பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!

பயறு வகை Green gram 5

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

யறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்ல வளிகள் வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்ல வளிகளை வெளியிடுகின்றன. இவை வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்துவதுடன், தரமான கழிவுகளைக் கொடுத்து சத்துகள் சுழற்சிக்கும் நீர்ப்பிடிப்புக்கும் உதவுகின்றன.

பயறு வகைகளில் உள்ள புரதம் மனித நலனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தழைச்சத்தை மண்ணில் நிறுத்துவதால் இடுபொருள் செலவு குறைகிறது. பயறுவகைக் குடும்பத்தில் 800 பேரினங்கள், 20,000 சிற்றினங்கள் உள்ளன. இவை பூக்கும் தாவரங்களில் மூன்றாவது பெரிய குடும்பமாகும். இவற்றில் சில, களைகளாகவும் மற்றவை முக்கியப் பயறு வகைகளாகவும் உள்ளன.

வளிமண்டல மற்றும் மண் தரத்தில் பயறு வகைகளின் தாக்கம்

பயறு வகைகள் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு அளவைக் குறைக்கின்றன. மண்ணில் கரிமத்தைப் பிரித்து வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கின்றன.

பசுமை இல்ல வாயு வெளியேற்றம்

பயிர்ச் சுழற்சியில் பயறுவகைப் பயிர்களைப் பயன்படுத்தும் போது உரம் மற்றும் ஆற்றல் பயன்பாடு குறைவதால் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைகிறது. இவற்றைப் பயிர்ச் சுழற்சியில் பயன்படுத்தும் போது எக்டருக்கு 87 கிலோ தழைச்சத்து சேமிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வளிகளில் நைட்ரஸ் ஆக்ஸைடு 5-6% உள்ளது. இது கார்பன் டை ஆக்ஸைடை விட செயல்திறன் மிக்கது. ஒவ்வொரு 100 கிலோ தழைச்சத்தை இடும் போது ஒரு கிலோ நைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடாக வெளியாகிறது.

மண் தன்மை

மற்ற பயிர்களைப் பயிரிடுவதால் மண்ணின் கரிம அளவு குறைகிறது. ஆனால் பயறு வகைகளால், மண்வளம், மண்ணின் கரிமம், மட்கின் அளவு, தழைச்சத்து, மணிசத்து ஆகியவற்றின் அளவு உயர்கிறது. பயறு வகைகள் அதிகமாகும் கழிவுகள், கரிமம் மற்றும் நைட்ரஜன், பயிர்களின் வேரில் பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றன.  பயறுவகை நைட்ரஜனில் 7-11% வேரிலும் வேர் முடிச்சுகளிலும் உள்ளது. தட்டைப்பயறு மற்றும் மக்காச்சோளத்தை ஊடுபயிராக இட்டால் மணிச்சத்துக் கூடும்.

பயிர்த் திட்டத்தில் பயறு வகைகள்

அடுத்து வரும் பயிர்களுக்கு நன்மை தருவதால், பயறுவகைப் பயிர்கள் ஊடுபயிராக இடப்படுகின்றன. தானிய வகைகளுடன் பயறு வகைகளைப் பயிரிடுவதால் 17-21% விளைச்சல் கூடுகிறது. நிலக்கடலையைப் பயிரிடுவதால் எக்டருக்கு 76-188 கிலோ தழைச்சத்து நிலைநிறுத்தப் படுகிறது. இவை தழைச்சத்தை நிலைநிறுத்தும் போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயு, மண்ணிலுள்ள பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. கொண்டைக்கடலையும் துவரையும், சிட்ரேட், மாலேட் ஆகிய கரிம அமிலங்களைச் சுரந்து, கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைப் பயிருக்குக் கிடைக்கச் செய்கின்றன.

பயறு வகைகளை ஊடுபயிராக இடுதல்

பயறு வகைகளை ஊடுபயிராக இடுவதால், முக்கியப் பயிர்களில் பூச்சிகள் தாக்கம் குறைகிறது. குறைந்த இடுபொருள் செலவில் கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது. சூழல் மாசு குறைகிறது. தீவனமாகப் பயன்படுகின்றன.

பயறு வகைகளும் பாதுகாப்பு விவசாயமும்

பாதுகாப்பு விவசாயம் என்பது குறைந்தளவில் மண்ணைக் கிளறுதல் மற்றும் நிரந்தரமாக மண்ணை மூடுதல் மற்றும் சுழற்சி முறை விவசாயம் ஆகும். சிலவகைப் பயறு வகைகளில் இருக்கும் ஆணிவேர்த் தொகுப்பு, வேர்ச் சுரப்புகளின் மூலம் சத்துகளைக் கரைத்து உறிஞ்சுவதுடன், நீர் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்லவும் உதவுகிறது.

எண்ணெய்வித்து சார்ந்த ஊடுபயிர்

எண்ணெய் வித்துகளை ஊடுபயிராக இட்டால் மண்வளம் கூடும்; களைகள் கட்டுப்படும்; உபரி வருமானம் கிடைக்கும்.


பயறு வகை PRABHU KUMAR 1

முனைவர் ஞா.பிரபுகுமார்,

கோ.நெல்சன் நவமணிராஜ், நா.கௌசிகா, முனைவர் மு.ரா.லதா,

வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை-622303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading