கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020
கோய் மீன்கள் வெளிப்புறக் குளங்கள் அல்லது நீர்த் தோட்டங்களில் அழகு மீன்களாக வளர்க்கப்படுகின்றன. கோய் மீன் முதலில், சாதாரணக் கெண்டை வகைகளில் முறைசாரா பிரிவாகக் கருதப்பட்டது. நிறம், வடிவம் மற்றும் செதிலமைப்பை வைத்துக் கோய் மீன்கள் பிரிக்கப்படுகின்றன. இவை, வெள்ளை, கறுப்பு, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் கிரீம் நிறத்தில் உள்ளன. இவற்றில் பிரபலமானது கோசாகே வகையாகும், இது கோஹாகு, தைஷோசன்ஷோகோ மற்றும் ஷாசாசன்ஷோகுவில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் கோய் என்றால் பாசம் அல்லது அன்பு என்று பொருள். எனவே, ஜப்பானில் காதல் மற்றும் நட்பின் அடையாளம் கோய் ஆகும்.
இனப் பெருக்கம்
மூன்று ஆண்டுகளில் இனவிருத்திக்கு வரும். அப்போது 25 செ.மீ. நீளத்தில் இருக்கும். ஆணும் பெண்ணும் ஒரேமாதிரி இருப்பதால் பாலின வேறுபாட்டை அறிவது கடினம். ஆனால், இனப்பெருக்கக் காலத்தில் ஆண் மீனின் தலை மற்றும் துடுப்புகளின் பின்னால் வெள்ளை நிறத்தில் குருணை போன்ற வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் பாலின வேறுபாட்டை அறியலாம்.
கோய் மீன் குளிர்ச்சியான பகுதியைச் சார்ந்தது, இதை 15-25 செல்சியஸ் வெப்பநிலையில் வளர்க்க வேண்டும். வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸை விட குறைந்தால், இம்மீனின் நோயெதிர்ப்புச் சக்தியும் குறையும். எனவே, கோய்மீன் வளர்ப்புக் குட்டை, வெப்பப் பகுதியில் 1 மீட்டர் ஆழமும், குளிரான பகுதியில் குறைந்தது 1.5 மீட்டர் ஆழமும் இருக்க வேண்டும்.
தாய் மீன் தேர்வு
கோய்மீன்கள் அவற்றின் நிறம், வடிவம் மற்றும் செதிலமைப்பு வைத்துப் பிரிக்கப்படுகின்றன. இந்தக் குணங்கள் மரபுவழியில் அடுத்த தலைமுறைக்கு எந்தளவுக்கு வரும் என்று கணக்கிடுவது சிரமம். நல்ல நிறம், உடல் அமைப்பு மற்றும் செதிலமைப்பைக் கொண்டு தேர்வு செய்தாலும், கிடைக்கும் குட்டிகளில் சாதாரணக் குணங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், இனவிருத்திக்குச் சிறந்த கோய்மீன்களைத் தேர்வு செய்ய வேண்டும். 3-4 வயது கோய்மீன்கள் இனப்பெருக்கத்துக்கு உதவுகின்றன. பெரிய மீன்களைப் பயன்படுத்தினால், அதிக முட்டைகளும், தரமான குஞ்சுகளும் கிடைக்கும்.
தாய்மீன் பராமரிப்பு
இனப்பெருக்க ஆண் பெண் மீன்களை ஒரே தொட்டியில் வைக்க வேண்டும். இனப்பெருக்கத்துக்கு ஒரு மாதம் இருக்கும் போதே, முறையான, சத்தான உணவைக் கொடுத்தால், அவற்றின் இனப்பெருக்க இயக்கம் சிறப்பாக இருக்கும். ஐந்து நிமிடத்தில் உண்ணும் வகையில் உணவை இட வேண்டும். அதற்கு மேல் மீதமானால் உணவைக் குறைக்க வேண்டும். புரதம் நிறைந்த முழுத் தானியம் மற்றும் முழுப் பயறுகள் மூலம் தயாரான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
இனவிருத்தித் தொட்டி
குளத்தை முறையாகத் தயாரித்து இனவிருத்திக்கு விட்டால் பத்து இலட்சம் முட்டைகள் வரை உற்பத்தி செய்யலாம். இனவிருத்திக்கு வெப்பமான வானிலையும், நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகவும் தேவை. 10x6x3 அடி தொட்டியில் ஆறு மீன்களை விடலாம். தொட்டியில் பம்புகள், சுத்திகரிப்பான் மற்றும் சூடேற்றி முறையாக இருக்க வேண்டும். முட்டைகள் ஒட்டும் தன்மையில் இருப்பதால், இந்த முட்டைகளைச் சேகரிக்க ஏதுவாக, செயற்கைப் புல் அல்லது மற்ற பொருள்களைப் போட வேண்டும். 2400 சதுர மீட்டர் நாற்றங்கால் குளத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகளை ஒரு மாதம் வரையில் வளர்க்கலாம்.
