இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

நிலத்தில் IMG 20180324 WA0017

சாதனை விவசாயி மடத்துப்பட்டி ச.சாமிநாதன் சிறப்புப் பேட்டி

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான் விழாவில், கிருஷி கர்மான் விருதும் இரண்டு இலட்ச ரூபாய் பரிசும் பெற்றவர். இவரது விவசாயம் குறித்தும், தேசியளவில் பரிசு பெற்றது குறித்தும் கேட்டோம். அப்போது இவர் கூறியதாவது:

“எனக்கு ரெண்டரை ஏக்கர் பட்டா நெலமும் மூன்றரை ஏக்கர் கோயில் நெலமும் இருக்கு. நானு சின்னப் பையனா இருக்கும் போதே எங்கப்பா என்னைய மாடு மேய்க்கப் போட்டுட்டாரு. அதனால நானு சரியா படிக்கல. அதுக்குப் பிறகு கொஞ்சம் பெரியாளா ஆனதும் வெவசாயத்துல முழுசா இறங்கிட்டேன். விவசாயத்தைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. எனக்கு மனைவியும் ரெண்டு பிள்ளைகளும் இருக்காங்க.

எந்நேரமும் தோட்டத்துல தான் இருப்பேன். விவசாய வேலைகளை நேரத்துல செய்யணும்ங்கிறதுக்காக, இப்போ தோட்டத்துலயே குடியிருக்கோம். தண்ணி பாய்ச்சுறது மட்டுமில்லாம, பாத்தி போடுறது, களையெடுக்குறதுன்னு இராத்திரியில கூட வேலை செய்வோம். கிணற்றுப் பாசனம் தான். இப்போ ரொம்ப வறட்சியா இருக்கு. அதனால ரெண்டு போர்களப் போட்டேன். ஒண்ணுல தண்ணி கிடைக்கல. ஒண்ணுல தண்ணி இருந்துச்சு. ஆனா பாருங்க, போருக்குள்ள மாட்டியிருந்த நீர் மோட்டாரு, கயிறு அறுந்து உள்ள போயி மாட்டிக்கிருச்சு. அதனால இப்போ பாசனத் தண்ணிக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.

வாழை, பருத்தி, நிலக்கடலை, வெண்டை, மிளகாய்ன்னு நல்லா விவசாயம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு நாளைக்குப் பதினஞ்சு பேர் வேலை செய்வாங்க. 2016 வரைக்கும் விவசாயம் நல்லா இருந்துச்சு. இப்போ தண்ணியில்லாம போனதுனால சிரமமா இருக்கு. தென்னை மரமெல்லாம் பட்டுப்போச்சு. 250 எலுமிச்சை மரங்க இருந்துச்சு. இப்போ ஐம்பது மரங்க தான் இருக்கு. மத்த மரமெல்லாம் செத்துப் போச்சு. கொஞ்சம் மல்லிகைப் பூச்செடிக இருக்கு. இதுதான் இப்போ எங்களைக் காப்பாத்துது. மரவள்ளி கொஞ்சம் நட்டுருக்கோம். இப்பிடி, கஷ்ட ஜீவனமாத் தான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு.

விவசாயத்துல எந்த வேலையைச் செய்தாலும் சரியா செய்வேன். நல்ல விதைகளை வாங்கி விதைப்பேன். இயற்கை உரங்கள நெறையா வாங்கிப் போடுவேன். வருசா வருசம் நெலத்துல ஆட்டுக்கிடை போடுவேன். பயிருல ஏதாவது பூச்சி, நோவு மாதிரி தெரிஞ்சா உடனே விவசாய அதிகாரிகளைப் பார்த்து வெவரம் கேட்டுப் பயிர்களைப் பாதுகாப்பேன். நானு செய்யிற ஒவ்வொரு வேலையிலயும் என் மனைவி ஆதரவா இருப்பாங்க. எங்களோட ஓயாத உழைப்புக்குக் கிடைத்த பலனா, உளுந்துல நெறைய மகசூல் எடுத்ததுக்காக அரசாங்கம் எங்களுக்கு விருதையும் பணப் பரிசையும் குடுத்துச்சு.

அதாவது, விதை வாங்குறது, பயிர்ப் பாதுகாப்புக்கான ஆலோசனைகளைக் கேட்குறதுன்னு, விவசாய அதிகாரிகளோட எப்பவுமே நல்ல தொடர்புல இருப்பேன். அவங்களும் உதவி செய்யிற மனசோட பழகுவாங்க. நிலத்துக்கே வந்து, பயிர்களைப் பார்த்து ஆலோசனை சொல்வாங்க. இந்த வகையில, 2016 ஆம் வருசம் வம்பன் 5 உளுந்து விதையைக் குடுத்து, சாகுபடி செய்யச் சொன்னாங்க. அதனால ஒரு ஏக்கர் நெலத்துல இந்த உளுந்தைப் பயிர் செஞ்சேன்.

