அனுபவத்தைப் பகிரும் கே.என்.நேரு!
கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018
தமிழகம் எத்தனையோ அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியலில் வெற்றி பெற்றபின், ‘உங்களின் பூர்வீகத் தொழில் என்ன?’ என்று கேட்டால், “விவசாயம். நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்…’’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுவார்கள். ஆனால், ஒரு காலக் கட்டத்துக்குப் பின், அவர்கள் விவசாயத்தையே மறந்திருப்பார்கள்; மருந்துக்கும் கூட, விவசாய பூமியை மிதிக்காதவர்களாக, தங்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கை முறையும்கூட, அப்படியே மாறிப் போயிருக்கும்.
ஆனால், அவர்களில் இருந்து ரொம்பவே வித்தியாசமானவர், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு என்ற பிரதானமான அரசியல்வாதி. இன்றைக்கும் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருக்கும் கே.என்.நேருவின் முழுநேரத் தொழில்-அரசியல் என்றால், அதே அளவுக்கு விவசாயத் தொழிலையும் செய்து வருகிறார்.
‘ஏதோ பெயரளவுக்கு இருக்கட்டுமே’ என்று, ஒருநாளும் விவசாயம் செய்யாத கே.என்.நேரு, காலம் காலமாக முழு அர்ப்பணிப்புடன் விவசாயம் செய்து வருகிறார். அந்தத் துறையில், அவருக்கான அனுபவம் பெரிது. அரசியல் அனுபவத்தைக் காட்டிலும் பெரிதாக இருப்பதாலோ என்னவோ, விவசாயத்தின் அத்தனை நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். எந்தப் பயிரை எப்படி விளைவித்தால், அதிக மகசூல் கிடைக்கும் என்பதை, அனுபவத்தின் வாயிலாக ஈட்டியிருக்கும் அந்த விவசாயி நேருவின் நாடி, நரம்பு அத்தனையிலும் விவசாய நுணுக்கங்கள் உரமேறிக் கிடக்கின்றன.
உலகம் கே.என்.நேருவை, ஒரு அரசியல்வாதி என்ற முகத்தோடு தான் பார்க்கிறது; அணுகுகிறது. ஆனால், அதைக் கடந்து, அவருக்கு இன்னொரு உலகம், அதாவது விவசாய உலகம் இருக்கிறது. அதில் நீண்ட காலமாக அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பது, நம்மைப் போல, அவரை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அப்படிப்பட்ட விவசாய மனிதரை, விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் கொண்டு செல்லும் எண்ணத்தோடு, அவரைத் தொடர்பு கொண்டோம். “வாங்களேன்… பேசலாம்…’’ என அழைத்தார்.
மாலை வேளை. திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அவரது அரசியல் பணிகளுக்கு இடையில், நம்மை லால்குடிக்கு அருகே உள்ள அவரது வயலுக்கு அழைத்துச் சென்றார். கார், சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. கார் பயணம் தெரியாத அளவுக்கு, தன்னுடைய விவசாய அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.
“என்னுடைய அப்பா மிகப்பெரிய விவசாயி. என்னுடைய தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் தான் எங்கள் முக்கியத் தொழில். அரிசி ஆலையும் வைத்திருக்கிறோம். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைப் பார்த்துக் கொள்கின்றனர். நான் விவசாயத்தைக் கவனித்து வருகிறேன். எனக்கு விவசாயத்தைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. இதைச் சொல்வது எனக்கு பெருமைதான். என்னுடைய அப்பா வழியில் எங்களுக்கு நிலபுலன்கள் நிறைய உண்டு.
என்னுடைய மனைவியும் விவசாயத்தில், என்னைப் போலவே மிகுந்த ஆர்வம் கொண்டவர். எங்கள் பூர்விக நிலங்களை அவர் தான் பார்த்துக் கொள்கிறார். நான்கூட விவசாயத்தில் சில சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், அவர், இரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்தியதே கிடையாது. மாட்டுச் சாணம், இலை தழைகள், பஞ்சகவ்யா போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யும் இயற்கை விவசாயத்தில், அவர் உறுதியாக இருக்கிறார்.
திருச்சியில் இருக்கும் நாட்களில், எனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அதிகாலையில் எழுந்து செய்தித்தாள்களைப் படித்து விட்டு, தோட்டத்திற்குச் சென்று விடுவேன். அதன்பின், கட்சித் தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகள், கட்சிப் பணிகள் முதலியவற்றைப் பார்த்துவிட்டு, மாலையிலும், தோட்டத்திற்குச் சென்று விடுவேன். பெரும்பாலும் காலை, மாலை வேளைகளில் தோட்டத்திற்குச் சென்று விடுவது வழக்கம்.
மேலும், டில்லி முர்ரா, ஹரியானா கிர், காங்கேயம் மாடுகள் என நிறைய மாடுகளை வளர்த்து வருகிறேன். எங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயமாகவே கொண்டு செல்வதற்காகத் தான், மாடுகளை வளர்த்து வருகிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வயல்வெளியில் செலவிடும் நேரம் என்பது ஒரு தனி சுகம் தானே?’’ என்றவர், டிரைவரிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
அப்போது, முன்பு தி.மு.க.,வில் இருந்து, தற்போது மாற்றுக் கட்சியில் இணைந்திருக்கும் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை நிறுத்தி நலம் விசாரிக்க, அவரது மனிதப்பண்பு கண்டு, நாம் ஆச்சர்யத்தில் வியந்தோம்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் பரம்பரை விவசாயம் மிளகாய், மல்லி. அதற்கு வேலை செய்ய ஆட்கள் கிடைக்காத காரணத்தால், அந்தப் பயிர்களைக் குறைத்துக் கொண்டு, நெல், கரும்பு, மா, வாழை, தென்னை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, புளி, சோளம் போன்றவற்றைப் பயிர் செய்து வருகிறோம். எங்கள் வயலில் விளையும் நெல்லை, எங்கள் ஆலையிலேயே அரைத்து, அதிலிருந்து வரும் தவிட்டை, எங்கள் மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். அந்த மாடுகளின் சாணத்தை, எங்கள் நிலத்திற்கே உரமாக்குகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணியில் இருப்பவர்களுக்கு நிகரான மரியாதை விவசாயிகளுக்குக் கிடைக்கும்’’ என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வயலை அடைந்தோம்.
உடனே, காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார். நாம் அவரைப் பின் தொடர்ந்தோம்.
வயலில் ஆந்திரா பொன்னி நெல், அறுவடைக்குத் தயாராக இருந்தது. நம்மைக் கண்டதும், வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வந்தனர். அவர்களிடம் அறுவடை சம்பந்தமாகச் சில கேள்விகளைக் கேட்டு விட்டு, திடீரென வயலில் இறங்கி, அங்கிருந்த களையைப் பிடுங்கினார். அதைத் தொடர்ந்து, வயலில் எங்கெல்லாம் ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்பதைக் கவனித்த அவர், ‘இங்கெல்லாம் கடைசியாக அறுவடை செய்யுங்கள்’ என்று வேலைக்காரர்களிடம் ஆலோசனை சொல்லிக் கொண்டே நடந்தார்.
அப்போது, நெல் அறுவடைக்குப் பின் பயிரிட ஏற்ற சில கரும்பு வகைகளை அங்கு வேலை செய்தவர்கள் நேருவிடம் காட்டினார்கள். அவற்றைப் பார்த்துச் சில ஆலோசனைகளைக் கூறினார்.
தொடர்ந்து, சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக, வயலைச் சுற்றிப் பார்த்தார். “விவசாயம் தொடர்பாக, என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏதும் இருக்கா?’’ என்று கேட்க, சில கேள்விகளை அவர் முன் வைத்தோம். மடை திறந்த வெள்ளம் போல, கேள்விகளுக்கான பதில்கள் தங்கு தடையின்றி வந்து விழுந்தன. இனி, கேள்வி-பதில்கள்:
(குறிப்பு: இது 2018 ஆம் ஆண்டில் எடுத்த பேட்டி)
இத்தனையாண்டுக் கால உங்களின் விவசாய அனுபவம் எப்படி?
விவசாயம் என்பது எங்கள் உடம்போடும் உயிரோடும் கலந்தது. எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், நான் பதவியில் இருந்தபோதும் சரி, பதவியில் இல்லாத போதும் சரி, விவசாயத்தை விட்டதில்லை. விவசாயமே என் உயிர் மூச்சாக இருந்து கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு நான், விவசாயத்தை நேசிக்கிறேன்.
விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட, அதை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டு, குலையாத அதே ஈடுபாட்டோடு விவசாயத்தைத் தொடர்கிறேன். இது, என் இறுதி வரை தொடரும்.
எந்த நேரமும் பிஸியாகவே இருக்கும் முழு நேர அரசியல்வாதி நீங்கள். எப்படி விவசாயத்துக்கும் நேரத்தை ஒதுக்கி அதை முழு ஈடுபாட்டோடு செய்றீங்க?
செய்ய முடியாது என்று எதுவும் இல்லை. கட்சிப்பணி, தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகள் முதலியவற்றை முடித்து விட்டு, மீதமிருக்கும் நேரத்தில்தான் வயலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். எத்தனை பிஸியாக இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வயலுக்குச் சென்று விடுவேன். அதற்கு ஏற்ற வகையில், நேரத்தை ஒதுக்கி விடுவேன்.
நமக்கான தண்ணிய கொடுக்க மாட்டேங்குது கர்நாடகம். நீதிமன்றம் சொல்லியும் கேட்க மாட்டேங்குது. மத்தியில ஆட்சியைப் பிடிக்கக்கூடிய கட்சிகள், கர்நாடகத்தைத் தட்டிக் கேட்க மாட்டேங்குது. கர்நாடகத்துக்கு எதிரா நடவடிக்கை எடுத்தா, வாக்கு வங்கி காலியாகிப் போகும்ன்னு பயம் அந்தக் கட்சிகளுக்கு. கேரளாவும் இப்பிடித்தான் இருக்கு. ஆந்திராவும் கூட பாலாத்துல தடுப்பணைகளைக் கட்டி தண்ணிய மறிக்குது. தமிழ்நாட்டுக்கு, தண்ணி விஷயத்துல நியாயமே கிடைக்காதா? இது எங்க போயி முடியும்? ஒரு முன்னாள் அமைச்சரா, முழுநேர விவசாயியா உங்கள் எண்ணம் என்ன?
இது ஒரு கஷ்டமான நிலை தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, காவிரி நீரைப் பெற வேண்டுமென்றும், நமது உரிமையைப் பெற வேண்டுமென்றும், பல முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று விட்டதால், நீதிமன்றத்தின் முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும். நீதிமன்றமே இடைக்கால நிவாரணமாக, 220 டி.எம்.சி. நீரைக் கொடுக்கச் சொன்னபோது கூட அவர்கள் தரவில்லை; மறுத்து விட்டார்கள். இந்தாண்டு கூட, 85 டி.எம்.சி., நீரைக் கர்நாடகம் இன்னும் தர வேண்டியுள்ளது என்று சொல்கிறார்கள்.
ஒரு தனி நபரோ, அல்லது யாரோ ஒருவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவில்லை என்று சொன்னால், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்த மறுப்பது, ஒரு மாநில அரசாக இருப்பதால், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், அரசியல்வாதிகளும், மத்தியில் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
காரணம், நீங்கள் குறிப்பிடுவது போல ஓட்டு வங்கி. மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பிருப்பது, இரண்டு கட்சிகளுக்குத் தான். ஒன்று-காங்கிரஸ், இன்னொன்று-பி.ஜே.பி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக்குக்கூட ஓரளவுக்கு ஓட்டு வங்கி இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி.,க்கு முழுமையாக இல்லை. அதனால், கர்நாடகத்தின் மீது அவர்கள் பார்வை இருக்கிறது. அம்மாநில மக்கள் எண்ணங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, தமிழகத்துக்குத் தண்ணீரைப் பெற்றுத்தர அவர்களுக்கு விருப்பம் இல்லை. அந்த மாநிலத்தில், ஆட்சியைப் பிடிக்கும் பிரதான எண்ணம் இருக்கும் வரை, பி.ஜே.பி., தமிழகத்துக்கு, காவிரி நீர்ப் பிரச்னையில் எந்த நன்மையையும் செய்யாது.
எங்கள் தலைவர் கலைஞர் ஒருமுறை பேட்டியில், ‘சில தீர்க்க முடியாத பிரச்னைகள் வரும்போது, அதை இயற்கையின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும்’ என்றார். அதைத்தான் நான் இப்போது நான் நினைவு கொள்கிறேன். இயற்கை தான் நமக்கு வழிகாட்ட வேண்டும்.
காவிரிப் படுகையில், ஹைட்ரோ கார்பனும் மீத்தேனும் மட்டுமில்லை. நிலக்கரி வளமும் அதிகமா இருக்கு. இதையெல்லாம் எடுக்கணும்ன்னா, காவிரிப் படுகையில விவசாயத்தை அழிக்கணும். அதுக்கான ஒரே வழி, காவிரித் தண்ணிய தமிழ்நாட்டுக்குக் கிடைக்க விடாம தடுக்குறது தான், அப்பிடீங்கிற எண்ணம், மத்திய அரசுக்கு இருக்கிறதா, சமூக ஆர்வலர்கள் மத்தியில பரவலா ஒரு கருத்து இருக்கு. பாலாத்து நிலைமையும் இதுதான்னு சொல்றாங்க. இது எந்தளவுக்கு உண்மை?
இருக்கலாம். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தரைக்கு அடியில் கிடைப்பதற்கரிய பொருள்கள் கிடைக்கும் என்றால், அவற்றை எடுக்கத் தான் முன் வருவார்கள். கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமனை, எங்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரடியாகச் சிறைக்கே சென்று சந்தித்தார். அப்போது, நான் அருகிலிருந்தேன். அவர் சொன்ன செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, மிகமிக மோசமான ஒரு நிலை காவிரிப்பகுதி விவசாயிகளுக்கு வந்து விடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டது.
மீத்தேனை எடுப்பதற்காக, எங்கள் பகுதிகளில் நிலத்தைத் தோண்டிய போது கீழிருந்து எண்ணெய், சுண்ணாம்பு, பெட்ரோல் முதலியவற்றுடனும், மேலும் சில பொருள்களுடனும் உப்பு நீர் வந்தது. அந்த உப்பு நீர் எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலெல்லாம் பாய்ந்து விட்டது. அதனால், விவசாயமே சுத்தமாக அழிந்து விட்டது. எந்தப் பயிரை வைத்தாலும், சுத்தமாக வரவில்லை. சோமாலியாவைப் போல, பயிரே இல்லாத பகுதியாகி விடும் ஆபத்து இருக்கிறது. அதனால் தான், எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. இனி விவசாயம் செய்ய முடியாத ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பணிகள் அந்தப் பகுதிகளில் நடக்கும்போது, வெளி மாநிலத்தவர், அங்கு அதிகமாக வருகிறார்கள். அதனால் மொழிச் சிக்கல் வருகிறது. மொழிச் சிக்கல் வந்தால், அங்கே தமிழே இல்லாமல் போய்விடும். அதனால், காலப்போக்கில், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அந்தப் பகுதியையே விட்டு வெளியேறக் கூடிய சூழல் ஏற்படலாம். சொந்த இடத்தை விட்டு விட்டு வேறிடம் செல்லும்போது, அவர்கள் அகதி நிலைக்குத்தானே செல்ல வேண்டும்? இந்த நிலை, அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான், நாங்களும், அந்தப் பகுதிகளில் நடக்கும் எல்லாப் போராட்டங்களுக்கும் ஆதரவாகக் கைகொடுத்து நிற்கிறோம்.
ஹைட்ரோ கார்பனையும், மீத்தேனையும் எடுக்குறதுனால, விவசாயம் பாதிக்கவே பாதிக்காதுன்னு மத்திய அரசாங்கமும், விவசாயம் அழிஞ்சு, அந்தப் பகுதியே பாலைவனமா ஆகிரும்ன்னு சமூக ஆர்வலர்களும் சொல்றாங்க. இந்த ரெண்டுல எதை நாங்க நம்புறது?
அதிகாரிகள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். ஆனால், சமூக ஆர்வலர்கள் களத்தில் இருந்து எல்லாவற்றையும் அறிந்து பேசுகிறார்கள். மத்திய அரசில் இருக்கும் அதிகாரிகள், அவர்கள் வாங்கும் சம்பளத்திற்காகப் பேசுகிறார்கள். ஆனால், சமூக ஆர்வலர்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேசுகிறார்கள். ஆகவே, நாம் சமூக ஆர்வலர்கள் சொல்வதைத் தான் நம்ப வேண்டும்.
கேரளாக்குள்ள சாலையோரமா எண்ணெய்க் குழாய்களைப் பதிக்கிற கெயில் நிர்வாகமும், அதைக் கட்டுப்படுத்துற மத்திய அரசும், தமிழ்நாட்டுல மட்டும் நிலத்துக்குள்ள தான் குழாய்களைப் பதிப்போம்ன்னு பிடிவாதமா இருக்குறதே?
என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில், கேரளா மலைப்பகுதி என்பதால், அங்கு நினைத்த இடத்திலெல்லாம் தோண்டி, குழாய்களைப் பதித்துவிட முடியாது. அது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் சமவெளியாக இருப்பதால், எது இலகுவாக இருக்குமோ, அங்கே பதிக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டிலும், கேரளாவைப் போலவே சாலையோரத்திலேயே கொண்டு வரலாம். ஆனால், அப்படிச் சாலையோரத்தில் பதிக்கும் பட்சத்தில், குழாய்களைப் பதிக்கும் தூரம் மேலும் அதிகமாகலாம் என்று கூட, நிலத்தில் பதிக்கலாம். அதை நாம் நீதிமன்றம் சென்று தான் முறையிட வேண்டும்.
நல்லா விளையக்கூடிய நிலத்தையெல்லாம் வீட்டுமனைகளாக மாத்தி வித்துக்கிட்டே இருக்காங்க. மக்கள் தொகையை இதுக்குக் காரணமா சொல்லலாம். ஆனா, அதே மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்திக்கும் நிலம் வேணுமில்லையா? இதுக்கு என்னதான் தீர்வு?
கேரளாவுல பல ஆண்டுகளுக்கு முன்னாலயே, விளைநிலத்தை வீட்டுமனைகளா விக்கக் கூடாதுன்னு தடை போட்டதைப் போல, தமிழ்நாட்டுலயும் செய்யலாம். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இதைப் பற்றி நாங்கள் முடிவு செய்தோம். தமிழ்நாட்டின் மொத்தத் தானியத் தேவை, ஒரு கோடியே 64 லட்சம் டன். ஆனால், ஒரு கோடியே 26 லட்சம் டன் தான் விளைகிறது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு முன், இருந்த கணக்கு. இதன்படி, சுமார் 40 லட்சம் டன் உணவுப் பற்றாக்குறையில் தான், நாம் இருந்து கொண்டிருக்கிறோம். எனவே, விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று சொன்னபோது, அதிகாரிகள் அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி விட்டார்கள்.
அதன்பின், கேரளாவில் இந்தச் சட்டம் இருக்கிறதே என்று கேட்டோம்; தெளிவான பதில் இல்லை. ஆனால், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்ன்னு பாடுன பாரதி, விவசாயத்தைத் தான் முதல்ல சொன்னாரு. ஆனா, இன்னிக்குத் தொழிலுக்குத் தான் அரசாங்கம் முன்னுரிமை குடுக்குது. தொழிற்சாலையில உற்பத்தி செய்யிற பொருள்கள் பணத்தைக் கொடுக்கும். சோத்தைக் கொடுக்குமா? ஏன்னா, இந்த வகையிலயும் விளைநிலங்கள் நெறையளவுல அழிக்கப்படுறதுனால தான் இந்தக் கேள்வி வருது.
தொழிற்சாலைகளை, நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகளில் அமைத்தால், விவசாயம் பாதிக்கப்படாது. ஆனால், தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வேண்டுமென்பதற்காக, அவர்கள் எங்கே நிலத்தடி நீர் அதிகமாக இருக்கிறதோ, அங்கே தான் அமைக்கிறார்கள். உதாரணத்திற்கு, இராமநாதபுரம் மாவட்டம் மானாவாரிப் பகுதி. அங்கே தொழிற்சாலைகளை அமைத்தால், அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். இந்த விஷயத்தில் அரசாங்கம் தான் முடிவெடுக்க வேண்டும்.
உணவுப் பொருள்களுக்கான ஆதார விலையை முடிவு செய்யுற விஷயத்துல, அரசுகளின் நிலைப்பாடு சரியா? எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அரசாங்கம் செய்யும் விலை நிர்ணயத்தைக் குறை சொல்றது தான் வழக்கம். நீங்க ஒரு விவசாயிங்கிற முறையில, உங்க கரும்புக்கு, உங்க நெல்லுக்கு என்ன விலை கொடுத்தா கட்டுபடியாகும்?
ஆதார விலை நிர்ணயம் என்னும்போது, மத்திய அரசில் கோதுமைக்கு ஒரு விலையும், நெல்லுக்கு ஒரு விலையும் தான் கொடுக்கிறார்கள். இதற்கு ஒரு சுமுகமான தீர்வாகத் தான், தலைவர் ஆட்சியில் உழவர் சந்தைகளை ஆரம்பித்தார். அதன்படி, விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களுக்கான விலையை, தாங்களே நிர்ணயம் செய்து பயன்பெற்று வந்தனர். இனி வரும் காலத்தில் அதை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்துவோம்.
மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி டன் அரிசியை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. அதைப் பாதுகாக்க, அதைவிட மிகப்பெரிய தொகையைச் செலவு செய்கிறார்கள். அதனால் அரசு, ஒரு கொள்கை முடிவெடுத்து விவசாயிகளிடமிருந்து விளை பொருள்களை வாங்கிக் கொள்ளுமானால், அதை வைப்பதற்குத் தகுந்த இட வசதி வேண்டும். அதற்கு நீண்ட காலத் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அப்போது தான் நடைமுறைக்குச் சாத்தியமாகும். அதைச் செய்ய வேண்டும். செய்தால் தான் விவசாயி பிழைப்பான். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் தான், வேலைவாய்ப்பின்மை என்னும் பிரச்னை குறையும்.
தண்ணி விஷயத்துல, நாம அண்டை மாநிலங்களைத் தான் நம்பியிருக்கோம். ஒரு தடவை தண்ணி வந்தா, ஆத்து மணல் அந்தத் தண்ணிய ஈர்த்து, நிலத்தடி நீரா சேமிச்சு வைக்கும். ஆனா, அந்த ஆத்து மணல, கட்டுமான வேலைகளுக்காக, கணக்கு வழக்கே இல்லாம அள்ளிக்கிட்டு இருக்கோம். இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
கட்டுமானத்துறை என்பது இன்று மிகப்பெரிய துறையாகி விட்டது. கட்டுமானத் தொழிலுக்குக் கண்டிப்பாக மணல் வேண்டும். மணலை எடுத்தால் தண்ணீர் குறைகிறது. எனவே, எதைச் எய்தாலும் அளவோடு செய்தால் நலமாக இருக்கும்.
தற்போது அரசு, எம் சாண்ட் என்று ஒரு மணலைக் கொண்டு வந்துள்ளது. அரசு, மணல் அள்ளுவதை விட்டு விட்டு, முதலில் நிபுணர் குழுவை அமைத்து, மணல் தட்டுப்பாட்டுக்கு மாற்றுவழி காண வேண்டும். அப்படிச் செய்தால், விவசாயமும் பிழைக்கும்; கட்டுமானத் தொழிலும் பிழைக்கும். இதற்கெல்லாம், இயற்கையும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க என்ன தான் வழி?
தமிழ்நாட்டில் மொத்தம் 39,000 ஏரிகள் இருந்தன. அவற்றில் தற்போது 8,000 ஏரிகள் இல்லை. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, கனமழை பெய்கிறது. அப்படிப் பெய்யும் மழைநீரை, ஏரிகளில் சேமிக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும், வெளிநாடுகளில் இருப்பதைப் போல, சென்னை போன்ற நகரங்களில், ராட்சத ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, மழைநீரைச் சேமிக்க வேண்டும். இதற்கு அரசு வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களை வைத்து, மண் பரிசோதனை செய்து, சரியான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது வெள்ளமும் இருக்காது, தண்ணீர்ப் பிரச்னையும் இருக்காது. இது சொல்வதற்கு எளிமையாக இருக்கலாம். ஆனால், செய்வது கடினம் தான். அரசு நினைத்தால் முடியாததில்லை. இருந்தாலும், தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றால், மழைநீரைச் சேமிப்பது தான், ஒரே வழி.
விவசாயம் தழைக்க என்ன தான் வழி?
வேலைவாய்ப்பின்மை என்பது, தற்போது அதிகமாகியுள்ளது. கிராமத்தில் இருந்து பலரும் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று விட்டனர். இஸ்ரேலில் நீர்ப் பிரச்னை அதிகம். அங்கு மழை நீரைச் சேமிக்கிறார்கள். மேலும், இங்கு ஒரு ஏக்கரில் விளைவிப்பதை அவர்கள், 20 செண்ட் நிலத்தில், பசுமைக் குடில் மூலம் விளைய வைத்து விடுகிறார்கள். சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி நிறையத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
அவர்களைப் போல, நாமும் கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களைக் கொண்டு விவசாயத்தைச் செய்தால், அவர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும், அரசுக்கு வரியும் கிடைக்கும். இதையெல்லாம், அரசு அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம், படித்த இளைஞர்களிடம் பேச வேண்டும். அப்போதுதான், விழிப்புணர்வு ஏற்படும்.
உணவுப் பொருள்கள் உற்பத்தியை வைத்துத்தான் ஒரு நாட்டின் தன்னிறைவு உள்ளது. தற்போது படித்த இளைஞர்கள் ஓரளவுக்கு விவசாயத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அதிகளவிலான இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும்.
தற்போது, பெரும்பாலான கிராம மக்கள், விவசாயத்தை விட்டுட்டு, வேலைக்காக நகரத்தை நோக்கிப் போயிட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
மக்கள் கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கிச் செல்லக் காரணம், அங்கே பேருந்து, கல்வி, மருத்துவ வசதி என, அனைத்தும், ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிராமத்தில், ஒரு விவசாயக் கூலி வேலைக்கு, 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், நகரத்தில் 500 ரூபாய் கொடுக்கிறார்கள். மேலும், விவசாயத்தில் லாபம் குறைவு என்பதாலும், மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றனர். எனவே, நகரங்களில் இருப்பதைப் போன்ற அனைத்து வசதிகளையும், கிராமத்தில் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அப்படிச் செய்தால், விவசாயிகள் அதிகரிப்பார்கள். ஒரு பசுவும், 50 செண்ட் நிலமும், சில ஆட்டுக் குட்டிகளும் இருந்தால் போதும். நான்கு பேர் கொண்ட குடும்பம், கிராமத்தில் நிம்மதியாக வாழும்.
இப்படி, நம் கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் பதிலளித்த நேரு, அடுத்ததாக, நம்மை, அவருடைய அரிசி ஆலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, நெல் அரைவை நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த நெல், அரிசி, தவிடு ஆகியவற்றைக் கையில் அள்ளிப் பார்த்தார். அதன்பின், அங்கிருந்த தொழிலாளர்களுக்கு அரிசி, நெல் வகைகளின் சில சிறப்புகளைச் சொல்லி, அரவை சம்பந்தமாகச் சில ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கட்சி அலுவலகம் புறப்பட்டார்.
வயது ஏற ஏறப் பொறுப்புகளும் அதிகமாகும் என்பார்கள். அதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கண்கண்ட சாட்சியாக இருக்கிறார். குடும்பம், கட்சி, தொண்டர்கள், விவசாயம், கால்நடைப் பராமரிப்பு என, பல நிலைகளில் தனக்கிருக்கும் கடமைகளை, இந்த வயதிலும் தொய்வின்றியும், உற்சாகமாகவும் அவர் செய்து வருவதை வியப்புடன் கண்டோம்.
எத்தனை பொறுப்புகளும் புகழும் வந்தாலும், தலையில் முண்டாசைக் கட்டி, வேட்டியை முழங்காலுக்கும் மேலே மடித்துக் கட்டி, சேற்றில் தினமும் கால் பதிக்கும் ஒரு அழுக்குச் சட்டை விவசாயியாகக் காட்டி, அதன் வழி வாழ்வதில்தான் அவருக்கு மிகப்பெரிய மனநிறைவு கிடைக்கிறது என்பதை, அவர் சொல்லாமலேயே, அவருடன் சில மணி நேரங்கள் பயணித்ததன் மூலம் உணர முடிந்தது.
அவர், விரல் நுனியில் வைத்திருக்கும் விவசாயத் தொழில் நுட்பங்களையும், அனுபவ அறிவையும், தங்கு தடையின்றி நம்மிடம் விவரிக்கும் போதும், அவருக்குள் இருக்கும் விவசாய அறிவையும், கலப்படமில்லாத நேசிப்பையும் உணர முடிந்தது. மழை கிடைத்த மகிழ்ச்சியில் தழைத்திருக்கும் பயிரைப் போல, அவரின் சமூக அக்கறையிலும்; கிராமத்து மண்ணுக்கே உரிய உபசரிப்பிலும் திளைத்திருந்த நாம், விவசாய நேசிப்பாளர்கள் சார்பில், எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லி விடை பெற்றோம்.
வரப்புயர நீர் உயரும் என்பது போல, நேரு போன்ற விவசாய நேசிப்பாளர்கள் உயர உயர விவசாயம் கட்டாயம் உயரும். நாட்கள் நகர்கின்றன. ஆனால், நேருவுடனான அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் அப்படியே இருக்கின்றன.
மு.உமாபதி