இனவிருத்தி நேரம்
இனப்பெருக்கத் தொட்டியில் முதலில் பெண் மீன்களை விட வேண்டும். அவை புதிய சூழலுக்குத் தங்களை மாற்றிக்கொண்ட பிறகு, ஆண் மீன்களை விட வேண்டும். பெண் மீன்கள் பெரோமோன்களை வெளியிட்ட பிறகு, இனவிருத்தியில் ஈடுபடும். ஆண் மீன்கள் இவற்றின் தலையை இடிப்பது, கடிப்பது போன்றவற்றைச் செய்து முட்டையிடத் தூண்டும். இவ்வகையில் பெண் மீன்கள் இடும் முட்டைகள் மீது ஆண் மீன்கள் விந்தைத் தெளிப்பதால் அந்த முட்டைகள் கருவடைகின்றன. இந்த நேரத்தில் சில முட்டைகளைத் தாய் மீன்கள் தின்னும். அதனால், சில நாட்களுக்குத் தாய் மீன்கள் வேறு குளத்துக்கு மாற்றப்படுகின்றன.
நாற்றங்கால் மீன் வளர்ப்பு
கோய் மீனின் நல்ல வளர்ச்சிக்குச் சுத்தமான குளம் அவசியம். குளத்திலுள்ள களை மீன்கள் மற்றும் தேவையற்ற குப்பைகளை நீக்கிய பின் மீன் குஞ்சுகளை விட வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கக் குளத்தை வலையால் மூட வேண்டும். முட்டையிட்டு நான்கு நாட்களில் பிறக்கும் மீன் குஞ்சுகள் ஆறு நாட்கள் வரை மஞ்சள் கருவை உண்டு வாழும். அடுத்துத் துகள் உணவை உண்ணத் தொடங்கும். முதல் ஒரு மாதம் வரை தினமும் நான்கு முறை உணவைத் தர வேண்டும்.
ஒரு மாதம் கழித்து 40% புரதமுள்ள எண் 1 தீவனத்தை இட வேண்டும். 2,400 சதுரடிக் குளத்தில் ஒரு இலட்சம் குஞ்சுகளை 45 நாட்கள் வளர்த்தால் 3-4 செ.மீ. நீளத்தை அடையும். அதற்குப் பிறகு குளத்தில் போதுமான இடம் இல்லாமல் போவதால் வளர்ச்சிக் குறையும். எனவே, பாதி மீன்களைப் பிடித்து விற்றுவிட வேண்டும். மீன்களின் நிறம் மற்றும் வடிவம் பார்த்துத் தரம் பிரித்து விற்றால் நல்ல இலாபத்தை அடையலாம். மீதமுள்ள மீன்களை அதே குளத்தில் 3 மாதங்களுக்கு வைத்திருந்தால் 10-12 செ.மீ. நீளத்தை அடைந்து விடும். இப்போது இன்னும் கூடுதலாக இலாபம் கிடைக்கும்.
கோய்மீன் விதைத் தேர்வு
கோய் மீன்கள் ஒரு தடவையில் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும். சிறந்த சாம்பியன்-கிரேடு நிசிக்கி வகைகளில் இருந்து உருவாகும் மீன் குஞ்சுகள் மரபணுக் குறைகளுடன் பிறப்பதால் இரசிக்கும் நிறங்களில் இருப்பதில்லை, இந்தக் குஞ்சுகள் கொல்லப்படுகின்றன அல்லது மற்ற மீன்களுக்கு இரையாகின்றன. எ.கா: இவற்றை உண்பதால் அரோவானா மீன்களின் நிறம் கூடுகிறது.
இட நெருக்கடியில் பாதி மீன்களை விற்பதன் மூலம், தரமற்ற குஞ்சுகளை மற்ற மீன்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சிறிய வருமானம் கிடைக்கும். பிறகு தரமான மீன்களை வளர்த்து இனவிருத்திச் செய்வதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
சா.ஆனந்த்,
பொ.கார்த்திக் ராஜா, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு நிலையம்,
பவானிசாகர், ஈரோடு-638451.