சாகுபடி செய்யிறதுக்கு முதல்ல ஆட்டுக்கிடை போட்டு நெலத்தை நல்லா உழுதேன். அப்புறம் தொழுவுரத்தைப் போட்டு மறுபடியும் உழுதேன். அடுத்து, பாத்திப் பிடிக்கிறதுக்கு முன்னால டிஏபியையும், ரெண்டு கிலோ நுண்ணுரத்தையும் அடியுரமா போட்டேன். அதுக்குப் பிறகு, விதைகள் மூலமா நோய்கள் வராம இருக்குறதுக்காகப் பூஞ்சாண மருந்துல 12 மணி நேரம் ஊற வச்சு விதை நேர்த்தி செஞ்சேன். அடுத்து, பயிரு செழிப்பா வளர்றதுக்காக ரைசோபியத்துல விதை நேர்த்தி செஞ்சு, அடிக்கு ஒரு விதைன்னு கொத்திப் போட்டேன்.

செடிகள் நல்லா வரவும் களையெடுத்தேன். உளுந்துல, மஞ்சள் நோய் வராம தடுக்குறதுக்கான மருந்தை வாங்கி அடிச்சேன். பஞ்சகவ்யா வாங்கித் தெளிச்சேன். அதிகாரிகள் வாராவாரம் வந்து பார்த்தாங்க. பூக்குற நேரத்துல பூச்சிகளைக் கட்டுப்படுத்துறக்கு மருந்தடிச்சேன். 15, 30, 45 நாள்கள்ல 19க்கு 19 தெளிப்பு மருந்தை அடிச்சேன். அஞ்சு நாளைக்கு ஒருமுறை, தெளிப்பான் மூலம் தண்ணியைத் தெளிச்சு விட்டேன்.

அதனால, பொதுவா செடிக்கு 30-35 காய்கள் கிடைக்குறது, 60-65 காய்களா கிடைச்சது. காய்கள் நல்லா வெளஞ்சதும் அதிகாரிங்க வந்தாங்க. ஒரு பகுதிய அளந்து, அதுக்குள்ள இருந்த செடிகளை மட்டும் அறுக்கச் சொல்லி, மகசூலை அளந்து பார்த்தாங்க. அதன்படி ஒரு எக்டர் நெலத்துல 1,700 கிலோ உற்பத்தி வந்தது. அப்புறம் ஒருநாள், “பயறு வகை சாகுபடியில நீங்க தான் அதிக மகசூல் எடுத்திருக்கீங்க. அதுக்காக, அரசாங்கம் உங்களுக்கு விருது குடுக்கப் போகுது’’ அப்பிடின்னு சொன்னாங்க.

அதன்படி டில்லிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க நம்ம பிரதமர், பரிசா, ரெண்டு இலட்ச ரூபாயும், கிருஷி கர்மான் விருதும் குடுத்தாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. எங்க உழைப்பும், விவசாய அதிகாரிகளோட ஒத்துழைப்பும் தான் இதுக்குக் காரணம். அதுக்காக அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்’’ என்றார்.

அரசாங்கம் கொடுத்த பரிசும் விருதும் ஓயாத உழைப்புக்குக் கிடைத்த பலன் என்று ச.சாமிநாதன் கூறியபோது நமக்குத் திருக்குறள் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. முயற்சி திருவினையாக்கும்.

அரசுக்குச் சாமிநாதனின் கோரிக்கை!

“எங்க நெலத்துல ரெண்டு ஆழ்துளைக் கிணறுகள் இருக்கு. ஒண்ணுல இப்போ தண்ணி கெடைக்கல. இன்னொரு கெணத்துல கயிறு அறுந்து நீர் மோட்டார் உள்ளே போயிருச்சு. அதனால பாசனத் தண்ணிக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஆகையால எங்க நெலத்துல இன்னொரு ஆழ்துளைக் கிணறு அமைக்க, வங்கி மூலமா கடனுதவி கிடைக்க நம்ம அரசாங்கம் உதவி செய்யணும்ன்னு கேட்டுக்கிறேன். இந்த உதவி கிடைச்சா, நம்ம தமிழ்நாட்டோட பெருமை இந்தியா முழுசுக்கும் இன்னும் நல்லா தெரியிற அளவுக்குப் பாடுபட்டு உணவு உற்பத்தியைப் பெருக்குவேன்’’ என்றார்.

நண்பரின் பிள்ளைகளை வளர்க்கும் சாமிநாதன்!

“எனக்குச் சிநேகிதர் ஒருத்தர் இருந்தாரு. காசநோயி முத்திப் போனதுனால காலமாகிட்டாரு. அவரு மனைவியும் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாதவங்க. அதனால என் சிநேகிதர் சாகப் போற நேரத்துல, நிய்யி தான் என் பிள்ளைகளைக் காப்பாத்தணும்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவருக்கு ரெண்டு பிள்ளைங்க. ஆணொண்ணு, பெண்ணொண்ணு. இந்தப் பிள்ளைகளும் என் மேல பாசமா இருக்கும். என் மனைவிக்கும் இந்தப் பசங்கள வளர்க்குறதுக்குச் சங்கடப்படல. விருப்பமா இருந்தாங்க. அதனால இந்தப் பசங்கள நாங்க தான் வளர்த்துக்கிட்டு இருக்கோம். எங்க ரெண்டு பசங்களோட இந்த ரெண்டு பசங்களையும் சேர்த்து வளர்க்குறோம். பையன் பன்னெண்டு வரைக்கும் படிச்சு முடிச்சிட்டான். பொண்ணு இப்போ பத்துப் படிக்குது. அதுகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுக்குற வரைக்கும் எங்க கடமை இருக்கு’’ என்றார்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading