக்கு ஏற்ற இரகம். ஆண்டுதோறும் சீரான காய்ப்பு, கொத்துக்கு 2-4 காய்கள் வீதம் கொத்தாகக் காய்க்கும். பழம் சுருண்ட நிலையில் பாசிகளைக் கோர்த்ததைப் போல இருக்கும். தோல் இளமஞ்சளாகவும், பழத்தில் இருக்கும் பருப்பு வெள்ளையாகவும், விதைகள் கறுப்பாகவும் இருக்கும். இதிலுள்ள கரையும் திடப்பொருள் 18டி பிரிக்ஸ், பழ இனிப்பு மிட்டாய்த் தயாரிப்புக்கு ஏற்றது. ஒரு மரத்தின் மகசூல் 79 கிலோ வீதம் ஒரு எக்டரில் ஆண்டுக்கு 11.85 டன் மகசூலைக் கொடுக்கும். வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலம், மணற்பாங்கான மற்றும் களர் உவர் நிலங்களிலும் வளரும்.
பிகேஎம் 2: சூலக்கரை என்னும் உள்ளூர் இரகத்திலிருந்து விதையில்லாத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் சீராகக் காய்க்கும் தன்மை மற்றும் கொத்துக்கு 3-4 பழங்களைக் கொண்டது. பழத்தோல் இளஞ்சிவப்பாகவும், சதைப்பகுதி அடர் சிவப்பாகவும், சிறிய விதைகள் கறுப்பாகவும் இருக்கும். நூறு கிராம் பழத்தில் 138 மி.கி. அஸ்கார்பிக் அமிலம், 25.2 மி.கி. ஆன்ந்தோசயனின் மற்றும் கரையும் திடப்பொருள் 13.7டி பிரிக்ஸ் உள்ளன. களர், உவர், நீர் தேங்கும் நிலங்கள் மற்றும் மானாவாரியில் பயிரிட மிகவும் ஏற்ற இரகம்.
இனப்பெருக்கம்
மண் மற்றும் தட்பவெப்பம்: விதை மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையில் இனப்பெருக்கம் செய்யப்படும் கொடுக்காப்புளி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும். கடுமையான வறட்சியையும் தாங்கும். உப்பு நீரிலும் கூட இது நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-9 சதம் இருக்க வேண்டும். வெப்ப மற்றும் மிதவெப்பப் பகுதிகளில் வளரும் இம்மரம், 5-45 டிகிரி செல்சியஸ் வரையான வெப்ப நிலையில் நன்றாக வளரும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு 250-1000 மி.மீ. இருந்தால் போதும்.
நிலம் தயாரிப்பு
தென்மேற்குப் பருவமழை கிடைக்கும் பகுதிகளில் ஜுன் ஜுலையிலும், மற்ற பகுதிகளில் அக்டோபர் நவம்பரிலும் கொடுக்காப்புளி ஒட்டுக்கன்றுகளை நடலாம். 8×8 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, குறைந்தது பத்து நாட்கள் ஆறப்போட வேண்டும். பின்பு குழிக்கு 10 கிலோ மட்கிய தொழுவுரம் எடுத்து மேல்மண்ணையும் கலந்து குழிகளில் நிரப்ப வேண்டும். தொழுவுரத்துடன் குழிக்கு 50 கிராம் அசோஸ்பயிரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாக் கலவையைச் சேர்த்து இடுவது சாலச் சிறந்தது. மேலும், குழிக்கு 100 கிராம் மாலத்தியான், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 100 கிராம் ஜிப்சம் ஆகியவற்றையும் மண்ணுடன் கலந்து இட வேண்டும்.
நடவு செய்தல்
ஒட்டுக் கன்றுகளைப் பையிலுள்ள மண் உதிராமல் எடுத்து ஒட்டுக் கட்டிய பாகம் பூமிக்கு மேலே இருக்குமாறு குழிகளின் நடுப்பகுதியில் நட வேண்டும். பின்னர், வலுவான குச்சிகளைக் கன்றின் இருபுறமும் சேர்த்துக் கட்டி, காற்றினால் சேதமாகாமல் கன்றுகளைக் காக்க வேண்டும். நடவு செய்ததும் நீரைப் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாளில் உயிர் நீர் கொடுக்க வேண்டும். இவ்வகையில் ஒரு எக்டரில் 156 கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.
உரமிடுதல்
தென்மேற்குப் பருவமழை பெய்யும் ஜுன்-ஆகஸ்ட் காலத்தில் உரமிட வேண்டும். நன்கு காய்க்கும் மரங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மரத்துக்கு 60 கிலோ தொழுவுரம் வீதம் இட்டால் மகசூல் கூடும். அல்லது மரத்துக்கு 50 கிராம் வீதம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை எடுத்து, 10-15 கிலோ எருவுடன் கலந்து, செப்டம்பர் அக்டோபரில் இட வேண்டும்.
ஊடுபயிர்கள்
கன்றுகளை நட்ட பிறகு, பயறு வகைகளான மொச்சை, பச்சைப்பயறு, உளுந்து, காய்கறிப் பயிர்களான கத்தரிக்காய், வெண்டை மற்றும் கொத்தவரையை ஊடுபயிராக இட்டால், கூடுதல் வருமானம் பெறலாம்.
பாசனம்
புதிதாக நடவு செய்த கன்றுகளுக்கு முதல் 3 மாதங்கள் வரை 2-3 நாட்கள் இடைவெளியிலும், பிறகு மழையில்லா நிலையில் 7-10 நாட்கள் இடைவெளியிலும் பாசனம் அவசியம். பிறகு இந்த மரங்களை மானாவாரிப் பயிராகப் பராமரிக்கலாம்.
பின்செய் நேர்த்தி
கன்றுகளின் வேர்ச்செடிகளில் இருந்து வளரும் தளிர்களை அவ்வப்போது நீக்க வேண்டும். தரையிலிருந்து 75-90 செ.மீ. உயரம் வரை வளரும் கிளைகளை அகற்றிவிட வேண்டும். காய்ந்த, சேதமுற்ற, குறுக்கும் நெடுக்குமான கிளைகளை நீக்கிவிட வேண்டும். முதல் மூன்றாண்டுகள் வரையில், நன்கு கிளைகள் விட்டுப் படருமாறு மரங்களை வளர்க்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
இலைப்புள்ளி நோய்: இந்த இரகம் இலைப்புள்ளி நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. இலையில் பழுப்பு நிறத்தில் தோன்றும் வட்ட மற்றும் ஒழுங்கற்ற புள்ளிகள் பின்பு நீண்டு இலை முழுவதும் படர்வதால் இலைகள் கருகி உதிர்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேன்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்: அசுவினி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் தாக்குவதால் இலைகள் சுருண்டும், பூக்கள் காய்ந்தும் விடுவதுடன், இலைகளில் பூசணமும் தோன்றும். இதைக் கட்டுப்படுத்த, 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5 சத வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.6 மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது 0.6 கிராம் தயோமீததாயேட் வீதம் கலந்த கரைசலைத் தெளிக்க வேண்டும்.
அறுவடை
நடவு செய்த ஆறு மாதத்திலிருந்து பூக்கள் பூக்கும். அவற்றை உதிர்த்துவிட வேண்டும். அப்போது தான் மரம் பருமனாகவும் வலுவாகவும் வளரும். ஒன்றரை ஆண்டுக்கு மேல் காய்க்க விடலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து நல்ல மகசூலைப் பெறலாம். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் வரையில் மகசூல் மிகுதியாக இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு 75-90 கிலோ மகசூலைத் தரும். இவ்வகையில் ஒரு எக்டரில் 13.48 டன் மகசூல் கிடைக்கும்.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
முனைவர் ஆ.பியூலா, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை.